வானத்தில் ஒரு சரித்திரம்

சாந்திநிலையம் என்ற படத்தில் நாகேஷ் மற்றும் குழந்தைகள் வெப்பக்காற்று பலூனில் மேலே செல்லும் பாடல் காட்சி சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நானும் ஒருநாள் வானத்தின் மீதேறி போகவேண்டும் எனக் கனவுகளை ஏற்படுத்திய படமது.

அக்கனவு கனவாகவே நிலைத்துவிட்டாலும், நேற்றைய தினம் வெப்பக்காற்று பலூன் களத்திலே இந்தியாவின் பிரபல துணிவணிக மேதையும் aviatorஉம் ஆன திரு.விஜய்பத் சிங்கானியா 69,852 அடி உயரம் சென்று சாதனை படைத்தது என்னை சிறகடித்து பறக்க வைத்தது.


இதற்கு முன்னால் ஸ்வீடனைச் சேர்ந்த பெர் லின்ஸ்ட்ராண்ட்
என்பவர் 1988இல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் 64,997 அடி வரை பறந்ததே உலக சாதனையாக இருந்தது. குறைந்தது 17 பேராவது இச்சாதனையை முறியடிக்க முயற்சி செய்து தோற்றுள்ளனர். பலகோடி வருமானமுள்ள ரேமாண்ட் நிறுவனத்தின் அதிபரான சிங்கானியா தனது 67 வயதில் இச்சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத் தகுந்தது.கடந்த 40 வருடங்களாக பறந்து வரும் திரு. சிங்கானியா, 1988இல் லண்டனிலிருந்து
அஹமதாபாத்திற்கு 22 தினங்களில் சிறுவிமானத்தில் (micro light) தனியாகப் பறந்து சாதனை படைத்திருக்கிறார். Federation Aeronautique Internationale (FAI) வழங்கும் தங்கமெடலை 1994இல் வாங்கியுள்ளார். மேலதிக விவரங்களுக்கு

அவர் மட்டும் உயரே பறக்கவில்லை; இந்தியாவின் கௌரவமும்தான்.

அவருக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்.

பீஹாரில் ஒரு French புரட்சி ?

கடந்த ஞாயிறு அன்று பீஹாரின் ஜெஹானாபாத்தில் நடந்தேறியுள்ள சிறை உடைப்பு வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்க வியலாது. லாலு மற்றும் பூடாசிங் எதிர்ப்பாளர்களுக்கு வாயில் மெல்ல அவல் கிடைத்தாலும் இந்நிலைக்கு பீஹாரின் அனைத்து அரசியல் மற்றும் சமூகவியலாரும் பொறுப்பேற்க வேண்டும். இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பட்ட அரசுகள் ஆட்சி புரிந்த மகதத்தில் இன்றைய தினம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியே இதற்கு காரணம். பத்து பன்னிரண்டு தீவிரவாதிகள் சிறையை மீட்பதற்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செயலில் இறங்குவதற்கும் எத்துணை வித்தியாசம் ? நக்ஸல்வாதிகள் அடிப்படையில் பரவியுள்ள நோயின் அறிகுறியேயாகும். சுதந்திர இந்தியாவில் இன்னும் நிலச்சுவாந்தார்கள் தனிப் படையுடன் வரும் அட்டகாசம் பீஹாரில் மட்டுமே நிலவுகிறது. லூயி IV மற்றும் மேரி அரசிபோல என்ன உண்மை நிலை என்று கவலைப்படாமல், அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளையும் தேர்தல்களையும் கைப்பற்ற மக்களை ஜாதி, மதம் என்று சீட்டுக்கட்டு நிறங்களாக எண்ணி ரம்மி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்; எனக்கு MY சேர்ந்திருக்கிறது, உனக்கு DY சேர்ந்திருக்கிறதாஎன்று. இன்று நோய் முற்றி பாஸ்டைல் சிறை உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. நக்ஸலைட் இயக்கம் ஆரம்பித்த வங்காளத்தில் இன்று அமைதி நிலவுகிறதென்றால் நிலையான அரசும், சமுகாய அக்கறையும் தான் என்று தோன்றுகிறது. நோய் நாடி நோய் முதல் நாடி வைத்தியம் செய்ய அரசும் தன்னார்வ அமைப்புக்களும் முன் வருமா ?

மாற்று மருத்துவமுறைகள்

சமீப காலமாக மாற்று மருத்துவ முறைகள் (Alternate Medicine) பிரபலமாகி வருகின்றன. நமது பாரம்பரிய இந்தியா வின் ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் பல சித்தர்களாலும் பெரியோர்களாலும் பல்லாண்டு சோதனை செய்யப்பட்டு அனுபவத்தால் திருத்தப் பட்டு சீராக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் அவை ஆங்கில மருத்துவமுறைகள் போல தரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சோதிக்கப்படவில்லை என இந்திய மருத்துவ கழகம் குறை கூறுவதுண்டு. முழுவளாவிய (holistic)மருத்துவமுறை என யோகா, தனிமையை தவிர்த்தல் முதலியவற்றின் இன்றியமையாமையும் உணரப் பட்டுள்ளது. கூட்டுக் குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனைகளும் எத்தனை தூரம் depressionயையும் இருதய தமனி வியாதிகளையும் தவிர்க்க உதவி புரிகின்றன என்று நாளும் கட்டுரைகள் வெளிவருகின்றன.

இந்தவித சூழ்நிலையை வியாபார நோக்கில் பயன்படுத்திக் கொள்ள பலர் கிளம்பியுள்ளனர். ஹிமாலயா மற்றும் டாபர் போன்ற நிறுவனங்கள் தரகட்டுப்பாடுடன் மருந்துகளை தயாரிக்கின்றனர்.ஆங்கில மருத்துவர்களும் இவற்றை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் வாய்மொழி வழியாக (MLM) வெளிநாட்டு இயற்கை மருந்துகளை (சிவப்பு காளான் போன்றவை) அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.இவற்றின் பயன்களும் பின்விளைவுகளும் அறியாத நிலையில் மக்கள் விற்பவரின் அனுபவத்தை நம்பி வாங்குகிறார்கள். அவர்கள் மோசம் போகிறார்களா என்பதை மருத்துவ கழகம் ஆராய்ந்து எச்சரிக்கை செய்யவேண்டும்.

இதைத் தவிர பழங்கால மருத்துவ முறைகளில் முறையாக பயிற்சி பெறாதவர்களும் ஊடகங்களில் ஆடம்பர விளம்பரங்களால் மக்களை ஈர்த்து ஏமாற்றுகிறார்கள்.

மருத்துவ கட்டுரைகள் மூலம் வணிக நிறுவங்களின் விற்பனையை கட்டுப்படுத்த முடிகிறது. மக்கள் பத்திரிகையில் எது வந்தாலும் அதனை அப்படியே நம்பி விடுகிறார்கள். கெல்லாக்ஸ் வந்த புதிதில் அதன் கவர்ச்சியால் எல்லோரும் கார்ன்/கோதுமை flakesக்கு மாறினார்கள். இரும்புச்சத்து மூளைக்கு எவ்வளவு அவசியம் என்று அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். பிறகு நார்சத்தினை வேண்டி ஓட்ஸிற்கு தாவ கெல்லாக்ஸ் விற்பனை சரிய இப்போது muesli க்கு அவர்கள் மாறி யுள்ளார்கள்.

இப்போது புதிதாக எளிமையான, எல்லாவற்றிற்கும் நிவாரணியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதாக, சில வாய்மொழி வைத்தியங்கள் பரவத் தொடங்கியுள்ளன. முதலில் காலையில் எழுந்தவுடன் ஒரிரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை ஒரே வாயில் அருந்திவிட்டு மற்ற பணிகளை செய்யவேண்டியது. இதனால் நீரிழிவு,இரத்த அழுத்தம், குடல் அயர்ச்சி என்று எல்லா வியாதிகளும் பறந்தோடிடும் என்பார்கள். ஆனால் இதன் efficacy பற்றி ஒரு புள்ளிவிவரமும் இல்லை. ரொம்பக் கேட்டால் காசா பணமா, தண்ணீர்தானே பலன் இருக்கிறதோ இல்லையோ, ட்ரை பண்ணி பார்ப்பதில் என்ன தப்பு என்பார்கள். இப்படி ஒரே நேரத்தில் 2 லிட்டெர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லதா என்று தெரியவில்லை. இது வெற்றி பெறுவதைக் கண்ட சில எண்ணெய் வணிகர்கள் அடுத்ததாக காலையில் பல் விளக்கியபின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் (நல்லெண்ணெய், ஓலிவ் எண்ணெய்) கொப்பளிப்பது என்று ஆரம்பித்துள்ளனர். இதில் ஒரு வணிகர் ஆனந்த விகடன்,மங்கையர் மலர் என்று பல பக்க விளம்பரங்களுடன் இதனை மக்களிடம் கொண்டு செல்கிறார்.இவரின் கூற்றினை விளம்பர கௌன்சிலும் மருத்துவ கழகமும் பரிந்துரைக்கின்றனவா எனத் தெரியவில்லை.


எனவே மாற்று வைத்தியமுறைகளில் சில பயனுள்ள சிகிட்சை முறைகள் இருந்தாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கின்றன. மக்களை சரியான திசையில் வழி காட்ட USFDA போல ஒரு தரக் கட்டுப்பாடு அமைப்பு அமைய வேண்டும்.அதுவரை அரசின் பொதுநலத்துறை பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் NBFC க்களிடம், ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தும்வரை, மக்கள் ஏமாந்ததைப் போல இங்கும் நடக்கும். பணம் போனால் சம்பாதிக்கலாம்.ஆள் போனால் என்ன செய்வது ?

நமது வலைப்பதிவர்களில் உள்ள மருத்துவர்களின் கருத்து என்ன ?

புதுதில்லியில் ஒரு புதுக்கோவில்




நவ இந்தியா வின் புதிய அதிசயமாக, இந்திய கட்டிடக் கலையின் சிறந்த சின்னமாக கடந்த வாரத்தில் உலக சமாதானத்திற்கான அக்ஷர்தாம் கோவில் (Akshardham Temple Monument to World Peace ) புதுதில்லியில் திறக்கப்பட்டது. வட இந்தியாவின் ராஜஸ்தானி,குஜராத்தி, ஒரியா,முகலாய மற்றும் ஜெயின் கட்டிடக் கலை நுட்பங்களின் கலவையாக விளங்குகிறது. முழுவதும் பளிங்கினாலும் சிவப்பு பாறை( red sandstone)களாலும் இரும்புக்கம்பிகளை துளியும் உபயோகிக்காமல் இதனை கட்டி முடிக்க 5 வருடங்கள் ஆகியுள்ளன. 234 சித்திர தூண்களும் 9 அலங்கார விதானங்களும், 20 நான்முக சிகார் களும் 20,000 சிலைகளும் கொண்ட இதனை கட்டிட 11,000 சுயஉதவியாளர்கள் (volunteers),சாதுக்கள் மற்றும் கலைஞர்கள் துணை புரிந்துள்ளனர்.
மேல் விவரங்களுக்கு:
http://www.akshardham.com/index.htm

திருவேங்கடம்

பதிவுகளை தொடங்கும் முன் கடவுள் அருள் வேண்டுகிறேன். அதோ தூரத்தில் தெரியும் வெங்கடவனை மனதார தரிசனம் செய்து எண்ணங்களை எழுத்துக்களில் திண்ணமாக செதுக்க துணை நிற்க வேண்டுகிறேன்.

வந்தனம்

வந்தனம் என்று சொல்லியே சபைக்கு நானும் வந்தேனைய்யா !!
தமிழ்மணத்தின் வாசத்தால் ஈர்க்கப் பட்ட இன்னொரு வண்டு.

இது நாள் வரை படித்து மகிழ்ந்திருந்த தமிழ்மணத்தில் பங்கு பெறவும் ஆசை வந்தது. எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்றாலும் எழுத ப்ளாக்கர் கணக்கு மட்டும் போதாதே !

பேசும் தமிழ் எழுத பழக இது நல்ல துவக்கம்.
குறைந்தது பின்னூட்டமிடவாயினும் இக்கணக்கு உபயோகமாயிருக்கும்.