குழந்தையும் தெய்வமும் !


நேபாளத்தின் உச்சநீதிமன்றம் அங்கு காலம் காலமாக பழக்கத்தில் இருக்கும் குமாரி பூஜா மரபை சிறுமியரின் உரிமைகளை மீறுகிறதா என நேபாள அரசை ஆராய்ந்து அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறது.

நேபாளத்தில் 3-5 வயது பௌத்த சிறுமியை மதசடங்குகள் மூலம் "வாழும் தெய்வமா'க தேர்ந்தெடுத்து இந்துக்களும் பௌத்தர்களும் டலேஜு (Taleju) என்ற சக்தி வடிவாக 'குமாரி' என்று வழிபடுகிறார்கள்.அந்த சிறுமி தனது குடும்பத்தை விட்டு விலகி குமாரி கர் எனப்படும் பதினாறாம் நூற்றாண்டு மாளிகையில் வசிக்க வேண்டும். தசரா சமயத்தில் மன்னர் முதல் அனைவரும் வணங்கி அளிக்கும் பூசையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரை வணங்கினால் பணமும் அதிகாரமும் நல்வாழ்வும் கிடைக்குமென்று மக்கள் நம்புகிறார்கள். வயது வந்தபிறகு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொள்ளலாம். பள்ளி செல்ல முடியாவிடினும் நல்ல கல்வி புகட்டப் படுவதாகவும் சிறுமியை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் மதவாதிகள் சொல்கிறார்கள்.

இருப்பினும் ஒரு சின்னஞ்சிறு சிறுமியை தன் வயது வாழ்வை வாழவிடாமல், சக தோழர்களுடன் விளையாட விடாமல் மதத்தின் பெயரால் இது என்ன கொடுமை ? குழந்தை குழந்தையாக இருந்தாலே தெய்வம், அவர்களை தெய்வமாக்கி தெய்வீகத்தைக் குலைக்காதீர்கள் !

12 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

மணியன் சார்,

கொடுமையான விசயம்.. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

கொடுமைதான் மணியன். இதெல்லாம் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்.. நம்மூரில் அம்மன் சாமி என்று சின்னப் பெண்களைச் சொல்வது போல் இருக்கிறது!

குமரன் (Kumaran) கூறுகிறார்

நீங்கள் சொல்வது உண்மை தான் மணியன் ஐயா.

G.Ragavan கூறுகிறார்

இந்தப் பழக்கம் நிச்சயம் மாற வேண்டும். தான் அறியாதவொன்றைக் குழந்தை மேல் திணிப்பது தவறே. பால்ய விவாகம் மட்டுமல்ல பால்ய துறவரங்களும் தவறே. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்டிப்பாகப் பொருந்தும். நல்ல கல்வி என்பதெல்லாம் இருக்கட்டும். குழந்தை குழந்தையாகப் பெற்றோருடன் இருக்கமுடியாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா. நிச்சயமாக இதில் பெருமை இல்லை.

மணியன் கூறுகிறார்

சிவபாலன், நேபாளத்தில் மக்களாட்சி மலர்ந்ததில் மாற்றங்கள் வரும் என நம்புவோம்.

மணியன் கூறுகிறார்

பொன்ஸ், நம்மூரில் கன்னிபூஜை என்று சுமங்கலி பூஜை போல நடத்துவார்கள். அது ஒருமணிநேர சங்கடம்தான். இது இளம்பருவம் முழுவதும் துறவிபோன்ற வாழ்க்கை என்பது கொடுமைதான். நிச்சயம் நிறுத்தப் பட வேண்டும்.

மணியன் கூறுகிறார்

வாங்க குமரன், இத்தகைய வேண்டாத 'தியாகங்கள்' பெருமைபடுத்தப் பட்டு உண்மையான ஆன்மீக சிந்தனைகள் திசை திருப்பப் படுகின்றன.உங்கள் கருத்திற்கு நன்றி.

மணியன் கூறுகிறார்

வாங்க ஜிரா, மதத்தின் பேரால் என்னவெல்லாம் நடக்கிறது, பாருங்கள் :(

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறுகிறார்

இங்கே இந்தக் கூத்தைப் பல தடவை தொலைக் காட்சியில் காட்டினார்கள்.இக் குழந்தைகள் பாவப்பட்ட ஜீவன்கள்; தலைலமா; சங்கராச்சாரி,பௌத்த துறவிகள் கூட இக்கொடுமைக்குள் ஆட்படுவதுடன், அப்பப்போ புண்ணிய பாரதத்தில் குட்டிச்சாமிமாரும் தோன்றி; குடும்பத்துக்கு உழைக்கிறார்கள். ராகவன் கூறியது போல் பாலியத் திருமணம் போல் பாலியத் துறவறமும் சட்டமூலம் தடுக்கப்பட வேண்டும். இதை யூஎன் ஒ போன்ற அமைப்பு சர்வதேசச் சட்டமாக்கிப் ;பெற்றோரை சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பதுடன், பக்த கோடிகள் எனும் வேலையற்ற பேராசை பிடித்தலையும் கூட்டத்தையும் உள்ளே தள்ள வேண்டும்.
நம் நாடுகளில் நடக்குமா??? அரசியல் வாதிகளே!!! சாமிமார் பின் அலைகிறார்களே!!!
இவை வேதனை மிக்கதே!!!!
யோகன் பாரிஸ்

மணியன் கூறுகிறார்

வாங்க யோகன், நீங்கள் சொல்வது மிகச் சரி. சிறுவரைத் தொழிலில் ஈடுபடுத்துவதை தடை செய்ததைப் போல இதற்கும் ஒரு தடை ஏற்படுத்த வேண்டும்.பல்லூடக வளர்ச்சி இத்தகைய கருத்துகளை முன்னெடுத்துச் செல்ல துணை புரியும் என நம்புவோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) கூறுகிறார்

//குழந்தை குழந்தையாக இருந்தாலே தெய்வம், அவர்களை தெய்வமாக்கி தெய்வீகத்தைக் குலைக்காதீர்கள் !//

100/100 உண்மை.
குழந்தைக் கண்ணனே, தெய்வமாக இராது, ஒடியாடி, களவாடி, உதைபட்டு, செய்யாத சேஷ்டைகளா? இப்படிச் சிம்மாசனம் போட்டு சிறைப்படுத்தவில்லையே!

சமயங்களில், எதை உறுதியாகப் பற்ற வேண்டுமோ அதை விடுத்து, திரிபுகளையே பற்றி அழியும் நிலை என்று தான் மாறுமோ?

ஜிரா,
பால்ய துறவறம் பற்றிக் குறிப்பிட்டதும் தான் நினைவுக்கு வருகிறது; சமயத்திலும், தர்மங்களிலும் பால்ய துறவறம் என்பதே கிடையாது. அன்னையிடம் சொல்லிவிட்டு, தானே விரும்பி துறவு கொள்ளத் துணிந்த ஆதி சங்கரர் கூட, விதிக்கப்பட்ட வயது வரும் வரை காத்துக் கிடக்க வேண்டி இருந்தது!

மக்களாட்சி, இதற்கெல்லாம் பதில் சொல்லுமா நேபாளத்தில் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

மணியன் கூறுகிறார்

வாங்க KRS, அழகான தமிழில் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. மலையாள படமொன்றில் ஒரு மடத்தலைவர் தனது அடுத்த வாரிசாக ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து அவனை சன்னியாசத்திற்கு தயாராக்க அவன் தாயின் உணர்ச்சிகளையும் அந்தக் குழந்தையின் எதிர்வினைகளையும் அருமையாக மத உணர்வுகளை வருத்தாது சித்தரித்திருப்பார்கள். பெயர் நினைவில் இல்லை, துளசி டீச்சர்தான் உதவிக்கு வர வேண்டும்.