வலைப்பதிவு திரட்டியாளர் கைது!!

தமிழ்மணத்தை உருவாக்குகின்ற சமயத்தில் திரு. காசி அவர்கள் தமிழ்மணம் ஒரு வலைப்பதிவுகளின் திரட்டி என்றும் இதில் இடம் பெறுகின்ற வலைப்பதிவுகளின் உள்ளடக்கத்திற்கு தாம் பொறுப்பில்லை என்றும் தெளிவாக கூறிவந்ததுடன் அதற்கான சரியான டிஸ்கியையும் முகப்பு பக்கத்தில் இணைத்தார். அவரது பயத்தை உறுதி செய்யும் முகமாக Blogme.gr என்ற கிரேக்க வலைதிரட்டியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனைகள் நடத்தி கணினி வந்தட்டும் கைப்பற்றப் பட்டுள்ளது. ஒரு கிரேக்க பிரபலத்தைப் பற்றிய அங்கத வலைப்பதிவை தாங்கி வந்ததிற்காக இந்த கைது நடந்தேறியிருக்கிறது. இதனால் கொந்தளித்துள்ள கிரேக்க வலைப்பதிவாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கணக்கான பதிவுகளை அனைத்து மொழிகளிலும் எழுதி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இணைய கட்டுப்பாட்டுக் கழகம் (Internet Governance Forum) என்ற அமைப்பின் கீழ் இணைய நல விரும்பிகள் ஏதென்ஸ் நகரில் கூடி இந்த வாரம் வலையுலகில் திறந்த தன்மையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பது பற்றி விவாதிக்க இருக்கும் சமயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கிரீஸில் இதற்கு முன்னரே வேண்டாதமின்னஞ்சல்(spam) பரப்பியதற்காக ஒரு ஸ்வீட் நிரலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர நான்கு வருடங்கள் முன் மின்னணு விளையாட்டுக்களை தடை செய்தது உலக கவனத்தை ஈர்த்து, பின் அததடையை விலக்கியது.உலக செய்தியாளர் சுதந்திரம் இண்டெக்ஸில் (Worldwide Press Freedom Index) 32ஆவது (168இல்)இடம் வகிக்கிறது. இந்தியா 105ஆவது இடத்தில் இருக்கிறது. வலைப்பதிவர்களுக்கு ஆட்டோ வருவது இருக்கட்டும், வலை திரட்டி பதிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

இது பற்றிய slashdot சுட்டி


6 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

பயமாகத் தான் இருக்கிறது.

நாகை சிவா கூறுகிறார்

ஆஹா, எல்லாருமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல் இருக்கே...

ramachandranusha(உஷா) கூறுகிறார்

பயமுறுத்தாதீங்க :-)

Kannabiran, Ravi Shankar (KRS) கூறுகிறார்

அடடா, பதிவு போட்டது போதாது என்று, படம் வேறு போட்டு பயமுறுத்துறீங்களே, மணியன் சார்!

இன்று வலை திரட்டி, நாளை என்னவோ? பின்னூட்டங்களா? :-)))))

துளசி கோபால் கூறுகிறார்

என்னங்க இப்படி ஒரு குண்டு(?) தூக்கிப்போட்டுருக்கீங்க.

மணியன் கூறுகிறார்

குமரன், நாகைசிவா,உஷா,கண்ணபிரான், துளசி : அனைவருக்கும் நன்றி.

கிரேக்கர்களுக்கு இணையான பழமையான நாகரீகம் நம்முடையதுதானே !ஆதலின் சற்றே கவனம் பிள்ளாய் என்றே இந்தப் பதிவு. வலைப்பதிவரை கைது செய்தாலும் காரணம் இருக்கிறது, RSS aggregator உரிமையாளரை கைது செய்வது என்ன நியாயம் எனத் தெரியவில்லை :(