மயிலு மயிலு மயிலுதான்!

என் சிறு வயதில் செய்தி அனுப்புவது என்றால் கார்ட் எழுது வது தான் (தந்தி வந்தால் அதிர்ச்சி செய்திகள் தான் என்று ஒரு நம்பிக்கை வேறு). இதில் கார்டின் வெற்றிடத்தை யெல்லாம் ஆக்கிரமித்து நுணுக்கமாக எழுதி எத்தனை செய்திகளை அனுப்ப முடியும் என்று என் தாத்தா முயற்சிப்பார். ஒரு கார்டுக்கும் கவருக்கும் விலை வித்தியாசம் சில பைசாக்கள் தான். இருப்பினும் அதிகமாக கவர் உபயோகிக்க மாட்டார்கள். நான் கல்லூரிநாட்களில் வீட்டிற்கு கடிதம் எழுத இன்லாண்ட் லெட்டர் எனப்படும் அஞ்சல்தாளைத் தான் பயன்படுத்துவது. கார்ட், மதிப்பு குறைவாகவும் privacy இல்லாமல் இருந்ததாகவும் கருதினேன். அதற்கே நான் பணத்தின் அருமை தெரியாமல் இருப்பதாக தாத்தா பொருமுவார். அதனால் கொடுத்த காசிற்கு வஞ்சகம் செய்யாமல் அஞ்சல்தாளின் முழுமையும் நான் எழுதுவேன். இதுவே எனக்கு மறைமுகமாக எழுத்துப் பயிற்சியாயிற்று. பின்னாளில் தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய தொடங்கிய பிறகு தொலைபேசியிலேயே எல்லா விதயங்களும் பேசப்பட்டன. மெதுவாக எழுதும் பழக்கம் குறைந்தது.

மின்னஞ்சலின் அறிமுகம் எனக்கு BBS எனப்படும் விவரப்பலகை சேவை காலத்திலேயே ஏற்பட்டது (வருடம் ஞாபகம் இல்லை). இருப்பினும் அது மடலாடற்குழு போன்று அங்கத்தினர்களுக்குள் தான் இருந்தது. அதன் பிறகுதான் VSNL இணைய சேவையே வந்தது. அந்த இணைய சேவையை பயன்படுத்த சற்றே யூனிக்ஸ் ஆணைகள் தெரிந்திருக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க vi navigation போல கடினமான இடைமுகம். இத்தனை சிரமப்பட்டு அமெரிக்காவிலிருந்த உறவினருக்கு ஒரு செய்தி அனுப்பி அது உடனே பதில் அளிக்கப் பட்டதில் அடைந்த மகிழ்ச்சி இன்றும் உணர முடிகிறது.

பிறகு இணையம் நாளொரு வண்ணம் வளர்ந்து மின்னஞ்சல்சேவையில் அடைந்துள்ள மாற்றங்கள் பிரமிப்பூட்டுபவை. ஒவ்வொருவரும் நாலைந்து மின்னஞ்சல் முகவரிகள் வைத்தும் பற்றாதிருக்கிறது. கணி(னி) கூட தேவையில்லாமல் கைப்பேசியிலேயே அஞ்சல் பார்க்கக் கூடிய வசதி, சாட், ஸ்கைப் என்று விதவித சேவைகள் வேறு. ஹைதராபாத்தில் நாய்குட்டிகூட மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதாக சோம்பேறிப் பையன் கூறுகிறார்.

இந்த பின்னணியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே அரசு உளவுத் துறையினருக்கு மின்முகவரி இல்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை தொலைபேசிகூட இல்லாத காவல்நிலையங்கள் இருக்கின்ற நிலையில் வெகுதொலைவு போகவேண்டியிருக்கிறது.

7 மறுமொழிகள்:

துளசி கோபால் கூறுகிறார்

என்னங்க மணியன்,
நிஜமாவா ஃபோன் இல்லாத போலீஸ் ஸ்டேஷன் இருக்கு? நம்பவே முடியலை(-:

மணியன் கூறுகிறார்

அப்பாடி, ஒருவழியாய் தமிழ்மணத்தில் ஏற்றி விட்டாயிற்று :( நேற்று ஏன் முடியவில்லை, இன்று எப்படி முடிந்தது ?

Unknown கூறுகிறார்

மணியன்,

ஏனென்றால்,

நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை! ;)

மணியன் கூறுகிறார்

வாங்க வாங்க துளசி டீச்சர், எனக்கு முன்னாலேயே ஆஜர் ஆகிட்டீங்க, அதுதான் டீச்சர் என்பது :)
ஆமாங்க, இந்தியாவின் பெரும்பான்மையான கிராமப்புற காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி கிடையாது. (தமிழ்நாடும் கேரளமும் பரவாயில்லை). தொலைபேசி வசதி எட்டாமையும் மாநில அரசின் பணப்பற்றாக்குறையும் காரணிகளாகும்.

மணியன் கூறுகிறார்

வாங்க துபாய்வாசி,
நீங்கள் கூறுவது எனது இடுகைக்கும் ப்ளாக்கர் சொதப்பலுக்கும், இரண்டுக்குமே, பொருந்தும் :)
கணியும் கைக்குழந்தையும் எதற்கு அழுகிறது, எதற்கு சிரிக்கிறது என்று அனுபவம் வாய்ந்தவர்களுக்கே புலப்படுகிறது.

சிவா கூறுகிறார்

மணியன்! என்ன தான் மயிலு, மெயிலு வந்தாலும் கைப்பட ஒரு கடுதாசி எழுதி போட்டா ஒரு சந்தோசம் இருக்கு தானே. அடிக்கடி எங்கம்மா கடிதம் போடு போடுன்னு சொல்வாங்க. அதான் வாரா வாரம் பேசுகிறோமே அம்மா அப்படின்னு சொன்னாலும் கடிதம் போட்டாகணும். பையன் கையால எழுதி படிக்கிறது, இந்த கணிணி தட்டச்சு கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.

அன்புடன்,
சிவா

மணியன் கூறுகிறார்

வாங்க சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான். நேரடியாக நமது குரலைக் கேட்பது ஒரு மகிழ்ச்சி என்றால் நமது எழுத்தை TV Replay போல நினைக்கும்பொழுதெல்லாம் எடுத்து இரசிப்பது இன்னொருவகை சந்தோஷம்தான். குரல் நம்முடன் போய்விடும். கடிதங்கள் காலமெல்லாம் கைவசமிருக்கும் இல்லையா?

என்ன, நீங்கள் tablet PCயில் உங்கள்கையெழுத்தில் எழுதிய கடிதத்தை மெயிலில் உடனடியாக அனுப்பலாம்.நீங்களே படித்து குரலையும் (திரைப்படங்களில் கடிதம் படிப்பதை காட்டுவது போல :)) அனுப்பலாம். நுட்பத்தின் வளர்ச்சிதான் என்னே!!