மறக்கடிக்கப்பட்ட மனிதர்கள்


நேற்றைய தினம் நாராயணின் உருப்படாதது - பதிவில் "கொத்துபரோட்டா -கொஞ்சம் காரமாய்" மும்பையின் சேரிகள் பற்றி எழுதியிருந்தார்.ஐபிஎன் லைவ் சர்வே ஒன்றினை ஆதாரமாக வைத்து 70% பேர் சேரிகளை தூரப் படுத்தவேண்டும் என்று சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். நான் அந்நிகழ்ச்சியை பார்க்காததால், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எத்தரப்பு மக்கள் பேட்டி காணப் பட்டார்கள் எனத் தெரியவில்லை. ஆயினும் மும்பையின் ஜீவநாடியாக சேரிமக்கள் விளங்குகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமாக சேரிகளில் வாழ்வதாக சென்சஸ் பதிவாளர் வெளியிட்டுள்ளார்.நடைமுறை வாழ்வில் யாரும் அவர்களை தீண்டத் தகாதவர்களாக பார்ப்பதாகத் தெரியவில்லை. கட்டிட வளர்ப்பு முதலாளிகள் (Property Developers), அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்க செய்யும் Media lobbyஆக இருக்கலாம். போனவருட வெள்ளத்திற்கு பிறகு, மித்தி நதியின் (மும்பையின் கூவம்) போக்கை அடைத்தவாறிருந்த சேரிகள்/ பணிமனைகள் மீது ஒரு வெறுப்பு வந்தது உண்மை. ஆனாலும் அதன் முழுத்தாக்கம் மும்பை நகராட்சி மீதும் பிற வளர்ச்சி குழுமங்கள் மீதும் தான் அதிகம்.

சிங்காரச் சென்னை திட்டம்போல மும்பைகாரர்களுக்கு ஷாங்கையை போன்ற மும்பை என்ற கானல்நீர் காட்டப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக மும்பை சேரிகளை ஒழித்து அனைவருக்கும் இருப்பிடம், சுகாதாரமான கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியன ஏற்படுத்த ரூ40,000 கோடி செலவில் திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. அந்த பின்னணியிலேயே ஒருவேளை சேரிகள் ஒழிக்கப் படவேண்டும் என்று சர்வேயில் சொல்லியிருக்கலாம்.

எல்லா பெருநகரங்களிலும் சேரிகள் வளர்வது இயல்பானாலும், மும்பையின் சேரிகள் நடுத்தர, படித்த மக்கள் நிறைந்த சேரிகளாகும். குடியிருப்புகளின் தேவைக்கும் இருப்புக்கும் உள்ள இடைவெளி சேரிகளை உருவாக்குகின்றன. இன்றைய நாளேட்டின்படி அந்தேரியில் ஒரு சேரியில் வசிக்கும் இராஜாராம் இலஜ்ரேகர் ஒரு பெரிய கம்பெனியின் ஆடிட்டராக வெளியூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார்.அவரது மகன் கான்வென்ட்டில் படிக்கிறார். அவர் போன்றவர்களால் ரூ.7000/- வாடகை கொடுத்துக் கொண்டு 1BHK குடியிருப்பில் இருக்க முடிவதில்லை. மாறாக வெகுதொலைவில் புறநகர் பகுதியில் தங்கிக் கொண்டு வண்டிச்சத்தம் கொடுத்து மாளவில்லை. அதனால் சேரி வாழ்வே மேலென வாழ்கிறார். தவிரவும் இங்கெல்லாம் சேரிகள் நமது ஊர் குடிசைகள் போலல்லாமல் தகரகீற்றுகளினால் இரண்டடுக்குகளாக அமைக்கப் படுவதால் மேலே படுக்கையறை தனியாக உள்ளது. நமது சென்னையைப் போலவே தார்தியோ (Tardeo)வில் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டு அடுக்குமாடிக்கட்டிடங்களில் இலவச குடியிருப்புக்கள் கொடுக்கப் பட்டன. ஆனால் ஓரிரு வருடங்களிலேயே அவற்றை ரூ10 இலட்சத்திற்கு விற்றுவிட்டு சேரிகளுக்கு மீண்டு வந்தவர் அநேகம்.சேரிகளில் வாழ்வதற்கு பல பரிமாணங்கள் உள்ளன. அவற்றை முழுதும் புரிந்து கொள்ளாமல் சேரியிலேயே வாழ்ந்திராதவர்கள் அவர்களுக்கு முடிவுகள் காணும் போது இத்தகைய aberrations ஏற்படுகின்றன.


மும்பையில் தாராவி சேரிகளைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். முக்கியமாக நாயகன் படத்திற்குப் பிறகு தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்ல அறிமுகமானது. தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக மும்பை வந்த பெரும்பாலோர் இங்குதான் குடியேறியுள்ளனர். இங்கு தோல்பொருட்கள் தயாரிக்கும் பட்டறைகள் அதிகம். இந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமாகும். தாராவி சீரமைப்பு என்று சொல்லி இங்கிருப்பவர்களை அடுக்குமாடிகட்டிடங்களில் இடம்பெயர்த்துவிட்டு மும்பையின் கட்டிடவளர்பாளர்களுடன் கூட்டுலாபம் காண ஆளும்கட்சி முயல்வதாக அரசியலும் உண்டு.

அவரது பதிவிலே என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. ( அவரது முகப்புப் பக்கத்தில் முழு இடுகையையும் படிக்க முடிந்த எனக்கு, மறுமொழிகளை கிளிக்கினால் பாதி பக்கமே ஏற்றப் படுகிறது, மறுமொழி சுட்டியை அணுக முடியவில்லை. )


இந்தி தேசிய மொழியா ?

இந்தி தேசீய மொழியானது எப்படி என்று simulation என்பவர் தமது பதிவில் வினா எழுப்பி யிருந்தார். இதற்கு முன்னரும் இத்தகைய ஒரு வினா எழுப்பப்பட்டது. அரசியலமைப்பு எட்டாம் ஷெட்யூலில் உள்ள அனைத்து மொழிகளும் தேசீயமொழிகள்தாம். ஆனால் Official language எனப்படும் ஆட்சிமொழியாக இந்தியக் கூட்டமைப்பிற்கு (Union) இந்தியும் அதனுடன் பதினைந்து வருடத்திற்கு ஆங்கிலமும் அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களின் ஆட்சிமொழியை அவர்களே தேர்ந்தெடுக்க விட்டுள்ளனர். இதன்படி மைய அரசின் அனைத்து ஆணைகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப் படவேண்டும். அரசிலமைப்பு பிரிவு 343படியே பதினைந்து வருடம் கழித்து 1965 ஜனவரி 26 அன்று முதல் ஆங்கிலம் இனி ஆட்சிமொழியல்லவென்றும் இந்தி மட்டுமே கூட்டமைப்பின் மொழி என்று அறிவிக்கப் பட்டது. இது தமிழகத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அரசியலமைப்பில் இந்தி பேசாதவர்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக தொடர திருத்தம் நிறைவேற்றப் பட்டது. ஆகவே இன்றைய நிலையில் இந்தியும் ஆங்கிலமும் ஆட்சிமொழிகளே.

நமது அரசியலமைப்பு அவை (Constituent Assembly) 1946ல் ஏற்படுத்தப் பட்டது. அதன் அவைத் தலைவராக மேதகு இராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் சிறுசிறு மன்னர்களின் பிரதிநிதிகளும் இவ்வவையில் இருந்தனர். கிட்டதட்ட மூன்றாண்டுகள் அரசியலமைப்பின் ஒவ்வொரு பிரிவாக விவாதித்து சட்டமியற்றினர். பாபாசாகெப் அம்பேத்காரின் பங்காற்றலை அனைவரும் அறிவர். அந்த அவையில் 14 செப்டெம்பர் 1949 அன்று இந்த 343 பிரிவு விவாதத்திற்கு வந்தது. கிட்டதட்ட 14 மணிநேரம் காராசாரமான விவாதம் ( பொறுமையுள்ளவர்கள் முழு விவாதத்தையும் படிக்கலாம்)நடந்தது. இதற்கு முன்னரே மகாத்மா காந்தி இந்தியின் எளிமை காரணமாக இந்தியாவின் தேசியமொழியென கருத்து பரப்பி வந்தார். தென்னிந்தியாவில் தக்சிண பாரத இந்தி சபை நிறுவப்பட்டு, தனது செல்வாக்கால் பலரை இந்தி கற்க தூண்டினார். தவிர அரசியலைப்பு அவையிலும் அவரது காங்கிரஸ் பெருநிலை வகித்ததால் கூட்டமைப்பின் ஆட்சிமொழியாக இந்தியை கொண்டுவர அதிகம் எதிர்ப்பில்லை. ஒரு வோட்டு வித்தியாசத்தில் எல்லாம் இல்லை). இருப்பினும் தென்னிந்திய பிரதிநிதிகளின் முயற்சியாலேயே ஆங்கிலமும் இணைமொழியாக 15 வருடம் இருக்க ஒப்புகொள்ளப் பட்டது. மற்றொரு வெற்றி, எண்கள் உரோமானிய குறியீட்டில் இருக்க வேண்டுமென்பது. இல்லையென்றால் இந்தி குறியீடுகளாக இருந்திருக்கும்.

அரசியலைப்பில் உரோமானியக் குறியீட்டில் இருக்கவேண்டும் என்று இருந்தாலும் இங்கெல்லாம் பேருந்துகளில் இந்தி குறியீடுகளைப் பயன்படுத்தி நம்மைக் கடுப்படிப்பது வேறு விதயம் :(

மலையாள 'ழ'

இன்றைய நாளேட்டில் ரச்சனா என்ற பெயரில் மலையாளத்தில் லினக்ஸ் இயங்குதளம் வெளியிடப்படுவதாக படித்தேன். திரு. K.H ஹூசைன் தலைமையிலான நான்குபேர் குழு இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லூடக ஆதரவுடன் முழுகணினியாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும் செய்திதுண்டிலிருந்து அது எவ்வகையான l10n என்று தெரியவில்லை, எழுத்துரு பற்றியும் பேசுகிறது.

மலையாளத்தில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே அத்தகைய கணினி முதலில் வெளிவருவதாக குறிப்பிடப் பட்டிருப்பது சிறிது நெருடலாகவே உள்ளது. வெகுநாட்களாக வெங்கட், முகுந்த் என்று ஒருபக்கமும் ஜெயராதா, சிவக்குமார் என்று ஒருபக்கமும் தமிழ்முயல்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்க குழுக்களும் forkingகும் இல்லாமல் அவர்கள் முந்திக் கொண்டார்களே என்று வருத்தமாயிருக்கிறது. 'ழ' கணினியின் இணையதளமே காணவில்லை. இலங்கையின் மயூரன் சிங்கள/தமிழ் கணினி வெளிவருவதாகச் சொன்னார். இப்போதைய நிலை தெரியவில்லை.

சேரநாடும் முத்தமிழ்நாடே, மலையாளமும் செந்தமிழே என்று அந்த நால்வருக்கும் ( ஹுசைன், கங்காதரன், ராஜிவ் செபாஸ்டியன்,சித்ரஜாகுமார்) நம் பாராட்டுக்கள்.

குமரனின் பேருருவம் !!

உயரமான அனுமன் சிலைகளை சுசீந்தரம், நாமக்கல், நங்கநல்லூர் மற்றும் நானிருக்கும் நெரூல் ( மும்பையின் புறநகர்) இங்கெல்லாம் கண்டிருக்கிறேன். குமரியில் அய்யன், ஹைதராபாத்தில் புத்தர்(அ)ஜைன குரு சிலைகளின் விஸ்வரூபத்தை வியந்திருக்கிறேன். கர்நாடகத்தின் சிரவண பெலகொலாவையும் கண்டு களித்திருக்கிறேன். இவ்வரிசையில் தமிழ்க் கடவுள் கந்தனுக்கும் உயரமான சிலை வடித்திருக்கிறார்கள், இங்கில்லை.. மலாயாவில்.


உலகிலேயே உயரமான முருகன் சிலை சென்ற ஞாயிறு ஜனவரி 29ம் நாள் மலேசியாவின் பாதூ குகை (Batu Caves) சுப்பிரமணியர் கோவில் நுழைவாயிலில் திறக்கப் பட்டது. மலேசிய அமைச்சர்கள் தாதுக் செரி சாமிவேலு, தாதுக் பழனிவேல் மற்றும் தாதுக் வீரசிங்கம் இத்திறப்பு விழாவில் பங்கேற்றனர். 42.7 மீ (128 அடி) உயரமுள்ள முருகன் சிலை 1550 கன மீட்டர் கொன்கிறீட்,250 டன் இரும்புக் கம்பிகள் மற்றும் 300 லிட்டர் தாய்லாந்து நாட்டிலிருந்து தங்கமுலாம் வண்ணக்குழம்பு ஆகியவை கொண்டு அமைக்கப் பட்டது. 15 இந்திய சிற்பகலைஞர்கள் மூன்று வருடம் 25 இலட்சம் மலேசிய ரூபாய் செலவில் உருவாக்கினர். கின்னஸின் உலக சாதனைப் பட்டியலில் உலகிலேயே உயரமான முருகன் சிலை என இடம் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

1981இல் நிறுவப்பட்ட இக்கோயில் தை பூச விழாவிற்கு பெயர் பெற்றது ( இவ்வருடம் பிப்.11ம் தேதி). அப்போது பல இலட்சம் மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாம். 272 படிகள் கொண்ட இந்தக் கோவிலை இயற்கை அழகை பருகவும் செல்லலாம்.தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது.