சபரி யாத்திரை

கார்த்திகை பிறந்ததும் கானகத்து அரசனை தரிசிக்க கருப்பு வேட்டி கட்டுவது கடந்த பத்து வருடமாக நிகழ்கிறது. சிக்கிக்கொண்ட வேகமான வாழ்க்கைக்கு ஏற்றவாறு கார்த்திகை இரண்டாம் வாரமே ஒரு நான்குநாள் விடுப்பில் அவசரமாக பயணிப்பதே வழக்கமாகி விட்டது. இங்குள்ள நெருல் அய்யப்பன் கோவிலில் செல்வதற்கு உறுதி எடுத்துக் கொண்டு, மாலை அணிந்து பயணத்திற்கு தயாரானேன்.

நவ.19 அன்று அலுவலகப் பணி முடிந்து இரவு டெக்கானில் கோவை சென்று மறுநாள் பாலக்காடு அருகில் எலாபுள்ளி என்ற ஊரில் மற்ற குழுவினருடன் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. நான் கேரளாவில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட நட்பும் வழக்கமும் தொடர்கிறது.
டெக்கானின் பெருமைக்கேற்ப மும்பையிலிருந்து தாமதமாக கிளம்பி கோவை அடைந்த போது இரவு ஒரு மணி. வாடகைக்கார் கிடைக்காமல் சிரமப்பட்டு வீட்டிற்கு வந்தால், தம்பி கேரளா செல்லும் சாலைகள் முல்லைப் பெரியார் பிரச்சினைக்காக அடைக்கப்பட்டிருந்ததாகவும் கலைஞரின் வேண்டுகோளால் மாலை அளவில் திறக்கப்பட்டு பயங்கர traffic jam ஏற்பட்டிருப்பதாகவும் பயமுறுத்தினார். 'கொண்டு சென்று தரிசனம் காட்டித் தருவாய் ஐயனே' என்று வேண்டிக்கொண்டு விடிகாலையில் ஈச்சநாரியில் கணபதியை தரிசித்து பாலக்காடு கிளம்பினோம். எப்போதையும் விட சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும் பூசை ஆரம்பிக்க சரியான நேரத்தில் 'எத்தினோம்'.

அய்யப்ப பூசை செய்து ஒவ்வொருவராக இருமுடி , குருசாமி துணையுடன், கட்டிக்கொண்டோம். ஒருமுடியில் ஐயனுக்கு நெய் அபிடேகம் செய்ய தேங்காயில் துளையிட்டு நெய் நிரப்பி மற்ற பூசை திரவியங்களை நிரப்பிக் கொண்டோம். மற்றொன்றில் நமக்கு வழிப்பயணத்திற்கு உண்டான அரிசியும் பிற பொருட்களும். வழியில் உணவகங்களில் சாப்பிடும் இந்தக் காலங்களில் இது ஒரு குறியீடே. எல்லோருக்கும் கட்டியபின் மதிய உணவு உண்டு பயணம் ஆரம்பமாயிற்று. முதலில் குருவாயூர். மாலை ஆறு மணிக்கு கிடைத்த நல்ல தரிசனம் உற்சாகத்தைக் கொடுத்தது. முன்பெல்லாம் கோவிலுக்குள்ளே இருந்த வரிசை, இந்த வருடம் வெளியில் வந்துவிட்டது. அதனால் நேரே தரிசனம் தான்.காலையில் குழந்தையாகவும் மதியம் குமரனாகவும் வேடமணிந்தவன் நாங்கள் காணும்போது விருத்த வேடத்தில் இருந்தான். அங்கிருந்து NH17 இல் திருப்பரையார் என்ற இடத்தில் இராமரை தரிசித்து இரவு எர்ணாகுளம் வந்து தங்கினோம்.

ஞாயிறு அதிகாலை எர்ணாகுளத்தப்பனை கண்டுகொண்டு, அங்கிருந்த ஆறுமுகனையும் இராகவேந்திர மடத்து அனுமனையும் தரிசித்துக் கொண்டு சோட்டானிக்கரை அடைந்தோம். அங்கு அன்று ஏதோ திருவிழாவாகையால் நல்லக் கூட்டம். அடுத்தடுத்து செல்லவேண்டியிருந்ததால் பகவதியை கீழ்காவில் தரிசித்துவிட்டு கிளம்பினோம். சோட்டானிக்கரை, கொடுங்கல்லூர் , மூகாம்பிகை ஆகிய மூன்று தேவியரும் ஒரே சக்தியின் வெளிப்பாடாக கருதுகின்றனர். மனநிலை குன்றிய மகளிர் இங்கு தலைவிரிகோலமாக அரற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். திறந்த மனதும் பரந்த சிந்தனையும் வளர்ந்தும் இந்தகாட்சிகள் இன்னும் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இங்கு குங்குமத் தண்ணீரை குருதி எனக் கொடுக்கிறார்கள்.

அங்கிருந்து உதயணாபுரம் சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம். அடுத்து வைக்கம், கடுத்துருத்தி, எட்டுமானூர் சிவன்கோவில்களை தரிசித்தோம். இந்த மூன்று கோவில்களும் ஒரே நாளில் தரிசிப்பது விசேடமாம். தடுக்கி விழுந்தால் பாதிரியார் மீதுதான் விழவேண்டும் என்று கிருத்துவர்கள் அதிகம் வாழும் செழுமையான பாலையில் மதிய உணவு அருந்தி பயணத்தைத் தொடங்கினோம். அங்கிருந்த கடப்பாட்டூர் என்ற புதிய சிவன்கோவிலையும் கண்டு வந்தோம். இது ஒரு SNDP கோவில். அந்த அரசியல் தமிழ்மண வம்புக்கு நல்ல அவல்.

எருமேலி வரும்போது மதியம் இரண்டுமணியாகிவிட்டது. பேட்டை சாஸ்தா கோவிலிருந்து கன்னிசாமிமார் வர்ணம் பூசிக்கொண்டு 'பேட்டதுள்ளல்' ஆரம்பிப்பார்கள். மத்தள இசைக்கு நடனமாடிக்கொண்டு செல்ல வேண்டும். எங்கள் குழுவில் கன்னிமார் இல்லாததால் பேருக்கு துள்ளிவிட்டு வாவர் சாமி மசூதிக்குச் சென்றோம். கானகத்தில் ஐயப்பனுக்கு வாவர் என்ற முகமதியர் செய்த உதவிக்கு அய்யப்பன்மார் இன்றும் நன்றி செலுத்துகின்றனர். நாங்கள் மிளகு கொடுப்பது வழக்கம். நமக்கு விபூதி போன்று பொடியொன்று தருகிறார்கள்.அங்கிருந்து நடனமாடிக்கொண்டு ஒரு கி.மி தூரத்திலுள்ள தர்மசாஸ்தா ஆலயம் வரவேண்டும். அங்கு உடம்பிலுள்ள வர்ணங்களும் அசதியும் போக எருமேலி நதியில் குளித்துவிட்டு பம்பா நோக்கி பயணித்தோம். இங்கிருந்து கால்நடையாக பம்பா செல்பவர்கள் பெருவழிப்பாதை எனப்படும் 40 கி.மீ மலைப்பாதையில் செல்வர். ஆனால் நாங்கள் வண்டியில் மலைப்பாதையில் சென்று பம்பைநதிக்கரையை மாலை ஐந்து மணிக்கு அடைந்தோம்.

பம்பைக் கரையில் நாங்கள் குளித்து வந்து இளைப்பாறும் சமயம் உங்களுக்கெல்லாம் break விடலாமா ?

5 மறுமொழிகள்:

Kannabiran, Ravi Shankar (KRS) கூறுகிறார்

பேட்டைத் துள்ளல்!
அப்படியே துள்ளீக் கொண்டே, கிடுகிடு என்று அத்தனை தலங்களையும் தரிசிக்க வைத்து விட்டீர்கள்!

அதுவும் சன்னிதானத்தின் மேல் அயனின் படமும், குருவாயூர் தந்தங்களோடு கூடிய வாயிலும் மிக அருமை!

நன்றி மணியன் சார்!

VSK கூறுகிறார்

நினைவுகளைத் தூண்டிவிடும் வளமான பதிவு!

பெருவழிப்பாதயில் இப்போது செல்ல முடியாதே!

மண்டலபூஜைக்குப் பின் அல்லவோ திறப்பார்கள், ஜனவரி 1-ம் தேதி வாக்கில்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

குமரன் (Kumaran) கூறுகிறார்

மணியன் ஐயா. பம்பா நதிக்கரை வாசனைத் தரிசிக்க எங்களையும் அழைத்துச் செல்வதற்கு மிக்க நன்றி.

கால்கரி சிவா கூறுகிறார்

சாமி சரணம்..காத்திருக்கிறோம் உங்கள் அடுத்தப் பதிவிற்கு.

காத்திருக்கிறேன் சுவாமியின் தரிசனம் காண

மணியன் கூறுகிறார்

KRS, SK, குமரன், சிவா: வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

KRS: கொஞ்சம் வேகமாகப் போய் விட்டதோ ? எண்ண ஓட்டத்தை தடுத்து விரிவாக எழுதும் பொறுமை இல்லை :(

SK: பெருவழிப்பாதை எப்போதும் திறந்திருக்கும். மாத ஆரம்பங்களில் கூட சிலர் குழுவாக செல்கின்றனர். நீங்கள் சொல்வதுபோல் ஜனவரியில் அதிக குழுக்கள் செல்வதால் அய்யப்ப சேவா சங்கம் முதலியன தகுந்த வசதிகள் செய்து கொடுக்கின்றனர். மற்றபடி இயற்கையோடு இயைந்து காட்டுமிருகங்களை சமாளிப்பதானால் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் :)