நொய்டா கொலைகள்


கடந்த சில நாட்களாக தில்லியின் சுற்றுப்புர நகரான நொய்டா (NOIDA)வின் புறத்தே நிதாரி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள உடற்சிதிலங்கள் நம்மிடையே திகழும் வக்கிர உள்ளங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கொலையின் கோரங்கள் தெரியத் தெரிய மனம் பதறுகிறது. பச்சிளம் சிறாரை வன்புணர்ந்து கொலை செய்து பங்களாவின் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் வீசி எறிந்ததாக தொழிலதிபரான மொஹிந்தர் சிங்கும் அவர் வேலையாள் சுரிந்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகளின் பின்னணி குறித்து பல கருத்துக்கள் யூக வடிவிலே வலம் வருகின்றன. சில மனித உறுப்புக்களை விற்பதற்காகவென்றும் சில பயங்கரமான மத சடங்கிற்காகவென்றும் வேறு சில உயிரற்ற சடலங்களுடன் கொள்ளும் பாலியல் இச்சை (necrophilia)களுக்காக வென்றும் பலவாறு செய்திகள் வருகின்றன. எதுவாக இருப்பினும் மிகுந்த மன விகாரமடைந்த மனிதனின் செயல்கள் இவை என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

ஆனால் இந்த விகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் நிற்கிறதா என நம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொலையுண்டவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டும், குற்றத்தைப் பதிவு செய்யாமல் அவர்களை ஏளனமாகப் பார்த்த காவலர்களின் மனம் கல்லாயிற்றா ? இது ஏதோ வடக்கில் சிறு கிராமத்தில் நடந்த ஒரு விலக்கு என்று நம்மில் யாரேனும் கூற முடியுமா? நாளும் எல்லா இடங்களிலும் நம் காவலரின் அலட்சியமும் ஆர்வமின்மையும் காண்பதுதானே ?

சரி, காவலர்கள் தான் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்தார்கள் என்றால் உள்ளாட்சி துப்புறவு தொழிலாளர்கள் அத்தனை மனிதகழிவுகள் கோணிப்பைகளில் அந்த வீட்டினருகே சாக்கடையில் போடப்படுவதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தனர் ? ஏதோ தவறு அருகாமையில் நடக்கிறது என்று காவலரை உஷார்படுத்தியிருக்கலாமே ?

இதெல்லாம் விட்டாலும், அந்த வீட்டின் அக்கம்பக்கத்துக்காரர்களும் தங்கள் சுற்றுவட்டாரத்தில் நடப்பதை காணாமல் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்த கிராமத்திலேயே இந்த நிலை என்றால் அடுத்தவர் யாரென்றே அறியாது வாழும் சென்னை போன்ற பெருநகரங்களில் சொல்லவே வேண்டாம்.

இதற்கெல்லாம் சிகரமாக பாதிப்படைந்த பெற்றோரும் மற்றவர்களும் தங்கள் கோபத்தை நேரடியாக மொஹிந்தர் வீட்டின் மீது கல்லெறிந்து நீதி பரிபாலனத்தை தங்கள் கைகளில் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதி மீது தங்களுக்கிருக்கும் நம்பிக்கையின்மையையும் நமது காட்டுமிராண்டித் தனத்தையும் பறை சாற்றியிருக்கிறார்கள்.

குற்றவிசாரணையும் நீதிவழங்கலும் துரிதப் படல் வேண்டும்; தவறிழைத்த அலுவலர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்; மேலாக குடிமக்கள் இயந்திரதனத்தில் சிக்கி நம் பொறுப்புக்களை மறக்கிறோமா எனவும் சிந்திக்க வேண்டும்.

10 மறுமொழிகள்:

ramachandranusha(உஷா) கூறுகிறார்

மணியன், இந்திய பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு எப்படி முக்கியத்துவம் தருகின்றன? இப்பொழுது வீட்டில் டிஷ் கட்டு. பொழுதுக்கும் பையன் என்.டி டீவி மோகம் பிடித்து அலைவதால் இந்த ஏற்பாடு மார்ச்சு வரைக்கும் ;-)
பாக்கிஸ்தானில் இத்தைய கொலைக்காரன் நினைவு இருக்கா? இல்லை என்றால் கூகிளில் தேடிப்பாருங்கள் ஜாவத் இப்ராகிஹிம்
என்று நினைக்கிறேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கொன்று குவித்தான்.

குமரன் (Kumaran) கூறுகிறார்

தொலைக்காட்சியில் அந்த செய்தியைக் காணும் போதெல்லாம் அந்த சிறார்களை நினைத்து மனம் பதறுகிறது ஐயா.

மணியன் கூறுகிறார்

உஷா, இந்திய ஊடகங்களுக்கு இந்த செய்தி நல்ல தீனிதான். அவர்கள் எப்போதும் போல அரசு நிர்வாகத்தையும் அரசியல் வாதிகளையும் கலாய்க்கிறார்கள். எதிர்கட்சிகளும் இதில் அரசியல் ஆதாயங்கள் தேடுகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி நம்மிடையே நிலவும் சமுதாயப் பொறுப்பின்மையையும் செய்யும் வேலையில் அக்கறையின்மையையும் எவ்வாறு களையப் போகிறோம் ?

நீங்கள் சுட்டிய செய்தியையும் பார்த்தேன். மற்றவர்களுக்காகவும் முழுமைக்காகவும் அந்த தொடர்புகள்: சுட்டி 1 , சுட்டி 2

மணியன் கூறுகிறார்

வாங்க குமரன், மிகவும் மனதை நெருடும் காட்சிகள்தான் :((

சேதுக்கரசி கூறுகிறார்

மேலைநாடுகள் சிலவற்றில் தான் இப்படிப்பட்ட கொடூரம் உண்டென்றால்... இப்போது நம்மூரிலுமா? மேலும், இதுபோன்ற விசயங்களிலும் காவல்துறையின் அலட்சியத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

மணியன் கூறுகிறார்

வாங்க சேதுக்கரசி, வக்கிரங்கள் மனிதனுக்குரியவை, நாட்டு எல்லைகள் அதற்குத் தெரியாது. ஆனால் நம் நாட்டு சிறப்பு, ஏழை சிறார்கள் காணாமல் போனால் காவல்துறை கூட அலட்சியப் படுத்துவதுதான்.நட்ட ஈடு கொடுத்து வாயை அடைக்க முயலும் அரசு முயற்சியை இன்று அந்த பாமரர்கள் நிராகரித்துள்ளார்கள். அவர்கள் உணர்வைக் கூட புரிந்து கொள்ளாமல் இரண்டு இலட்சத்திலிருந்து ஐந்து இலட்சமாக நட்ட ஈட்டை அரசு உயர்த்தியும் அவர்கள் விலை போகவில்லை. அந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் ; நல்ல ஆரம்பமே.

வெற்றி கூறுகிறார்

மணியன் ஐயா,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மணியன் கூறுகிறார்

வாங்க வெற்றி. நாம் இவ்வாறு பாதிப்படைந்தால் உ.பியின் பொதுத்துறை அமைச்சரும் முதல்வரின் தம்பியுமான சிவ்பால்சிங் யாதவ் இது ஒரு சாதாரண, அடிக்கடி நடக்கும் செயல் என்று சொல்லி வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்.:((

nayanan கூறுகிறார்

இந்தக் கொடுமை, பால்-வன்மம் குறித்தது மட்டுமல்ல என்றே தோன்றுகிறது. ஆனால், மிடையங்கள் அதையே அதிகமாக உச்சரிக்கின்றன. மனித உறுப்புக்கள் களவாடல் கோணத்தில் செய்திகள் மெல்லியதாகவே வருகின்றன.
பெரும் பணக்காரர்களுக்காக
அங்கக் களவு செய்த பெரும் கூட்டம் போலத் தெரிகிறது. பல அதிகாரிகள், மருத்துவர்கள் இதில் தொடர்பு வைத்து இருந்திருக்கக்கூடும்.

மத்திய அரசும் மாநில அரசும் ஒருவரை
ஒருவர் விரல் நீட்டிக் கொண்டிராமல்,
உண்மையையும் தொடர்பு கொண்டவர்களையும் கண்டு பிடித்தால்
அவர்களுக்குக் கொஞ்சம் புண்ணியம்
கிடைக்கக் கூடும்.

மணியன் கூறுகிறார்

வாங்க நயனன்,
சடலங்களின் கபாலமும் கை,கால் பகுதிகளே காணக்கிடைகின்றன. Torso என்னவாயிற்று என்றே தெரியவில்லை. மேலோட்டமான இருவரை காட்டி மக்கள் உணர்சிகளை மிதப்படுத்தி கவனத்தை சிதறடிக்கும் காட்சிதான் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் செய்திருப்பார்கள்.அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர குற்றப் புலனாய்வில் இல்லை :(