இரங்கல்


கோண்டு (TMS)
மறைவு :30 ஜுன்2005

கனவுகள் கண்டோம் கல்லூரியில்
கவலைகள் மறந்தோம் கூட்டாக;
கோவில்கள் இங்கிங்கே என்றேதான்
வழி சொல்லி காண்பித்தாய் மும்பையெல்லாம்.

ஆதரவற்றோருக்கு துணையாக
அடுத்தவர் தோல்விக்கு தோளாக
வெற்றிக்கு வித்திடும் ஊக்கமாக
வாழ்வெல்லாம் வாழ்ந்திட்ட எம்மான் நீ !

இரங்கல் எழுதிடும் நாள் வந்ததென்ன,
இனி நீ யின்றி நான் செய்வதென்ன,
வருகிறேன் என சொல்ல மறந்தாய் நீ
போகிறேன் என்பதோ நம் நட்பு!

காலனும் பிரிக்காத இணை யென்றே
காலமெலாம் இருப்பதுவும் கனவாச்சே!
காத்திருப்பாய் மேலெங்கோ சென்றவிடத்தில்
நான் வரும் வேளைவரை வழி சொல்ல!

இன்று எனது அருமை நண்பன் கோண்டு என அழைக்கப்படுகின்ற T M சுப்ரமணியனின் முதலாமாண்டு நினைவு நாள். ஐ.ஐ.டியில் இணைந்து கொச்சியிலும் மும்பையிலும் ஒருசேர பணிபுரிந்து வாழ்வில் பின்னிப் பிணைந்தவர் திடீரென மாரடைப்பால் சென்றவருடம் இதேநாள் இறைவனடி எய்தினார். அவரது ஆன்மா சாந்தியடையவும் குடும்பத்தினரின் துக்கத்தை ஆற்றுமுகமாகவும் அவரை நினைவு கூர்ந்து இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.


Strawberry தேசம்

விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது "விடுமுறையை கழித்ததெப்படி " என்பதே முதல் கட்டுரைப் பயிற்சியாகவிருக்கும். நான் சென்ற இன்பச்செலவு என்று எழுதுகின்ற நேரத்திலே அது என்ன இன்பச் செலவு என கேள்வி கிளம்பும். இன்றைய மாணவர்கள் picnicஐ எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் படித்த முதல் பயணக் கட்டுரை திரு. சி.சுப்பிரமணியம் அவர்களின் ஆனந்தவிகடனில் வந்த தொடராகும். அதன் தொடர்ச்சியாக மணியனின் இதயம் பேசுகிறது பயணக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளின் பன்முகத்தன்மையை அறிமுகப் படுத்தின. சுற்றுலாப் பயணங்களிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தின. வருடம் ஒரு இடம் என்று குடும்பத்தினருடன் செல்கின்ற வழக்கமும் வந்தது.

சென்ற வார இறுதியில்,கோள்கள் அதிசயமாக சேர்வதுபோல்,மனைவி,மகள், மகன் சேர்ந்ததைக் கொண்டாடும் வகையில் எல்லோரும் அருகாமையில் அமைந்த மகாபலேஷ்வர் என்ற மலைமகிழ்விடத்திற்கு செல்ல விழைந்தோம். மழைக்காலம் தொடங்கும் இந்நேரம் பயணிப்பதற்கும் அழகை ஆராதிக்கவும் சரியானதில்லை என அண்டைவீட்டாரும் நண்பர்களும் சொன்னாலும், கொட்டுகின்ற மழையை கூடத்திலிருந்து பார்த்தாலும் குடும்பத்தினர் கூடி இருப்போமே என்று எண்ணி பயணப்பட முடிவெடுத்தோம். இருப்பினும் சாலைகள் மோசமாக இருக்குமென வாடகை வண்டியை எடுத்துக் கொண்டோம். புனெ விரைவுத்தடத்தில் அதிவேகத்தில் செலுத்த எண்ணியிருந்த மகனுக்குத் தான் வருத்தம்.

நாங்களிருந்த புதுமும்பையின் புறநகர்ப் பகுதியிலிருந்து புனெயை ஒன்றரைமணி நேரத்தில் கடந்து புனெ-சென்னை புனரமைக்கப்படும் தங்கநாற்கர சாலையில் பயணித்து போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி ஒரு சாலைப்பிரிவில் மலையேறினோம். மதியம் பனிரெண்டு மணிக்கு ஓட்டலில் செக் இன் செய்யும்போது, அப்பாடா, மழை இல்லை என்று சொன்னது காதில் விழுந்தாற்போல சடசடவென்று பலத்த மழை. வந்த சிரமம் ஆற்றிக்கொண்டு மதிய உணவும் முடித்துக் கொண்டு மழை நிற்குமா வெயில் வருமா என காத்துக் கொண்டிருந்தோம். இதற்கிடையே மழையில் கோவில்களை முடித்துவிடலாம் என்ற மக்களின் விருப்பப்படி, கொட்டும் மழையில் பஞ்சகங்கா ஆலயமும் மகாபலேஷ்வர் என்ற சிவன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பஞ்சகங்கா கோவில் கிருஷ்ணா,வெண்ணா, சாவித்திரி, கோய்னா, காயத்திரி என்ற ஐந்து நதிகள் பிறப்பிடமாக கூறுகிறார்கள். அதேபோல் மகாபலேஷ்வர் இலிங்கமும் தானே சுயம்புவாக உருத்திராட்ச அமைப்பில் தோன்றியதாக சொல்கிறார்கள். இரண்டும் புராதன கோவில்கள்.என்ன ஆச்சரியம், வெளியில் வந்தால் மழையும் நின்றிருந்தது. உடனே அங்கு காண வேண்டிய பாயின்ட்களை(!) ஆய்வு செய்தோம். அங்கு ஒவ்வொரு காட்சியிடங்களையும் ஏதாவது ஐரோப்பிய பெயரிட்டு வில்சன் பாயின்ட்,கேட்ஸ் பாயின்ட் என்று சொல்கிறார்கள்.மதனகாமராஜனின் கம் டு த பாயின்ட் நினைவிற்கு வந்தது. பாயின்ட் பை பாயின்ட்டாக பார்த்துவிட்டு விடுதிக்கு மனநிறைவோடு திரும்பினோம். மலைமுகட்டிலிருந்து பசுமையான மலைப்பிரதேசங்களை பார்ப்பது இரம்மியமாக இருப்பதோடு மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது. காரை நிறுத்திவிட்டு ஒவ்வொரு இடத்திற்கும் நல்ல நடை வேறு, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கொடுத்தது.

மறுநாள் காலையில் அங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் இருந்த வீர சிவாஜியின் பிரதாப்கட் கோட்டைக்குச் சென்றோம். ஒரு குன்றின் உச்சியில் அமைக்கப் பட்டிருந்த அந்தக் கோட்டைக்கு மேலே அதன் வாயில் வரை செல்ல மலைப்பாதை இருக்கிறது. கோட்டைக்குள் சிவாஜி வழிபட்ட மா பவானி கோவில் உள்ளது. அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தளமாயினும் விவரப் பலகைகள் எதுவும் காணவில்லை. வழிகாட்டிகளின் தொந்திரவு அதிகமாயிருந்தது. அதிகாரபூர்வ கட்டணமாக ரூ80/- தீர்மானித்திருந்தார்கள். எங்களுக்கு விருப்பமில்லாவிடினும் ஒரு வயதானவர் மேல் பரிதாபப் பட்டு நியமித்துக் கொண்டோம். (படத்தில் பழங்கால கருவிகளுடன் இருப்பவர்.) மனிதர், ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் வரலாற்றைப் பிழிந்து விட்டார். தங்கள் மண்ணின் பெருமையை எல்லாம் பொருமித் தள்ளி விட்டார். அங்கு ஔரங்கசீப்பின் தளபதியாக சமாதானத்திற்கு வந்து தன்னைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஆறரை அடி அஃப்சல்கானை ஐந்தரை அடி சிவாஜி எப்படி புலிநகங்களைக் கொண்டு கிழித்தார் (literally) என்பதை நாடகமாகவே நடத்திக் காட்டினார். எனக்கு கள்ளபார்ட் :) இங்கும் ஒரு பாயின்ட் உள்ளது, பனிஷ்மென்ட் பாயின்ட். அங்கு எதிரிகளை கோணிப்பையில் இட்டு மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடுவார்களாம். மற்றபடி அங்கும் இயற்கையழகை முழுமையாக இரசித்துவிட்டு விடுதி திரும்பினோம்.

மதிய உணவிற்குப் பிறகு அங்கிருந்த வெண்ணா ஏரியை பார்த்துவிட்டு, அங்கிருந்த ஸ்ட்ராபெர்ரி பண்ணையை நோக்கம் விட்டோம். அப்போதைய (fresh) ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் கிரீம் கலந்து மகனும் மகளும் கலக்க நான் நாவல்பழங்களை இரத்தத்தின் இனிப்பைக் குறைக்க சுவைத்தேன். வீட்டிற்கு ஜாம்,ஜெல்லி, ஜூஸ் என ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, கோகம் (நம்ம ப்ளம்ஸ்)பழரசங்களை வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து பஞ்சகனி என்ற ஊரின் பாயின்ட்களையும் பார்த்தவாறு ஊர் திரும்பலானோம்.

திரும்பும் வழியில் புனெ- சதாரா NH4 சாலையில் கெத்காவலெ என்ற சிற்றூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் பற்றி கேள்விப்பட்டு சென்றோம். இங்கெல்லாம் வெங்கிஸ் சிக்கன் என பதப்படுத்தப்பட்ட கோழியை விற்கும் வெங்கடேஸ்வரா ஹாட்சரீஸின் அதிபர் டாக்டர் பி.வி.ராவின் கனவாக திருமலா-திருப்பதியின் நகலாக இக்கோவில் கட்டப் பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து பூசாரிகளும், இலட்டு பிடிப்போரும் மாலை தொடுப்போரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். ஏராளமான அலுவலர் கோவிலை தூய்மையாக வைத்திருக்கவும் வரும் பக்தர்களை சீரமைப்பதிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். எங்கேயோ இருந்தாலும் பாலாஜி என்றாலே கூட்டமும் வரிசையும் தான். தரிசனம் முடிந்ததும் சூடான பூந்தி கொடுத்தார்கள். அதனுடன் கடந்த இருநாட்களின் காட்சிகளையும் அசை போட்டவாறே புனெ-மும்பை விரைவுப் பாதையை பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

'ஆறு'வது சினம்!


யாழிசைசெல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு நண்பர் சுகா அழைத்திருக்கிறார்். தமிழ்மணத்தின் அண்மைக்கால பதிவர்களுக்கு இது தங்கள் விருப்ப வெறுப்புகளை பதிய நல்ல வாய்ப்பு. ஆனால் இதன் முந்தைய பதிப்பான நவ்வாலு விளையாட்டில் பங்கேற்றவர்களுக்கு இது ஒரு மீள்நினைவே என்பதால் புதியவர்களின் ஆறு பதிவுகளைக் காணவே விருப்பம். என்னுடைய நாலு பதிவு இங்கே. அதில் விடுபட்டவை சிலவற்றை மட்டும் பதிகிறேன்.

அ. அறிமுகமான ஞாபகம் கொள்ளும் தமிழ்க் கவிகள்:
1. வள்ளுவன்
2. கம்பன்
2. சமயக்குரவர் நால்வர்
3. அருணகிரி
4. வள்ளலார்
5. அபிராமி பட்டர்
6. பாரதி

ஆ.திரைப்பட கவிஞர்கள்
1. கண்ணதாசன்
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3. உடுமலை நாராயணகவி
4. வாலி
5. வைரமுத்து
6. தாமரை

இ.மறக்கமுடியாத நூல்கள்
1. பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்
2. துப்பறியும் சாம்பு (Comics)
3. தேவனின் நாவல்கள்
4. கென்னடியின் கதை - மயன்
5. சுஜாதா தொடர்கள்
6. வாஷிங்டனில் திருமனம் - சாவி

ஈ. பிடித்த உணவு - தேவையா ?
1. இட்லி
2. தோசை
3. சன்னா படூரா
4. ஆலு தம்
5. மகாராஷ்ட்ராவின் போகா (அவல் உப்புமா)
6. கேரள கரிமீன் fish fry

உ.போகவிரும்பும் இடங்கள்
1. அந்தமான் தீவுகள்
2. காஷ்மீர்
3. அருணாச்சல்பிரதேசம்
4. ஆஸ்திரேலியா, நியூசி
5. தென்னாப்பிரிக்கா
6. வான்வெளி (Outer Space)

ஊ. வலையில் அடிக்கடி போகுமிடம்..
1. கூகுள்
2. யாகூ,ஜிமெயில் மின்னஞ்சல் சேவைகள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு
5. /.
6. விக்கிபீடியா

எ. பொழுது போக்கு..
1. தொலைகாட்சி பார்ப்பது..
2. குடும்பத்தினருடன் சிற்றுலா (picnic) செல்வது
3. திரைப்படம் செல்வது
4. மால்(Mall)களை நோட்டம் விடுவது
5. வீட்டை சீரமைப்பது ( டோண்டுவின் ஒழிப்பது)
6. வலை மேய்வது

ஏ. அடிக்கடி போகும் வலைப் பதிவுகள்
1. பத்ரி
2. துளசி
3. டி.பி.ஆர் என்னுலகம்
4. ராமச்சந்திரன்உஷா
5. பெனாத்தலார்
6. ஜி.இராகவன்/குமரன்

ஐ. மேலும் சில வலைப் பதிவுகள்:
1.இட்லி-வடை
2. பொன்ஸ்
3.சிவமுருகன்
4. இளவஞ்சி
5. ராசா
6. $elvan


நான் அழைக்க விரும்பும் ஆறு பேர்:
1. சிவமுருகன்
2. மலைநாடான்
3. வெளிகண்டநாதர்
4. நிலா
5. துபாய்ராஜா
6. ஜெயராமன்

சசி தரூர்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலாளராக இருந்து வரும் கானாவின் கொஃபி அன்னனின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. இது அவரின் இரண்டாவது பணிக்காலமாகும். ஆகவே அவரது பதவியிடத்தை நிரப்ப உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இம்முறை பிராந்திய சுழற்சிபடி ஆசிய குடிமகன் ஒருவர் அப்பதவியை ஏற்க இந்தியா ஆசியநாடுகளை அணுகி வருகிறது. இந்த சூழ்நிலையில் சசி தரூர் என்ற தென்னிந்தியரை இந்திய அரசு கடந்த வியாழனன்று பரிந்துரைத்துள்ளது. எப்போதும்போல பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கோஃபி அன்னனும் புதிய செயலாளர் ஐநா வில் வேலை செய்யாத வெளிமனிதராகவும் ஆசிய குடியுரிமை பெற்றவராகவும் இருத்தல் நலம் என மொழிந்திருக்கிறார். இந்நிலையில் பலவேறு அரசுகளின் பரிந்துரைகள் மற்றும் ஆதரவு திரட்டல் மூலம் அக்டோபர் இறுதியில் யார் பெயர் முன்மொழியப்படும் எனத் தெரிய வரும்.

தற்சமயம் ஐ.நா வில் உதவி செயலாளராக (Under Secretary General) பணிபுரியும் தரூர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். 1956இல் இலண்டனில் பிறந்த இவரது தந்தையார் ஒரு பத்திரிகை அதிகாரி.தாயார் இல்லத்தரசி. பள்ளிக்கல்வியும் பட்டக்கல்வியும் மும்பையிலும் கொல்கொதாவிலும் தில்லியிலுமாக முடித்து தில்லியின் பிரபல செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். பாஸ்டனின் டஃப்ட்ஸ்(Tufts University) பல்கலையில் மேற்படிப்புக்காக சென்றார்.இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகளையும் வெளியுறவுத்துறையில் டாக்டர் பட்டமும் தனது 22 வயதிலேயே முடித்தார்.

1978 வருட முதல் ஐநாவின் சேவையில் பணியாற்றிவரும் தரூர் வெவ்வேறு நிலைகளில் பணிக்களங்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது மொழியாற்றலின் அடிப்படையில் ஐநாவின் தகவல் மற்றும் செய்தி ஒருங்கிணைப்பாளராக உதவி பொது செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். ஐநாவின் பன்மொழி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். நிறைய புத்தகங்கள், சிறுகதைகள்,கட்டுரைகள்,விமர்சனங்கள், இலக்கிய ஆய்வுகள் எழுதியுள்ளார். நமது இந்து நாளிதழிலும் பத்தி எழுத்தாளராக உள்ளார். நமது இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை ஆய்ந்துள்ளார். தவோஸில் நடந்த உலக பொருளியல் குழு அவரை வருங்கால உலகளாவிய தலைவராக தெரிந்தெடுத்துள்ளது.

அவர் எழுதிய எட்டு புத்தகங்களில் இந்திய வெளியுறவு கொள்கைகளை ஆராய்ந்த 'Reasons of State' (1982), அரசியலைக் கிண்டல் செய்யும் 'The Great Indian Novel (1989)', 'The Five-Dollar Smile & Other Stories' (1990), பாலிவுட்டைத் தழுவிய 'Show Business' (1992) இந்தியாவின் பொன்விழா கொண்டாட்டங்களின் போது வெளியான 'India: From Midnight to the Millennium' (1997), மற்றும் நாவல்கள் 'Riot. A Love Story'(2001) and 'Nehru, the Invention of India' ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.

திலோத்தமை என்ற பத்திகையாளர் மனைவியும் இஷான், கனிஷ்க் என்ற இரு மகன்களையும் கொண்டது அவரது சிறு குடும்பம். சிறுவயதிலேயே இந்தியாவை விட்டு வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வரும் தரூர் இந்திய பண்புகளில் ஆழமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பதும் இந்தியக் கலாசாரத்தின் தூதுவனாக விளங்குவதும் குறிப்பிடத் தகுந்தது.வரும் மாதங்களில் அவரது தேர்வு தேறுமா எனப் பார்ப்போம்.

நான் அப்பாவாகப் போகிறேனா ? தேன்கூடு போட்டி


நேற்று இல்லாத மாற்றம் என்னது ? சிலநாட்களாகவே நான் நானாக இல்லை. குள்ளமணி என்று கேலிபேசி முதல் பெஞ்சில் உட்காரச் சொன்ன என்னை இன்று மிஸ் கூப்பிட்டு பின்னால் இருப்பவர்களுக்கு மறைக்கிறதாம் எனச் சொல்லி இரண்டு பெஞ்ச் தள்ளி உட்கார வைத்த போது நான் மட்டும் தான் காம்ப்ளான் சாப்பிடுகிறேனா என நினைத்தேன். பக்கத்து வீட்டு சேகர் "டேய், உனக்கு மீசை வந்திருக்குடா" எனச் சுட்டிக்காட்டியபோது மீசை முளைக்காத பயல்களைப் பார்த்து ஒரு அலட்சிய பார்வை வீச பெருமையாயிருந்தது. அரும்பு மீசை வைத்துக் கொள்வது சிவாஜி போலவா அல்லது எஸ் எஸ் ஆர் போலவா எனக் குழம்பியபோது "மபொசி மீசை வைத்துக் கொள், அப்போதுதான் ஐஸ்கிரீமிற்கு என்னுடன் போட்டி போட மாட்டாய்" என என் தங்கை கிண்டலடித்த போது எனக்கு ஏன் கோபம் வருகிறது ?

அன்று கூட காலையில் தொலைபேசி அடிக்கிறதே என எடுத்து"ஹலோ" என்றவுடனேயே மறுமுனையிலிருந்து " சார், நான் இன்றைக்கு ஆபிஸிற்கு வரமுடியவில்லை... " என ஆரம்பித்தவரிடம் " சார், சார், நான் _________ரின் பையன் பேசுகிறேன். அப்பா, வாக்கிங் போயிருக்கார், வந்தவுடன் பேசச் சொல்கிறேன், நம்பர் கொடுங்க சார்.. " என்றவுடன், " அடடா, உன் குரல் அவருடையது போலவே இருக்கிறதே " என்றார். நேற்றுவரை "என்னப்பா, குழந்தை" என்றவருக்கு இன்று என்குரல் அப்பாவினுடையதைப் போல எப்படி மாறியது? இந்த ஆச்சரியத்தை அன்று மாலையே போனில் பள்ளியிலிருந்து அப்பா பேசுவதைப் போல பேசி அம்மாவை ஏமாற்றி, இரவில் எல்லோருடனும் பகிர்ந்து சிரித்ததை நினைத்தால் உள்ளூர பயமாக இருக்கிறது. தங்கை எப்போதும் பழகிவரும் தோழர்களைப் பார்த்தால் இப்போது ஏன் வில்லன்களாகத் தெரிகிறார்கள் ? அவள் லேட்டாக வந்தால் அப்பாகூட கோவித்துக் கொள்ளாதபோது எனக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது ? அட, வாசலில் காய்கறிக்கடைகாரன் கூட அம்மாவை ஏதாவது இளக்காரமாக சொன்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லையே. சாது, சாது என்று பெயர் வாங்கிய நானா இப்படி சண்டைக்கு நிற்கிறேன் ? என்னாச்சு எனக்கு ? ஒல்லிப்பிச்சான் உடம்பில் சதை கூட போட ஆரம்பித்திருக்கிறதே. அந்த மாருதி ஜிம் அண்ணாக்களைப் போல உடம்பை ஷேப் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் 'அப்பா' மாதிரி ஆகப் போகிறேனா ?

ஆனால் அப்பா எவ்வளவு நல்லவர் ? கடவுள் பக்தியுடன் ஒழுக்க சீலர். நான் அவர் மாதிரி இல்லை. நேற்று பார்த்த ஜெயமாலினி டான்ஸ், கனவிலும் வந்து அவள் எனக்கு முத்தமெல்லாம் கொடுத்தாளே, சீச்சீ, நான் ரொம்பக் கெட்ட பையன். கடவுளே, எனக்கு இந்த கெட்ட புத்தியை மாத்திக் கொடு, நான் நல்ல 'அப்பா'வாக இருக்க வேண்டும். இராத்திரி வேட்டியெல்லாம் கறையாகி விடுகிறதே, அம்மா கவனித்திருப்பாளோ, தினமும் வேட்டியைத் துவைக்கப் போடச் சொல்கிறாளே தெரிந்திருக்குமோ ? அவமானமாக இருக்கிறதே. பக்கத்து வீட்டு வசந்தா எவ்வளவு குண்டு, கறுப்பு.. எத்தனையெல்லாம் அவளை கலாட்டா செய்திருக்கிறேன். அவளே தேவிகா போலத் தெரிகிறாளே. போனமாதம்வரை அவளிடம் நோட்ஸ் கேட்டு வாங்கியவன் இன்று அவளுடன் பேச ஏன் தயக்கமாக இருக்கிறது ? அவள் அழகாயிருக்கிறாளே என நான் நினைத்தது அவளுக்குத் தெரிந்துவிடும் என்றா ?

இந்த அப்பா, ஆனாலும் ரொம்ப நல்ல அப்பாவாக இருக்காரே. என்னாலெல்லாம் அப்படி இருக்க முடியாது. எஸ் எஸ் எல்சி பாஸ் செய்ததிற்கு பசங்க கூட திருட்டு 'தம்'அடித்தோமே,அதெல்லாம் இல்லாமல் அப்பா லைப் வேஸ்ட். இந்த கோவிந்தனுக்கெல்லாம் பாக்கெட்மணி கிடைக்கிறது; நமக்கு வீட்டிற்கு வாங்குவதில் அடிக்கும் கமிஷன்தான்.இதெல்லாம் திருட்டு கிடையாது; வேலைக்குக் கூலி, கொடுக்கலைன்னா நாம எடுத்துக்க வேண்டுயதுதான்.முதலில் கோவிந்தன் கேர்ள்ஸ்க்கு ஐஸ்க்ரீம் பார்லரில் ட்ரீட் கொடுக்கும்போது பொறாமையாக இருக்கும். இப்போது அவனுடன் கூட்டு சேர்ந்தாச்சு. முதல்ராங்க் வாங்கும் மயில்சாமியும் என் ஃப்ரெண்ட்தான், ஆனால் அவனும் என்னை மாதிரி ஒன்னுமில்லாதவனாச்சே, என்ன பிரயோசனம் ?

அப்பாதான் மார்க்கெல்லாம் கம்மியாகிறதேடா என்று கவலைப் படுகிறார். மார்க்கெல்லாம் யாருக்கு வேணும், முக்கியமான ஆட்களைத் தெரிந்திருந்தால் போதும். இவருக்கு முடியாது, பின்னே, இவ்வளவு 'நல்லவராக' இருந்தால் ? ஆனால் எனக்கும் இது ஆச்சரியம் தான். நன்றாகத்தானே படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாள் சுலபமாக இருந்த பாடங்கள் ஏன் போர் அடிக்கின்றன ? மறந்து போகிறதே ? ஒருவேளை உடற்பயிற்சி செய்து உடல் வளர்த்தால் மூளை குறையுமோ ? அப்படியெல்லாம் ஆகாமல் மீனாட்சிதான் காப்பாத்தவேண்டும். ஆமாம், நான் 'அப்பா'வாகிக் கொண்டிருக்கிறேன். நானும் நல்ல 'அப்பா' ஆக வேண்டும்.

கலாம் தோ கமால் ஹை!!

என்ன, ரொம்பநாளாகி விட்டதே என்று நமது குடியரசுத் தலைவரின் வானகச் சாதனையை பதியலாம் என கடந்த இரண்டு நாட்களாக முயன்று பிளாக்கர் தடுக்கியது. இன்றாவது பதிகிறதா எனப் பார்க்கிறேன். அட, வேறு யாரும் இதனை பதிந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது சிறிது வருத்தமே.

அதிபர் APJ அப்துல் கலாம் அவர்கள் இன்று (08/06/06) காலை இந்தியன் விமானப் படையின் அதிநவீன சுக்கோய்-30 ரக சண்டை விமானத்தில் புனேயின் லோஹெகான் விமானதாவளத்திலிருந்து பறந்து சரித்திரம் படைத்திருக்கிறார். இந்திய முப்படைகளின் சுப்ரீம் தளபதியான இந்திய ஜனாதிபதி இந்த காற்றில் ஒலியின் வேகத்தை விட வேகமாக செல்லக் கூடிய நவீன விமானத்தில் விங் கமாண்டர் அஜய் ரத்தோரின் உடன் செல்லும் மாலுமியாக 30 நிமிட வான்பயணம் (Sortie) மேற்கொண்டார். இச்சாதனை மூலம் ஒரு இந்திய விமானப்படையின் சண்டைவிமானத்தில் முதலில் பயணித்த மிக வயதான இந்திய குடிமகன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதேபோல உலகின் மிக உயர்ந்த சண்டைப் பிரதேசமான சியாச்சென் பனிச் சிகரத்தை எட்டி போர்வீரர்களுடன் கலந்து கொண்ட, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் சென்று கடலின் ஆழம் கண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இராணுவம்,விமானப்படை, கப்பற்படை என மூன்று படைகளிலும் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் மூட்டியும் இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழும் அப்துல் கலாம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் வந்தனங்களும் இவ்விடுகை மூலம் தெரியப் படுத்துவோம். சலாம் நமஸ்தே, கலாம்!!