தோஹாவா.. தோக்கா*வா?

உலக வர்த்தக கழகத்தின் (WTO) தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தைகள் 2001இல், உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திற்கு உள்ள தடைகளை நீக்கி உலகெங்கும் திறந்த சந்தை எற்படுத்தும் குறிக்கோளுடன், ஆரம்பிக்கப் பட்டது. வெவ்வேறு உற்பத்தி சக்திகளையும் வாங்குகின்ற சக்திகளையும் கொண்ட வளர்ந்துவரும் நாடுகள் தங்கள் விவசாய மற்றும் உற்பத்தி பொருட்களை தங்குதடையின்றி எல்லா நாடுகளிலும் விற்கும் வசதியை எதிர்நோக்கியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளில் அனைத்துநாடுகளின் சார்பாக G20 எனக் குறிப்பிடப்படும் 20 நாடுகள் பங்கேற்றன. இந்த பேச்சுவார்த்தைகளின் பிரதம செயலர் பாஸ்கல் லாமி இதிலும் குறைத்து G4 என பிராசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பங்கேற்குமாறு கூட்டங்களை ஏற்படுத்துவார். இதனால் தன் மக்களின் நலனை மட்டுமன்றி வளரும் நாடுகளின் பாதுகாப்பையும் இந்தியாவே எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. கடாரின் தோஹாவில் 2001இல் இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டதால் இவை தோஹா பேச்சுவார்த்தைகள் எனப் படுகின்றன. இதை அடுத்து காங்குன் (மெக்சிகோ),ஹாங்காங்(சீனா)வில் 20 நாட்டு மந்திரிகளுடன் பேச்சு நடந்தது. தவிர G4 குழுவுடன் ஜெனிவா, பாரிஸ் நகரங்களில் நடந்து, திரும்பவும் இந்த மாதம் ஜெனிவாவில் நடந்துள்ளது.

இந்த ஆறுவருட பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்வுமின்றி தோல்வியடைந்திருக்கின்றன. 'No decision is better than bad decision' என்று இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறுகிறார். வளரும்நாடுகளை தங்கள் சுங்கவரிகளை நீக்கிக் கொள்ளச் சொல்லும் அமெரிக்கா தன் பங்கில் விவசாயப் பொருட்களுக்கு அது அளித்துவரும் மானியத்தைக் குறைக்க தயாராக இல்லை. இங்குபோல் விவசாயம் அங்கு சிறுவிவசாயிகளிடம் இல்லை. பெரும் தனியார் நிறுவனங்களே உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. உயர்தர தயாரிப்பு முறைகளாலும், பிரம்மாண்ட அளவினாலும் தயாரிப்புச் செலவை குறைக்கும் இவர்களுக்கு அரசு மேலும் சலுகைகளை வழங்கி கோதுமை, அரிசி போன்ற பண்ணைப்பொருட்களை உலகில் மிக குறைந்த விலையில் விற்கமுடிகிறது. இந்த மானியத்தைத் தான் குறைக்க அமெரிக்க அரசு முன்வரவில்லை. இந்த விலையில் வளரும் நாடுகள் சந்தையை திறந்துவிட்டால், நம் எல்லோருக்குமே அரிசி ரூ.2இல் கிடைக்கலாம். ஆனால் 67.5 கோடி இந்திய விவசாயிகள் பட்டினிச்சாவு தழுவ வேண்டிவரும். 2007இல் அமெரிக்கஅதிபரின் உடனடிமுடிவு (fast track) அதிகாரம் முடிவதால் இந்த வருடக்கடைசிக்குள் ஒரு தீர்மானத்திற்கு வர அனைவரும் முயன்றனர். இருப்பினும் அமெரிக்க விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களின் லாபி, செனட்டர்களின் தேர்தலுக்குப் பணம் கொடுப்பதால், தங்கள் சுயநலத்திற்காக தடுக்கிறது. 'நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், ஊதிஊதி திங்கலாம்' என்பதாகவே இதுவரை இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன.

'ஆகா,நமது பொருட்களை உலகெங்கும் விற்கலாம், வேலைவாய்ப்பு பெருகும், தனிநபர் வருமானம் உயரும்' என இந்த பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்திருந்த ஏழைநாடுகள் பணக்காரநாடுகளின் பிடிவாதத்தால் ஏமாந்தது மட்டுமன்றி உலக வர்த்தககழகத்தின் அவசியம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

*தோக்கா(இந்தி) = பின்குத்து,துரோகம்
மேல்விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Doha_round


Bloggers in a spot ?

தமிழ்மணம் வீசும் அழகான வலைப்பூக்களை கண்டு மகிழ கடந்த சிலநாட்களாக படும் சிரமம் சொல்லி முடியாது. அன்னியலோகமும் அடுத்தநாட்டு பிராக்ஸியும் கை கொடுக்கின்றன. அரசின் கணினி கைநாட்டுத்தனம் (காப்புரிமை:துளசிதளம்) நன்றாக வெளிப்பட்டுள்ளது. ஏதோ புத்தகத்தையும், திரைப்படத்தையும் தடை செய்வதுபோல் செயல்பட்டுள்ளனர். இணையசேவை வழங்குவோரும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி யாதொரு பிரக்ஞையுமின்றி (அவர்களை எண்ணிக்கையாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் தானே) 'ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான்' கணக்காக அரசாணையை நிறைவேற்றியுள்ளனர்.பொதுமக்கள் (எல்லாம் நாம தான்!) கூக்குரலிற்குப் பிறகு அரசு விழித்துக்கொண்டு "நான் சில வலைப்பூக்களைத் தானே தடை செய்யச் சொன்னேன்,ஏன் எல்லாவற்றையும் நிறுத்தினீர்கள்?" என திருப்பிக் கேட்க ISPs அசடுவழிய இப்போது IP Blockingகிற்கு பதிலாக DNS வழி தடைகள் ஏற்படுத்தப் போகிறார்கள். என்ன தடை போட்டாலும் மாறிவரும் நுட்ப உலகில் அது வீணே என்று எப்போது அரசு உணருமோ ? உண்மையிலேயே தணிக்கை செய்யவெண்டுமெனில் சீனா போன்று நாடுதழுவிய நெருப்புச்சுவர் (Firewall) எழுப்பவேண்டும்; மக்களாட்சியும் பேச்சு சுதந்திரமும் நமது USPஆக விளம்பரம் செய்யும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

இனி தடை செய்யப்பட்ட தளங்களை நோக்கினால் அவை நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியனவாய் தெரியவில்லை. இருந்தபோதிலும் உள்நாட்டு அமைதியை பராமரிக்கும் அரசின் உரிமையை, உடனடியாக செயல்படுத்தவேண்டிய அவசியங்களை மறுக்கவில்லை. ஆனால் தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு அவை ஏன் தடை செய்யப்பட்டன என்று அறிவித்தலும் அவர்கள் தரப்பின் நியாயங்களை சொல்ல வாய்ப்பளித்தலும் ஒரு திறந்த குமுகாயத்தில் அவசியம். ஒரு நீதிமன்ற அதிகாரமுடைய அமைப்பு இத்தகைய அரசாணைகளை, தடைவிதிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட காலவரைக்குள் இருதரப்பினரையும் விசாரித்து, உறுதி (endorse) செய்ய வேண்டும். கைதான யாரையும் குறிப்பிட்ட நேரக்கெடுவிற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது போல் இதுவும் நடக்க வேண்டும். இல்லையேல் ஆளும்கட்சிக்கும் கூட்டணிக்கட்சிக்கும் எதிராக எழுதுவது நாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் செயலாகக் காட்டப்படும்.

இந்தியவலைப்பதிவர்கள் தங்கள் இணையசேவை வழங்குவோரிடம் சேவைகுறைவு குறித்து வாடிக்கையாளர் மன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஒருவரது வலைத்தளத்தை அரசு தடை செய்யாதிருக்கும்போது அதனை தடுத்தது சேவைகுறைவே யன்றோ ?

உமருக்கு அஞ்சலி

'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள்.

நமது தமிழ்மணம் Google groupஇல் திரு.நா. கணேசன், ஹூஸ்டன்,டெக்ஸாஸ் அனுப்பியுள்ள மடலை இங்கு அனைவருக்காகவும் பதிகிறேன்:

அதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் தானியங்கி எழுத்துரு (Font) மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும், கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில்
மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

உமர் தம்பி அவர்களின் சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும் உள்ளன.

வலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள் உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.

உலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம், (www.thamizmanam.com) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும் முன்னணி தளமாகும்.

இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துறுக்கள் ஆகியவை உமர் தம்பி அவர்களின் இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.

மேலும் நமது இணைய தளத்திலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
இவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர்
குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

உமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp
http://www.geocities.com/csd_one/fonts/

உமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட
பேரிழப்பு என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, உயரிய சுவர்க்கவாழ்வை
வழங்குவானாக. ஆமீன்.

இணையத்தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிக்கு தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கடன்பட்டுள்ளோம். இளம்வயதில் நிகழ்ந்த அவரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்குகொண்டு நாமும் அஞ்சலி செலுத்துகிறோம்.

மும்பை வாழ்க!

அலுவலகப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வீட்டின் பணிகளை எதிர்நோக்கி விரையும் செக்ரடரிகள்; பச்சிளம்பாலகனின் பிறந்தநாளைக் கொண்டாட மதியஉணவு இடைவேளையில் வாங்கிய பொம்மையுடன் மகிழ்ச்சியான இரவை எதிர்நோக்கும் குமாஸ்தாக்கள்; கல்லூரியின் தேர்வுப்பட்டியலில் பெயரைக் கண்ட மகிழ்ச்சியை பகிர விரையும் மாணவர்கள்; நாளும் சிறுசிறு பொருட்களை விற்று வயிறு வளர்க்கும் சிறார்கள் .. நேற்று மாலை 6:24லிருந்து 6:35க்குள் சிதறியது அவர்கள் உடல்களா, இல்லை கனவுகளா ? பெனாத்தலார் கேட்கிறார் இதுதான் வீரமா?

இல்லை, இன்று பின்னலைப் பின்னால் இழுத்து பக்கத்தில் இருப்பவனை அறையச் செய்யும் சூழ்ச்சியை இனம் கண்ட முகம் இல்லா நடுத்தட்டு மக்களின் உறுதியான எதிர்கொள்ளல் அன்றோ வீரம் ?சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் ? பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்!!

நேற்று வன்முறையாளர்களின் வெறியாட்டதிற்கு பலியான அப்பாவி மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களின் உயிர்தியாகத்திற்கும் அடிபடவர்களின் துயரத்திற்கும் நாம் என்றும் தலைவணங்குகின்றோம். ஆனால் இது ஒற்றுமைக்கான நேரம், சகோதர சண்டைக்கல்ல. அரசு இனியாவது தன் கடமையை செவ்வனே செய்யுமா என மக்கள் கவனித்து வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தக்க தண்டனை கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அரசு செலுத்தும் அஞ்சலி; ஈடுபணம் கொடுப்பதோடல்ல.

மழை வருது, பயமா இருக்கு

மும்பை: நான்காவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மும்பையின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறது. சென்ற ஜுலை 27ம் தேதி பிரளயத்தை நினைவுபடுத்தும் இப்பெருமழை மக்களை தங்கள் இல்லங்களில் சிறை வைத்துள்ளது. பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. எங்கள் அலுவலகங்கள் மாலை மூன்றுமணிக்கே மூடப்பட்டு விட்டன. நகரின் உயிர்நாடியான புறநகர் இரயில் போக்குவரத்து தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் காலை 10:45 முதல் நிறுத்தப் பட்டுள்ளது. மேற்கு லைன் மட்டும் மெதுவாக இயங்குகிறது. நாற்பது நிமிட பயணங்கள் மூன்று மணிநேரம் எடுக்கின்றன. அகமதாபாத் போகும் மேற்கத்திய விரைவுப் பாதை தடைபட்டுள்ளது. கார்,மிலன், அந்தேரி சப்வேக்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.மாஹிம், பாந்த்ரா,தாதர் மற்றும் தஹிசர் பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.(படம் நன்றி: DNA Mumbai)

விமானதளத்தின் ஓடுசாலைகளில் நீர்த்தேக்கம் இருப்பதால் விமான சேவைகள் தாமதமாகின்றன. ஓரிரு சேவைகள் முடக்கப் பட்டாலும் விமானங்களின் வருகையும் புறப்பாடும் பலமணிநேர தாமதமானாலும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரிரு சேவைகள் மும்பையிலிருந்து மற்ற நகரங்களுக்கு divert செய்யப் பட்டுள்ளன. மின்வினியோகிக்கும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் நீர்மட்டம் அதிகரிக்கும் இடங்களில் மின்வெட்டும் அமலாக்குகின்றனர். சென்றவருட அனுபவத்தில் அத்தகைய ட்ரான்ஸ்பார்மர்கள் உயர்த்த பட்டிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக செல்பேசி நிறுவனங்களின் BTS நிலையங்களில் பாட்டரி திறன் பற்றாமல் அவை செயலிழக்கத் தொடங்குகின்றன.

மழைநீர் தேக்கத்தால் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க மும்பை காவல் ஆணையர் மக்களை அத்தியாவசிய தேவைகளன்றி வெளியில் வாகனங்களை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற நகரங்களைப் போல புறசுற்றுச் சாலைகளோ மாற்று வழிகளோ இல்லாதநிலையில், இந்த தீவுநகரில் இருக்கும் ஓரிரண்டு சாலைகளும் அடைபட்டால் வெள்ளநிவாரணத்திற்கு உதவி விரைவது கூட தடை படும் என்பதால் சென்ற வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம் இது.

இன்னும் 76 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை அறிக்கை கூறுகிறது.

ஒளியும் ஒலியும்!


இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பு மசோதா 2006 ஊடகத்துறையில் ஒரே நிறுவனம் பலவகை ஊடகதளங்களில் தனியாதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையாகவரையப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பம், வான்வெளி, உள்துறை, வணிகம் மற்றும் சட்ட அமைச்சகங்களின் பின்னூட்டங்களையும் திட்டக் கமிஷனின் கருத்துக்களையும் எதிர்பார்த்திருக்கிறது. மழைக்கால மக்களவை கூடத் தொடரில் விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது. ஒரு ஊடக பதிப்பாளர் மற்றொரு ஊடகத்தில் 20% க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. உதாரணமாக ஒரே நிறுவனம் டி.வி, FM மற்றும் DTH சேவைகளில் தனியாதிக்கம் செய்ய முடியாது. 1995இலேயே உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்த இந்த பல்வகை கருத்துக்களுக்கான வழிமுறை இந்த மசோதா மூலம் கொண்டு வரப்பட விருக்கிறது. ஆனால் புதிய தொழிற்நுட்பங்களான செல்பேசி வழி டிவி, இணையவழி தொலைக்காட்சி (IPTV) முதலியன இதன் செயல்பாட்டில் சேர்த்துக் கொள்ளபடவில்லை.

இந்த மசோதாவில் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) போன்று ஒளிபரப்பு கட்டுப்பாட்டு ஆணையம் (Broadcast Regulaory Authority) அமைக்கப் படும். இதனால் ஒளிபரப்புத்துறை சம்பந்தமாக TRAI வெளியிடும் விதிகளை இனி புதிய ஒளிபரப்பு ஆணையம் கட்டுப்படுத்தும். தவிர கேபிள் ஆபரேடர்கள் மற்றும் MSOக்களுக்கான உரிமங்களும் இவ்வாணையம் கட்டுப்படுத்தும். அன்னிய தொலைகாட்சி ஒளிபரப்புகள் 15% ஆவது உள்ளூர் தயாரிப்புகளையும் எல்லா ஒளிபரப்புகளும் குறைந்தது 10% பொதுநல நோக்கமுடையவையாகவும் இருக்க வேண்டும்.

ஒளிபரப்புகளின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் சில clauseகளுக்கு ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உள்ளடக்க விதிகளுக்குப் புறம்பாக எந்த ஊடகமாவது ஒளிபரப்பினால் மாவட்ட கலெக்டர்/காவல் ஆணையர் நிலை அதிகாரிகள் ஊடக ஒளிபரப்பு இயந்திரங்களை முடக்கவும் அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதால் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்த எதிர்ப்பின் ஆதாரம். இன்னும் அழுத்தமாக 37வது ஷரத்து இத்தகைய நடவடிக்கையில் எந்த சிவில் நீதிமன்றமும் தலையிட முடியாது என்கிறது.

இந்த மசோதா அரசு ஆணையானால் சன் தொலைக்காட்சியை எவ்வாறு பாதிக்கும் எனத் தெரியவில்லை. சமீபத்திய பங்கு விற்பனை இந்த 20% முதலீடு தடைகளை மேற்கொள்ளவே எடுக்கப் பட்டிருக்குமோ ?