படப்பிடிப்பில் படபடப்பு!!

ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ப்ராட் பிட்டும் அவர் மனைவியும் நடிகையுமான அஞ்சலினா ஜோலியும் இந்தியாவில் தங்கள் படப்பிடிப்பிற்காக வந்திருக்கிறார்கள். கடத்திக் கொல்லப்பட்ட வால்ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் டானியல் பேர்ல் மனைவியாக ஜோலி நடிக்க பிட்ட் தயாரிக்கும் 'A Mighty Heart' படத்திற்காக புனேயில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இராஜஸ்தானிலும் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இவர்களைக் காண திரண்டிருந்த மக்களிடம் இவர்களின் தனி பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

கடந்த வியாழனன்று மும்பையில் அஞ்சுமான்-ஏ-இஸ்லாம் பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் தகராறு நிகழ்ந்திருக்கிறது. பள்ளி விட்டதும் தங்கள் குழைந்தைகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கும் இந்த மெய்காப்பாளர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றியிருக்கிறது.தங்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும் 'Bloody Indians' என இன அவமதிப்பு செய்ததாகவும் மும்பைகாவல் துறையில் வழக்குப் பதிந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று காவலாளிகளுக்கும் ஜாமீனில் விடுதலை அளித்து அடுத்த ஒருவாரத்திற்கு தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட பணிக்கப் பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் படப் பிடிப்பு நடத்த காவல்துறை அனுமதியும் பெறவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே பிராட் பிட் மும்பை போலிஸ் கமிஷனர் திரு ராயை சந்தித்து நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாகிஸ்தானிற்கு அருகாமையில் இருப்பதால் புனேயை தேர்ந்தெடுத்துள்ள இந்தக் குழுவினருக்கு அல் கொய்தாவின் மிரட்டல் இருப்பதால் "Y" ரக பாதுகாப்புக் கொடுக்க பட்டுள்ளது. ஆனால் இந்திய சட்டதிட்டங்களுக்கு இவர்கள் எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. இதேபோல நமது கமல், இரஜினியின் பாதுகாவலர்கள் அவர்கள் நாட்டில் நடந்து கொண்டால் இந்த அளவு சகிப்புத் தன்மை காண்பிப்பார்களா ? இந்த படப்பிடிப்பை அனுமதிப்பதன் மூலம் அல்கொய்தாவின் கவனத்தையும் வீணாக கவர்கிறோம்.

இதனிடையே இன்றைய தினசரியில் திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் இங்கு பாந்த்ராகுர்லா மைதானத்தில் டிச.3,4 இல் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலையில் இருந்து உறசவ மூர்த்திகள் கொண்டுவரப் படுவதாகத் தெரிகிறது. இவை எல்லாம் புதிய நடைமுறைகள். உற்சவ மூர்த்திகளை ஊரை விட்டு ஊர் எடுத்துப் போவதெல்லாம் சரியா எனத் தெரியவில்லை. இது சமயத்தை வணிகமயமாக்கலின் தாக்கமே. முன்பெல்லாம் கோவில் வாசலில் பிச்சைக்காரர்கள் நமது சமய உணர்வுகளை, தர்ம சிந்தனையை exploit செய்வார்கள்; இப்போது மத தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர பல்லாயிரக் கணக்கானவர்கள் திறந்த வெளியில் கூடுவது, அதுவும் பாபர்மசூதி நினைவுநாளுக்குச் சமீபம், எந்த அளவு பாதுகாப்பானது என்றுத் தெரியவில்லை.

குடியும் 'குடி'த்தனமும்

நேற்று அதிகாலை இங்கு நடந்த கார் விபத்து தொடரும் இரவுவிருந்து குடித்தனத்தின் உச்சகட்டமாக நிகழ்ந்துள்ளது. மும்பையின் இரவு விருந்துகள், திரைப்பட ஆரம்ப விழாவாகட்டும் அல்லது வியாபார வெற்றிவிழாவாகட்டும், மேல்தட்டு வர்க்கத்தின் குறியீடாக, அகங்கார வெளியீடாக நள்ளிரவையும் தாண்டி மதுவின் மயக்கத்தில் மாதுவின் அண்மையில் குடித்து கும்மாளம் போடுவது தினசரிகளின் மூன்றாம் பக்கத்தில் இடம் பெறுவதுவரை தனித்துவமானவை. சமீபத்தில் மது பண்டர்கர் இதனை இந்த விருந்துகளுக்கும் பத்திரிகையாளர் /பிரபலங்கள் /அதிகாரிகள் இவர்களிடையேயும் உள்ள பிணைப்புக்களை விவரித்து அங்கதமாக Page 3 என்ற படத்தையும் வெளியிட்டிருந்தார். வாழ்வின் முக்கியத்துவத்தை கற்பிக்காத கல்விசூழலில், உழைத்துப் பெறாத பணம் அபரிதமான இளைஞர்களின் போக்கு நாளுக்கு நாள் கவலை அளிக்கும் முகமாக உள்ளது.

சமீபத்தில் இத்தகைய விருந்துணவிற்குப் பிறகு நடந்துள்ள விபத்துக்கள்:
செப்டம்பர் 28, 2002:
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பாந்திரா பேகரி வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் ஏற்றிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது

ஆகஸ்ட் 14, 2005:
மகேந்திர கடாவ் என்ற தொழிலதிபரின் (கடாவ் சேலைகள் பெண்மணிகளுக்குத் தெரிந்திருக்கும்) மகன் மணிஷ் காவலர் ஜிதேந்திரா ரோகடே மேல் இடித்துக் காயப்படுத்திய வழக்கில் பின்னர் விடுவிக்கப் பட்டார்.

பெப்ரவரி 4, 2006:
ஸ்டான்சார்ட்(StanChart) தெற்கு ஆசியாவின் முக்கிய தலைமை அதிகாரியான நீல் சாட்டர்ஜீ ஒரு காவலாளி மேல் ஏற்றியதாகத் தொடரப் பட்டுள்ள வழக்கு.

ஜூலை 27, 2006:
அசாமா சுதிர் மடா என்ற 33 வயது NRI மனோதத்துவ வைத்தியர் மாஹிம் அருகே இருவர் மீது கார் ஏற்றியது.
நவம்பர் 12,2006:
மும்பையின் புறநகரான பாந்த்ராவில் கடற்கரையோர கார்டர் ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் மேல் 18இலிருந்து 21 வயது வரையான ஆறு இளைஞர்கள், ஒருவர் பெண், டொயொடொ கொரொல்லா காரை ஏற்றி ஆறுபேர் மரணம், ஒன்பது பேர் காயம்.
காரிலிருந்த அறுவருமே குடித்திருந்ததாக சோதனைகள் தெரிவிக்கின்றன.இத்தனை பேர் இறந்திருந்தும் அந்த இளைஞர்கள் வருத்தமடையாது இதை ஒரு சாதாரண விபத்தாகக் கருதியது இங்குள்ளோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மனிதநேயமே இல்லாமல் இந்த தலைமுறை வளர்வதை சமூகவியலாளர்கள் நம்மைப் பீடித்துள்ள வியாதியின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள்.

குடித்து ஓட்டுபவர்களுக்கெதிரான சட்டங்களும் வலுவில்லாததாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குற்றம் புரிந்தவர் பிணைப்பணத்தைக் கட்டிவிட்டு வெளியில் வரமுடிவதும் தண்டனையும் கடுமையாக இல்லாதிருத்தலும் அவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றனர். வளர்ந்த பொருளாதார நாடுகளில் குடித்து வண்டியோட்டுவது ஓட்டுநர் உரிம இரத்து வரை செல்வதால் ஒரு குழுவில் ஒருவராவது வண்டியோட்ட குடிக்காமல் இருப்பதும் சுட்டப் படுகிறது. மும்பைக் காரர்களின் சில எதிர்வினைகள் இங்கே:

குடி குடியைக் கெடுக்கும். வாகன ஓட்டியின் 'குடி'த்தனம் குடும்பங்களை கெடுக்கிறது.நம் உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பா ? சட்டம் பயில்வோரும் சட்டம் இயற்றுவோரும் சிந்திக்க வேண்டும்.

தத்தித்.. தத்தி

தத்தித் தத்தி நடந்துவரும் இந்த பாப்பாவிற்கு இன்று முதலாண்டு நிறைவு. வலைப்பதிவுகளை படிப்பதிலேயே இன்பம் கண்ட எனக்கு காலத்தின் கோலத்தாலும் காசியின் அழகான கட்டுரைகளாலும் வலைப்பதிக்கும் விபரீத எண்ணம் வந்தது சென்ற நவம்பரில் தான். நட்சத்திர பதிவர்களாக வலம் வந்த ராமச்சந்திரன்உஷாவும் தருமியும் விடுத்த Clarion call உம் ஆசைத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் மூன்று இடுகைகளை இட்டு தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டேன். சேர்ந்த நேரம் தமிழ்மணமே கலகலத்துக் கொண்டிருந்தது. தயக்கத்துடனேயே இந்தப் பதிவை ஆரம்பித்தேன்.இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும் பதிப்பவர் இடையில் ஒரே பதிவில் எழுபத்தைந்து இடுகைகளைக் கண்ட இந்த பதிவு ஒரு ஜுஜுபிதான்.

வெகுநாட்கள் மிதிவண்டி ஓட்டாதிருந்து மீண்டும் ஓட்டவருகையில் வரும் முதல் தயக்கமும் இரண்டு மிதி மிதித்ததும் கிடைக்கும் தன்னம்பிக்கையில் உலகையே வலம் வர நினைப்பதும் என் தமிழ் எழுத்துக்கு நடந்தது. பள்ளியிலே தமிழாசிரியருக்கு செல்ல மாணாக்கனாக இருந்தாலும் முப்பது வருட இடைவெளியில் ஆங்கில நுட்ப சொல்லாடல்களில் மறந்து போனதோ என நினைத்த தமிழ், நான் எழுதியதா என நானே வியக்கும் வண்ணம் ஊற்றெடுக்க உங்கள் ஆதரவும் இறையன்பும் காரணம்.பல புதிய சொற்களை தமிழ்மணம் கற்றுக் கொடுத்தது.

எந்த வகைப்படுத்தலுமின்றி கருத்தைக் கவர்ந்த, மனதை தாக்கிய செய்திகளை பகிர்தலே பெரும்பாலான இடுகைகளாக அமைந்தன. ஏதெனும் இலக்கியம் படைப்போரோ என்று பயப்படத் தேவையின்றி மே மாதத்தில் கொடுக்கப்பட்ட நட்சத்திர வாரத்தில் சற்றே சுயதம்பட்டங்களே இடுகைகளை நிறைத்தன.நான் இட்டவற்றில் மிகவும் அதிகமாக படிக்கப் பட்டது, இந்த இடுகைதான். அரசியல் நிர்ணய சபையின் வழக்காடல்களின் சுட்டி பலருக்கு பயனாக இருந்தது. அதிகம் எழுதாவிடினும், வலைப்பதிவர் என்றமுறையில் பலரது பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கருத்து பரிமாற்றங்களில் பங்கேற்க முடிந்தது. மொத்தத்தில் 'எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்'வகை பதிவாக இருந்தது. அலாஸ்காவிலிருந்து அன்டார்டிகா (இல்லை, க்ரைஸ்ட்சர்ச்) வரை தமிழ் பதிவர்களை நண்பர்களாக அடையாளம் காணும் பெருமை கிடைத்தது. உலகின் எந்த மூலையிலிருந்து செய்தி வந்தாலும் உடனே அந்த ஊர் பதிவர் முதலில் நினைவுக்கு வருகிறார்.தருமி சுட்டிய பந்தமிது எம்மை எழுத்தால் இணைத்தது.

ஒருவருடம் குப்பை கொட்டினாலும் ஒரு வலைப்பதிவர் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதது நான் செல்ல வேண்டிய தூரத்தை நினைவூட்டுகிறது :)))