சசி தரூர்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலாளராக இருந்து வரும் கானாவின் கொஃபி அன்னனின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. இது அவரின் இரண்டாவது பணிக்காலமாகும். ஆகவே அவரது பதவியிடத்தை நிரப்ப உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இம்முறை பிராந்திய சுழற்சிபடி ஆசிய குடிமகன் ஒருவர் அப்பதவியை ஏற்க இந்தியா ஆசியநாடுகளை அணுகி வருகிறது. இந்த சூழ்நிலையில் சசி தரூர் என்ற தென்னிந்தியரை இந்திய அரசு கடந்த வியாழனன்று பரிந்துரைத்துள்ளது. எப்போதும்போல பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கோஃபி அன்னனும் புதிய செயலாளர் ஐநா வில் வேலை செய்யாத வெளிமனிதராகவும் ஆசிய குடியுரிமை பெற்றவராகவும் இருத்தல் நலம் என மொழிந்திருக்கிறார். இந்நிலையில் பலவேறு அரசுகளின் பரிந்துரைகள் மற்றும் ஆதரவு திரட்டல் மூலம் அக்டோபர் இறுதியில் யார் பெயர் முன்மொழியப்படும் எனத் தெரிய வரும்.

தற்சமயம் ஐ.நா வில் உதவி செயலாளராக (Under Secretary General) பணிபுரியும் தரூர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். 1956இல் இலண்டனில் பிறந்த இவரது தந்தையார் ஒரு பத்திரிகை அதிகாரி.தாயார் இல்லத்தரசி. பள்ளிக்கல்வியும் பட்டக்கல்வியும் மும்பையிலும் கொல்கொதாவிலும் தில்லியிலுமாக முடித்து தில்லியின் பிரபல செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். பாஸ்டனின் டஃப்ட்ஸ்(Tufts University) பல்கலையில் மேற்படிப்புக்காக சென்றார்.இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகளையும் வெளியுறவுத்துறையில் டாக்டர் பட்டமும் தனது 22 வயதிலேயே முடித்தார்.

1978 வருட முதல் ஐநாவின் சேவையில் பணியாற்றிவரும் தரூர் வெவ்வேறு நிலைகளில் பணிக்களங்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது மொழியாற்றலின் அடிப்படையில் ஐநாவின் தகவல் மற்றும் செய்தி ஒருங்கிணைப்பாளராக உதவி பொது செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். ஐநாவின் பன்மொழி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். நிறைய புத்தகங்கள், சிறுகதைகள்,கட்டுரைகள்,விமர்சனங்கள், இலக்கிய ஆய்வுகள் எழுதியுள்ளார். நமது இந்து நாளிதழிலும் பத்தி எழுத்தாளராக உள்ளார். நமது இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை ஆய்ந்துள்ளார். தவோஸில் நடந்த உலக பொருளியல் குழு அவரை வருங்கால உலகளாவிய தலைவராக தெரிந்தெடுத்துள்ளது.

அவர் எழுதிய எட்டு புத்தகங்களில் இந்திய வெளியுறவு கொள்கைகளை ஆராய்ந்த 'Reasons of State' (1982), அரசியலைக் கிண்டல் செய்யும் 'The Great Indian Novel (1989)', 'The Five-Dollar Smile & Other Stories' (1990), பாலிவுட்டைத் தழுவிய 'Show Business' (1992) இந்தியாவின் பொன்விழா கொண்டாட்டங்களின் போது வெளியான 'India: From Midnight to the Millennium' (1997), மற்றும் நாவல்கள் 'Riot. A Love Story'(2001) and 'Nehru, the Invention of India' ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.

திலோத்தமை என்ற பத்திகையாளர் மனைவியும் இஷான், கனிஷ்க் என்ற இரு மகன்களையும் கொண்டது அவரது சிறு குடும்பம். சிறுவயதிலேயே இந்தியாவை விட்டு வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வரும் தரூர் இந்திய பண்புகளில் ஆழமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பதும் இந்தியக் கலாசாரத்தின் தூதுவனாக விளங்குவதும் குறிப்பிடத் தகுந்தது.வரும் மாதங்களில் அவரது தேர்வு தேறுமா எனப் பார்ப்போம்.

நான் அப்பாவாகப் போகிறேனா ? தேன்கூடு போட்டி


நேற்று இல்லாத மாற்றம் என்னது ? சிலநாட்களாகவே நான் நானாக இல்லை. குள்ளமணி என்று கேலிபேசி முதல் பெஞ்சில் உட்காரச் சொன்ன என்னை இன்று மிஸ் கூப்பிட்டு பின்னால் இருப்பவர்களுக்கு மறைக்கிறதாம் எனச் சொல்லி இரண்டு பெஞ்ச் தள்ளி உட்கார வைத்த போது நான் மட்டும் தான் காம்ப்ளான் சாப்பிடுகிறேனா என நினைத்தேன். பக்கத்து வீட்டு சேகர் "டேய், உனக்கு மீசை வந்திருக்குடா" எனச் சுட்டிக்காட்டியபோது மீசை முளைக்காத பயல்களைப் பார்த்து ஒரு அலட்சிய பார்வை வீச பெருமையாயிருந்தது. அரும்பு மீசை வைத்துக் கொள்வது சிவாஜி போலவா அல்லது எஸ் எஸ் ஆர் போலவா எனக் குழம்பியபோது "மபொசி மீசை வைத்துக் கொள், அப்போதுதான் ஐஸ்கிரீமிற்கு என்னுடன் போட்டி போட மாட்டாய்" என என் தங்கை கிண்டலடித்த போது எனக்கு ஏன் கோபம் வருகிறது ?

அன்று கூட காலையில் தொலைபேசி அடிக்கிறதே என எடுத்து"ஹலோ" என்றவுடனேயே மறுமுனையிலிருந்து " சார், நான் இன்றைக்கு ஆபிஸிற்கு வரமுடியவில்லை... " என ஆரம்பித்தவரிடம் " சார், சார், நான் _________ரின் பையன் பேசுகிறேன். அப்பா, வாக்கிங் போயிருக்கார், வந்தவுடன் பேசச் சொல்கிறேன், நம்பர் கொடுங்க சார்.. " என்றவுடன், " அடடா, உன் குரல் அவருடையது போலவே இருக்கிறதே " என்றார். நேற்றுவரை "என்னப்பா, குழந்தை" என்றவருக்கு இன்று என்குரல் அப்பாவினுடையதைப் போல எப்படி மாறியது? இந்த ஆச்சரியத்தை அன்று மாலையே போனில் பள்ளியிலிருந்து அப்பா பேசுவதைப் போல பேசி அம்மாவை ஏமாற்றி, இரவில் எல்லோருடனும் பகிர்ந்து சிரித்ததை நினைத்தால் உள்ளூர பயமாக இருக்கிறது. தங்கை எப்போதும் பழகிவரும் தோழர்களைப் பார்த்தால் இப்போது ஏன் வில்லன்களாகத் தெரிகிறார்கள் ? அவள் லேட்டாக வந்தால் அப்பாகூட கோவித்துக் கொள்ளாதபோது எனக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது ? அட, வாசலில் காய்கறிக்கடைகாரன் கூட அம்மாவை ஏதாவது இளக்காரமாக சொன்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லையே. சாது, சாது என்று பெயர் வாங்கிய நானா இப்படி சண்டைக்கு நிற்கிறேன் ? என்னாச்சு எனக்கு ? ஒல்லிப்பிச்சான் உடம்பில் சதை கூட போட ஆரம்பித்திருக்கிறதே. அந்த மாருதி ஜிம் அண்ணாக்களைப் போல உடம்பை ஷேப் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் 'அப்பா' மாதிரி ஆகப் போகிறேனா ?

ஆனால் அப்பா எவ்வளவு நல்லவர் ? கடவுள் பக்தியுடன் ஒழுக்க சீலர். நான் அவர் மாதிரி இல்லை. நேற்று பார்த்த ஜெயமாலினி டான்ஸ், கனவிலும் வந்து அவள் எனக்கு முத்தமெல்லாம் கொடுத்தாளே, சீச்சீ, நான் ரொம்பக் கெட்ட பையன். கடவுளே, எனக்கு இந்த கெட்ட புத்தியை மாத்திக் கொடு, நான் நல்ல 'அப்பா'வாக இருக்க வேண்டும். இராத்திரி வேட்டியெல்லாம் கறையாகி விடுகிறதே, அம்மா கவனித்திருப்பாளோ, தினமும் வேட்டியைத் துவைக்கப் போடச் சொல்கிறாளே தெரிந்திருக்குமோ ? அவமானமாக இருக்கிறதே. பக்கத்து வீட்டு வசந்தா எவ்வளவு குண்டு, கறுப்பு.. எத்தனையெல்லாம் அவளை கலாட்டா செய்திருக்கிறேன். அவளே தேவிகா போலத் தெரிகிறாளே. போனமாதம்வரை அவளிடம் நோட்ஸ் கேட்டு வாங்கியவன் இன்று அவளுடன் பேச ஏன் தயக்கமாக இருக்கிறது ? அவள் அழகாயிருக்கிறாளே என நான் நினைத்தது அவளுக்குத் தெரிந்துவிடும் என்றா ?

இந்த அப்பா, ஆனாலும் ரொம்ப நல்ல அப்பாவாக இருக்காரே. என்னாலெல்லாம் அப்படி இருக்க முடியாது. எஸ் எஸ் எல்சி பாஸ் செய்ததிற்கு பசங்க கூட திருட்டு 'தம்'அடித்தோமே,அதெல்லாம் இல்லாமல் அப்பா லைப் வேஸ்ட். இந்த கோவிந்தனுக்கெல்லாம் பாக்கெட்மணி கிடைக்கிறது; நமக்கு வீட்டிற்கு வாங்குவதில் அடிக்கும் கமிஷன்தான்.இதெல்லாம் திருட்டு கிடையாது; வேலைக்குக் கூலி, கொடுக்கலைன்னா நாம எடுத்துக்க வேண்டுயதுதான்.முதலில் கோவிந்தன் கேர்ள்ஸ்க்கு ஐஸ்க்ரீம் பார்லரில் ட்ரீட் கொடுக்கும்போது பொறாமையாக இருக்கும். இப்போது அவனுடன் கூட்டு சேர்ந்தாச்சு. முதல்ராங்க் வாங்கும் மயில்சாமியும் என் ஃப்ரெண்ட்தான், ஆனால் அவனும் என்னை மாதிரி ஒன்னுமில்லாதவனாச்சே, என்ன பிரயோசனம் ?

அப்பாதான் மார்க்கெல்லாம் கம்மியாகிறதேடா என்று கவலைப் படுகிறார். மார்க்கெல்லாம் யாருக்கு வேணும், முக்கியமான ஆட்களைத் தெரிந்திருந்தால் போதும். இவருக்கு முடியாது, பின்னே, இவ்வளவு 'நல்லவராக' இருந்தால் ? ஆனால் எனக்கும் இது ஆச்சரியம் தான். நன்றாகத்தானே படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாள் சுலபமாக இருந்த பாடங்கள் ஏன் போர் அடிக்கின்றன ? மறந்து போகிறதே ? ஒருவேளை உடற்பயிற்சி செய்து உடல் வளர்த்தால் மூளை குறையுமோ ? அப்படியெல்லாம் ஆகாமல் மீனாட்சிதான் காப்பாத்தவேண்டும். ஆமாம், நான் 'அப்பா'வாகிக் கொண்டிருக்கிறேன். நானும் நல்ல 'அப்பா' ஆக வேண்டும்.

கலாம் தோ கமால் ஹை!!

என்ன, ரொம்பநாளாகி விட்டதே என்று நமது குடியரசுத் தலைவரின் வானகச் சாதனையை பதியலாம் என கடந்த இரண்டு நாட்களாக முயன்று பிளாக்கர் தடுக்கியது. இன்றாவது பதிகிறதா எனப் பார்க்கிறேன். அட, வேறு யாரும் இதனை பதிந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது சிறிது வருத்தமே.

அதிபர் APJ அப்துல் கலாம் அவர்கள் இன்று (08/06/06) காலை இந்தியன் விமானப் படையின் அதிநவீன சுக்கோய்-30 ரக சண்டை விமானத்தில் புனேயின் லோஹெகான் விமானதாவளத்திலிருந்து பறந்து சரித்திரம் படைத்திருக்கிறார். இந்திய முப்படைகளின் சுப்ரீம் தளபதியான இந்திய ஜனாதிபதி இந்த காற்றில் ஒலியின் வேகத்தை விட வேகமாக செல்லக் கூடிய நவீன விமானத்தில் விங் கமாண்டர் அஜய் ரத்தோரின் உடன் செல்லும் மாலுமியாக 30 நிமிட வான்பயணம் (Sortie) மேற்கொண்டார். இச்சாதனை மூலம் ஒரு இந்திய விமானப்படையின் சண்டைவிமானத்தில் முதலில் பயணித்த மிக வயதான இந்திய குடிமகன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதேபோல உலகின் மிக உயர்ந்த சண்டைப் பிரதேசமான சியாச்சென் பனிச் சிகரத்தை எட்டி போர்வீரர்களுடன் கலந்து கொண்ட, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் சென்று கடலின் ஆழம் கண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இராணுவம்,விமானப்படை, கப்பற்படை என மூன்று படைகளிலும் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் மூட்டியும் இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழும் அப்துல் கலாம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் வந்தனங்களும் இவ்விடுகை மூலம் தெரியப் படுத்துவோம். சலாம் நமஸ்தே, கலாம்!!