எட்டியவை எட்டு !!
பதிவுலகின் அண்மைய பரபரப்பான எண்ம நோய் என்னையும் எட்டிவிட்டது. அன்பர்கள் விக்கியும், சிறிலும் அழைத்திருக்கிறார்கள்.
தன்னைத் தானறிவது ஆழ்ந்த இந்துமத சித்தாந்தம். இந்த வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தாலும் வைத்தேன், இந்த சுய தேடலை நான் விடமுயன்றாலும் தொடர்வினை விளையாட்டுக்கள் விட விடாது போலிருக்கிறது. முதலில் நாலு பிடித்தவைகளை பட்டியலிடச் சொன்னார்கள், பின் ஆறு என்றார்கள், வினோத பண்புகளையும் ஆராயச் சொன்னார்கள்; இப்போது எட்டு சாதனைகளைச் சொல்ல வேண்டுமாம். எழுதியவைகளை மீள்பார்வை பார்த்தால் நானே நானா என பாடத் தோன்றுகிறது.
ஆர் கே இலட்சுமணின் சாதாரண குடிமகனுக்கு சரியான 'மாதிரி'யான என்னை தற்பெருமை அடித்துக் கொள்ளச் சொன்னால் வாழ்வே சாதனைதான். இருப்பினும் மேடையில் ஏறியபின் பின் வாங்கலாமா ?
1. பள்ளிப்படிப்பில் சொல்ல ஒன்றுமில்லாவிடினும் படிப்பிற்கு அப்பாற்பட்ட செயல்களில் ஆர்வம் காட்டி பாராட்டுக்கள் பெற்றிருக்கிறேன். தோட்டக்கலை, மின்னணு வானொலி செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் என புதுப்புது நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். நவராத்திரி பொம்மைக் கொலுவில் மிகுந்த ஆர்வம் எடுத்துக் கொள்வேன். (இப்போது என் மக்களுக்கு இது வியப்பாக இருக்கும்).
2. மாணவ பருவத்திலேயே கையெழுத்துப் பிரதி நடத்தியிருக்கிறேன். அந்த இதழின் பெயரான மணிமலரையே இந்தப் பதிவிற்கும் வைத்திருக்கிறேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒட்டி எனக்குப் பிடித்த வினாயகப் பெருமானை வைத்து பத்து வயதில் கவசம் எழுதியதை என் பாட்டி தன் பூசையறையில் வெகுகாலம் படித்துவந்தார்.
3.கல்லூரி வாழ்வில் படிப்பில் பிடிப்பேற்பட்டது. பல்கலைப் புகுமுக வகுப்பிலும் பொறியியல் முதல் மூன்று செமெஸ்டர்களிலும் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினேன். பட்டப்படிப்பில் பல்கலையில் ஐந்தாவதாகவும் பட்டமேற்படிப்பில் இரண்டாவதாகவும் வந்தேன்.
4.பல்வேறு பாடங்களில் எனக்கிருந்த ஆர்வத்தினால் மற்றவர்களுக்கு விளக்குவதிலும் ஒரு ஆசை இருந்தது. கல்லூரி படிப்புவிடுமுறைகளின் போது இனிமையாக நேரத்தைக் க(ழி)ளித்துவிட்டு கடைசி நிமிட ஆபத்பாந்தவனாக என்னை அணுகிய நண்பர்கள் உண்டு. சிலசமயம் profy வராண்டா என்று இதற்காகவே ஓடிய நண்பர்களும் உண்டு :)
5. தேர்வுகளில் தோல்வியை சந்தித்திராத அந்த காலகட்டத்தில் துளிக்கூட முன்னேற்பாடின்றி முயன்றதால் (?) IIT JEE யில் வரமுடியாததை சவாலாக எடுத்துக் கொண்டு முதலாண்டு பொறியியல் படித்துக் கொண்டே அடுத்தவருடம் IIT சென்னையில் இடம்பெற்று பின் வருடத்தை வீணடிப்பானேன் என்று விட்டதும் ஒரு கித்தாப்புதான். அதேபோல பட்டப்படிப்பின் முடிவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் இடம் கிடைத்தும் விளம்பரத்தில் வருவதுபோல இந்தியாவில் படிப்பேன் என கிழித்தெறிந்ததும் ஒரு அகங்காரம்தான்; கிடைக்காததால் செல்லவில்லை என்று மற்றவர்கள் சொல்லக் கூடாது என்பதற்காக :)
6. இதே சவாலிடும் மனப்பான்மையே UPSC எழுதவைத்து எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது. இந்திய தொலைதொடர்புப் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியதும் ஒரு பெருமையே. நாங்கள் அடிப்படை வசதிகள் இன்றி மூலைமுடிக்கில் நிறுவிய நுண்ணலை சேவைகள் இன்றைய பிஎஸ் என் எல் வளர்ச்சிக்கு அடிகோலியது ஒரு கர்வமாக இருக்கிறது.
7. செய்தபணியில் நிறைவைத் தந்தவை: இலட்சத்தீவின் கவரத்தியில் செயற்கைக்கோள் தொலைதொடர்பு நிலையம் நிறுவியது, இந்தியாவிலேயே முதன்முதலில் கேரளாவில் ஒளியிழை தொலைதொடர்பு கேபிள் இட்டு பயனுக்குக் கொண்டு வந்தது, சிரிலங்காவின் தொலைதொடர்பு நிறுவனத்தில் வளரும் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைக்கும் திட்டத்தின் கீழ் ஒளியிழை தொலைதொடர்பு பற்றி பயிற்சி கொடுத்தது, தொழிலாளர் பிரச்சினைகளும் சாதிபிரச்சினைகளும் மலிந்த தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்திலும் அனைத்து ஊழியர்களின் இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் பெற்றது.
8.எல்லாவற்றையும் விட தமிழில் வலைபதிவது. காணாமல் போன குழந்தை கையில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. பணிக்காலத்தில் புரிந்து கொண்டதைவிட அதிகமாக மனவோட்டங்களையும் குமுகாயப் பார்வைகளையும் அறிய வைத்த அனுபவம். நீறுபூத்த நெருப்பின் வெப்பத்தை உணரவைத்த பதிவுகள். எனது சக வயதினரிடமும் அதிகாரிகளிடமும் இல்லாத புரிந்துணர்வு எனக்கு கிடைத்துள்ளது என்ற பெருமை. 'சற்றுமுன்'னின் சாதனைகளிலும் மாற்று! தள பங்களிப்புகளிலும் இணைந்துள்ளதும் ஒரு பெருமையே.
படித்ததையும் கொடுத்த காசிற்கு வேலை செய்ததையுமே சாதனையாக எழுதியிருக்கிறேன். என்ன செய்வது, சட்டியில் இருந்தால்தானே :)
இந்த இடுகை இப்பதிவின் நூறாவது இடுகையாக விளங்குவதும் ஒரு சிறப்பு.
இனி அடுத்து எட்டு பேரை எழுதச் சொல்ல வேண்டும்: யார் யாரை கூப்பிட்டிருப்பார்கள் என்று தெரியாததால் மீள் அழைப்புகளை மன்னியுங்கள்.
1.Voice on Wings
2.மயூரேசன்
3.TBR ஜோசப்
4.தருமி
5.நிலா
6.செல்வராஜ்
7.தாரா
8.பிரபு இராஜதுரை
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்