போலீஸ் இல்லை,பொறுக்கி!பொருளாதார தலைநகராம் மும்பையில் பணம் கொழிப்பதன்றி குற்றங்களும் கொழிக்குமிடமாகும். 1980 களில் மும்பையின் கீழ் உலக (underworld)தாதாக்கள் துப்பாக்கி முனையில் பணமுதலைகளிடம் தற்காப்பு பணம் பறித்துக்கொண்டனர். பணம் கொடுக்காதவரை கொல்லவும் செய்தனர்.அவர்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தவை 'என்கௌன்டர்' முறையில் தாதாக்கள் கொல்லப் பட்டது ஆகும். இவ்வகை என்கௌன்டர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் 1983ம் வருட ஐபிஎஸ் அதிகாரிகளான தயா நாயக், விஜய் சலாஸ்கர் முதலியோர்.
அப்போது எல்லா ஊடகங்களும் அவர்களது திறமையை புகழ்ந்து மகாபுருஷர்களாக்கினர். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்த 'அப் தக் சப்பன்' படம் (நானாபடேகர், ரேவதி) தயா நாயக்கின் வாழ்க்கையை ஒட்டி ராம் கோபால் வர்மாவினால் எடுக்கப்பட்டது. நன்றாக ஓடி நிறைய பணமும் ஈட்டியது. இதன் முன்னால் காகர் என்று என்.சந்திரனால் இதே காவலரின் வாழ்வை மையமாக வைத்து எடுத்தப் படம் சரியாக ஓடவில்லை.

ஆனால் சென்ற வருடம் நிலமை திடீரென்று மாறியது. கதாநாயகன் வில்லனாக உருமாறினார். ஆகஸ்ட் 2005ல் ஊழல்தடுப்பு பிரிவினர்(ஊ.த.பி) தயா நாயக் மீது அபரிமிதமான சொத்து சேர்த்த வழக்கை பதிந்தனர். எவ்வாறு ரௌடிகள் பணம் பிடுங்கினரோ அதேபோல் அவர் முதலில் குற்றவாளிகளிடமும் பின் பணக்காரர்களிடமும் பணம் பறித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதைதான். ஆனால் மாநில அரசின் இடைஞ்சலால் வழக்கை மேற்கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது இது வேகம் எடுத்து கடந்த திங்களன்று பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். அவருடைய இரு உதவியாளர்கள் கைது செய்யப் படுள்ளனர். தயா நாயக் முன் ஜாமீன் கேட்டு தலைமறைவாகியுள்ளார் . நூறு கோடிக்கும் மேலாக சொத்து சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. அவருடைய மனைவி கோமலும் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கர்நாடகாவின் உடுப்பி அருகே ஹென்னஹோலே என்ற அவரின் கிராமத்தில் ஒரு கோடிரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கு பினாமியாக நன்கொடையாளர்கள் காண்பிக்கப்ப்ட்டுள்ளார்கள் என்றும் ஊ.த.பி கூறுகிறது. அப்பள்ளியின் துவக்க விழாவில் பங்கெடுத்த அமிதாப் பச்சன்,சுனில் செட்டி உட்பட அனைத்து பிரபலங்களும் விசாரிக்கப்பட உள்ளனர்.

மும்பை போலீசின் கௌரவம் 2005இல் மிகவும் கீழிறங்கி உள்ளது. வரிசையாக பாலியல் வன்முறைகள், டெல்கி பத்திரத்தாள் ஊழலில் பங்கு, இப்போது இவ்வழக்கு என தலைநிமிர முடியவில்லை. 2006 வருடமாவது அவர்களுக்கு பெருமை சேர்க்குமா எனப் பார்க்க வேண்டும்.

டாடாநகர் - பாலைவனப் பூங்கா

சில நாட்களாக திரு. எல்.என்.மிட்டல், ஜெம்செட்பூரைப் பற்றி எழுதியதாக ஒரு மின்னஞ்சல் இணையத்தில் வலம் வருகிறது. கூகிள் உதவியால் அது சுஹேல் சேத் என்பவரால் ஏசியன் ஏஜ்ஜில் 06/05/2004இலேயே எழுதியது என்று தெரிகிறது. இணையத்தின் நம்பகத்தன்மை இவ்வாறு இருந்தாலும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சிந்திக்க வேண்டியவை. டாட்டாக்கள் தங்கள் ஆலைகளை மட்டும் வளர்க்காமல் ஒரு நகரத்தின் எல்லாவித வளர்ச்சியிலும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அங்கு பணிபுரிந்த/புரியும் ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்தைப் பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுவன்றோ சிறந்த மேலாண்மைத் தத்துவம். இந்த முயற்சி பரவினாலே, பல ஜெம்ஷெட்நகர்கள் உருவானாலே இந்தியா வளர்ச்சியடைந்து விடுமே.

டாடாநகர் ஜொலித்தாலும், நமது நெய்வேலி, திருச்சி கனரக தொழிற்சாலை முதலியனவும் சமூக வளர்ச்சிக்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பதால் சற்றே நிர்வாக குறைவு இருந்திருக்கலாம். ஆனாலும் பழைய பொருளாதார நிறுவனங்கள் சமூக மாற்றத்திற்கு பெரிதும் காரணமாயிருந்திருக்கின்றன. மாறிவரும் சந்தையில் அவை தடுமாறுகின்றன என்பது ஒரு வருத்தமான செய்திதான்.

புதிய பொருளாதார சூழலில் டாட்டாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள் கூட எந்த ஒரு நகர வளர்ச்சியிலும் பங்கு கொள்வதாய் தெரியவில்லை. அதனால் இன்ஃபோசிஸ், விப்ரோவை குறை சொல்லத் தேவையில்லை; இருந்தாலும் பலகோடி சம்பாதித்தும் நகர வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை,போக்குவரத்து தடைகளைத்தவிர, என்னும்போது ஆயாசம் தான் மிஞ்சுகிறது.

கடல்கதிர் மின்நிலையம்

அதிகமான கரியமில வாயு கழிவினால் உலகம் சூடாகி (Global Warming), கடலின் மேல்மட்ட வெப்பநிலை அதிகமாகி வருகிறது. அண்மைக் கால கத்ரினாக்களுக்கு இதுவே காரணம் என்ற கருத்தினால் துப்புரவான எரிசக்தி (Clean Fuel) தயாரிப்பிலிருக்கும் பலமுயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன. நீர்மின்நிலயங்கள் அத்தகையன என்றாலும் அவை அவற்றின் நீர்பிடிபகுதியின் இயற்கை சூழலையும் குடியிருப்பையும் பாதிக்கின்றன. (-ம். சர்தார் சரோவர்,அமைதிப் பள்ளத்தாக்கு திட்டங்கள்).அனல்மின்நிலையங்களும் அணுமின்நிலையங்களும் இயற்கை மாசுபடுத்தலில் முதன்மை வகிக்கின்றன. அணுமின்நிலயங்களில் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது மிக கடினமானதும் முக்கியமானதுமாகும்.

இந்த பின்னணியில் கடல்நீர் வெப்பமடைவதையே பயன்படுத்தி மின்சக்தி உருவாக்கலை Sea Solar Power Inc என்ற நிறுவனம் சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது. ஆழ்கடலின் அடிமட்டத்தில் காணும் குளிர்நீருக்கும் மேல்மட்டத்தில் காணும் நீருக்குமுள்ள வெப்பநிலை ஏற்றத்தாழ்வைக் கொண்டு மின்னிலை இயந்திரங்கள் (Turbines/Generators) இயக்கப்படுகின்றன. மேல்மட்டத்தில் 80ºF ஆகவும் கீழ்மட்டத்தில் (3000 அடி ஆழம்) 40°F ஆகவும் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையம் மின்னுற்பத்தியைத் தவிர தூயநீரையும் உபபொருளாக வழங்குகிறது. கடற்கரை அருகே நிறுவப்பட்டால் 10 MW வரையும் நடுக்கடலில் அமைக்கப்பட்டால் 100 MW வரையும் உற்பத்தி செய்ய முடியும் என அவர்கள் தளம் SeaSolarPower சொல்கிறது.

மேலும் உற்பத்தி செலவு அணுசக்தி, நிலக்கரி மற்றும் நிலத்தடி வாயு மூலம் தயாரிக்கும் அளவே இருக்கும் என மதிப்பிடுகிறது.முக்கியமாக நம் போன்ற நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற மின்நிலையங்களை விட தற்போதைய திறன் குறைவாகவே இருந்தாலும், கடல்நீரிலிருந்து குடிநீர் கிடைப்பதையும் கருத்தில் கொண்டு நம் நாடு இத்துறையில் ஆராய்ச்சியிலும் சோதனைநிலை தயாரிப்பிலும் ஈடுபடவேண்டும். படர்ந்த கடற்கரையை எல்லையாக கொண்ட வாய்ப்பாலும்,நேர்த்தியாக்கிய தொழில் நுட்பத்தின் வணிக சாத்தியங்களினாலும் இம்முனைப்பில் இடும் முதலீடு வருங்கால இந்தியாவிற்கு வளம் சேர்க்கும்.

நிலவுக்குப் போவதை தள்ளிப் போடலாம்.