கலைகளும் காட்சிகளும்!

கொல்கொதாவின் நுண்கலை ஆர்வம் மிகவும் உயர்தரமானது. திரைப்படத்துறையில் உண்மைநிலைக்கு தனித்துவம் வழங்கிய சத்யஜித் ரேயின் வழியில் நிறைய வணிகநோக்கில்லாத பரீஷார்த்தபடங்கள் எடுக்கப் பட்டன.
அவற்றை வெளியிட அரசே நந்தன் என்னும் திரையரங்கை நடத்தி வந்தனர். (நமது கலைவாணர் அரங்கம் போல).மிகச் சிறந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன்.பாலிவுட்டின் சிறந்த இசையமைப்பாளர்கள் வங்காளிகளே. இரவிந்திரநாத் தாகூர், பங்கிம் சரத் சடர்ஜி போன்ற அறிஞர்கள் இலக்கிய ஆர்வத்திற்கு ஊன்றுகோலாயிருந்தனர். தாகூர் எழுதிய கீதங்கள் ரவிந்திரசொங்கீத் என வழங்கப் பட்டது( வங்காளிகள் 'வ'வை 'ப' வென்றும் 'அ'வை 'ஒ' என்றும் pronounce செய்வர் -- கல்கத்தா-> (க்+ஒ)ல்(க்+ஒ)த்தா). வங்காளத்தின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இப்பாடல்கள் வங்காளிகளின் உயிர்மூச்சு. நீங்கள் யாரேனும் வங்காளியுடன் நெருக்கமாக வேண்டுமென்றால் இரவீந்திர சங்கீத்தை பாராட்டி ஓரிரு வார்த்தை பேசினால் போதும். தினமும் தொலைக்காட்சியில் காலைத் தென்றலில் இது உண்டு. இதற்கு இணையான உணர்வூட்டும் இசை கிழக்கு வங்காளத்தின் நுஸரல் கீத் எனப்படும் காஃஜி (Kazi) நஸ்ரல் இஸ்லாம் அவர்களின் ஆக்கங்களாகும். அவரது பாடல்களில் இந்திய சுதந்திரம் தவிர தத்துவ,மத விதயங்கள் விரவி இருக்கும். இருவரின் இசையும் இரு வங்காளர்களும் இரசிப்பார்கள் என்றாலும் சற்றே மத விருப்புகளின் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தில் இரவீந்திர சங்கீத்தும் கிழக்கு வங்காளத்தில் நஸ்ரல் கீத்தும் விரும்பப் படும். நம்மிடம் நஸ்ரல் சங்கீத்தை பாராட்டி பேசும் கொல்கொத்தாகாரர்,கிழக்குகாரர் வந்தால் இரவீந்திர சங்கீதத்தின் பெருமைபேச மாறுவது தமாஷாக இருக்கும். அதை வைத்தே இருவரையும் நான் tease செய்வேன்.ஒன்று தெரியுமா உங்களுக்கு, இந்தியாவின் தேசிய கீதமான " ஜன கன மன"வும் பங்களாதேஷின் தேசிய கீதமான "அமார் சோனார் பங்களா" வும் தாகூரினுடையதே.இரண்டு நாடுகளின் தேசியகீதங்கள் ஒரே கவிஞரால் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கொல்கொத்தாவின் உணவு பற்றி எழுத இருந்தேன். அதை சென்ற இடுகையின் பின்னூட்டத்திலேயே இட்டுவிட்டேன். உடைகளைப் பொறுத்தவரை பெண்கள் சேலையையே அதிகம் விரும்புவர். பருத்தி சேலைகளை சோம்பல்படாமல் கஞ்சிபோட்டு அழகாக கட்டிக்கொள்வதில் அதிக விருப்பம். டாங்கைல் எனப்படும் சரிகை சேலைகளும் முர்ஷிதாபாத் சேலைகளும் கூட அழகாக இருக்கும். பாங்குரா என்னுமிடத்து களிமண் கலைபொம்மைகள் (முக்கியமாக குதிரைகள்) பிரபலம்.

கலைகளை இரசிக்கும் அவர்களுக்கு நமது தென்னிந்திய கலாசாரத்தையும் தென்னிந்தியர்களையும் மிகவும் பிடிக்கும். கர்நாடக இசையயும் பரதநாட்டியத்தையும் இரசிப்பார்கள். கரியாஹாட் அருகே டோவர்லேன் இசைவிழா மார்கழிமாதம் சிறப்பாக நடைபெறும். வடஇந்தியர்களின் ஆரவாரமிக்க நடத்தையை வெறுப்பர். இந்தி பேசினாலும் பிடிக்காது. எனக்கு இந்தி, பெங்காலி இரண்டுமே தெரியதாகையால் பெங்காலியை கற்றுக் கொண்டு அவர்களுடன் நெருக்கமானேன்.பொதுவுடைமை அரசாளும் நகரில் மின்வினியோகம் தனியார்துரையில் CESC வழங்கி வருகிறது. நானிருந்தசமயம் எட்டுலிருந்து பன்னிரெண்டு மணிநேர மின்வெட்டு இருந்தது. ஜோதிஆலோ, ஜோதி கலோ ( ஜோதிபாசு வந்தார், ஜோதி போயிற்று) என்பார்கள்.ஆனால் படிப்படியாக நிலைமை சரியாகி நாங்கள் கிளம்பும்போது மின்வெட்டே கிடையாது.அதேபோல போக்குவரத்து நெரிசல்களும் மெட்ரொ இரயில் வந்தபிறகு வெகுவாக குறைந்து விட்டது. சட்டஒழுங்கும் சீராகவே இருக்கிறது. இதனால்தான் பாம்ஃபிரன்ட் (left front)சர்கார் மீண்டும் வர முடிந்திருக்கிறது.

கொல்கொத்தா வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குவது துர்கா பூஜையாகும். ஆகஸ்ட்/செப்டெம்பெரில் விஸ்வகர்மா பூஜையில் தொடங்கி நவராத்திரி விழாவின்போது நாலைந்துநாட்கள் துர்கா பூஜை நடைபெறும். ஒவ்வொருவரும் ஒரு பரா எனப்படும் ஏரியாவை செர்ந்தவர்கள். அந்த பராவின் மண்டப நிகழ்ச்சிகளுக்கு சந்தா செலுத்தி எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும். பூஜாவின் போது காட்டப்படும் ஆரத்தியும் அதற்குண்டான மேளதாளமும் காணவேண்டியது.அந்த நாலுநாட்களில் ஒவ்வொரு மண்டபமாக சென்றுவருவதுதான் வேலை. விதவிதமான தீம்களில் அமைக்கப் பட்டிருக்கும். இடதுசாரிகள் கூட வியட்நாமில் அமெரிக்க ஆதிக்கத்தை மகிஷாசுரனாகவும் துர்கையை மக்கள்சக்தியாகவும் சித்தரித்திருப்பர்! அதை அடுத்து பௌர்ணமியில் இலக்குமி பூஜாவும் அடுத்த அமாவாசை (தீபாவளி) காளிபூஜாவும் என ஒன்று மாற்றி ஒன்று பூஜாக்கள்தான். மழைநின்று குளிரும் வராத சுகமான இரவுகளில் விழா கொண்டாடுவது இனிமையாக இருக்கும். நவம்பர்/ டிசம்பரில் இலேசான குளிர் வருவதற்கு காத்திருந்ததுபோல வண்ணமயமான கம்பளியாடைகள் வெளிவரும். அவற்றை அணிந்து சுற்ற வசதியாக பொயிமேளா (புத்தக கண்காட்சி) மைதானத்தில் அமைக்கப் படும். சமீப மேளாவை பத்ரி பதிந்திருந்தார்.நம்மூரைப் போல கைத்தறி கண்காட்சிகளும் கைவினை கண்காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரும்.குளிர்காலத்தின் முடிவை தெரிவிக்கும் ஹோலிப் பண்டிகையின் பின் சேல் சேல் என்று ராஷ்பிஹாரியும் காரியாஹாட்டும் களைகட்டத் தொடங்கும். ஏப்ரில் 14இல் புதுவருடம் வைகாசிமாதத்தில் (பைசாகி) அவர்களுக்குத் தொடங்கும். வெயில் பிளந்துகட்டும் மேமாதம் காலாபைசாகி என்னும் பயங்கர இடியுடன் கூடிய வேனில்மழை ஆரம்பிக்கும். ஜூனில் பருவமழை ஆரம்பித்தால் திரும்ப பூஜா வரை வீட்டிற்குள் அடைசல்தான்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்தால் மீண்டும் ஒரு ரீப்ளே கிடைக்காதா என்று தோன்றுகிறது. அதற்காக உங்களை இதற்கு மேல் அறுக்க முடியாதே!அங்கு கண்ட கால்பந்து போட்டிகள், ஈடன்கார்டனில் கிரிக்கெட் மாட்சுகள் என்று விட்டால் போய்கொண்டுதான் இருக்கும். அவற்றை பதிக்க ஒரு காலம் வரும். அப்போது பார்க்கலாம்.

10 மறுமொழிகள்:

துபாய் ராஜா கூறுகிறார்

///"பழைய நினைவுகளில் ஆழ்ந்தால் மீண்டும் ஒரு ரீப்ளே கிடைக்காதா என்று தோன்றுகிறது. அதற்காக உங்களை இதற்கு மேல் அறுக்க முடியாதே!அங்கு கண்ட கால்பந்து போட்டிகள், ஈடன்கார்டனில் கிரிக்கெட் மாட்சுகள் என்று விட்டால் போய்கொண்டுதான் இருக்கும். அவற்றை பதிக்க ஒரு காலம் வரும். அப்போது பார்க்கலாம்."///

எதிர்பார்க்கிறோம் எல்லாவற்றையும். பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

Sivabalan கூறுகிறார்

சார்,

உபயோகமான பதிவு..

நன்றி.

வெற்றி கூறுகிறார்

மணியன் அய்யா,
மிகவும் சுவாரசியமான நல்ல பதிவு.
நன்றி.

மணியன் கூறுகிறார்

வாங்க ராஜா, இதுதான் முதல் வருகை என நினைக்கிறேன். துரத்தும் நினைவுகளை பதியாமல் எங்கே விடப் போகிறேன் :) இருந்தாலும் ஒரே டோசில் வேண்டாமல்லவா ?

மணியன் கூறுகிறார்

உங்கள் தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி சிவபாலன். வலைப்பதிவு தொடர்பாக ஏதோ ஐயம் எழுப்பியிருந்தீர்களே, அது நிவர்த்தியானதா ? வேண்டுமானால் என் profileஇல் காணும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

மணியன் கூறுகிறார்

வெற்றி, நீங்களும் தொடர்ந்து கொடுத்துவரும் ஊக்கத்திற்கு நன்றி.

தருமி கூறுகிறார்

Delhi - Political centre
Mumbai - Business centre
kolkatta - Cultural centre
Chennai - Intellectual (!?) centre
என்பார்களாமே, அப்படியா?
அது என்னவோ, தமிழ் நாட்டுக்காரர்களுக்கும், பெங்காலிகளுக்கும் ஓர் 'உறவு' உண்டு என்றே நினைக்கிறேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க தருமி சார், நீங்கள் சொல்வதுதான் சரி. பெங்காலிகள் மிகவும் உணர்ச்சிவசப் படுபவர்கள். கலைஞர்களுக்கு அது ஒரு குணமாயிற்றே! நமது பழமையான கலாசாரம பற்றி அவர்களுக்கு மிகவும் மதிப்பு உண்டு. தமிழ்நாட்டிற்கு சுற்றுலா என்றால் மிகுந்த ஆர்வத்துடன் என்னிடம் பயணதிட்டத்தை முடிவு செய்ய வருவார்கள். அவர்களின் அரவிந்தர் மற்றும் விவேகானந்தர் கால்பதித்த பாண்டிசேரியும் கன்னியாகுமரியும நிச்சயம் இருக்க வேண்டும். ்

துளசி கோபால் கூறுகிறார்

//பழைய நினைவுகளில் ஆழ்ந்தால் மீண்டும் ஒரு ரீப்ளே கிடைக்காதா என்று தோன்றுகிறது. அதற்காக உங்களை இதற்கு மேல் அறுக்க முடியாதே!//

இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம். ரீப்ளேவை தொடரலாம்.

மணியன் கூறுகிறார்

நன்றிங்க துளசி. நீங்க சொன்னா அப்பீலே கிடையாது. செய்துடுவோம் :)