புதுசு, இது புதுசு!


புத்தாண்டு பிறப்பிற்கும் பொங்கலுக்கும் வீட்டு மராமத்து செய்து புது வண்ணம் கொடுப்பார்கள். வேண்டாதவற்றை போகிப் பண்டிகையின் போது கழிப்பதும் வழக்கம். அந்த உணர்வுடன் எனது பதிவை பழைய ப்ளாக்கரிலிருந்து புது ப்ளாக்கரின் கணக்கிற்கு மாற்றியுள்ளேன். ஆனால் அந்த அடைப்பலகையை கையாள இன்னும் பொன்ஸ் வகுப்பை எதிர்நோக்கியிருப்பதால் புது மொந்தையில் பழைய கள்தான்.

தமிழ்மணத்தில் சேர்கிறதா என்று சோதிப்பதற்கும் இந்த இடுகை.

Merry Xmas to you !


அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் கிருஸ்துமஸ்
வாழ்த்துக்கள்!!

டாலர் கடவுள்கள்

சென்னை அண்ணாசாலையிலுள்ள பூம்புகார் அங்காடிக்குச் சென்று மூன்றுதளங்களில் வைக்கப்பட்டுள்ள கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களையும் கடவுள் பொம்மைகளையும் கண்டு இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்றாகும். மற்றவர்கள் புத்தகக் கடைகளிலும் பொருட்காட்சிகளிலும் செலவிடுவதைப் போன்று எனக்கு இத்தகைய கைவினைப் பொருட்களை பார்வையிடுவதிலும் சேர்ப்பதிலும் (வீட்டுஅதிபர் அனுமதிக்கும் எல்லைவரை) ஆர்வமுண்டு. நமது கடவுளர் சிலைகளை வெவ்வேறு நிலைகளிலும் பாவங்களிலும் அழகாக வடிவமைத்து நமக்கு பக்தி பரவசப்படுத்துவர். மண்பொம்மைகளின் கனம் குறித்தும் உடையும் தன்மை குறித்தும் வீட்டினர் குறை சொன்னாலும் அதனை அழகாக வார்த்து வண்ணம் பூசிய பரிச்சியமில்லாத அந்தக் குயவனாரிடம் மனம் பறிகொடுப்பேன்.

நவராத்திரி பண்டிகை சக்தியைப் போற்றவும் கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வதற்காகிலும் இந்தப் பொம்மைக் கலைஞர்களின் கைவண்ணத்தை வெளிக் கொணரும் ஒரு பண்டிகையாகும். கொலு வைப்பதே கடினமாகிவரும் இந்நாட்களிலும் வாயிலறை காட்சிப்பெட்டியில் வைத்திட சிறிய பளிங்கு, டெர்ரகோட்டா பொம்மைகள் விரும்பப் படுகின்றன. சென்றவிடங்களின் நினைவாக வாங்கிய சிறு பொம்மைகளும் இந்த இடத்திற்கு போட்டிப் போடுகின்றன.இவற்றினால் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து இந்தக் குடிசைத் தொழிலாளர்கள் நலிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவிலிருந்து மலிவு விலையில் நம் கடவுள் சிலைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது மும்பையில் சீன பொம்மைகள் தான் அதிகம் விற்கப் பட்டன. இன்று கண்ட இச்செய்தி இன்னும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவின் பரிசுப்பொருட்கள் விற்கும் லெனக்ஸ் நிறுவனம் அதிக அளவில் இயந்திரங்கள் மூலம் நம் பொம்மைகள் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சிம்மி சோப்ரா என்ற இந்திய அமெரிக்கரின் அறிவுறுத்தலின்படி, மிக்கி மௌஸும் டொனால்ட் டக்கும் தயாரித்து வந்தவர்கள் கணபதி, துர்கா, இலக்குமி பொம்மைகளை தயாரிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளனர். ஆறுமாத சோதனைகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 15-அங்குலஉயரமும் 12அங்குல அகலமும், 24-காரட் தங்கப் பூச்சும் கொண்ட ஆயிரம் விநாயகர் சிலைகளை $2000க்கு வெளிக் கொணர்ந்துள்ளனர். விற்பனை வேகமெடுக்கும் போது சந்தையில் குவியப் போகும் இந்தப் பொம்மைகள் நம் கைவினை தொழிலாளர்களின் வாழ்விற்கு கேள்விக்குறி எழுப்பப் போகின்றன.

இன்று நெசவாளர்களின் அவலநிலைபோல நாளை இத்தொழிலாளர்களும் அரசு மானியத்தை எதிர்நோக்கி வாழவேண்டியதாயிருக்கும்.

வரிசையில் எப்படி முந்துவது ?

தரவரிசைப் படுத்துவது என்றுமே பிணக்குகளை ஏற்படுத்துவதுதான். அது அதிகம் பார்வையிடப்பட்ட பக்கங்களாகட்டும் அல்லது சிறந்த பதிவர் வரிசையாகட்டும். இருப்பினும் கூகிளின் தரவரிசை நீதிமன்றத்தை நாடும் நிலைவரை சென்றுள்ளது. இன்றைய Slashdotஇல்் இது தான் சூடான விவாதத்திற்கான அவல்.

டீன் ஹன்ட் என்ற பதிவரை ஒரு இணையவழி வணிகத்தள உரிமையாளர், அவரது பதிவு குறிப்பிட்ட வணிகம் குறித்த கூகிள் தேடலில் எவ்வாறு தம் நிறுவன இணையதளத்தை விட பதிவரின் இடுகை அதிக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது என மின்னஞ்சலில் வினவியுள்ளார்்.

ஒருபதிவர் எந்த வகையில் கூகிளின் தரவரிசையை கட்டுப்படுத்தமுடியும் என தெரியவில்லை. அதிக தொடர்பு (லின்க்) கொடுத்து பதிவும் அதிகமாக தொடர்பு கொடுக்கப்பட்டிருந்தால் இது சாத்தியம் என /. மன்றத்தில் சொல்கிறார்கள்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

சாந்திக்கு சபாஷ் !

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டிச.ஒன்றிலிருந்து கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்று வருகின்றன. தடகளப் போட்டிகளைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்தப் போட்டியில் டென்னிஸ் அறிமுகமான பின்னர் தடகள போட்டிகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இருப்பினும் நம் இந்திய தடகள வீரர்கள் மனம் தளராமல் தஙகள் திறமைகளை சத்தமில்லாமல் வெளிப்படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனியன்று தமிழ்நாட்டின் சாந்தி சௌந்தரராஜன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமி.3.16 வினாடிகளில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். அதனை பாராட்டி முதல்வர் அவர்களும் பணமுடிப்பு அறிவித்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள்!!

அவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். உடன் மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் கொண்ட தங்கள் குடும்ப பாரத்தைத் தாங்க முடியாமல் தன் பந்தய ஓட்டத்தையே நிறுத்தவும் எண்ணியிருந்தார் என அறியும்போது மனம் பதைக்கிறது. புதுக்கோட்டையை அடுத்த காத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கு செயின் ட் ஜோசஃப் பொறியியற்கல்லூரி தான் அவரது ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் முயற்சிகளுக்கு துணைநின்றிருக்கிறது. இதற்கு முன் ஆசிய தடகள போட்டிகளில் வெள்ளி வென்றிருந்தாலும் இங்கு நடந்த மாநிலங்களுக்கிடையேயான போட்டிகளில் சரிவர ஓடவில்லை. இதனால் ஏசியாட் குழுவில் இடம் பிடிப்பதும் கேள்விக் குறியாக இருந்தது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையும் விடாத உழைப்பும் அவரது கனவை மெய்ப்பட வைத்திருக்கிறது.தன் முதல் சுற்றில் மெதுவாக ஓடியதே தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது. தங்கத்தை மாரியம் யூசுஃப் ஜமால் என்ற பாஹ்ரைன் பெண் வென்றார்.

சாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். திறமையுள்ளவர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதே சிறந்த விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் வழியாகும்.

ஊடக வெளிச்சத்திற்காகவே நடவடிக்கைகள் மேற்கொண்டால் அடுத்த சாந்திகள் குடும்ப பாரத்தில் மேலே வரமுடியாமற் போகலாம்.

சுவாமியே சரணம் !

பம்பா நதி கேரளத்தின் நீளமான நதிகளில் மூன்றாவது ஆகும். குட்டநாடு எனப்படும் கேரளாவின் நெற்களஞ்சியத்திற்கு உயிராதாரம். இந்நதிக்கரையில் தான் பந்தள மகாராஜா அய்யப்பனை மணிகண்டனாக கண்டெடுத்தார். இராமரும் இலக்குவனனும் கூட இந்நதிக்கரையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இங்கு மூதாதையருக்கு திதி கொடுப்பது விசேடமாக கருதப்படுகிறது.

நாங்கள் பம்பாவின் குளிர்ந்தநீரில் அசதி தீர குளித்துவிட்டு வண்டியிலிருந்த இருமுடிக் கெட்டுக்களை தலையில் சுமந்து கொண்டோம். மாலை ஆறுமணியளவில் பம்பையிலிருக்கும் கணபதியை வேண்டிக்கொண்டு மலையேற்றத்தின் முதற்கட்டமாக நீலிமலை ஏறத் தொடங்கினோம்.ஆரம்பக் காலங்களில் கல்லும் முள்ளுமாக இருந்த மலைப்பாதை இப்போது படிகளுடனும் காங்கிரீட் தரையுடனும் எளிதாக்கப் பட்டிருப்பினும் செங்குத்தான சரிவினால் (60 -70 டிகிரி) ஏறுவது சிரமமே. சற்று பணமும் வயதும் அதிகமாகத் தெரிந்தால் உங்களச் சுற்றி 'டோலி டோலி' என்று சூழ்ந்து விடுவார்கள். அவ்வாறு தூக்குபவர்கள் நம் மதுரை,நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு நடைக்கு ரூ.800/-இலிருந்து ரூ.1200/-வரை ஆளைப் பார்த்து வாங்குகிறார்கள். சுப்பிரமணிய பாதை என்னும் டிராக்டர் செல்லும் மாற்றுப் பாதையும் உண்டு. மலையாள இயக்குனர் சுப்பிரமணியம் அய்யப்பனைப் பற்றி படம் எடுக்கும் போது போட்டதாம். மொத்த பயணதூரம் 6 கி.மீ.

நீலிமலையின் முகட்டிலே அப்பாச்சிமேடு என்னும் முதல் சமதளம் வருகிறது. இங்கு கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு, கொண்டுவந்த மாவு உருண்டைகளை சுவாமியின் பூதகணங்களுக்காக மூன்றுபக்கமும் விட்டெறிந்தோம். இங்கே ஒரு இதய கவனிப்பு மையமும் இயங்குகிறது. இதை அடுத்த முகட்டு சபரி பீடமாகும். இங்கு சபரி ஆசிரமம் இருந்ததாக ஐதீகம். கேரள கோவில்கள் காட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால் காட்டு விலங்குகளை விரட்டும் விதமாக வெடி வெடித்து இறைவனைக் கொண்டாடுவர். அத்தகைய வெடி வழிபாடு இங்கு நடைபெறுகிறது. சற்றே சமதளமான வழியில் மரக்கூட்டம் எனப்படும் அடுத்த இடத்தை அடைந்தோம். ஏராளமான அய்யப்பன்மார் கூட்டத்தில் வெவ்வேறு வேகத்தில் வந்த குழு உறுப்பினர்கள் இங்கு ஒன்று சேர்ந்து கொண்டோம்.

இங்கிருந்து சரங்குத்தி ஆலமரம் நோக்கி நடந்தோம். சற்றே செங்குத்தான பாதை, சீரமைக்கப் படாமல் கற்களுடன் இருந்தது. சுமார் ஒரு கி.மீ தூரம். இலேசான மழை இருந்ததால் வழுக்கவும் செய்தது. கன்னி அய்யப்பன்மார் ( முதன்முறையாக விரதமேற்று வருபவர்) எருமேலியில் கொச்சு அய்யப்பன் கோவிலில் இருந்து கொண்டுவந்த சரத்தை (அம்பை) இங்குள்ள ஆலமரத்தில் செருக வேண்டும். ஆலமரத்தைத் தேடும் நிலையில் உள்ளது. அனைவரும் இங்குள்ள தட்டியில் செருகிவிட்டுச் செல்கின்றனர்.

முதல் இரண்டுநாட்கள் கேரள சாலைமறிப்பால் நாங்கள் சென்ற அன்று நல்லக் கூட்டம். வரிசை சரம்குத்தியிலேயே ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து சுமார் 1.5 கி.மீ இறக்கத்தில் சன்னிதானம் உள்ளது. பொற்கூரை வேயப்பட்ட சன்னிதானத்தை தரிசித்தவாறே இறங்கினோம். ஐம்பது ஐம்பது பேர்களாக தடுத்து ஆலய ஊழியர்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். கீழிருந்து மேலே வர இரண்டு மணி நேரமாகி இருந்தது. நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் ஒருமணி நேரம் ஆயிற்று. இரவு ஒன்பது மணியளவில் பொன்னு பதினெட்டாம் படிகளை அடைந்தோம். முன்பெல்லாம் நாம் எத்தனையாவது முறை செல்கிறோமோ அந்த படிக்கட்டில் தேங்காய் உடைப்பது வழக்கம். கூட்டம் அதிகரித்தபின் படியின் அருகாமையில் உடைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்தமுறை படியின் இரண்டுபக்கங்களிலும் உள்ள கருப்பண்ண சுவாமி சன்னதிகளுக்கு அப்புறம் உடைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். குறுகலான செங்குத்தான பதினெட்டு படிகளில், கண்ணாடியை தூக்குப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, காவலர்கள் கை கொடுத்து ஏற்றிவிட மேலே வந்த கணங்களை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. சன்னிதானத்தின் முகப்பில் மீண்டும் குழுவினரை ஒன்றுசேர்த்து கோவிலை சுற்றிவந்த வரிசையில் ஒரு அரை மணிநேரம் காத்திருந்து இருமுடியுடன் ஐயன் அய்யப்பனை கண்ட ஓரிரு நிமிடங்களில் பட்ட துன்பமெல்லாம் பறந்தோடிப் போயிற்று. சன்னிதானத்திற்கு தென்மேற்கு திசையில் இருந்த கன்னிமூல கணபதிக்கு நன்றி சொல்லி கோவிலை விட்டு வெளியே வந்தோம்.

இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடத்தில் மீண்டும் குளித்து கொண்டுவந்த இருமுடிகளைக் களைந்து, தேங்காய்களை உடைத்து நெய்யை ஒரு தூக்குப்பாத்திரத்தில் நிரப்பினோம். மற்ற பூசை திரவியங்களையும் வகையாகப் பிரித்துக் கொண்டோம். அவல்பொரி, வெல்லம், உலர்திராட்சை போன்றவற்றைக் கலந்து சுவாமிக்குத் தயார் செய்தோம். பதினொருமணியளவில் கோவில் நடை அடைக்கும்போது ஹரிஹராசனம் பாடல் பாடியது அந்த சூழலில் இரம்மியமாக இருந்தது. நள்ளிரவிற்குப் பின்னால் நடந்த அசதியில் மனநிறைவோடு நன்றாகத் தூங்கி விட்டோம்.

மீண்டும் அதிகாலையில் எழுந்து நெய்யபிஷேக வரிசையில் நின்று சன்னதி வாயிலின் வலது புறம் கொடுத்துவிட்டு அப்பிரதஷிணமாக இடதுபுறம் வந்து நெய் பாத்திரத்தை வாங்கிக் கொண்டோம். இதனால் நாம் கொடுக்கும் நெய்யை அபிடேகம் செய்வதைக் காண முடியாது. நமக்கு முன்னால் கொடுத்தவருடையதைத் தான் பார்க்க முடியும். நெய் அபிடேகத்தைக் கண்டபிறகு மாளிகைப்புரம் சென்று கல்யாணத்திற்காக என்றும் காத்திருக்கும் அம்மனை தரிசித்து, தேங்காய் உருட்டி, மற்றும் அங்கிருந்த நாகர், நவக்கிரகங்கள் எல்லோரையும் வணங்கி வெளியே வந்தோம். உடைந்த நெய் தேங்காய் மூடிகளை பதினெட்டாம் படியருகே உள்ள ஆழியில் (அணையாத நெருப்பில்) இட்டோம். நெய் நமது ஆத்மாவாக இறையை சேர்கிறது என்றும் தேங்காய் மூடிகள் நம் உடலாக நெருப்பிற்கு இரையாகின்றன என்றும் குருசாமி சொல்வார். அருகிலிருந்த தேவஸ்வம் அலுவலகக் கவுண்டர்களில் பிரசாதமாக அரவணைப் பாயசமும் அப்பமும் வாங்கிக் கொண்டோம். திருப்பிக் கொடுக்கப்பட்ட நெய், அரிசிப்பொரி பஞ்சாமிர்தம், விபூதி,குங்குமம் ஆகியவற்றை இருமுடிப் பையில் முடிந்து கொண்டோம். மீண்டும் இருமுடிகலை தலையில் சுமந்தவாறு, ஐயனை ஒருமுறை தரிசித்து விட்டு, குறிப்பிட்ட இடத்தில் சிதறு தேங்காய் உடைத்து விட்டு கீழேஇறங்க ஆரம்பித்தோம். பதினெட்டுப் படிகள் வழியாகவே இறங்குவது இப்போதெல்லாம் இயலாமற் போயிற்று.

பனிரெண்டு மணியளவில் பம்பா வந்திறங்கி கேரள கப்பா, கஞ்சி சாப்பிட்டு வண்டி ஏறியது தான், நேராக பாலக்காடு இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு உடனேயே கோவை பேருந்தைப் பிடித்துக் கோவைக்கு நள்ளிரவில் திரும்பினோம்.

சுவாமியே சரணம் அய்யப்பா!!

சபரி யாத்திரை

கார்த்திகை பிறந்ததும் கானகத்து அரசனை தரிசிக்க கருப்பு வேட்டி கட்டுவது கடந்த பத்து வருடமாக நிகழ்கிறது. சிக்கிக்கொண்ட வேகமான வாழ்க்கைக்கு ஏற்றவாறு கார்த்திகை இரண்டாம் வாரமே ஒரு நான்குநாள் விடுப்பில் அவசரமாக பயணிப்பதே வழக்கமாகி விட்டது. இங்குள்ள நெருல் அய்யப்பன் கோவிலில் செல்வதற்கு உறுதி எடுத்துக் கொண்டு, மாலை அணிந்து பயணத்திற்கு தயாரானேன்.

நவ.19 அன்று அலுவலகப் பணி முடிந்து இரவு டெக்கானில் கோவை சென்று மறுநாள் பாலக்காடு அருகில் எலாபுள்ளி என்ற ஊரில் மற்ற குழுவினருடன் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. நான் கேரளாவில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட நட்பும் வழக்கமும் தொடர்கிறது.
டெக்கானின் பெருமைக்கேற்ப மும்பையிலிருந்து தாமதமாக கிளம்பி கோவை அடைந்த போது இரவு ஒரு மணி. வாடகைக்கார் கிடைக்காமல் சிரமப்பட்டு வீட்டிற்கு வந்தால், தம்பி கேரளா செல்லும் சாலைகள் முல்லைப் பெரியார் பிரச்சினைக்காக அடைக்கப்பட்டிருந்ததாகவும் கலைஞரின் வேண்டுகோளால் மாலை அளவில் திறக்கப்பட்டு பயங்கர traffic jam ஏற்பட்டிருப்பதாகவும் பயமுறுத்தினார். 'கொண்டு சென்று தரிசனம் காட்டித் தருவாய் ஐயனே' என்று வேண்டிக்கொண்டு விடிகாலையில் ஈச்சநாரியில் கணபதியை தரிசித்து பாலக்காடு கிளம்பினோம். எப்போதையும் விட சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும் பூசை ஆரம்பிக்க சரியான நேரத்தில் 'எத்தினோம்'.

அய்யப்ப பூசை செய்து ஒவ்வொருவராக இருமுடி , குருசாமி துணையுடன், கட்டிக்கொண்டோம். ஒருமுடியில் ஐயனுக்கு நெய் அபிடேகம் செய்ய தேங்காயில் துளையிட்டு நெய் நிரப்பி மற்ற பூசை திரவியங்களை நிரப்பிக் கொண்டோம். மற்றொன்றில் நமக்கு வழிப்பயணத்திற்கு உண்டான அரிசியும் பிற பொருட்களும். வழியில் உணவகங்களில் சாப்பிடும் இந்தக் காலங்களில் இது ஒரு குறியீடே. எல்லோருக்கும் கட்டியபின் மதிய உணவு உண்டு பயணம் ஆரம்பமாயிற்று. முதலில் குருவாயூர். மாலை ஆறு மணிக்கு கிடைத்த நல்ல தரிசனம் உற்சாகத்தைக் கொடுத்தது. முன்பெல்லாம் கோவிலுக்குள்ளே இருந்த வரிசை, இந்த வருடம் வெளியில் வந்துவிட்டது. அதனால் நேரே தரிசனம் தான்.காலையில் குழந்தையாகவும் மதியம் குமரனாகவும் வேடமணிந்தவன் நாங்கள் காணும்போது விருத்த வேடத்தில் இருந்தான். அங்கிருந்து NH17 இல் திருப்பரையார் என்ற இடத்தில் இராமரை தரிசித்து இரவு எர்ணாகுளம் வந்து தங்கினோம்.

ஞாயிறு அதிகாலை எர்ணாகுளத்தப்பனை கண்டுகொண்டு, அங்கிருந்த ஆறுமுகனையும் இராகவேந்திர மடத்து அனுமனையும் தரிசித்துக் கொண்டு சோட்டானிக்கரை அடைந்தோம். அங்கு அன்று ஏதோ திருவிழாவாகையால் நல்லக் கூட்டம். அடுத்தடுத்து செல்லவேண்டியிருந்ததால் பகவதியை கீழ்காவில் தரிசித்துவிட்டு கிளம்பினோம். சோட்டானிக்கரை, கொடுங்கல்லூர் , மூகாம்பிகை ஆகிய மூன்று தேவியரும் ஒரே சக்தியின் வெளிப்பாடாக கருதுகின்றனர். மனநிலை குன்றிய மகளிர் இங்கு தலைவிரிகோலமாக அரற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். திறந்த மனதும் பரந்த சிந்தனையும் வளர்ந்தும் இந்தகாட்சிகள் இன்னும் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இங்கு குங்குமத் தண்ணீரை குருதி எனக் கொடுக்கிறார்கள்.

அங்கிருந்து உதயணாபுரம் சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம். அடுத்து வைக்கம், கடுத்துருத்தி, எட்டுமானூர் சிவன்கோவில்களை தரிசித்தோம். இந்த மூன்று கோவில்களும் ஒரே நாளில் தரிசிப்பது விசேடமாம். தடுக்கி விழுந்தால் பாதிரியார் மீதுதான் விழவேண்டும் என்று கிருத்துவர்கள் அதிகம் வாழும் செழுமையான பாலையில் மதிய உணவு அருந்தி பயணத்தைத் தொடங்கினோம். அங்கிருந்த கடப்பாட்டூர் என்ற புதிய சிவன்கோவிலையும் கண்டு வந்தோம். இது ஒரு SNDP கோவில். அந்த அரசியல் தமிழ்மண வம்புக்கு நல்ல அவல்.

எருமேலி வரும்போது மதியம் இரண்டுமணியாகிவிட்டது. பேட்டை சாஸ்தா கோவிலிருந்து கன்னிசாமிமார் வர்ணம் பூசிக்கொண்டு 'பேட்டதுள்ளல்' ஆரம்பிப்பார்கள். மத்தள இசைக்கு நடனமாடிக்கொண்டு செல்ல வேண்டும். எங்கள் குழுவில் கன்னிமார் இல்லாததால் பேருக்கு துள்ளிவிட்டு வாவர் சாமி மசூதிக்குச் சென்றோம். கானகத்தில் ஐயப்பனுக்கு வாவர் என்ற முகமதியர் செய்த உதவிக்கு அய்யப்பன்மார் இன்றும் நன்றி செலுத்துகின்றனர். நாங்கள் மிளகு கொடுப்பது வழக்கம். நமக்கு விபூதி போன்று பொடியொன்று தருகிறார்கள்.அங்கிருந்து நடனமாடிக்கொண்டு ஒரு கி.மி தூரத்திலுள்ள தர்மசாஸ்தா ஆலயம் வரவேண்டும். அங்கு உடம்பிலுள்ள வர்ணங்களும் அசதியும் போக எருமேலி நதியில் குளித்துவிட்டு பம்பா நோக்கி பயணித்தோம். இங்கிருந்து கால்நடையாக பம்பா செல்பவர்கள் பெருவழிப்பாதை எனப்படும் 40 கி.மீ மலைப்பாதையில் செல்வர். ஆனால் நாங்கள் வண்டியில் மலைப்பாதையில் சென்று பம்பைநதிக்கரையை மாலை ஐந்து மணிக்கு அடைந்தோம்.

பம்பைக் கரையில் நாங்கள் குளித்து வந்து இளைப்பாறும் சமயம் உங்களுக்கெல்லாம் break விடலாமா ?