காவ்யாவின் காப்பி ?

சென்னையில் பிறந்த 17 வயது காவ்யாவிஸ்வநாதன் $500,000 க்கு முதல்நாவல் எழுதி பெயர் பெற்றது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. ஆனால் அவரது ஆக்கம் மற்றவரின் 'இன்ஸ்பிரேஷனா' என்று இன்று வருத்தமாயுள்ளது.

காவ்யாவின் பெற்றோர் மேரி சுந்தரம், விஸ்வநாதன் இராஜாராமன் இருவருமே மருத்துவர்கள். ஆரம்பகல்வி பிரிட்டனில் கழித்தாலும் அமெரிக்காவிலேயே வளர்ந்தவர். சிறுவயது முதலே ஹார்வர்டில் படிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டு முயற்சி செய்து சாதித்தவர். அவர் வந்த வழியை கதைக் களமாக்கி ஓபல் மேத்தா என்ற இளம்பெண் அவரது பெற்றோரின் ஒருமுக சிந்தனையாலும் செயல்களாலும் எவ்வாறு ஹார்வர்டில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்று "How Opal Mehta Got Kissed, Got Wild and Got a Lifeநாவலை எழுதியுள்ளார். லிட்டில் ,ப்ரௌன் பதிப்பகத்தார் இந்தக் கதையின் முதல் நான்கு அத்தியாயங்களையும் கதைக்கருவினையும் கேட்டு, காதலிக்க நேரமில்லை நாகேஷ் ஸ்டைலில் "இந்தா பிடி, அட்வான்ஸ் $500,000, உன் இரண்டு நாவல்களுக்கு" பதிவு செய்து கொண்டனர். 17 வயதில் இத்தனை சாதனையா என்று உலகே வியக்க ஹார்வர்ட் பள்ளியிலும் சேர்ந்தார். ( அங்கே பள்ளி இங்கே பல்கலை) தனது முதலாண்டில் பட்டப்படிப்பின் பளுவுடனே இந்த நாவலை எழுதி முடித்து இந்த மாத முதல்வாரத்தில் வெளியிட்டார்.

வெளிவந்து, நன்றாக விற்கும் புத்தகப் பட்டியலில் இடமும் பிடித்த நேரத்தில், இன்று மெகன் மெக்காஃபெர்ட்டி (Megan F McCafferty) என்ற பெண் எழுத்தாளர் காவ்யாவின் எழுத்துக்கள் தனது Sloppy Firsts என்னும் நாவலிலிருந்து சில பகுதிகள் அப்பட்டமாக காப்பி அடிக்கப் பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். ஹார்வர்டின் மாணவர் இதழான ஹார்வர்ட் கிரிம்சனில் இந்த செய்தி வந்தபோது மறுத்த காவ்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மெகனின் எழுத்துக்களை தான் சிறுவயதில் நிறைய படித்திருப்பதாலும், அவரது ஆக்கங்கள் தமக்கு மிகவும் பிடித்தவையானதாலும் அவரது வார்த்தைகளை தானறியாமலே 'உள்வாங்கியிருக்கக்' கூடும் என்று கூறியுள்ளார். பத்தி பத்தியாகவா உள்வாங்கியிருப்பார் ?


இப்போது பதிப்பகத்தாரின் பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது. இதோ அடுத்த ஜே கே ரோலண்ட், விக்ரம் சேத் என்று எண்ணி பணத்தை போட்டுவிட்டு கோர்ட்டு, கச்சேரி யென்று அலைய வேண்டியுள்ளது. இந்தக் கதையை படமெடுக்க வேண்டி Dreamwork நிறுவனம் முன்வந்திருந்தது. அது என்ன ஆகும் என்பது தெரியவில்லை.

கதையின் அவுட்லைனைப் பார்த்தால் இங்கு ஐ..டி, ..எம் க்கு நடக்கும் கூத்துப் போலத் தான் தெரிகிறது. தானே முழுதும் எழுதாமல் (இங்கு resumeஐ தயாரிக்கும் ஏஜென்சிகள் போல) 'கதை' தயாரிக்கும் இடைமுகங்களின் உதவியை நாடியதும் இந்தக் குழப்பத்திற்கு வித்திட்டிருக்கலாம்.

என்னவிருந்தாலும் காவ்யாவின் முதல் நாவல் Sloppy First ஆக முடிந்தது.


மும்பையிலிருந்து...


பி ஜே பி யின் பொது செயலர் திரு பிரமோத் மகஜன் இன்று காலை 8 மணி அளவில் அவரது கடைசி தம்பி பிரவீனால் அவரது வொர்லி அடுக்கத்தில் சுடப்பட்டார். அவரது உடல்நிலை இதுவரை கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. இருவருக்கும் இடையே நடந்த சூடான வாக்குவாதத்ஹைத் தொடர்ந்து , அவரை விட பத்து வயது குறைந்த தம்பி அவரின் நெஞ்சை குறி வைத்து சுட்ட குண்டுகள் அவரது வயிற்றின் மேல்பாகத்தில் நுழைந்து கல்லீரல், கணையம் மற்றும் IVC எனப்படும் இரத்த க்குழாய்பகுதிகளில் பாதித்திருப்பதாக தெரிகிறது. அருகிலிருந்த ஹிந்துஜா மருத்துவமனையில் நன்கு மணிநேரம் நடந்த அறுவை சிகிட்சை மூலம் இரத்தப் போக்கை பெருமளவில் தடுத்திருந்தாலும், அவர் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. குண்டுகளை வெளியில் எடுப்பது மேலும் சிக்கலானதால் உள்ளேயே விடப்பட்டுள்ளன. தற்போது தீவிர சிகிட்சைப் பிரிவில் மருதுவம் பார்க்கப் படுகிறது.40 பாட்டில் இரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் சர்க்கரை நோயும் மருத்துவ சிகிட்சையை கடினமாக்குகிறது.

பிரவீன் மகஜன் தானேயில் ஒரு கட்டிட கான்டிராக்டராக இருந்துவருகிறார். குற்றம் நடந்த சமயம் பிரமோத்தின் மனைவியும் மற்ற சில உறவினர்களும் உடன் இருந்து நேரில் கண்டுள்ளனர். பிரவீன் போலீசில் சரணடைந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட விவாதத்தின் காரணம் குறித்து பல வதந்திகள் உலா வருகின்றன.

மகஜன் பிஜேபியின் துடிப்பான கலகலப்பான தலைவராக விளங்குபவர். இன்றைய தொலைதொடர்பு சாதனைகளுக்கு வித்திட்டவர். பிற்போக்கானகட்சியில் இருந்தாலும் முற்போக்கு கொள்கைகள் கொண்டவர். அவர் நலம் பெற வேண்டி கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மராட்டியருமே இன்று பிரார்த்தனை செய்கின்றனர். நல்லவர் வாழ நாமும் வேண்டுவோம்.

கொசுறு : கடந்த இருநாட்களாக இங்கு மக்கள் பொது பேருந்து சேவை வழங்கும் பெஸ்ட் நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தால் பெரிதும் அவதி உறுகின்றனர். ஆனால் நாளிதழ்களில் ஐஸ்வர்யாராய், மணிரத்தினத்தின் குரு படபிடிப்பிற்காக பாதாமில் சைக்கிள் ஓட்டப் பழகும் போது கீழே விழுந்து கை சுளுக்கிக்கொண்டதற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மும்பைவாசமே தனிதான் !!

காட்சிப் பதுமைகள்

மான்னெக்வின் (Mannequins) எனப்படும் காட்சிப்பதுமைகளை கண்ணாடி சிறைகளில் கடை வாயில்களில் கண்டிருப்போம். பெரும்பாலான நேரங்களில் அவை உண்மையான நபர்களோ என வியக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கும். கோவில் சிலைகளையும் காட்சிக்கூட சிற்பங்களையும் வியக்கும் நம்மால் கடைவாயில்களில் நம் கவனத்தை ஈர்க்கும் இப்பதுமைகளின் வடிவமைப்பாளரின் திறனை என்றேனும் சிந்திக்கத் தோன்றியுள்ளதா ? அவை எவ்வாறு உருவாக்கப் படுகின்றன என எண்ணியுள்ளோமா?


இக்காட்சிப்பதுமைகள் மற்ற சிலை வடிவங்களைப் போலன்றி எல்லா அவயங்களுமே மனித உடலின் உண்மையான அளவுகளில் இருக்கவேண்டும். அப்போதுதான் மனிதருக்கு உருவாக்கிய ஆடைகளை நேர்த்தியாக அணிவிக்க முடியும். எல்லா அளவுகளும் 5 மி.மிக்குள் முன்பின் இருக்கலாம். இல்லையேல் ஆடைகள் பல்லிளிக்கும். இதற்கு மேலாக அவை வாடிக்கையாளரை கவரும் அழகுடனும் ஆண்மையுடனும் இருக்க வேண்டும். இருபது வருடங்களாக இத்துறையில் வடிவமைத்துவரும் லென் கிஃப்பார்ட் (Len Gifford ), லொரென் (Lauren) என்ற மாடல்கலைஞரின் அச்சாக காட்சிப் பதுமை உருவாக்கியவிதத்தை கருத்துருவிலிருந்து காட்சிப்பொருள்வரை இங்கே பதிவாக்கியுள்ளார். அவரின் விவரப்படி 40 நாட்கள் இரவும் பகலுமாக உருவாக்கியிருக்கிறார்கள். நான் இணையத்தில் கண்டதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

முப்பெருவிழா!!

தமிழ்மண அன்பர்கள் எல்லோருக்கும் விய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நம்முடன் வங்காள, பஞ்சாபி நண்பர்களும் புதுவருடம் கொண்டாடுகின்றனர். அங்கு இது வைகாசி மாதம் (பைசாகி) என்று கொண்டாடப்படுகிறது. மலையாள புதுவருடமும் இன்றே. இன்றையதினம் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நகரும் நாளாகும். ஆகையால் கேரளத்தில் இம்மாதம் மேடம் என்று வழங்கப் படுகிறது.இந்நாள் விஷு என்று கொண்டாடப் படுகிறது.

விஷு கேரளத்தின் முக்கிய விழாக்களில் ஒன்று. இன்றைய தினம் கனி காணுதல் என்பது சிறப்பான ஒரு நிகழ்வு. புதுவருடத்தின் முதல்நாளே இந்த கனி கொலு அமைக்கப்படும். தேங்காய், கொன்னைப்பூ, முக்கனிகள், தானியங்கள் மற்றும் செழுமையை குறிக்க நகைகளும் பணமும் அழகுற வைக்கப்படும். ஒரு கடவுள் (பெரும்பாலும் குருவாயூர் கிருஷ்ணர்)படமும் ,( அல்லது பூசை அறையிலேயே அமைத்து) கண்ணாடியும் வைத்து, திருச்சூர் விளக்குகளை வைத்து பூர்த்தி செய்வர். காலையில் எழுந்து கண்களை மூடிக்கொண்டு நேராக கனி காணுதல் அந்த ஆண்டு முழுவதும் வளமையை கொடுக்கும் என்று நம்பிக்கை.நாங்கள் காங்கேயத்துக் காரர்கள் என்றாலும், பக்கத்து பாலக்காட்டு வழக்கம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது. கேரளாவின் குருவாயூர், ஆலப்புழை அருகே அம்பலபுழா( ஓ..அந்தப் பாயசம்) மற்றும் சபரிமலை கோவில்களில் கனி காணுதல் விசேஷம்.

நன்றி:http://pramod.ch/

இன்றையதினம் புனித வெள்ளியுமாகும் . இயேசு மரணத்தை வென்ற நாள். வரலாறுபடி, இயேசு உயிர்த்தெழுந்தது யூதர்களின் feast of Passover எனப்படும் விருந்து தினத்தன்றாகும். ஆரம்பகாலங்களில், யூத கிருத்தவர்கள் இரண்டையும் ஒன்றாக அவர்களின் நிசான் மாதத்தில் 14ஆம் நாள் கொண்டாடினார்கள். இது ஏப்ரல்மாதத்தில் வரும். மற்ற கிருத்துவர்கள் நிசான் மாதம் 14ஆம் நாளையொட்டிவரும் ஞாயிறு கொண்டாடினர். இந்த வேற்றுமையை நீக்க கி.பி.325 இல் ஈஸ்டர் கொண்டாடும் நாள் தீர்மானிக்கப் பட்டது. அதன்படி, சமைரவுநாளான மார்ச் 21க்குப் பிறகு வரும் முழுமதிநாளுக்கு அடுத்துவரும் ஞாயிறு உயித்தெழுந்த நாளாகும்.இதனால் ஈஸ்டர் மார்ச் 22 இலிருந்து ஏப்ரல் 25 க்குள் ஒருநாள் வரும். நான் எர்ணாகுளத்தில் பணிபுரிந்தவரை கல்லூர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு ஒவ்வொரு செவ்வாயும் செல்வதுண்டு. அங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தருணங்கள் நினைவிலாடுகின்றன.


இந்த வாரத்தில் வரலாற்று நாயகர்களான நபிகள் நாயகம் மற்றும் மகாவீரர் பிறந்ததினங்களை சென்ற செவ்வாயன்று கொண்டாடினோம். இன்று இந்திய சமுகாயத்திலே பெரும் மாற்றங்களுக்கு வழிகாட்டிய அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் பிறந்ததினம் ஆகும். அவரது எண்ணங்களை இன்று நினைவு கூர்ந்து சமூகநீதி காணும் நாள்.

இத்தகைய சிறப்புநாளன்று அன்பர்களுக்கு வரும் நாட்கள் , வேண்டிய வரம் தரும் நாட்களாக அமைய இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்றே சங்கே முழங்கு" --- பாவேந்தர்

இருட்டுக் கடை!!

நெல்லை அன்பர்களுக்கு இருட்டுக்கடை என்றதும் நெல்லையப்பர் கோவில் அருகாமையில் இருக்கும் அல்வாக்கடை ஞாபகம் வரும். இரவு துவங்குகின்ற நேரத்தில் திறந்து ஓரிருமணி நேரத்திலேயே சரக்கை தீர்த்துக் கொள்ளும் தரமான கடை அது.இன்றைய இடுகை அக்கடையைப் பற்றியல்ல.

பொழுதோடு எழுந்து பொழுதோடு சாயும் பழஞ்சமுகாயத்தில் விளக்கு வைத்தபிறகு சாப்பிடக்கூடாது என்பவரும் உண்டு. கண் தெரியாத இருளில் பூச்சி,பொட்டு உணவில் விழுந்து உடலுக்கு ஊறு ஏற்படும் என்று இருக்கலாம். உயிர்வதை தடுக்க விளக்குகளையே ஏற்றாத சமணர்கள் இன்றும் மாலை உணவிற்குப் பிறகு உண்பதில்லை. நமது கோவில்களில் கடைசி பூஜை இரவு 7 மணியுடன் முடிந்த காலமும் உண்டு.

மின்சாரம் வந்தது, நாம் மாறினோம்; நம் கடவுளும் மாறி விட்டார்.இரவெல்லாம் பகலாக்குகின்ற மின்னொளி உலகில் காலத்திற்கு வரையுரை உண்டோ ? நடுநிசியிலும் விருந்துக் கொண்டாட்டங்கள் தொடர்கின்ற சமூகாயத்தில் இரவும் பகலும் காலக் கணக்கீடுகளே.பணம்புழங்கும் (posh) உணவகங்களில் ஒளி குறைக்கப்பட்ட சூழலில் சேவையளிப்பதை அறிவோம். ஆனால் முழுக்க முழுக்க இருள்கவிழ்ந்த (pitch black) சூழலில் கண்பார்வையற்ற பணியாளர்கள் உபசரிக்க உணவருந்தினால் எப்படி யிருக்கும் ? பாரீசில் உள்ள Dans le Noir என்ற உணவகம் அத்தகைய ஒரு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது.




நுழைந்தவுடனே உங்கள் உடமைகளை வாயிலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரப்படுத்திவிட்டு உங்கள் மேசைஎண் வரும்வரை வரவேற்பறையின் மதுவகத்தில் மது அருந்தியவாறு காத்திருக்க வேண்டும். உங்கள் முறை வந்ததும் மற்ற பயனர்களுடன், சிறுவயது இரயில்வண்டி விளையாட்டுப் போல, முன்னால் இருப்பவர் தோள் மீது உங்கள் கைகளை இட்டு பிடித்துக் கொண்டு,உங்கள் கண்பார்வையற்ற பணியாளரின் துணையுடன் உள்ளே அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் மேசையில் வைக்கப்பட்டுள்ள கத்தி கபடாக்கள், நாப்கின் துண்டு முதலியன எங்குள்ளன என உணரவைக்கப் படுவீர்கள். முதலில் மிகவும் பயமாகவும் குழப்பமாகவும் இருக்கும். பக்கத்தில் இருப்பவர் யாரென்று தெரியாது, மேசையிலும் அறையிலும் என்னென்ன இருக்கிறது என்று தெரியாது என்பது மட்டுமல்லாது முன்னால் அந்த அறையினை பார்க்காததினால் மனக்காட்சியும் வெறுமையாக இருக்கும். நேரம் ஆக ஆக பக்கத்திலிருப்பவர்களுடன் பேசி ஒரு நிதானத்திற்கு வருவீர்கள்.

Dans Le Noir இருவகையான சேவைகளை வழங்குகிறது. முதலாவது எப்போதும்போல மெனு அட்டையிலிருந்து தேர்ந்தெடுப்பது; மற்றது குருட்டுத்தனமாக உணவகம் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு, சுவையை வைத்து என்ன தின்பண்டம் என அனுமானிப்பது. இரண்டாவதே பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இருட்டில் உணவருந்தும்போது காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சுவையையும் மணத்தையையும் முழுதுமாக அனுபவிக்கமுடிவதாக சென்றுவந்தவர்கள் சொல்கிறார்கள். கண்பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக பார்வையற்றோர் சங்கங்கள் பாராட்டுகின்றன.

பிரான்ஸ் சுவைஉணவிற்கு பெயர்பெற்றது. அங்குள்ள உயர்தர சமையல்காரர்களுக்கு இது கலாசார அதிர்ச்சியாக இருக்கிறது. கண்களும் நாவும் இணைந்தே சுவைஉணவிற்கு அடிகோலுகிறது; அதனால்தான் சமைத்த உணவை எப்படி அழகாக தட்டில் அளிப்பது, உணவக சூழலை அழகுபடுத்துவது மற்றும் அழகான பணியாட்கள் என்பவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அவர்கள் வாதம். ஆனாலும் கடந்த ஒரு வருடமாக இயங்கிவரும் இந்த restaurentக்கு நல்ல வரவேற்பு. அண்மையில் இலண்டனிலும் இதன் கிளை திறக்கப் பட்டுள்ளது.