மும்பை வாழ்க!

அலுவலகப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வீட்டின் பணிகளை எதிர்நோக்கி விரையும் செக்ரடரிகள்; பச்சிளம்பாலகனின் பிறந்தநாளைக் கொண்டாட மதியஉணவு இடைவேளையில் வாங்கிய பொம்மையுடன் மகிழ்ச்சியான இரவை எதிர்நோக்கும் குமாஸ்தாக்கள்; கல்லூரியின் தேர்வுப்பட்டியலில் பெயரைக் கண்ட மகிழ்ச்சியை பகிர விரையும் மாணவர்கள்; நாளும் சிறுசிறு பொருட்களை விற்று வயிறு வளர்க்கும் சிறார்கள் .. நேற்று மாலை 6:24லிருந்து 6:35க்குள் சிதறியது அவர்கள் உடல்களா, இல்லை கனவுகளா ? பெனாத்தலார் கேட்கிறார் இதுதான் வீரமா?

இல்லை, இன்று பின்னலைப் பின்னால் இழுத்து பக்கத்தில் இருப்பவனை அறையச் செய்யும் சூழ்ச்சியை இனம் கண்ட முகம் இல்லா நடுத்தட்டு மக்களின் உறுதியான எதிர்கொள்ளல் அன்றோ வீரம் ?சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் ? பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்!!

நேற்று வன்முறையாளர்களின் வெறியாட்டதிற்கு பலியான அப்பாவி மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களின் உயிர்தியாகத்திற்கும் அடிபடவர்களின் துயரத்திற்கும் நாம் என்றும் தலைவணங்குகின்றோம். ஆனால் இது ஒற்றுமைக்கான நேரம், சகோதர சண்டைக்கல்ல. அரசு இனியாவது தன் கடமையை செவ்வனே செய்யுமா என மக்கள் கவனித்து வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தக்க தண்டனை கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அரசு செலுத்தும் அஞ்சலி; ஈடுபணம் கொடுப்பதோடல்ல.

மழை வருது, பயமா இருக்கு

மும்பை: நான்காவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மும்பையின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறது. சென்ற ஜுலை 27ம் தேதி பிரளயத்தை நினைவுபடுத்தும் இப்பெருமழை மக்களை தங்கள் இல்லங்களில் சிறை வைத்துள்ளது. பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. எங்கள் அலுவலகங்கள் மாலை மூன்றுமணிக்கே மூடப்பட்டு விட்டன. நகரின் உயிர்நாடியான புறநகர் இரயில் போக்குவரத்து தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் காலை 10:45 முதல் நிறுத்தப் பட்டுள்ளது. மேற்கு லைன் மட்டும் மெதுவாக இயங்குகிறது. நாற்பது நிமிட பயணங்கள் மூன்று மணிநேரம் எடுக்கின்றன. அகமதாபாத் போகும் மேற்கத்திய விரைவுப் பாதை தடைபட்டுள்ளது. கார்,மிலன், அந்தேரி சப்வேக்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.மாஹிம், பாந்த்ரா,தாதர் மற்றும் தஹிசர் பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.(படம் நன்றி: DNA Mumbai)

விமானதளத்தின் ஓடுசாலைகளில் நீர்த்தேக்கம் இருப்பதால் விமான சேவைகள் தாமதமாகின்றன. ஓரிரு சேவைகள் முடக்கப் பட்டாலும் விமானங்களின் வருகையும் புறப்பாடும் பலமணிநேர தாமதமானாலும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரிரு சேவைகள் மும்பையிலிருந்து மற்ற நகரங்களுக்கு divert செய்யப் பட்டுள்ளன. மின்வினியோகிக்கும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் நீர்மட்டம் அதிகரிக்கும் இடங்களில் மின்வெட்டும் அமலாக்குகின்றனர். சென்றவருட அனுபவத்தில் அத்தகைய ட்ரான்ஸ்பார்மர்கள் உயர்த்த பட்டிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக செல்பேசி நிறுவனங்களின் BTS நிலையங்களில் பாட்டரி திறன் பற்றாமல் அவை செயலிழக்கத் தொடங்குகின்றன.

மழைநீர் தேக்கத்தால் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க மும்பை காவல் ஆணையர் மக்களை அத்தியாவசிய தேவைகளன்றி வெளியில் வாகனங்களை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற நகரங்களைப் போல புறசுற்றுச் சாலைகளோ மாற்று வழிகளோ இல்லாதநிலையில், இந்த தீவுநகரில் இருக்கும் ஓரிரண்டு சாலைகளும் அடைபட்டால் வெள்ளநிவாரணத்திற்கு உதவி விரைவது கூட தடை படும் என்பதால் சென்ற வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம் இது.

இன்னும் 76 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை அறிக்கை கூறுகிறது.

ஒளியும் ஒலியும்!


இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பு மசோதா 2006 ஊடகத்துறையில் ஒரே நிறுவனம் பலவகை ஊடகதளங்களில் தனியாதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையாகவரையப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பம், வான்வெளி, உள்துறை, வணிகம் மற்றும் சட்ட அமைச்சகங்களின் பின்னூட்டங்களையும் திட்டக் கமிஷனின் கருத்துக்களையும் எதிர்பார்த்திருக்கிறது. மழைக்கால மக்களவை கூடத் தொடரில் விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது. ஒரு ஊடக பதிப்பாளர் மற்றொரு ஊடகத்தில் 20% க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. உதாரணமாக ஒரே நிறுவனம் டி.வி, FM மற்றும் DTH சேவைகளில் தனியாதிக்கம் செய்ய முடியாது. 1995இலேயே உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்த இந்த பல்வகை கருத்துக்களுக்கான வழிமுறை இந்த மசோதா மூலம் கொண்டு வரப்பட விருக்கிறது. ஆனால் புதிய தொழிற்நுட்பங்களான செல்பேசி வழி டிவி, இணையவழி தொலைக்காட்சி (IPTV) முதலியன இதன் செயல்பாட்டில் சேர்த்துக் கொள்ளபடவில்லை.

இந்த மசோதாவில் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) போன்று ஒளிபரப்பு கட்டுப்பாட்டு ஆணையம் (Broadcast Regulaory Authority) அமைக்கப் படும். இதனால் ஒளிபரப்புத்துறை சம்பந்தமாக TRAI வெளியிடும் விதிகளை இனி புதிய ஒளிபரப்பு ஆணையம் கட்டுப்படுத்தும். தவிர கேபிள் ஆபரேடர்கள் மற்றும் MSOக்களுக்கான உரிமங்களும் இவ்வாணையம் கட்டுப்படுத்தும். அன்னிய தொலைகாட்சி ஒளிபரப்புகள் 15% ஆவது உள்ளூர் தயாரிப்புகளையும் எல்லா ஒளிபரப்புகளும் குறைந்தது 10% பொதுநல நோக்கமுடையவையாகவும் இருக்க வேண்டும்.

ஒளிபரப்புகளின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் சில clauseகளுக்கு ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உள்ளடக்க விதிகளுக்குப் புறம்பாக எந்த ஊடகமாவது ஒளிபரப்பினால் மாவட்ட கலெக்டர்/காவல் ஆணையர் நிலை அதிகாரிகள் ஊடக ஒளிபரப்பு இயந்திரங்களை முடக்கவும் அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதால் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்த எதிர்ப்பின் ஆதாரம். இன்னும் அழுத்தமாக 37வது ஷரத்து இத்தகைய நடவடிக்கையில் எந்த சிவில் நீதிமன்றமும் தலையிட முடியாது என்கிறது.

இந்த மசோதா அரசு ஆணையானால் சன் தொலைக்காட்சியை எவ்வாறு பாதிக்கும் எனத் தெரியவில்லை. சமீபத்திய பங்கு விற்பனை இந்த 20% முதலீடு தடைகளை மேற்கொள்ளவே எடுக்கப் பட்டிருக்குமோ ?