நான்மாடக்கூடலில் நான்!


மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரைக்கு நாங்கள் வந்தது 1965இல். எங்களுக்கு வீடு கிடைத்தது மதுரையின் புறநகர்பகுதியாக வளர்ந்து கொண்டிருந்த ஆரப்பாளயத்தில் வைகையாற்றின் கரையில் அமைந்த அமைதியான பகுதி. நீர் இல்லாத நதியில் நடுநடுவே இருந்த புற்பரப்புகளில் கிரிக்கெட் விளையாடுவோம். மேட்ச் என்றால் அரசரடி மைதானத்திலும் இரயிவே காலனிக்குள் இருக்கும் மைதானத்திலும் வைத்துக் கொள்வோம்.புதிய வைகைபாலத்தில் (இப்போது பழையதாயிருக்கும் :)) சைக்கிள் ஓட்டியவாறு பரவை, சிலசமயம் சமயநல்லூர் வரை செல்வோம். என்ன இனிமையான நாட்கள்!

படித்தது 'சேஸ்கூல்' என்று செல்லமாக அழைக்கப் படுகின்ற சேதுபதி உயர்நிலைப் பள்ளி. பாஸ்கர சேதுபதியால் நிறுவப்பட்டு பாரதியார் பணிபுரிந்த வரலாறு கொண்டது. நான் படித்த காலத்தில் அது சண்டியர் ஸ்கூல் என்று பெயர் சம்பாதித்திருந்தது. எங்களைத் தெரிந்தவர்கள் அனைவரும் ஏன் என்று துக்கம் விசாரிக்க செய்த பள்ளி. ஆனால் எனக்கு கிடைத்ததிலேயே மிகச் சிறப்பான கல்வி அங்குதான் கிடைத்தது.வளரும் பருவத்திலிருந்த எனக்கு சரியான வழிகாட்டுதலை கொடுத்தவர்கள் அங்கிருந்த ஆசிரிய மக்களே. சுயமாக சிந்தித்து அறிவியலை தேடும் வழி காட்டினர். மற்ற பள்ளிகளில் நோட்ஸ்ஸுக்கு அலையும் போது நான் நூலகங்களை நாடினேன். ஆங்கில மற்றும் தமிழ் மொழியாற்றல் ஏற்பட்டதும் அங்குதான். நாளும் பேருந்தில் மாதாந்திர அரைடிக்கெட் (ஒருவழி 7பைசா) எடுத்து சென்று வந்து கொண்டிருந்தேன். இப்போதும் 720, 3669, 9627 என்று பதிவெண்களால் அறியப்பட்ட TVS பேருந்துகள் நினைவுக்கு வருகின்றன. அந்த ஓட்டுனர்/நடத்துனரும் நன்கு பரிச்சயமாகி தாமதமானாலும் ஓரிருநிமிடம் எங்களுக்காக நிறுத்துவார்கள். திரும்பும்போதும் கூட்டமாக இருந்தாலும் எங்களைப் பார்த்து ஏற்றிக் கொள்வார்கள்.

சினிமா போவதென்றால் குதிரைவண்டியில் போவோம். சென்னையில் கிடையாதாகையால் எங்களுக்கு சினிமாவிற்கு போவதைவிட குதிரைவண்டியில் போவது மிகவும் பிடிக்கும். அந்த டீனேஜில் மற்றவர்கள் பின்புறம் ஏறியபிறகு வண்டியின் சக்கரத்தில் காலைவைத்து முன்னால் ஏறி ஓட்டுனர் அருகே உட்காருவது ஒரு வீரமாக நினைத்த காலம். அங்கிருந்தவரை ஒருவருடத்தில் வெளியான எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறோம்!

சென்னையிலிருந்து சென்றிருந்த எனக்கு சில கலாச்சார அதிர்ச்சிகள் காத்திருந்தன. முன்பே சொன்ன குதிரை வண்டிகளும் குதிரை லாயங்களும் ஒன்று.சென்னையில் எல்லோரையும் ஒருமையில் அழைத்து பழகிய எங்களுக்கு இங்கு கண்ட மரியாதையான பேச்சு. நாங்கள் கோவைக்காரர்களென்றாலும் சிறுவயதில் சென்னையில் வாழ்ந்தது அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. என் தம்பி வந்த புதிதில் யாரிடமோ மணி என்னப்பா ? எனக் கேட்டு வாங்கி கட்டிக் கொண்டான். மதுரைக் கல்லூரியில் படித்தபோது (1968) வேட்டி சட்டையுடன் கையில் சாப்பாட்டு தூக்குடனும் சென்றது இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.


மதுரையில் இருந்தவர்கள் ஆன்மீகத்தில் ஈர்க்கப்படுவது தவிர்க்க இயலாதது. எனக்குத் தெரிந்து மதுரைக்காரர்களில் நாத்திகர்கள் மிக குறைவு. மீனாட்சியின் ஆட்சி எல்லா மக்களையும் ஆட்கொண்டுள்ளது. பாவம், சோமசுந்தரரும் 63 திருவிளையாடல்களை நடத்தியும் கால் மாறி ஆடியும் மீனாளின் கடைக்கண் வீச்சிற்கு அடிமையாகும் பக்தர்களை ஈர்க்கமுடியவில்லை. மீனாட்சிஅம்மன் கோவிலின் கம்பீரமும் அழகும் சொல்லில் அடங்குமோ ? அன்னையின் அழகிலும அருளிலும் பூரணமாக என்னை பறிகொடுத்தவன். மாதம்தோறும் நடக்கும் விழாக்களில் அருகில் இருந்து பங்கேற்கும் வாய்ப்பு, என் தந்தையின் பணி காரணமாய், எனக்கு கிட்டியது. சித்திரைத் திருவிழாவும் கல்யாண கோலமும், வண்டியூர் தெப்பமும் காண மனித்தப் பிறவியும் வேண்டுவனே இம்மாநிலத்தே! நவராத்திரியில் ஒவ்வொருநாளும் ஒரு அலங்காரமென்ன? .

நானிருந்த ஆரப்பாளயம் அருகேயிருந்த ஞானஒளிவுபுரம் மாதாகோவிலுக்கும் நன்பர்களுடன் போயிருக்கிறேன். என் கையெழுத்து அழகாக இருக்குமென்று ஞாயிறு பாடப்படும் பாடல்களையும் எழுதி கொடுத்திருக்கிறேன். மதுரையில் இருந்தபோது அரசியலிலும் ஆர்வம் வந்தது. 1967 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக மாணவர்கள் நாங்களாகவே ஒவ்வொரு வீடாக சென்று திமுக விற்கு வாக்கு சேகரித்தோம். விருதுநகரில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராசரை தோற்கடித்ததை கொண்டாடினோம். பின்னாளில் அவர் சீரழிந்தது வேறுகதை. கம்யூனிச தோழர்கள் கேடிகே தங்கமணி, பி.இராமமூர்த்தி ஆகியோரின் அரசியல் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன். பிறகு காலத்தோடு நானும் மாறினேன்.

நினைத்துப் பார்த்தால் அப்போது டிவி இல்லாதிருந்ததாலேயே எனக்கு இத்தனை பன்முக ஆர்வங்கள் வெளிப்பட்டன. டிவி மட்டும் இருந்திருந்தால் போகோ சானலுடன் இளமை முடிந்திருக்கும். படிப்பு, போட்டி மனஅழுத்தங்களும் இருந்ததில்லை.

35 மறுமொழிகள்:

ஜயராமன் கூறுகிறார்

என்ன அற்புதமான சுய உரை.

தங்களின் பசுமையான எண்ணங்களில் நான் ஆழ்ந்தேன்.

இம்மாதிரி கட்டுரைகளில் தன்னையே பொருத்திப்பார்ப்பதும் எல்லோருக்கும் இயல்பு. அம்மாதிரியே நானும் சிறிது பழைய குதிரையில் சவாரி செய்தேன்.

மேலும் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்

நன்றி

Anonymous கூறுகிறார்

மணியன் சார்!மதுரை அனுபவங்கள்
தொடர்ந்து மணக்கட்டும்.சென்னையில்
ரேடியோ போல மதுரையில் ஏதாவது
கண்டுபிடித்தீர்களா???.

அன்புடன்,
துபாய் ராஜா.

குமரன் (Kumaran) கூறுகிறார்

அற்புதமான நினைவுப் பதிவுகள் மணியன்.

மதுரையிலும் நாத்திகர்கள் இருக்கிறார்கள்; ஆனால் தீவிரமாக இருப்பதில்லை. 'ஏழைப்பெண் தாலிக்குத் தங்கம் இல்லை; கல்லுக்கு கல்யாணம் ஒரு கேடா?', 'விபச்சாரம் செய்யும் கள்ளழகரை கைது செய்' போன்ற சுவரொட்டிகள் இல்லாமல் சித்திரைத் திருவிழா ஒரு வருடமாவது நடந்திருக்கிறதா? இந்த சுவரொட்டிகளில் ஒரு வசதி. வருடாவருடம் அதே சுவரொட்டிகளை ஒட்டலாம்; தட்டி வைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்; எடுத்துவைத்து அடுத்த வருடம் வெளியே வைக்க வசதியல்லவா? :-)

ஆனால் அம்மனின் ஆட்சியில் இருப்பதால் அவள் மேல் கொஞ்சமாவது பற்று உள்ளவர்கள் பெரும்பான்மை.

மணியன் கூறுகிறார்

வாங்க ஜயராமன், உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.

மணியன் கூறுகிறார்

நன்றி துபாய்ராஜா, அது என்னங்க, விட்டால் ரேடியோ கண்டுபிடித்ததே நான் என்று சொல்லிவிடுவீர்கள் போல இருக்கிறதே :)

மதுரையின் நண்பர்குழாம் ஊர்சுற்றுவதிலும் விளையாட்டுகளிலும்தான் ஈடுபாடு கொண்டிருந்ததால் நானும் அவ்வண்ணமே மாறிப் போனேன் :) இரண்டவதாக சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி மதுரையில் கண்டுபிடிக்கத் தெரியவில்லை.

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்.நான் மதுரையில் இருந்தது நான்கு வருடமே (1965-69) அந்த காலத்தில் கண்ட observation. இப்போது மாறியிருக்கலாம்.

Anonymous கூறுகிறார்

/"நன்றி துபாய்ராஜா, அது என்னங்க, விட்டால் ரேடியோ கண்டுபிடித்ததே நான் என்று சொல்லிவிடுவீர்கள் போல இருக்கிறதே :)"/

மணியன் சார் கோச்சுக்காதீங்க!!!.
"தருமமிகுசென்னை" பாகத்தில் நீங்க
கொடுத்த" ஃபில்டப் "அப்படி சார்.
நீங்களே கொஞ்சம் படிச்சுப்பாருங்க."

//"அந்த பருவத்தில்தான் நான் எனது முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்தேன். எங்கிருந்தோ கிடைத்த Ferrite rodல் SWG28 என்று செப்புக்கம்பியைச் சுற்றி OA72 என்ற ஆதிகாலத்து டயோடை பயன்படுத்தி மீடியம்வேவ் கேட்கும்படியான ஒரு வானொலிப்பெட்டியை ஒரு சோப்பெட்டியில் ஆக்கி வீட்டளவில் பெயர் வாங்கினேன். அதுவே என் மின்னணுவியல் ஆர்வத்திற்கும் வாழ்விற்கும் வித்திட்டது."//

/"சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி மதுரையில் கண்டுபிடிக்கத் தெரியவில்லை."/

அப்பவே சென்னைல ரிச்சி ஸ்ட்ரீட்
இருந்துதா சார்??.நீங்க ரேடியோ
தயாரிச்சதை தனிப்பதிவா போட்டீங்கன்னா நாங்க இன்னும்
நிறைய தெரிஞ்சுப்போம் சார்!!!!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

Sivabalan கூறுகிறார்

சார்,

மிக சுவாரசியமான பதிவு!!

மிக்க நன்றி!!

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

//இப்போதும் 720, 3669, 9627 என்று பதிவெண்களால் அறியப்பட்ட TVS பேருந்துகள் நினைவுக்கு வருகின்றன.// இந்த TVS டைகர் என்ற பஸ் எனக்கு ஞாபகம் வருகிறது, இது திருச்சியில் மெயின்கார்டுகேட்லிருந்து பொன்மலை வரை பயணிக்கும் வண்டி. இதன் முன்னைப்பு மற்ற பஸ்களை விட சற்றே மாறி இருக்கும், உங்கள் பதிவை படித்தவடன் எனக்கு வந்த என் ஞாபகங்கள்!

மணியன் கூறுகிறார்

துபாய்ராஜா சார், ஆளை விடுங்க :)
நினைவலைகள் மயக்கத்தில் கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுத்திட்டேனோ ? ஒன்றும் இல்லைங்க, கண்ணன் என்று கலைமகள் குழுமத்தில் ஒரு சிறுவர் பத்திரிகை வரும்.அதில்தான் இத்தகைய projects வரும். எந்த கடையில் கிடைக்கும் என்றும் போட்டிருப்பார்கள். ரிச்சி ஸ்ட்ரீட் எல்லாம் ரொம்ப காலமா உண்டு சார். என்ன அப்போது கடைகள் குறைவு; நிறைய வால்வு ரேடியோ சாதனங்களதான் கிடைக்கும். செமிகண்டக்டர் அப்போதுதான் வர ஆரம்பித்திருந்தது.எங்கள் வீட்டிலும் இருந்த மர்பி ரேடியோவின் மாஜிக் ஐ பார்த்து ட்யூன் செய்த நினைவுகளையும் கிளறாதீர்கள் :))்

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்.

மணியன் கூறுகிறார்

வாங்க வெளிகண்டநாதர், ஆமாங்க தடம் எண்ணை விட பேருந்துகளின் பதிவெண்களே குறிப்பிட்டுக் கொள்வோம். நீங்கள் சொல்வதுபோல ஒவ்வொரு பேருந்தின் முகப்பும் ஒவ்வொரு மாதிரி. அவற்றை வைத்து துரத்திலிருந்தே நம்ம பேருந்து வருகிறது என்று சொல்லிவிடுவோம்.

வெற்றி கூறுகிறார்

மணியன்,
நல்ல சுவாரசியமான பதிவு.

// நினைத்துப் பார்த்தால் அப்போது டிவி இல்லாதிருந்ததாலேயே எனக்கு இத்தனை பன்முக ஆர்வங்கள் வெளிப்பட்டன. டிவி மட்டும் இருந்திருந்தால் போகோ சானலுடன் இளமை முடிந்திருக்கும். படிப்பு, போட்டி மனஅழுத்தங்களும் இருந்ததில்லை.//

உண்மைதான். இப்போதெல்லாம் மின்கணனியோடும், தொலைக்காட்சியோடும் தான் அதிக நேரத்தைச் செலவு செய்கிறோம். அதனால் பல பன்முக ஆர்வங்கள் மழுங்கிப் போகின்றன.

ilavanji கூறுகிறார்

மணியன்,

உங்க தமிழைப் படிக்கையில் பொறாமையாக இருக்கிறது!

//டிவி மட்டும் இருந்திருந்தால் போகோ சானலுடன் இளமை முடிந்திருக்கும் //

இங்க பிடிச்சீங்க பாயிண்டு! அப்படி என்னதான் இருக்கோ அந்த சேனல்ல?! நானும் அடிக்கடி அதில் மாட்டிக் கொள்வதுண்டு! :)

துளசி கோபால் கூறுகிறார்

அடடா... இப்படி டிவிஎஸ் பஸ்ஸை ஞாபகப்படுத்திட்டீங்களே.

ம்ம்ம்ம்ம் அப்பெல்லாம் அசங்காமக் குலுங்காமப் போற சொகுசு பஸ்ஸே அதாங்க.

ஹை மேஜிக் ஐ.

'கொசுவர்த்தி' வாங்கி கட்டுப் படி ஆகலை:-)))

சிவமுருகன் கூறுகிறார்

நல்ல அனுபவம் மணியன் சார்,

மதுரை பற்றிய கருத்துக்கள் அழகாக உள்ளது. படங்கள் என்னை ஈர்த்த விதம் மீனாளின் படமும், சுந்தரேஸ்வரர் என்னென்ன செய்தும், பக்தர்களை தன்பால் ஈர்க்க முடியவில்லை என்பதை தாம் சொன்ன விதம் அருமை.

மணியன் கூறுகிறார்

நன்றி வெற்றி. பாடங்களின் பாரமும் தொலைக்காட்சியின் தொல்லையும் சிறுவர்களை நிறையவே பாதிக்கின்றன.

மணியன் கூறுகிறார்

நன்றி இளவஞ்சி, இந்த தொலைகாட்சி சானல் மிகவும் ஆட்கொள்ளுவதுதான்.

மணியன் கூறுகிறார்

நன்றி துளசி,
//'கொசுவர்த்தி' வாங்கி கட்டுப் படி ஆகலை:-)))//
நான் முதலிலேயே எச்சரிக்கவில்லை எனக் கூறமுடியாது..பார்க்க ஆரம்ப பதிவு...
"வெற்று பெருங்காய டப்பாவில் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் ? பழம் வாசனைதான்."

மணியன் கூறுகிறார்

நன்றி சிவமுருகன். நீங்கள் மதுரையிலுள்ள கோவில்களைப் பற்றி ஒரு இடுகை இடுங்களேன்.

சிவமுருகன் கூறுகிறார்

//நீங்கள் மதுரையிலுள்ள கோவில்களைப் பற்றி ஒரு இடுகை இடுங்களேன்.//

தற்போது 'மணற்கேணியில்' மீனாட்சி அம்மன் கோவில் பதிவு நடக்கிறது, இன்னும் 10 பதிவுகளாவது தொடரும், பிறகு மடப்புரம் கோவில் என்று பல கோவில்கள் பட்டியலுள்ளது.

Muthu கூறுகிறார்

ஆன்மீகம், அரசியல், அறிவியல் அனைத்திலும் கை வைத்துள்ளீர்கள்.

உங்கள் அரசியல் அனுபவங்களை விரிவாக எழுதும்படி வேண்டுகிறென்

மணியன் கூறுகிறார்

நன்றி முத்து(தமிழினி). எல்லாமே நுனிப்புல்தான்.

Geetha Sambasivam கூறுகிறார்

மணியன் அவர்களே,
மதுரை பேரால் ஈர்க்கப்பட்டு உங்கள் பதிவிற்கு வந்தேன். நீங்கள் படித்த சமயம் அதே பள்ளியில் அதே காலத்தில் என் அப்பா ஹிந்தி ஆசிரியராக இருந்தார். 1981-வரை அந்தப் பள்ளியில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றார். வி.புஷ்பவனம் தலைமை ஆசிரியராக இருந்த அந்தக் காலத்தில் பள்ளிக்கு இந்தப் பெயர் என்பது என்னால் நம்ப முடியவில்லை.

மணியன் கூறுகிறார்

வாங்க கீதா சாம்பசிவம். ஆம்,திரு வி. புஷ்பவனம் தான் தலைமையாசிரியர் மறும் எனக்கு ஆங்கிலபாடம் எடுத்தது.நான் இந்தி படிக்காததால் உங்கள் தந்தையாரை நினைவுபடுத்திக் கொள்ளமுடியவில்லை.

எங்கள் பள்ளியின் பிரதான விளையாட்டு கூடைபந்து (Basketball) . திரு கோபால் என்ற பி.டி மாஸ்டர் கண்முன்னால் நிற்கிறார். யாராவது சக alumnus மாட்டமாட்டார்களா என்றுதான் இத்தனை விலாவாரியாக எழுதினேன்.

நாகை சிவா கூறுகிறார்

//மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரைக்கு//
ஐயா!
யானை கட்டி போரடித்தது தஞ்சையா இல்ல மதுரையா???? இது வரை சோழ நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் தான் இது போல் நடந்தது என மற்றவர்க்களிடம் பலமுறை பெருமையாக கூறி இருக்கின்றேன். தவறாக இருந்தால் திருத்தி கொள்ளலாமே என்பதற்கு தான் கேட்கின்றேன்

மணியன் கூறுகிறார்

ஐயா, சோழநாடு சோறுடைத்து எனக் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடல் பாண்டியநாட்டைப் பற்றிதான். யார் எழுதியது, பத்துப்பாட்டா, எட்டுத்தொகையா என்பதெல்லாம் தெரியவில்லை. தமிழறிஞர்கள் தான் சொல்லவேண்டும். உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என்றால் மாற்றிக் கொள்கிறேன்.

கால்கரி சிவா கூறுகிறார்

மணியன் சார்.

மதுரையின் ரிட்சி தெரு டவுன் ஹால் ரோடு. அங்கே கிடைக்கும் பாகங்களை வத்து நாங்களும் ரேடியோ ஆம்பளிபையர் போன்றவைகள் செய்து "விஞ்ஞானி" பட்டத்தை வென்றுள்ளோம்

குமரன் (Kumaran) கூறுகிறார்

மாடுகட்டி போரடிச்சா
மாளாது செந்நெலென்று
ஆனைகட்டி போரடிக்கும்
அழகானத் தென்மதுரை

என்பது நாட்டார் இலக்கியம் எனப்படும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் வரிகள். சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்து, சேர நாடு வேழமுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்துன்னு ஒளவையார் பாடியிருக்காங்க. அதனால சோழ நாட்டுல மட்டும் தான் நெல்வளம் உண்டு; மற்ற நாடுகளில் இல்லை என்றோ, பாண்டிய நாட்டில் மட்டுமே முத்து வளம் உண்டு, மற்ற நாடுகளில் இல்லை என்றோ, வேழங்கள் (யானைகள்) சேர நாட்டில் மட்டுமே உண்டு என்றோ, சான்றோர்கள் தொண்டை நாட்டில் மட்டுமே உண்டென்றோ சொல்ல முடியாதல்லவா? அது போலத் தான். நீர் வளம், நிலவளத்தில் சோழ நாடு பெருமை பெற்றிருந்தது. ஆனால் மதுரையிலும் குறைவில்லை. ஆனைகட்டி போரடிக்கும் அளவிற்கு விளைச்சல் இருந்தது; உயர்வு நவிற்சியாகவும் இருக்கலாம். :-)

மணியன் கூறுகிறார்

வாங்க கால்கரி சிவா, முதல் வருகையா ? நன்றி.
டவுன்ஹால் ரோடுதான் மதுரையின் மின்னணுவியல் அங்காடிகள் இருக்குமிடமா? அப்போது சுட்டிக்காட்ட யாருமில்லையே :(
தவிர நண்பர் குழாமின் தாக்கமும் திசை மாற்றியது.

மணியன் கூறுகிறார்

வாங்க குமரன், தோள் கொடுத்ததற்கு நன்றி.

Geetha Sambasivam கூறுகிறார்

மணியன்,
என் ஞாபகம் சரியாக இருந்தால் கோபால் சாருடன் கூடப் பரமசாமி வாத்தியார் பி.டி.க்கு, வேலு வாத்தியார்(தச்சுப்பிரிவு), எல்.வி.வரதராஜன், (ஆங்கிலம்), வி.ஜி.ஸ்ரீனிவாசன்(தமிழ்), ஈ.சுப்ரமணியன்,(தமிழ்), செல்லப்பா வாத்தியார், இன்னும் இரண்டு தறி வாத்தியார்கள் இவர்கள் அனைவருடனும் என் அப்பாவும் சேர்ந்து ஒரு க்ரூப். சி.கல்யாணசுந்திரம் என்பவர் தான் துணைத் தலைமை ஆசிரியர். கண்டிப்புக்குப் பேர் போன என் தந்தை மாணவர்களால் "மூட்டைப்பூச்சி" என்று செல்லமாக நாமகரணம் செய்யப்பட்டவர். இன்னும் நிறைய ஆசிரியர்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

மணியன் கூறுகிறார்

கீதா சாம்பாசிவம், நீங்கள் எனது ஆசிரியப் பெருமக்களையெல்லாம் நினைவு கூறியதற்கு மிக்க நன்றி. திரு PNS எனப்படும் PN சுப்ரமணியன் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். நிச்சயம் உங்கள் தந்தையாரையும் நேரில் கண்டால் தெரிந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
உங்கள் ஞாபகசக்தி நன்றாகவே இருக்கிறது..compared to me :))
இணையம்தான் எத்தனை வலிமையானது !

தருமி கூறுகிறார்

ஆஹா! 1970 அக்டோபர் மாதத்தில் 'குதிரை' (ஜாவா பைக்) வாங்கியதும், உங்கள் தெருவில் (வைகை ஆற்று ஓர சாலை)தான் வண்டியோட்ட பழகுவதற்காகக் காலங்கார்த்தாலேயயே வந்து ட்ர்ரு புர்ருன்னு ஓட்டி, அந்த தெரு வீட்டு ஆட்கள் முறைக்க...ஒரு நாலஞ்சு நாள் அந்த வேலை...

நீங்க 65-70 ஆரப்பாளையம்னா சரியாக நான் 66-70ல் தஞ்சைக்கு வேலைக்குப் போய் மீண்டும் ஞான ஒளிவுபுரத்திற்கு வந்து சேர்ந்தேன்.

"யாராவது சக alumnus மாட்டமாட்டார்களா என்றுதான் இத்தனை விலாவாரியாக எழுதினேன்."// 65. இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட சமயத்தில் உங்கள் பள்ளியில்தான் மாலன் படித்ததாக என் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டப் பதிவின் பின்னூட்டத்தில் கூறியிருந்தாரே.

மணியன் கூறுகிறார்

தருமி அவர்களே, வருக, வருக!! எனது மணிமலர் உதயத்திற்கு வித்திட்டவர் எனது நட்சத்திர இடுகையில் பங்கு கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. வருகைக்கு நன்றி.
ஓ, சரியாக அந்த நேரத்தில் தஞ்சை போய் வீட்டீர்களா? ( இருந்தாலும் அப்போது தெரியுமா, நாம் இணையத்தால் இணைவோம் என்று).
மாலன் இராமகிருஷ்ணா பள்ளியா ? நான் சரியாக கவனிக்கவில்லையே! தொடர்பு கொள்கிறேன்.தகவலுக்கு நன்றி.