லஹே ரஹோ லாலுபாய் !!

கடந்த திங்களன்று இந்திய இரயில்வேயின் மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. லாலுபிரசாத் யாதவ் அவர்கள் அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தமது துறையின் வளர்ச்சியையும் இலாபத்தை நோக்கி திசைதிருப்பியதைக் குறித்தும் சிறப்புரை ஆற்றியுள்ளார். ஒரு நிறுவனம் நீண்ட நாட்களாக பணக்கஷ்டத்தில் இருப்பதிலிருந்து எவ்வாறு மீட்பது என்பது பற்றியான உதாரணபாட (casestudy) வரிசையில் இது அமைந்திருந்தது. மூன்று மணி நேரம் நிகழ்த்திய இவ்வுரையில் அவர் தாம் எவ்வாறு இலக்குகளை நிணயித்துக் கொண்டார் மற்றும் அவற்றை அடைய வழிமுறைகளை எவ்வாறு திட்டமிட்டார் என்று விளக்கினார். ஒரு தேர்ந்த பேராசிரியர் போல உரையை ஒருமுகமாக நிகழ்த்தாது வினா-விடை வழியே அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக நடத்தினார். அரங்கத்தில் நடந்ததை வெளியுலகத்திற்கு வெளியிட கழக விதிகள் இடம் கொடுக்காவிடினும் ஐ.ஐ.எம் மாணவர்களின் வலைப்பதிவுகளில் அவரது நகைச்சுவையுடன் கூடிய சொற்பொழிவு திறனும் மேலாண்மைத் திறனும் பெரிதும் போற்றப் படுகின்றன.

திரு லாலு அவர்களைப் போன்று இந்திய அரசியலில் கேலி செய்யப்பட்டவர் வெகு குறைவு. அவரது நடையையும் உடையையும் கண்டு மெத்தப் படித்தவர்கள் ஏளனப் பார்வை வீசியதுண்டு. இன்றுகூட இரயில்வேயின் மாற்றத்திற்கு அதிகாரிகளே காரணம், முந்தைய அமைச்சர் நிதிஷ்குமார் எடுத்த முடிவுகளின் பலன்களை அறுவடை செய்தவர் என குறை கூறுவோர் உண்டு. பீஹாரை சீரழித்தவர் இரயில்வேயை எவ்வாறு சீரமைத்தார் என்று கேள்வி கேட்பவரும் உண்டு. ஆனால் அதிகாரிகள்தான் இம்மாற்றத்திற்கு காரணம் என்றாலும் லாலுவின் யோசனைகளும் யுக்திகளும் அவர்களை ஆட்டுவிக்க காரணமாயிருந்தது. அவரே கூறுகிறார்: "நான் வருமானத்தை அதிகரிக்க புதுவித ஆலோசனைகள் வழங்கினேன், 1.45 மிலியன் இரயில்வே தோழர்கள் அதனை நிறைவேற்றினர். என் எண்ணமெல்லாம் பயணிகளுக்கும் பொருள்போக்குவரத்திற்கும் கட்டணத்தைக் கூட்டாமல் இருக்கவேண்டும் என்பதுதான்".

இலாலுவின் முந்தைய ஆட்டம் சரியில்லாதிருக்கலாம். அரசியல் கொள்கைகளில் மாற்றுக்கருத்துக் கொண்டிருக்கலாம். செலவழிக்கத் தயங்காது ஆனால் வரவைப் பற்றி கவலைப் படாத ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் துறையை தன்னிறைவு பெற்று விளங்கச் செய்ய லாலுவின் முன்னுதாரணம் இன்றைய முக்கியத் தேவையாகும்.அவ்வகையில் அவரது சாதனையை பாராட்டுவோம், அவர்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துவோம்!

நவம்பர் 26இல் இதே கழகத்தில் நடக்கவிருக்கும் Confluence-2006 விழாவில் பங்கேற்கவரும் இவரது Bete Noire நிதிஷ்குமார் உரையைக் கேட்க ஆவல் அதிகமாயுள்ளது.

பி.கு: தலைப்பு இந்தியில் உள்ளதிற்கு மொழிப்பற்றாளர்கள் மன்னிக்கவும்.


6 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

லாலு பிரசாத் யாதவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

மேலும் இன்னொரு செய்தி!

அமைச்சர் லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறிய போது, ரயில்வே ஊழியர்கள் 63 நாள் ஊதியத்தை தீபாவளி போனசாக கோரியிருந்தனர். ஆனால் மத்திய அரசு 65 நாள் ஊதியத்தை போனசாக வழங்க முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை கடந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதால் தான் 65 நாள் ஊதியம் அளிக்க முடிந்தது என கூறினார்.
(நன்றி: தினமலர்)

Movie Fan கூறுகிறார்

மணியன்,

திரும்பவும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திச்சிருக்கிறோம்

Laloo - No lollu

சரி மிகப்பெரிய இடைவேளி ??

-- Vignesh

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன்.இந்திய இரயிவேதுறை ஊழியர்கள் உண்மையாகவே தகுதி பெற்றவர்கள். என் கணிப்பில் இந்தியாவில் மிகச்சிறந்த மின்வணிக தளம் IRCTCயின் உடையதே!

மணியன் கூறுகிறார்

வாங்க விக்னேஷ், நாம் ஒருவரும் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருப்பது ஆச்சரியம்தான்:))இனி ஏதாவது எழுதுமுன் உங்கள் பக்கம் வந்து பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சுட்டிகளுடன் முழுமையான பதிவை கொடுத்திருக்கிறீர்கள்.

இடைவெளி: நேரமின்மையும் எழுதவேண்டி கட்டாயப் படுத்தி கொள்ளாமையும் தான்.

குமரன் (Kumaran) கூறுகிறார்

மிக நல்ல விதயத்தைச் சொன்னீர்கள் மணியன் ஐயா. சாதாரணமாக லல்லுவைப் பற்றிய இந்த மாதிரி நல்ல விதமான செய்திகள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. சொன்னதற்க்கு நன்றி. விக்னேஷ் கொடுத்த சுட்டிகளையும் பார்க்கிறேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க குமரன். ஒரு மனிதனைப் பற்றிய முதல் தாக்கத்திற்குப் பிறகு பெரும்பாலோர் மீண்டும் திறந்த மனதுடன் அணுகுவதில்லை; பழைய நினைவுகளின் சாயலை விடுவதில்லை.