வென்று வந்தீர், நன்று!நன்று !!

18ஆவது காமன்வெல்த் விளையாட்டுக்கள் நேற்று முடிவடைந்தது. இந்தியா 50 மெடல்களை ( 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெங்கலம்) பெற்று நான்காம் இடத்தை எட்டியுள்ளது.
இந்திய துப்பாக்கி வீரர் சமரேஷ் ஜங் ஐந்து தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களை வென்று இப்போட்டியின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். மற்றுமொரு போட்டியில் துப்பாக்கி வேலை செய்யாமல் பதக்கம் இழக்காமல் இருந்திருந்தால் ஒரு சரித்திரமே படைத்திருப்பார். அவருக்கு இப்போட்டியின் முதலாம் டேவிட் டிக்சன் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது.அவரது மனைவியும் பெண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றிருப்பது பாராட்டிற்குறியது.மொத்தத்தில் துப்பாக்கி சுடுதலில் 16 தங்கங்களை இந்தியா வென்றுள்ளது.அகில்குமார் குத்துசண்டையிலும்,பெண்களுக்கான பளு தூக்குதலில் கீதா,குஞ்சுராணி, ச்சானு ஆகியோர் மூன்று தங்கங்களும் டேபிள் டென்னிசில் இரண்டு தங்கங்களும் கிடைத்துள்ளன.

உலக அலவிலான போட்டி இல்லை என்ற விமர்சனம் நிலவினாலும் இப்போட்டியின் வரலாற்றில் இதுவே இந்தியாவின் அதிகமான சாதனை என்பது மகிழ்ச்சிக் குறியது. கிரிக்கெட்டே பிரதானமாக கொண்டு இயங்கும் இந்திய ஊடகங்களில் நேற்றைய இறுதிவிழா கவரேஜில் பாலிவுட் தாரகைகளின் பங்கே அதிக முக்கியத்துவம் கொண்டிருந்தது. நமது பதக்கவீரர்களின் படங்கள் கூட காணவில்லை. இந்த அளவு ஊக்குவிக்கும் இந்திய சூழலில் இவ்வீரர்கள் கொணர்ந்திருக்கும் பதக்கங்கள் இனிமையானவை. அஞ்சு ஜார்ஜின் தோல்வி ஒரு ஏமாற்றமே என்றாலும் வரவிருக்கும் 2010 தில்லி விளையாட்டுகளுக்கு நல்ல முகமனாக இச்சாதனைகள் அமைந்துள்ளன. ஓரிரு நிகழ்வுகள் இந்திய மானத்தை வாங்கினாலும் 2006 விளையாட்டுக்கள் ஒரு மைல்கல்லே.நமது வாழ்த்துக்கள்.

மயிலு மயிலு மயிலுதான்!

என் சிறு வயதில் செய்தி அனுப்புவது என்றால் கார்ட் எழுது வது தான் (தந்தி வந்தால் அதிர்ச்சி செய்திகள் தான் என்று ஒரு நம்பிக்கை வேறு). இதில் கார்டின் வெற்றிடத்தை யெல்லாம் ஆக்கிரமித்து நுணுக்கமாக எழுதி எத்தனை செய்திகளை அனுப்ப முடியும் என்று என் தாத்தா முயற்சிப்பார். ஒரு கார்டுக்கும் கவருக்கும் விலை வித்தியாசம் சில பைசாக்கள் தான். இருப்பினும் அதிகமாக கவர் உபயோகிக்க மாட்டார்கள். நான் கல்லூரிநாட்களில் வீட்டிற்கு கடிதம் எழுத இன்லாண்ட் லெட்டர் எனப்படும் அஞ்சல்தாளைத் தான் பயன்படுத்துவது. கார்ட், மதிப்பு குறைவாகவும் privacy இல்லாமல் இருந்ததாகவும் கருதினேன். அதற்கே நான் பணத்தின் அருமை தெரியாமல் இருப்பதாக தாத்தா பொருமுவார். அதனால் கொடுத்த காசிற்கு வஞ்சகம் செய்யாமல் அஞ்சல்தாளின் முழுமையும் நான் எழுதுவேன். இதுவே எனக்கு மறைமுகமாக எழுத்துப் பயிற்சியாயிற்று. பின்னாளில் தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய தொடங்கிய பிறகு தொலைபேசியிலேயே எல்லா விதயங்களும் பேசப்பட்டன. மெதுவாக எழுதும் பழக்கம் குறைந்தது.

மின்னஞ்சலின் அறிமுகம் எனக்கு BBS எனப்படும் விவரப்பலகை சேவை காலத்திலேயே ஏற்பட்டது (வருடம் ஞாபகம் இல்லை). இருப்பினும் அது மடலாடற்குழு போன்று அங்கத்தினர்களுக்குள் தான் இருந்தது. அதன் பிறகுதான் VSNL இணைய சேவையே வந்தது. அந்த இணைய சேவையை பயன்படுத்த சற்றே யூனிக்ஸ் ஆணைகள் தெரிந்திருக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க vi navigation போல கடினமான இடைமுகம். இத்தனை சிரமப்பட்டு அமெரிக்காவிலிருந்த உறவினருக்கு ஒரு செய்தி அனுப்பி அது உடனே பதில் அளிக்கப் பட்டதில் அடைந்த மகிழ்ச்சி இன்றும் உணர முடிகிறது.

பிறகு இணையம் நாளொரு வண்ணம் வளர்ந்து மின்னஞ்சல்சேவையில் அடைந்துள்ள மாற்றங்கள் பிரமிப்பூட்டுபவை. ஒவ்வொருவரும் நாலைந்து மின்னஞ்சல் முகவரிகள் வைத்தும் பற்றாதிருக்கிறது. கணி(னி) கூட தேவையில்லாமல் கைப்பேசியிலேயே அஞ்சல் பார்க்கக் கூடிய வசதி, சாட், ஸ்கைப் என்று விதவித சேவைகள் வேறு. ஹைதராபாத்தில் நாய்குட்டிகூட மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதாக சோம்பேறிப் பையன் கூறுகிறார்.

இந்த பின்னணியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே அரசு உளவுத் துறையினருக்கு மின்முகவரி இல்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை தொலைபேசிகூட இல்லாத காவல்நிலையங்கள் இருக்கின்ற நிலையில் வெகுதொலைவு போகவேண்டியிருக்கிறது.

நவிமும்பைக் கலவரங்கள்

மும்பையின் புறநகர் பகுதியான புதிய மும்பை எனப் பொருள்படும் நவிமும்பை கடந்த மூன்று நாட்களாக பதட்டத்தில் இருந்துவருகிறது. இங்கு அரசு இயந்திரம் எந்த அளவு செயலிழந்து பரிதாபநிலையில் உள்ளது என்பதை உணர்த்தியுள்ளது


இங்குள்ள கிராமங்களில் விவசாய மற்றும் மீனவ மக்கள் வசித்துவந்தனர். புறநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இங்கு விவசாயப் பொருட்கள் விற்பனை கேந்திரம் APMC ( சென்னையின் கோயம்பேடு மார்கெட்போல) அமைக்கப் பட்டபோது பளுதூக்கும் 'மாத்தாடி'கள் (பெங்களூரின் கலாசி, கேரளத்தின் அட்டமாரி) இங்கு குடியேறினர். அவர்களுக்கு தனி காலனியும் அரசு அமைத்துக் கொடுத்தது. அவர்கள் ஒரு கூட்டமாக வசித்ததாலும் தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் ஓட்டு வங்கி ஏற்படுத்தியதால் அரசியல்வாதிகளின் அரவணைப்பும் இருந்தது. கன்சோலி என்ற கிராமத்து மக்களுக்கும் இவர்களுக்கும் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டவாறு இருந்தன. உள்ளூர்மக்கள் சார்பாக கணேஷ் நாயக் என்ற NCP பிரமுகரும் மாத்தாடிகள் பக்கம் சசிகாந்த் ஷிண்டே என்ற NCP பிரமுகரும் அரசியல் நடத்தி வந்தனர். இவர்களிடையே ஏற்பட்ட யார்பெரியவன் சண்டையே, ஹோலிதினத்தன்று நடந்த ஈவ்டீஸிங் சம்பவத்தை இத்தனை பெரிய ரகளையாக்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்த கலவரத்தில் காவலர் துப்பாக்கிசூடு நடத்த மூன்று பேர் பலி; 76 பேர் (22 போலீஸார் உட்பட) காயம். வழமைபோல விசாரணைக் கமிஷன் அமைக்கப் பட்டிருக்கிறது.


அதன் பின்விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. அமைதிக்கு பழக்கப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிகளால் கலவரமடைந்துள்ளனர். எங்கள் அலுவலகமும் இன்று 4:30 மணிக்கே மூடப்பட்டது. வீட்டிற்கு விரைவோர் பொது போக்குவரத்து இன்றி சிரமமடைந்தனர்.


நவிமும்பை காவல்துறை ஏன் உரிய நேரத்தில் அதிக காவலரையும் RAF எனும் அதிரடிப்படையையும் மும்பையிலிருந்து கோரவில்லை என்பதும் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பதிலாக இரப்பர் குண்டுகளையும் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தவில்லை என்பதும் சந்திக்கும் நண்பர்களின் கேள்விகளாக இருக்கின்றன. இதன் நடுவே மாநில உள்துறை அமைச்சர் ,” இருபாலருமே மராட்டி பிந்தங்கிய வகுப்பினர்; அவர்களுக்குள்ளேயே பேசி சரிசெய்து கொள்வர்" என்று கூறுவதிலிருந்து தப்பித் தவறி இவர்கள் பிறமாநிலத்தவர்களாகவோ (பீஹாரி, பெங்காலி), பிறமதத்தவர்களாகவோ (பங்களாதேசி) இருந்திருந்தால் நிலமை கட்டுக் கடங்காது போயிருக்கக் கூடும் என்பது புலப்படுகிறது. இத்தகைய நாசுக்கான சூழலை கையாளும் பக்குவம் நமது அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லை என்பது கவலை அளிக்கிறது.


தினமலரில் மணிமலர்

இன்று எனது statcounter எண்ணிக்கை கிடுகிடுவென்று ஏறியதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமும் பயமும் ஏற்பட்டது. எங்கிருந்து வந்தார்கள் என்று பார்த்ததும்தான் தெரிந்தது தினமலர் தளத்திலிருந்து என்று.
ஆம், இன்றைய தினமலரில் "மணிமலர்' பதிவைப் பற்றி வந்துள்ளது.

http://www.dinamalar.com/2006mar08/flash.asp

தினமலருக்கு நன்றி.

இதே பதிவு 'தேன்கூடு' திரட்டியிலும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கும் நன்றி.

நம்ம நாலு !

கொங்குராசாவின் மூலம் தமிழ்மணத்தில் மையம் கொண்ட நன்நான்கு ஆட்டம் ஏழாவது கட்டத்தில் என்னை (ராசா->D ராஜ் -> ஜோசஃப் -> ராகவன் -> இராமநாதன் ->கொத்ஸ் -> நிலா) நிலவிலிருந்து வந்தடைந்திருக்கிறது. மதி கூறுவது போல இப்போது சலிப்படைய ஆரம்பித்திருக்கிறது. மேலும் இளவஞ்சியின் இடுகைக்குப் பிறகு நாமெல்லாம் "எனக்குத் தயிர்சாதம் பிடிக்கும்" என்றொரு இடுகை இடத்தேவையா என்ற தயக்கம் வேறு. இருந்தாலும் பதிவு இட கிடைத்த வாய்ப்பை கைவிட மனமின்றி நானும் எனது 'பிடித்த நாலை' சொல்கிறேன்.

தருமி அவர்கள் போன்று நான் ஒரே ஊரிலேயே வளர்ந்தும் வாழ்ந்தும் இருக்க முடியவில்லை. ஆனால் பணி தொலைதொடர்புத் துறையில் மட்டுமே. இடமாற்றம் உண்டே தவிர பணியில் மாற்றமில்லை.பணிநிமித்தம் இந்தியாவெங்கும் நன்கு சுற்றியிருக்கிறேன்.

வளர்ந்த இடங்கள்:

 1. செங்கை - பிறந்த ஊர்

 2. கோவை - சொந்த ஊர், ஆரம்பப் பள்ளியும் பொறியியல் படிப்பும்

 3. சென்னை - இடைநிலை பள்ளி மற்றும் பின்னாளில் பட்ட மேற்படிப்பு

 4. மதுரை - பள்ளி இறுதியும் பல்கலை புகுமுகமும்

வாழ்ந்த இடங்கள்:

 1. பெங்களூரூ -

 2. கொல்கொதா

 3. கொச்சி

 4. சென்னை

 5. மும்பை (தற்போது)

சென்று வியந்த இடங்கள்:

இடங்கள் பல, உயர்ந்த நான்கு

 1. பாம்பன் பாலம், இராமேஸ்வரம்

 2. இலங்கை அனுராதபுரம், கண்டி ,கதிர்காமம்

 3. கவரத்தி, இலக்ஷ தீவுகள்

 4. ஸ்விட்சர்லாந்து

பார்த்த பரவசங்கள்:

 1. தாஜ்மகால்

 2. பிஸா சாய்வு கோபுரம்

 3. ஈஃபல் கோபுரம்

 4. விக்டோரியா மெமோரியல், கொல்கோதா

பிடித்த கலைஞர்கள்:

 1. எம்.ஜி.ஆர் (நடிப்பிற்காக அல்ல)

 2. சிவாஜி,தற்போது கமல்

 3. மனோரமா

 4. நாகேஷ்

மனதில் நின்ற படங்கள் (உயர்ந்த நான்கு):

 1. எங்கவீட்டு பிள்ளை

 2. வீரபாண்டிய கட்டபொம்மன்

 3. நெஞ்சில் ஓர் ஆலயம்

 4. நாயகன்

 5. தவமாய் தவமிருந்து (இன்றைய)

இசைக் கலைஞர்கள்:

 1. MS சுப்புலட்சுமி

 2. மண்டோலின் ஸ்ரீநிவாஸ்

 3. லால்குடி ஜெயராமன்

 4. பீட்டில்ஸ்

பின்னணி கலைஞர்கள்:

 1. S.P.B

 2. ஹரிஹரன்

 3. பாம்பே ஜெயஸ்ரீ

 4. ஷ்ரேயா கோஷால்

விளையாட்டு வீரர்கள்:

1.சச்சின்

 1. சானியா மிர்ஸா

 2. பிரகாஷ் படுகோன்

 3. விசுவநாதன் ஆனந்த்

மகிழ்வான தருணங்கள்:

 1. மதுரை ஆரப்பாளயத்திலும் இரயில்வே காலனி மைதானத்திலும் கிரிக்கெட் விளையாடி திரிந்த நாட்கள்.

 2. அடுத்தநாள் தேர்வுக்கு, முதல் நாள் ஜெயந்தி/தியாகராஜாவில் ஒரு டிக்கெட்டிற்கு இரண்டு சினிமா பார்த்து இரவு ஒரு மணிக்கு எலியட்ஸ் பீச்சில்( ஏன் அந்த பெயரை எடுத்து விட்டார்கள் ?:( )குளித்துவிட்டு( இப்போது அடிக்கடி ஒரு drowning படிக்கும்போது 'பக்' கென்கிறது) வேளச்சேரி கேட்டில் இருந்த ஒரு டீ கடையில் ஃப்ரெஷாக படிக்க ஆரம்பித்த குழுக்கள்.

 3. இளம்பனியில் கொல்கொதா ரவீந்த்ர சரோவரில் என்குழந்தைகளுடன் விளையாடித் திரிந்த நாட்கள்; 'சிறந்தது இரவீந்த்ர சொங்கீத்தா நுஸ்ருல் கீத்தா' என்ற சூடான விவாதத்தில் நுழைந்து இரண்டுமே அழுகை சங்கீதமே என்று தீர்ப்பு வழங்கி டின் கட்டிக் கொண்டது.

 4. மகளின் திருமணநாள்.

என்னைக் கவர்ந்தவர்கள்:

1.காமராசர் - எளிமை, புத்திகூர்மை,செயலாற்றல்

 1. அன்னை தெரசா - அன்பு, சேவை (கொல்கொதாவில் அவர் நிலையத்திற்கு சென்றது மறக்க முடியாது)

 2. வி.பிரபாகரன்* - கொள்கைப் பிடிப்பு, நாடாளும் பண்பு

 3. ஜெயலலிதா* - பிடிவாதம்,சமயோசிதம், ஆணாதிக்க உலகில் எதிர்நீச்சல்

  (* இவர்களின் அரசியலை ஆதரிக்கிறேன் என்று கொள்ளாதீர்கள் :))

இதுவே கிடைத்தது சான்ஸ் என்று நிறைய சுயபுராணம் பாடியாகி விட்டது. மற்றபடி உணவு, வலைத்தளங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கிடைத்ததை மேயும் இரகம்தான். இனி நான் அழைக்கும் நால்வர்:

1 ஸ்ரீமங்கை (K.சுதாகர்).

 1. ராம்குமார்

 2. --L-L-D-a-s-u---

 3. கல்வெட்டு

கடந்த நாலுநாட்களாக இந்த நாலுக்காக ஒரேமலரும் நினைவுகள் தான். கடந்ததையும் கனவுகளையும் நனவுகளின் அழுத்தத்தில் தொலைத்து வாழும் எனக்கு இது சுகமாய் இருந்தது. நான் நன்றி சொல்வேன் அந்த நிலாவுக்கு.வந்தாச்சு வந்தாச்சு தேர்தல் வந்தாச்சு !!

ஆச்சு, இங்கே நிலாதேர்தல் முடிந்தவுடன் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும் ஒரு கட்ட தேர்தல் நாளாக மே மாதம் 8ம் நாள் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13 அன்று முறையாக அறிவிக்கப்பட்டு 20. 4.06 வரை வேட்பாளர் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 24/04/06.

தமிழ்நாடு தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அசோம் (புதிய பெயர்) 03/04/06 & 10/04/06 (2 கட்டம்)
மேற்குவங்கம் 1/04/06,22/04/06,27/04/06,03/05/06 &08/05/06 (5 கட்டம்)
கேரளா 22/04/06,29/04/06 & 03/05/06 (மூன்று கட்டம்)
பாண்டிச்சேரி 03/05/06 & 08/05/06( 2 கட்டம்)
மே மாதம் 11ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் வாக்குகள் எண்ணப்படும்.

இனி code of conduct நடைமுறைக்கு வரும்.

அனைத்து கட்சியினருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.