மழை வருது, பயமா இருக்கு

மும்பை: நான்காவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மும்பையின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறது. சென்ற ஜுலை 27ம் தேதி பிரளயத்தை நினைவுபடுத்தும் இப்பெருமழை மக்களை தங்கள் இல்லங்களில் சிறை வைத்துள்ளது. பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. எங்கள் அலுவலகங்கள் மாலை மூன்றுமணிக்கே மூடப்பட்டு விட்டன. நகரின் உயிர்நாடியான புறநகர் இரயில் போக்குவரத்து தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் காலை 10:45 முதல் நிறுத்தப் பட்டுள்ளது. மேற்கு லைன் மட்டும் மெதுவாக இயங்குகிறது. நாற்பது நிமிட பயணங்கள் மூன்று மணிநேரம் எடுக்கின்றன. அகமதாபாத் போகும் மேற்கத்திய விரைவுப் பாதை தடைபட்டுள்ளது. கார்,மிலன், அந்தேரி சப்வேக்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.மாஹிம், பாந்த்ரா,தாதர் மற்றும் தஹிசர் பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.(படம் நன்றி: DNA Mumbai)

விமானதளத்தின் ஓடுசாலைகளில் நீர்த்தேக்கம் இருப்பதால் விமான சேவைகள் தாமதமாகின்றன. ஓரிரு சேவைகள் முடக்கப் பட்டாலும் விமானங்களின் வருகையும் புறப்பாடும் பலமணிநேர தாமதமானாலும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரிரு சேவைகள் மும்பையிலிருந்து மற்ற நகரங்களுக்கு divert செய்யப் பட்டுள்ளன. மின்வினியோகிக்கும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் நீர்மட்டம் அதிகரிக்கும் இடங்களில் மின்வெட்டும் அமலாக்குகின்றனர். சென்றவருட அனுபவத்தில் அத்தகைய ட்ரான்ஸ்பார்மர்கள் உயர்த்த பட்டிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக செல்பேசி நிறுவனங்களின் BTS நிலையங்களில் பாட்டரி திறன் பற்றாமல் அவை செயலிழக்கத் தொடங்குகின்றன.

மழைநீர் தேக்கத்தால் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க மும்பை காவல் ஆணையர் மக்களை அத்தியாவசிய தேவைகளன்றி வெளியில் வாகனங்களை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற நகரங்களைப் போல புறசுற்றுச் சாலைகளோ மாற்று வழிகளோ இல்லாதநிலையில், இந்த தீவுநகரில் இருக்கும் ஓரிரண்டு சாலைகளும் அடைபட்டால் வெள்ளநிவாரணத்திற்கு உதவி விரைவது கூட தடை படும் என்பதால் சென்ற வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம் இது.

இன்னும் 76 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை அறிக்கை கூறுகிறது.

4 மறுமொழிகள்:

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

மணியன்,

லைஃப் ஜாக்கெட்லாம் வச்சிருக்கீங்களா? நீச்சல் தெரியும்தானே..

சரி.. நீங்க எந்த ஏரியாவுல இருக்கீங்க?

ramachandranusha(உஷா) கூறுகிறார்

Manian.
Are you o.k?
-usha

மணியன் கூறுகிறார்

ஜோசப் சார், மழை விட்டு இப்போ வெடியில்லை பயமுறுத்துது.
நானிருப்பது நெருல் பகுதியில். இங்கு மழை பாதிப்பும் குறைவு. நேற்றைய அசம்பாவிதத்திலும் எங்கள் இரயில் தொடர்பு பாதிக்கப் படவில்லை. ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மணியன் கூறுகிறார்

உஷா, நலம்தான். இன்று அலுவலகமும் வந்தாகிவிட்டது.Hats off to Mumbai spirit !
உங்கள் ஆதரவுக்கு நன்றி. எனது வீட்டு கணினி படுத்துவிட்டதால் உடனடியாக எதுவும் பதியமுடியவில்லை.