மணிமலரின் இதழ்கள் -1

என்னுடைய எட்டு பதிவில் நானிட்டிருந்த மணிமலரின் முகப்புப் பக்கத்தைக் கண்டு பொன்ஸ்சும் அருட்பெருங்கோவும் அதில் வெளியான கதைகளையும் கேட்டிருந்தனர். ஆனால் என் பழைய இதழ்களை கண்டறிய முடியவில்லை. நாங்கள் கொண்டுவந்ததே இரண்டோ மூன்றோதான். அதிலும் ஒரு சில பக்கங்களே என்னிடம் மீதம் உள்ளன. இருப்பினும் வாசகர் விருப்பத்தை முழுமையாக்கும் வண்ணம் அவற்றின் scan படங்களை இங்கு இட்டுள்ளேன். அவற்றின் பதிப்பு அழுத்தமாக இல்லாத காரணத்தால் அவற்றை மீள் பதிவும் செய்கிறேன்.
இந்த இதழ் தயாரிப்பில் என்னுடன் என் நண்பன் அமர்நாத் என்கிற அமரனுக்கும் சம பங்கு உண்டு. இந்த இதழ் 25-07-1962இல் வெளியிட்டோம். அப்போது எனக்கு 10 வயது. அந்த பத்துவயது சிறுவன் ஒருநாள் தனது ஆக்கங்கள் உலகளாவிய பார்வை பெறும் என எள்ளளவும் எண்ணியிருக்க மாட்டான். இன்று அவன் வெட்கத்தினால் முகம் மூடிக்கொள்வதை நான் காணமுடிகிறது.

இன்று சில விடுகதைகளைத் தாங்கிய பக்கங்களை பதிப்பித்துள்ளேன். அவற்றின் விடைகள் இன்று எனக்கே நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.


Posted by Picasa


விடுகதை
1.எங்கள் வீட்டு கிணற்றில் வெள்ளீத்தட்டு மிதக்குது ? அது என்ன?
2. எங்க தம்பி நல்லதம்பி. நான் ஏறாத மரத்தில் என் தம்பி ஏறுவான். அவன் யார் ?
3.பெட்டியை திறந்ததும் கிஷ்ணன்(sic) பிறந்தான், அவன் யார் ?
4.வண்ணான் வெளுக்காத வெள்ளை
மழை பெய்யாத தண்ணீர்
குயவன் செய்யாத பாண்டம்
இது என்ன ?
5. கண்டு காய் காய்க்கும்,
காணாமல் பூ பூக்கும், இது என்ன ?
6.ஐந்து விரல் அழுந்த
பத்துவிரல் பந்தாட
சூரியனுடன் சூதாட
என்னுடன் வாதாடும், இது என்ன ?
7.எங்கள் வீட்டு தோட்டத்தில்,
மஞ்சள் குருவி ஊஞ்சல் ஆடும்
இது என்ன ?
8. டாக்டர் வந்தார் ஊசி போட்டார்
காசு வாங்கவில்லை, இது என்ன ? .......மணியன்

இதில் மறைந்துள்ள பெயர்கள் யாவை ?
1.அப்பா ரதி என்னை அடித்துவிட்டாள்,
2.அப்பா தாம்பரம் போனார்.
3.அம்பர் மாலை அணிந்தார்
4.கொக்கு திரையில் தோன்றியது.
5.அம்மா மரம் சாய்ந்தது.
6.ராஜு ரம்பையை மணந்தான்.
7.அக்கா சினிமா சென்றாள்.
8. ராஜா ஜிலேபி உண்டான். ..............அமரன்

இதன் பின்னர் ஒரு விளம்பரம் வேறு. பணம் எல்லாம் கிடையாது. மற்ற பத்திரிகைகளை காப்பியடித்து... விளம்பரத்திற்கான உள்ளடக்கம் அவர்களின் துண்டு பிரசுரங்கள்.

என்னையும் மீறி இவற்றை வெளியிட்டிருக்கிறேன். அந்த பத்துவயது சிறுவர்களின் 'கடி'யை மன்னித்துவிடுங்கள்.

2 மறுமொழிகள்:

Unknown கூறுகிறார்

விடுகதை:
1.நிலா?
3.கடலை?
7.எலுமிச்சை?
8.கொசு?

பெயர்கள் :
1.பாரதி
2.பாதாம்
3.பர்மா
4.குதிரை
5.மாமரம்.
6.ஜுரம்்.
7.காசினி
8. ராஜாஜி

:)))

(விளம்பரத்துக்கெல்லாம் காசு வாங்குனீங்களா? ;))

மணியன் கூறுகிறார்

வாங்க அருட்பெருங்கோ, உங்கள் விடைகள் நூற்றுக்கு நூறு சரி. எட்டாவது விடுகதைக்கு அப்போது 'தேள்' என்று சொன்னதாக நினைவு. இன்று நகரங்களில் காண்பது அறிதாகி உள்ளது.