எட்டியவை எட்டு !!


பதிவுலகின் அண்மைய பரபரப்பான எண்ம நோய் என்னையும் எட்டிவிட்டது. அன்பர்கள் விக்கியும், சிறிலும் அழைத்திருக்கிறார்கள்.

தன்னைத் தானறிவது ஆழ்ந்த இந்துமத சித்தாந்தம். இந்த வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தாலும் வைத்தேன், இந்த சுய தேடலை நான் விடமுயன்றாலும் தொடர்வினை விளையாட்டுக்கள் விட விடாது போலிருக்கிறது. முதலில் நாலு பிடித்தவைகளை பட்டியலிடச் சொன்னார்கள், பின் ஆறு என்றார்கள், வினோத பண்புகளையும் ஆராயச் சொன்னார்கள்; இப்போது எட்டு சாதனைகளைச் சொல்ல வேண்டுமாம். எழுதியவைகளை மீள்பார்வை பார்த்தால் நானே நானா என பாடத் தோன்றுகிறது.

ஆர் கே இலட்சுமணின் சாதாரண குடிமகனுக்கு சரியான 'மாதிரி'யான என்னை தற்பெருமை அடித்துக் கொள்ளச் சொன்னால் வாழ்வே சாதனைதான். இருப்பினும் மேடையில் ஏறியபின் பின் வாங்கலாமா ?

1. பள்ளிப்படிப்பில் சொல்ல ஒன்றுமில்லாவிடினும் படிப்பிற்கு அப்பாற்பட்ட செயல்களில் ஆர்வம் காட்டி பாராட்டுக்கள் பெற்றிருக்கிறேன். தோட்டக்கலை, மின்னணு வானொலி செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் என புதுப்புது நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். நவராத்திரி பொம்மைக் கொலுவில் மிகுந்த ஆர்வம் எடுத்துக் கொள்வேன். (இப்போது என் மக்களுக்கு இது வியப்பாக இருக்கும்).

2. மாணவ பருவத்திலேயே கையெழுத்துப் பிரதி நடத்தியிருக்கிறேன். அந்த இதழின் பெயரான மணிமலரையே இந்தப் பதிவிற்கும் வைத்திருக்கிறேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒட்டி எனக்குப் பிடித்த வினாயகப் பெருமானை வைத்து பத்து வயதில் கவசம் எழுதியதை என் பாட்டி தன் பூசையறையில் வெகுகாலம் படித்துவந்தார்.

3.கல்லூரி வாழ்வில் படிப்பில் பிடிப்பேற்பட்டது. பல்கலைப் புகுமுக வகுப்பிலும் பொறியியல் முதல் மூன்று செமெஸ்டர்களிலும் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினேன். பட்டப்படிப்பில் பல்கலையில் ஐந்தாவதாகவும் பட்டமேற்படிப்பில் இரண்டாவதாகவும் வந்தேன்.

4.பல்வேறு பாடங்களில் எனக்கிருந்த ஆர்வத்தினால் மற்றவர்களுக்கு விளக்குவதிலும் ஒரு ஆசை இருந்தது. கல்லூரி படிப்புவிடுமுறைகளின் போது இனிமையாக நேரத்தைக் க(ழி)ளித்துவிட்டு கடைசி நிமிட ஆபத்பாந்தவனாக என்னை அணுகிய நண்பர்கள் உண்டு. சிலசமயம் profy வராண்டா என்று இதற்காகவே ஓடிய நண்பர்களும் உண்டு :)

5. தேர்வுகளில் தோல்வியை சந்தித்திராத அந்த காலகட்டத்தில் துளிக்கூட முன்னேற்பாடின்றி முயன்றதால் (?) IIT JEE யில் வரமுடியாததை சவாலாக எடுத்துக் கொண்டு முதலாண்டு பொறியியல் படித்துக் கொண்டே அடுத்தவருடம் IIT சென்னையில் இடம்பெற்று பின் வருடத்தை வீணடிப்பானேன் என்று விட்டதும் ஒரு கித்தாப்புதான். அதேபோல பட்டப்படிப்பின் முடிவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் இடம் கிடைத்தும் விளம்பரத்தில் வருவதுபோல இந்தியாவில் படிப்பேன் என கிழித்தெறிந்ததும் ஒரு அகங்காரம்தான்; கிடைக்காததால் செல்லவில்லை என்று மற்றவர்கள் சொல்லக் கூடாது என்பதற்காக :)

6. இதே சவாலிடும் மனப்பான்மையே UPSC எழுதவைத்து எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது. இந்திய தொலைதொடர்புப் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியதும் ஒரு பெருமையே. நாங்கள் அடிப்படை வசதிகள் இன்றி மூலைமுடிக்கில் நிறுவிய நுண்ணலை சேவைகள் இன்றைய பிஎஸ் என் எல் வளர்ச்சிக்கு அடிகோலியது ஒரு கர்வமாக இருக்கிறது.

7. செய்தபணியில் நிறைவைத் தந்தவை: இலட்சத்தீவின் கவரத்தியில் செயற்கைக்கோள் தொலைதொடர்பு நிலையம் நிறுவியது, இந்தியாவிலேயே முதன்முதலில் கேரளாவில் ஒளியிழை தொலைதொடர்பு கேபிள் இட்டு பயனுக்குக் கொண்டு வந்தது, சிரிலங்காவின் தொலைதொடர்பு நிறுவனத்தில் வளரும் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைக்கும் திட்டத்தின் கீழ் ஒளியிழை தொலைதொடர்பு பற்றி பயிற்சி கொடுத்தது, தொழிலாளர் பிரச்சினைகளும் சாதிபிரச்சினைகளும் மலிந்த தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்திலும் அனைத்து ஊழியர்களின் இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் பெற்றது.

8.எல்லாவற்றையும் விட தமிழில் வலைபதிவது. காணாமல் போன குழந்தை கையில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. பணிக்காலத்தில் புரிந்து கொண்டதைவிட அதிகமாக மனவோட்டங்களையும் குமுகாயப் பார்வைகளையும் அறிய வைத்த அனுபவம். நீறுபூத்த நெருப்பின் வெப்பத்தை உணரவைத்த பதிவுகள். எனது சக வயதினரிடமும் அதிகாரிகளிடமும் இல்லாத புரிந்துணர்வு எனக்கு கிடைத்துள்ளது என்ற பெருமை. 'சற்றுமுன்'னின் சாதனைகளிலும் மாற்று! தள பங்களிப்புகளிலும் இணைந்துள்ளதும் ஒரு பெருமையே.

படித்ததையும் கொடுத்த காசிற்கு வேலை செய்ததையுமே சாதனையாக எழுதியிருக்கிறேன். என்ன செய்வது, சட்டியில் இருந்தால்தானே :)

இந்த இடுகை இப்பதிவின் நூறாவது இடுகையாக விளங்குவதும் ஒரு சிறப்பு.

இனி அடுத்து எட்டு பேரை எழுதச் சொல்ல வேண்டும்: யார் யாரை கூப்பிட்டிருப்பார்கள் என்று தெரியாததால் மீள் அழைப்புகளை மன்னியுங்கள்.

1.Voice on Wings
2.மயூரேசன்
3.TBR ஜோசப்
4.தருமி
5.நிலா
6.செல்வராஜ்
7.தாரா
8.பிரபு இராஜதுரை

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

30 மறுமொழிகள்:

ilavanji கூறுகிறார்

மணியன் சார்,

100க்கு வாழ்த்துக்கள்!

// அந்த இதழின் பெயரான மணிமலரையே இந்தப் பதிவிற்கும் வைத்திருக்கிறேன் // அந்த படத்தோடு படிக்கையில் வெகுசுவாரசியமான தகவலாக உள்ளது! :) நம் பதிவுகளே கையெழுத்துப்பத்திரிக்கைகளின் அடுத்த கட்டம் தானே?! :)

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள், இளவஞ்சி, டெல்பின்.

தருமி கூறுகிறார்

இவ்வளவு நல்லவரா, வல்லவரா இருக்கிற நீங்க ஏன் இப்படி என்னை உள்ளுக்கு 'தள்ற' தப்பெல்லாம் பண்றீங்க..

:(

மணியன் கூறுகிறார்

வாங்க தருமி சார், 'உள்ளு'க்கு தள்ளவில்லை, 'வெளியே' கொண்டுவர அழைக்கிறேன் :)

SurveySan கூறுகிறார்

///பட்டப்படிப்பின் முடிவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் இடம் கிடைத்தும் விளம்பரத்தில் வருவதுபோல இந்தியாவில் படிப்பேன் என கிழித்தெறிந்ததும் ஒரு அகங்காரம்தான்; கிடைக்காததால் செல்லவில்லை என்று மற்றவர்கள் சொல்லக் கூடாது என்பதற்காக///

ஹ்ம்ம்ம். பெருமூச்சு!! :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar கூறுகிறார்

மணிமலர் கையெழுத்துப் பத்திரிக்கை படம், 8 படம் நல்லா இருக்கு.

கொடுத்த காசுக்கு வேலை செஞ்சிருக்கேன்னு அசால்ட்டா சொல்லி இருக்கீங்கன்னாலும் உண்மையிலயே நிறைய இளையவர்களுக்கு நினைவூட்டும் சொற்றொடர்!

G.Ragavan கூறுகிறார்

வாழ்த்துகள் மணியன் சார். நிறைய சாதிச்சிருக்கீங்க. எட்ட நின்னு வாழ்த்துச் சொல்லி ஒதுங்கிக்கிறேன். :)

மணியன் கூறுகிறார்

வருகை தந்து வாழ்த்திய சர்வேசன், ரவிசங்கர்,ஜிராவிற்கு நன்றிகள்!

Venkat கூறுகிறார்

>படித்ததையும் கொடுத்த காசிற்கு வேலை செய்ததையுமே சாதனையாக எழுதியிருக்கிறேன்.

மணியன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆர்வமுள்ளவர்களுக்கு வேலைசெய்ய (அதில் சாதிக்கவும்) சம்பளம் கிடைக்கும் என்பது உண்மைதான்.

என்னை ஒருமுறை கித்தாப்பாக ஒரு நண்பன் "பிஸிக்ஸ் படிக்கறதால என்ன புண்ணியம்னு ஒரே வரில சொல்லு பாப்போம்" என்று கேட்டான். அதற்கு நான், "Physics is the only subject where I will be getting paid for what I like to do even otherwise" என்று சொன்னது நினைவிருக்கிறது.

Kannan கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்! உங்களின் இந்தப் பதிவை வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மணியன் கூறுகிறார்

நன்றிகள் வெங்கட்,கண்ணன்.

ramachandranusha(உஷா) கூறுகிறார்

ம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுகிறா மாதிரி இல்லே
பிரமிப்புடன்,
உஷா

மணியன் கூறுகிறார்

உஷா, உங்களையும் மாட்டிவிடவேண்டும் என்று இருந்தேன். ஆனால் முன்பே யாரோ உங்களை கூப்பிட்டிருந்தார்கள்.

நீங்கள் ஆதித்தனார் கடிதம் scan செய்ததுதான் எனக்கும் என் பழைய மணிமலரின் முகப்பை அவ்வாறு செய்து இணைக்க சிந்தனையை தூண்டியது. நன்றி.

Voice on Wings கூறுகிறார்

மணியன், உங்களைப் பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக, தொலை தொடர்ப்புத் துறையில் உங்கள் பங்களிப்புகளைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. தற்போது உங்கள் துறை மாபெரும் மாற்றங்களைக் கண்டு வருவதால், அதில் பணியாற்றுவது மேலும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் எழுத முயல்கிறேன்.

இலவசக்கொத்தனார் கூறுகிறார்

அழகான் 8. 100க்கு வாழ்த்துக்கள்!

PRABHU RAJADURAI கூறுகிறார்

தங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவிய இந்தப் பதிவிற்கு நன்றி! அழைப்பிற்கு மேலும் நன்றி!

வேலைப்பளு அதிகம் உள்ளதால் ஒரு வாரமாகவே எதுவும் எழுத இயலவில்லை.

மணியன் கூறுகிறார்

VoW, கொத்ஸ், பிரபு ராஜதுரை: வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

VoW, ராஜதுரை சார், உங்களுக்கு வசதிப்படும்போது எழுதுங்கள்.

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

மணியன்,
மணிமலர் படம் நல்லா இருக்கு.. சிறுவர் மலர்னு போட்டிருக்கீங்களே.. அதில் வந்த ஒன்றிரண்டு கதை எடுத்து பதிவிடுங்களேன்..

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ் (பூர்ணா). நல்ல குறிப்பு கொடுத்திருக்கீங்க, செய்ஞ்சுடுவோம். ஒரே வருத்தம், காலத்தின் ஓட்டத்தில் கிடைத்தது ஒரு இதழ், அதிலும் சில பக்கங்களே :(

முகப்புப் படம் வரைந்து பிரதி எடுக்க trace paperஐ பயன்படுத்தினோம்.

Unknown கூறுகிறார்

மணியன் சார்,

நூறுக்கு வாழ்த்துக்கள்...

எங்களப் பொருத்தவரைக்கும் படிக்கிறதே பெரிய சாதனைதான் :) உங்க சாதனைகள் உண்மையிலேயே பெருமைப்படத்தக்க விசயங்கள் தான்.

மணிமலர் கதைகளைப் பதிவிலும் போடுங்கள். காத்திருக்கிறேன்.

மணியன் கூறுகிறார்

அருட்பெருங்கோ, உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

/மணிமலர் கதைகளைப் பதிவிலும் போடுங்கள். காத்திருக்கிறேன்./
தாமதமானால் பயங்கர பில்டப் ஆகிவிடும் போலிருக்கிறதே !

சுந்தர் / Sundar கூறுகிறார்

உங்கள் சாதனைகள் , தொடர வாழ்த்துக்கள் .

மணியன் கூறுகிறார்

நன்றி சுந்தர்.

TBR. JOSPEH கூறுகிறார்

அழகான சொல்லாடல்களுடன் அருமையாக இருக்கிறது மணியன்...

உண்மையிலேயே ஒவ்வொன்றும் ஒரு அற்புத சாதனைதான்... முக்கியமாக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றதும்... உங்களுடைய அலுவல்களில் நீங்கள் சாதித்தவைகளும்..

வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் சாதனைகள்...

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிபிஆர் சார்.
எனது அழைப்பை ஏற்று இட்ட உங்கள் இடுகைக்கும் நன்றி.

Chandravathanaa கூறுகிறார்

மணியன்
அழகாக எழுதயிருக்கிறீர்கள்.
உங்களைப்ப ற்றிய சில தகவல்களையும் அறிந்து கொண்டேன்.

மணியன் கூறுகிறார்

நன்றி சந்திரவதனா.

siva gnanamji(#18100882083107547329) கூறுகிறார்

நிறைவான சேவை!
அன்பான வாழ்த்துகள்!

மணியன் கூறுகிறார்

சிவாஞானம்ஜி, வாராது வந்த மாமணி ,தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி !!

சிறில் அலெக்ஸ் கூறுகிறார்

மணியன்,
இத்தன நாள் கழிச்சு இப்பத்தான் பாக்கிறேன் :(

அருமையான மென்மையான ஆளுமை. உங்களை இன்னும் அதிகமாய் தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்சி.

:)

மணிமலர் அச்சு பத்திரிகையா வரவைக்க முயலலாமே!