உலக தொலைதொடர்புநாள் - மே 17

மே 17 - தொலைதொடர்பு பொறியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாகும். இன்றைய தினம் பன்னாட்டு தொலைதொடர்பு சங்கம் ( International Telecom Union - ITU) அமைக்கப் பட உறுப்பினர் நாடுகள் கையொப்பமிட்ட நாளாகும். இதனை தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாடுகிறோம்.

இந்த நாளையொட்டி ITUவின் தலைமை செயலர் ஹமாடுன் டூர் வெளியிட்டுள்ள உரையில் இந்த வருடதினத்தை இளைஞர்களுக்கானதாக பரிந்துரைக்கிறார். வளர்ந்துவரும் தகவல்நுட்ப சமூகத்தில் பெரும்பங்கு வகிப்பதும் அவர்கள்தான், அதிக பயன்பெறுவோரும் அவர்கள்தான். ஆதலினால் உலகின் எல்லா இளைஞர்களுக்கும் சரிசமனாக இந்த வாய்ப்பு கிட்டவைப்பதே தொலைதொடர்பு மற்றும் தகவல்நுட்ப அமைப்புக்களின் தலையாய கடமையாகும். ஒவ்வொருநாட்டின் சிறுவர்களும், முக்கியமாக வசதியற்றவர்களும் விளிம்புநிலையில் இருப்பவர்களும் புதிய தகவல் சமூகத்தில் பங்கு பெறவைப்பது நமது கடமையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைசெயலர் பான் கி மூனின் செய்தி இது
இந்நாளை ஒட்டி தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியவர்களை விருதுவழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இந்த வருடம் மூன்று பேர்கள் விருது பெறுகிறார்கள்்:
1. டொமினிகன் குடியரசின் அதிபரின் மனைவி மார்கரிட்டா செடெனொ டெ பெர்னாண்டஸ்: சட்ட நிபுணரான இவர் டிஜிட்டல் சொலிடாரிடி பண்ட் (DSF) என்ற அமைப்பில் பங்கு கொண்டு தமது நாட்டின் தகவல்நுட்ப வேற்றுமையைக் களைந்தமைக்காக இந்த விருது வழங்கப் படுகிறது. மிக வறிய இடங்களில் 135 குடியமைப்பு நுட்ப மையங்களை ( Community Technology Centers) நிறுவி ஒவ்வொரு மையமும் அதனை சார்ந்த மக்களுக்கு கணினி அறிவை புகட்டி அவர்களது சமூக,நாகரீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் பெண்டிரும் சிறுமிகளும் புது நுட்பங்களை கற்று சமூகத்தில் ஒன்றிடவும் பாலிய சமநிலை எய்தவும் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.


2. மாஸ்கோ நுண்ணலை ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர் மார்க் கிரிவோசீவ்: தொலைக்காட்சி சேவைகளில் நுட்ப மேம்பாட்டிற்காக இவருக்கு விருது வழங்கப் படுகிறது.தொலைக்காட்சி நுட்பமுறைகளின் ஒருங்கிணைப்பிற்கும் புதிய நெறிமுறைகள் உருவாவதற்கும் ITU குழுமங்களில் பங்காற்றி HDTV, digital broadcast standards ஆகியவற்றின் மூலம் கணினி வேற்றுமையை (Digital Divide) நீக்கி வாய்ப்புக்களை உருவாக்க உறுதுணை புரிந்தார்.

3.மொசில்லா கார்ப்பொரேஷன்: உலகின் இணைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்குவித்து பங்காற்றியமைக்காக மொசில்லா நிறுவனத்தின் தலைவரும் CEOவுமான மிட்ச்செல் பேகர் மூலமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப் படுகிறது.மொசில்லா என்பது வழமையான மென்பொருள் நிறுவனம் அல்ல; அது ஒரு உலகளாவிய திறமூல குழுமம்.இதன் மென்பொருட்கள் திறமூலமாகவும் விலையின்றி கிடைப்பதானாலும் தனக்கென வணிகமுத்திரை (trademark) வைத்துக் கொண்டு தன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. முக்கிய மென்பொருட்கள்: மொசில்லா, பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட். கணினி வேற்றுமையை அகற்ற மொசில்லாவின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளைஞர்களை இணைத்திட புதிய நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துச் செல்வோம்.

4 மறுமொழிகள்:

மணியன் கூறுகிறார்

பி.க சோதனை!

Voice on Wings கூறுகிறார்

வணக்கம் மணியன். இன்றுதான் இந்த இடுகையைப் பார்த்தேன். தகுதியானவர்களுக்கே விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. (Mozilla குறித்து கூடுதல் மகிழ்ச்சி :))

Digital divide என்பதற்கு 'கணிமைக் கோடு' (வறுமைக் கோட்டைப் போல் :)) என்ற சொற்றொடரை ஒரு இடுகையில் பயன்படுத்தியிருந்தேன். சரிதானா என்பதை வல்லுனர்கள்தான் கூற வேண்டும்.

மணியன் கூறுகிறார்

வணக்கம் VoW,
நாம் அனைவரும் பரவலாக பயன்படுத்தும் துறையில் வழங்கப் படும் விருதுகளை பதிவர்களிடையே எடுத்துச் செல்வதே இந்த இடுகையின் நோக்கம். அந்த வகையில் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியைத் தருகிறது.

Digital Divideற்கு மொழிபெயர்ப்பிற்கு தடுமாறத்தான் செய்தேன். கணிமைக்கோடு என்பதை விட கணிமை ஏற்றத்தாழ்வு என்பது அந்த divisionஐ வெளிக்கொணருமோ என நினைக்கிறேன்.முதன்முறை அதனை எதிர்கொள்வோரும் அறிய முடியும். எல்லோரும் கணிமைக் கோட்டை பாவிக்க ஆரம்பித்தால் ஒருவேளை அதன் பொருள் விளங்கிக் கொள்ள ஏதுவாகும்.
தங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி.

Voice on Wings கூறுகிறார்

'கணிமை ஏற்றத்தாழ்வு' மேலும் பொருத்தமாக உள்ளது.