இருட்டுக் கடை!!

நெல்லை அன்பர்களுக்கு இருட்டுக்கடை என்றதும் நெல்லையப்பர் கோவில் அருகாமையில் இருக்கும் அல்வாக்கடை ஞாபகம் வரும். இரவு துவங்குகின்ற நேரத்தில் திறந்து ஓரிருமணி நேரத்திலேயே சரக்கை தீர்த்துக் கொள்ளும் தரமான கடை அது.இன்றைய இடுகை அக்கடையைப் பற்றியல்ல.

பொழுதோடு எழுந்து பொழுதோடு சாயும் பழஞ்சமுகாயத்தில் விளக்கு வைத்தபிறகு சாப்பிடக்கூடாது என்பவரும் உண்டு. கண் தெரியாத இருளில் பூச்சி,பொட்டு உணவில் விழுந்து உடலுக்கு ஊறு ஏற்படும் என்று இருக்கலாம். உயிர்வதை தடுக்க விளக்குகளையே ஏற்றாத சமணர்கள் இன்றும் மாலை உணவிற்குப் பிறகு உண்பதில்லை. நமது கோவில்களில் கடைசி பூஜை இரவு 7 மணியுடன் முடிந்த காலமும் உண்டு.

மின்சாரம் வந்தது, நாம் மாறினோம்; நம் கடவுளும் மாறி விட்டார்.இரவெல்லாம் பகலாக்குகின்ற மின்னொளி உலகில் காலத்திற்கு வரையுரை உண்டோ ? நடுநிசியிலும் விருந்துக் கொண்டாட்டங்கள் தொடர்கின்ற சமூகாயத்தில் இரவும் பகலும் காலக் கணக்கீடுகளே.பணம்புழங்கும் (posh) உணவகங்களில் ஒளி குறைக்கப்பட்ட சூழலில் சேவையளிப்பதை அறிவோம். ஆனால் முழுக்க முழுக்க இருள்கவிழ்ந்த (pitch black) சூழலில் கண்பார்வையற்ற பணியாளர்கள் உபசரிக்க உணவருந்தினால் எப்படி யிருக்கும் ? பாரீசில் உள்ள Dans le Noir என்ற உணவகம் அத்தகைய ஒரு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது.




நுழைந்தவுடனே உங்கள் உடமைகளை வாயிலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரப்படுத்திவிட்டு உங்கள் மேசைஎண் வரும்வரை வரவேற்பறையின் மதுவகத்தில் மது அருந்தியவாறு காத்திருக்க வேண்டும். உங்கள் முறை வந்ததும் மற்ற பயனர்களுடன், சிறுவயது இரயில்வண்டி விளையாட்டுப் போல, முன்னால் இருப்பவர் தோள் மீது உங்கள் கைகளை இட்டு பிடித்துக் கொண்டு,உங்கள் கண்பார்வையற்ற பணியாளரின் துணையுடன் உள்ளே அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் மேசையில் வைக்கப்பட்டுள்ள கத்தி கபடாக்கள், நாப்கின் துண்டு முதலியன எங்குள்ளன என உணரவைக்கப் படுவீர்கள். முதலில் மிகவும் பயமாகவும் குழப்பமாகவும் இருக்கும். பக்கத்தில் இருப்பவர் யாரென்று தெரியாது, மேசையிலும் அறையிலும் என்னென்ன இருக்கிறது என்று தெரியாது என்பது மட்டுமல்லாது முன்னால் அந்த அறையினை பார்க்காததினால் மனக்காட்சியும் வெறுமையாக இருக்கும். நேரம் ஆக ஆக பக்கத்திலிருப்பவர்களுடன் பேசி ஒரு நிதானத்திற்கு வருவீர்கள்.

Dans Le Noir இருவகையான சேவைகளை வழங்குகிறது. முதலாவது எப்போதும்போல மெனு அட்டையிலிருந்து தேர்ந்தெடுப்பது; மற்றது குருட்டுத்தனமாக உணவகம் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு, சுவையை வைத்து என்ன தின்பண்டம் என அனுமானிப்பது. இரண்டாவதே பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இருட்டில் உணவருந்தும்போது காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சுவையையும் மணத்தையையும் முழுதுமாக அனுபவிக்கமுடிவதாக சென்றுவந்தவர்கள் சொல்கிறார்கள். கண்பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக பார்வையற்றோர் சங்கங்கள் பாராட்டுகின்றன.

பிரான்ஸ் சுவைஉணவிற்கு பெயர்பெற்றது. அங்குள்ள உயர்தர சமையல்காரர்களுக்கு இது கலாசார அதிர்ச்சியாக இருக்கிறது. கண்களும் நாவும் இணைந்தே சுவைஉணவிற்கு அடிகோலுகிறது; அதனால்தான் சமைத்த உணவை எப்படி அழகாக தட்டில் அளிப்பது, உணவக சூழலை அழகுபடுத்துவது மற்றும் அழகான பணியாட்கள் என்பவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அவர்கள் வாதம். ஆனாலும் கடந்த ஒரு வருடமாக இயங்கிவரும் இந்த restaurentக்கு நல்ல வரவேற்பு. அண்மையில் இலண்டனிலும் இதன் கிளை திறக்கப் பட்டுள்ளது.



6 மறுமொழிகள்:

Boston Bala கூறுகிறார்

---முதலாவது எப்போதும்போல மெனு அட்டையிலிருந்து தேர்ந்தெடுப்பது---

எப்படிங்க இருட்டில் படிப்பாங்க (ஓ... பரிமாறுபவரே அன்றைய ஸ்பெஷல்களை நம்ம ஊரு ஸ்டைலில் அடுக்குவாரோ?)

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி பாலா. கேள்வியும் கேட்டு பதிலும் கூறியதற்கு நன்றி.

ஒரு Disclaimer: இது நேரடி அனுபவம் இல்லை. செய்தி பகிர்தலே.

துளசி கோபால் கூறுகிறார்

இது ஒரு வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கும். ஆனா அங்கே சாப்புடத்தான் பயமா இருக்கு.
நத்தை அது இதுன்னு எதாவது தட்டுலே வச்சுட்டாங்கன்னா?

ஆனா கண்ணு இருந்தும், வெளிச்சம் இருந்தும், தட்டுலே இருக்கறதைப் பாக்காம எதையோ நினைச்சுக்கிட்டு
அப்படியே முழுங்கிட்டுப் போறவங்களைவிட இது தேவலை.

மணியன் கூறுகிறார்

வாங்க துளசி டீச்சர், உலகத்தில் வியாபாரத்தைப் பெருக்கத் தான் எத்தனை யுக்திகள் ?
நத்தையை விடுங்கள்,Ladies Finger என்று அத்தையின் விரலை கடித்து விட்டால் :))

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

நம்மூரு கையேந்தி பவன், ரோட்டுக்கடைங்கள்ல, பெட்ரோமாக்ஸ் லைட்டு வெளிச்சம் முட்டை போடறவருக்குத்தான். தட்டுள அள்ளி கொடுத்திட்டாருனா, நாம ஏதோ அதை இருட்ல அள்ளிக் கொட்டிக்க வேண்டியதுதான். அது மாதிரி இந்த இருட்டுகடை மேற்கத்திய வியாபார உத்தி, நல்லாருக்கு கதை போங்க! நத்தை அத்தை கடி நல்ல கடிதான் போங்க:))

மணியன் கூறுகிறார்

நன்றி வெளிகண்டநாதர்.