சோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் ?

தற்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் பணிக்காலம் ஜூன் 2007 இல் முடிவடைகிறது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து ஆதரவு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை டாக்டர் கரண்சிங்கின் பெயரையும் பிஜேபி துணை குடியரசுத் தலைவர் திரு.பைரோன்சிங் ஷெகாவத் பெயரையும் முன் வைத்துள்ளன. ஆனால் கு.த தொகுதியில் இருவருக்குமே உறுதியாக வெற்றி வாய்ப்பிற்கான வாக்குகள் எண்ணிக்கை இல்லாததை உணர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக மக்களவை சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பெயரை அரசியல் கட்சிகளிடம் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. திரு எச்சூரி இதுபற்றி பிஜேபி தலைவர்களை கலந்தாலோசித்திருப்பதாக தெரிகிறது.திரு. பிரகாஷ் கராட் சமாஜ்வாடி,தெலுகுதேசம்,NCP, RLD கட்சிகளுடனும் அவர் மனைவி பிருந்தா கராட் BSPயின் மாயாவதி, அதிமுக பொதுசெயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் பேசவிருப்பதாகத் தெரிகிறது.

நாட்டு நடப்பையும் குடியரசு தலைவர் தொகுதியின் எண்ணிக்கைகளையும் கணக்கில் கொண்டால் ஒரு பொதுவுடைமை கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக வர நல்ல வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மத்திய தேர்தலில் மூன்றாம் அணி அமையுமானால் மார்க்ஸிஸ்ட் ஜனாதிபதியின் தயவில் அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்கவும் இயலும். இன்றுபோல் பின்னாலிருந்து ஆட்டி வைக்க வேண்டியதில்லை.

திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜார்கண்ட் தீர்ப்பின்போது உச்சநீதிமன்றத்துடன் முரண்பட்டு குடியரசுதலைவரின் சுட்டுதலுக்கு ( Presidential reference) வேண்டியவர். அவர் பணியாற்றும் சாந்திநிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஊதியம் (Office of Profit) பெறுவதாக குற்றம் சாட்டப் பட்டவர். இவரது தந்தை நிர்மல் சாட்டர்ஜி பிஜேபியின் முன்னோடியான அகில் பாரதீய இந்து மகாசபையின் தலைவராக இருந்ததும் குறிப்பிட தகுந்தது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

தீபாவளித் திருநாள்... கதிரவன் எழுமுன்னே படுக்கையிலிருந்து எழும் நாள். நாளும் ஒரு புத்தாடையா எனக் கடியும் தந்தையே அரசின் கடன், கோஆப்டெக்ஸ் தள்ளுபடியில் புத்தாடை அணிவித்து மகிழும் நாள். வருடத்தின் வியர்வை யெல்லாம் தொழிலாளர் போனஸாகப் பெறும் நாள். ஆண்டுமுழுமையும் செய்யும் விற்பனையில் 40 விழுக்காட்டை இருவாரங்களில் காணும் பொருளாதார திருவிழா. சிறுவர்களின் பட்டாசு வெடிப்பில் உற்சாகம் காணும் நாள்.முதல்நாள் முதல் காட்சிக்கு போட்டி போடும் 'மச்சிஸ்'. அம்மா செய்த MTR குலோப்ஜாமுனுடன் அடையாறு ஆனந்தபவன் கோதுமை அல்வா போட்டிபோடும் இனிப்புகளின் ஊர்வல நாள். மாமனாரின் தலையிலும் பட்ஜெட்டிலும் துண்டு போடும் தலை தீபாவளி திண்டாட்டங்கள்.

தீபாவளி என்றால் தீபங்களின் அணிவகுப்பு என்றிருக்க தமிழகத்தில் மட்டும் நாம் தீ கக்கும் பட்டாசுகளின் படையெடுப்பாக கொண்டாடுகிறோம். நரகாசுரனை கண்ணன் வெற்றி கொண்ட அமாவாசைக்கு முந்திய சதுர்தசி தினத்தில் அந்த அசுரனின் மரண தருவாய் ஆசையை நிறைவேற்றுமுகமாக தமிழகத்தில் கொண்டாடுகிறோம். இதை கேரளத்தில் தோல்வியை தழுவிய மகாபலியின் இறுதி ஆசை நிறைவேற்றுமுகமாக ஓணக் காலத்தில் மகாபலிக்கு வரவேற்பு நடத்துவதற்கு இணையாகக் கூறலாம். முக்கியமாக இந்நாளில் எந்த தனி பூசையும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

இங்கெல்லாம் இன்றிலிருந்தே தீபாவளி துவங்கி விட்டது. முதல்நாளான இன்று தன் திரஸ் என்று நம்மூர் அட்சய திருதியை போல கொண்டாடுகிறார்கள். தங்கமும் வைரமும் வாங்க கடைகளில் ஒரே கூட்டம். தீபாவளியை அமாவாசை இரவன்று தீபங்களை ஏற்றி இலக்குமி பூசை செய்து கொண்டாடுகிறார்கள். தவிர இராமன் ஜெயராமனாக அயோத்தி திரும்பிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். கொல்கொத்தாவில் இது காளிபூஜா.சீக்கியர்கள் தங்கள் குரு ஹர்கோபிந்த்ஜி குவாலியர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள். விக்கிபீடியாவில் இது பற்றி ஒரு சுவையான கதை கூறப் பட்டுள்ளது.குஜராத்திகளுக்கும் ஜைனர்களுக்கும் இன்று புத்தாண்டு தினம். ஜைனர்கள் மகாவீரரின் மோட்சநாளாகவும் கொண்டாடுகிறார்கள்.

எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! கூடவே நமது நோன்பிருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரம்ஜான் வாழ்த்துக்கள்!!

சயனைட் - அந்த கடைசிநாட்கள்

இராஜிவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசு மற்றும் சுபா பெங்களூரில் கழித்த நாட்களையும் கடைசியில் அவர்களது பரிதாப முடிவினையும் அடிப்படையாகக் கொண்டு சென்னை திரைப்படக்கல்லூரி முன்னாள் மாணவரும் கன்னட இயக்குனருமான திரு AMR ரமேஷ் 'சயனைட்' என்னும் கன்னடப் படத்தை வெளியிட்டிருக்கிறார். இங்கு நடக்கும் ஆசிய திரைப்பட விழாவில் இந்தியப் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மராத்தி நடிகர் இரவி காலே சிவராசனாகவும், நடிகை மாளவிகா சுபாவாகவும், நடிகை தாரா மிருதுளாவாகவும் கன்னட நடிகர் ரகு இரங்கநாத்தாகவும் அசல் பாத்திரங்களை உருவிலும் நடையிலும் ஒட்டி நடித்திருப்பதாக புகழுரைகள் சொல்கின்றன. பாடல்களே இல்லாத 115 நிமிட படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கு பேட்டியளித்த இயக்குனர் ரமேஷ் இதனை இந்தியில் அமிதாப்பை வைத்து எடுக்க திடமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் "The film is not about Rajiv Gandhi, but about Sivarasan and Shubha who are on the run after the assassination to escape the police dragnet. It is an attempt on my part to authentically capture the human drama that ensues in the last 20 days in the lives of the LTTE assassins" என்று சொல்கிறார்.

யாரையும் குறைசொல்லாது, கொலையாளிகளின் கடைசி மன அழுத்தங்களை சித்தரிப்பதாக அவர் கூறுவதை படத்தைப் பார்த்த நமது கர்நாடக பதிவர்கள் சரியா என பதியவேண்டும். குறைந்தது பின்னூட்டத்திலாவது தெரிவிக்கலாம்.