மும்பை வாழ்க!

அலுவலகப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வீட்டின் பணிகளை எதிர்நோக்கி விரையும் செக்ரடரிகள்; பச்சிளம்பாலகனின் பிறந்தநாளைக் கொண்டாட மதியஉணவு இடைவேளையில் வாங்கிய பொம்மையுடன் மகிழ்ச்சியான இரவை எதிர்நோக்கும் குமாஸ்தாக்கள்; கல்லூரியின் தேர்வுப்பட்டியலில் பெயரைக் கண்ட மகிழ்ச்சியை பகிர விரையும் மாணவர்கள்; நாளும் சிறுசிறு பொருட்களை விற்று வயிறு வளர்க்கும் சிறார்கள் .. நேற்று மாலை 6:24லிருந்து 6:35க்குள் சிதறியது அவர்கள் உடல்களா, இல்லை கனவுகளா ? பெனாத்தலார் கேட்கிறார் இதுதான் வீரமா?

இல்லை, இன்று பின்னலைப் பின்னால் இழுத்து பக்கத்தில் இருப்பவனை அறையச் செய்யும் சூழ்ச்சியை இனம் கண்ட முகம் இல்லா நடுத்தட்டு மக்களின் உறுதியான எதிர்கொள்ளல் அன்றோ வீரம் ?சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் ? பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்!!

நேற்று வன்முறையாளர்களின் வெறியாட்டதிற்கு பலியான அப்பாவி மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களின் உயிர்தியாகத்திற்கும் அடிபடவர்களின் துயரத்திற்கும் நாம் என்றும் தலைவணங்குகின்றோம். ஆனால் இது ஒற்றுமைக்கான நேரம், சகோதர சண்டைக்கல்ல. அரசு இனியாவது தன் கடமையை செவ்வனே செய்யுமா என மக்கள் கவனித்து வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தக்க தண்டனை கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அரசு செலுத்தும் அஞ்சலி; ஈடுபணம் கொடுப்பதோடல்ல.

8 மறுமொழிகள்:

துளசி கோபால் கூறுகிறார்

செய்தி அறிந்ததில் இருந்து மனக்கலக்கமாகவே இருக்கின்றொம்.

மணியன் கூறுகிறார்

வாங்க துளசி. அன்று தர்ம யுத்தம் என்று ஆயுதம் தரித்தவர்களிடையெயே நடக்கும். கண்ணகி அத்தனை கோபத்திலும் அறவோர், பெண்டிர், சிறார் என அவர்களை விட்டுவிட சொல்வாள். இந்த அப்பாவிமக்கள் என்ன தவறிழைத்தார்கள் இந்தக் கொடுமைக்கு ? 190 பேர் மரணமடைந்துள்ளனர், அத்தனை குடும்பங்கள் அல்லவா நிர்க்கதியாயிற்று ?

Hariharan # 03985177737685368452 கூறுகிறார்

மணியன்,

"பொடா" மாதிரி சட்டத்தை பாய்ச்சாமல் நீக்குகின்ற காங்கிரஸ்அரசு மறைமுகமாக இந்தத் தீவிரவாதிகளுக்க்கு 'க்ரீன் சிக்னல்' தந்து இதோ கொத்து கொத்தாக அப்பாவிகள் கொலை!

இதே காங்கிரஸ்அரசின் போது 13ஆண்டுகள் முன்பாக நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவராவது தண்டிக்கப்பட்டுள்ளனரா?


இஸ்ரேல் மாதிரி ரிவிட் வைக்க வேண்டும். இந்தியாவில் மனித உரிமைக் கமிஷன் "தீவிரவாதிகளுக்கு" பெயில் எடுக்கும் அமைப்புதானே

மிருகங்களுக்குக்கூட ப்ளூக்ராஸ் இந்தியாவில் வக்காலத்துக்கு வரும். இம்மாதிரி வன்முறையில் இறக்கும் அப்பாவிகளுக்கு?

எனக்கு கோபம் வந்து என்ன?

மணியன் கூறுகிறார்

வாங்க ஹரிஹரன்,
'93 குண்டுவெடிப்பு சம்பவத்தின் நீட்தி விசாரணையே இன்றும் நடந்து கொண்டிருகிறது. மைய அரசின் பலவீனமான கூட்டணி அரசியலும் மெத்தனமுமே இவை வளர காரணமாகின்றன. காஷ்மீரில் நாளும் நடக்கும் வன்முறையையும் கட்டுப் படுத்த முடியவில்லையே!
பொடா போன்ற கேள்விமுறையற்ற சட்டங்களால் நிரபராதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த வன்முறையாளர்களுக்கெதிராக இந்துக்களும் இஸ்லாமியரும் சேர்ந்திருந்தாலே வெற்றி காண முடியும். அவர்களை marginalise செய்ய முடியாது.

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

மணியின்,

பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்!!/

ஒரு பாரதியின் வீரத்தை உங்களுடைய இந்த எழுத்தில் காண முடிகிறது..

அதுதான் மும்பையின் சிறப்புகளில் ஒன்று.. மும்பையில் சிலகாலம் வாழ்ந்த உங்களுக்கே இவ்வளவு துணிச்சலும் வீரமும் இருக்கும்போது அங்கேயே பிறந்து வளர்ந்து எந்த இக்கட்டு வந்தாலும் எதிர்கொள்வோம் என்கிற உறுதி மும்பைக்கார்க்கு இருப்பது வியப்பில்லை..

வாழ்க மும்பைக்கார்..

மணியன் கூறுகிறார்

வாங்க ஜோசஃப் சார்,உண்மைதான்
மும்பை வாழ்க்கையில் கற்றவை பல.

சீனு கூறுகிறார்

//"பொடா" மாதிரி சட்டத்தை பாய்ச்சாமல் நீக்குகின்ற காங்கிரஸ்அரசு மறைமுகமாக இந்தத் தீவிரவாதிகளுக்க்கு 'க்ரீன் சிக்னல்' தந்து இதோ கொத்து கொத்தாக அப்பாவிகள் கொலை!//

தண்ணீரில் நனைத்த பிஸ்கட் போல சொத சொதவென்று ஒரு உள்துறை அமைச்சர், மைதா மாவு போல ஒரு ராணுவ மந்திரி இருக்கும் வரை இதெல்லாம் நடக்கும்.

//காஷ்மீரில் நாளும் நடக்கும் வன்முறையையும் கட்டுப் படுத்த முடியவில்லையே!//
மணியன்,
காங்கிரஸ் அரசு வந்தவுடன் தான் கஷ்மீரிலும், கிழக்கு இந்தியாவிலும் தீவிரவாதம் அதிகமாகிறது. இதிலிருந்தே தெரியவில்லை, அவர்களின் கொள்கை எப்படி என்று.

//அதுதான் மும்பையின் சிறப்புகளில் ஒன்று..//
சென்ற முறை நடந்த குண்டுவெடிப்பில் கூட ஓரிரண்டு நால்களிலேயே சென்செக்ஸ் உயர்ந்ததே இதற்கு சாட்சி. இப்பொழுதும், ஒரே நாளில் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. உண்மையிலேயே மும்பை மக்கள் தைரியமானவர்கள் தாம்.

மணியன் கூறுகிறார்

வாங்க சீனு. நான் பொடா போன்ற அடாவடி சட்டங்களை ஆதரிப்பதில்லை. இருந்தபோதிலும் உங்கள் கோபம் புரிகிறது. நிச்சயமாக இதற்கு திறனற்ற உள்துறை அமைச்சு ஒரு காரணமே. மாநில அரசும் மிகவும் மோசமே. மழை பாதிப்புகளை இன்னும் சரி செய்ய முடியாமல் இந்த இரயில் தொடர் குண்டு வெடிப்புகளின் போது அரசு இயந்திரத்தின் inefficiency நன்றாகத் தெரிந்தது. ஒரு disastar management கொள்கையும் கடைபிடிக்கப் படவில்லை. பாதியில் பயணம் இரத்தானவர்களுக்கு யாதொரு மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. பொதுமக்களே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவேண்டியதாயிற்று.