விக்கிப்பீடியாவிற்கு பத்தாவது பிறந்தநாள் வாழ்த்துகள் !!
மனிதர் தாம் பெற்ற அறிவை பகிர்வதில் பண்டைக்காலத்திலிருந்தே பல தடைகளை உண்டாக்கி யிருந்தனர். சாதி அல்லது இனத்தாலோ, செல்வநிலை அல்லது சமூகநிலை காரணங்களாலோ, மொழியாலோ ஒருவரின் அறிவுத்தேடல் தடைபட்டிருந்தது. உலகின் எந்த ஒருவரின் அறிவும் மற்ற எல்லோருக்கும் இத்தடைகளின்றி கட்டற்ற முறையில் பரவிடவும் சேமித்திடவும் உருவான ஓர் இயக்கமே விக்கிப்பீடியா இயக்கமாகும். 2001ஆம் ஆண்டு ஜிம்மி வேல்சும் லாரி சாங்கரும் உருவாக்கிய விக்கிப்பீடியா இன்று பத்தாண்டுகளை நிறைவு செய்கிறது. உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள தன்னார்வலர்கள் எவ்வித நிதி எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் காப்புரிமங்களைத் துறந்து பொது சேமிப்பாக பங்களிக்கும் ஓர் கட்டற்ற கலைக்களஞ்சியமாக விரிந்திருக்கும் விக்கிப்பீடியாவில் இணைய சேவை உள்ள அனைவரும் முற்றிலும் திறந்தமுறையில் படிக்கவும், தாம் கண்ட பிழைகளைத் திருத்தவும் இயலும்.
விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் மட்டுமே 35 இலட்சம் கட்டுரைகள் பல்வேறு துறைகளில் எழுதப்பட்டுள்ளன. துவக்கத்தில் ஆங்கிலத்தில் மிக வேகமாக வளர்ந்த விக்கிப்பீடியா இன்று உலகின் 270 மொழிகளில் 1.7 கோடி கட்டுரைகளுடன் அறிவுபரவலை சாத்தியப்படுத்த முனைந்துள்ளது. உலகின் ஐந்தாவது மிகவும் பார்க்கப்படும் இணையதளமாக இந்த குறுகிய காலத்தில் வளர்ந்துள்ளது. தனது தனித்தன்மையை காப்பாற்றுமாறு விளம்பரங்களை அறவே தவிர்த்து வருகிறது. தன்னார்வலர்களின் கொடைகளின் மூலம் தனது நிதித் தேவைகளை சந்தித்து வருகிறது. 2010ஆம் ஆண்டில் 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது.
இந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு, மராத்தி, தமிழ், வங்காளம், மலையாளம், கன்னடம் , பஞ்சாபி, போஜ்பூரி மற்றும் உருதுவில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தமிழில் இன்றுவரை 27,000 கட்டுரைகள் உள்ளன. இந்த ஆண்டு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்தில் இந்திய உள்ளடக்கத்திலும் சிறப்பு கவனம் செலுத்த விக்கிப்பீடியாவினை நிருவகிக்கும் விக்கிமீடியா பவுண்டேசன் தீர்மானித்துள்ளது. இதற்காக இந்தியாவில் ஓர் அலுவலகத்தை நிறுவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விக்கிப்பீடியாவின் தமிழ்ப்பதிப்பு, தமிழ் விக்கிப்பீடியா, செப்டம்பர் 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஏறத்தாழ 24,000 பயனர்கள் பதிந்திருந்தாலும் ஏழு ஆண்டுகளில் ஈடுபாட்டுடன் பங்களித்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே. இயங்குதளத்தில் தமிழ் கணிமை, தமிழ் தட்டச்சு என்பன சிலத் தடைகளாக இருந்தன. தற்போதைய இயங்குதளங்கள் யாவையுமே தமிழ் ஒருங்குறிக்கு அடிப்படை ஆதரவு நல்குகின்றன. இவ்வாண்டில் தமிழ் விக்கிப்பீடியா இணையப்பக்கத்திலேயே தமிழ் தட்டச்சிற்கான கருவி, எவ்வித மூன்றாம் மென்பொருள் தேவையில்லாமலே, இணைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் தன்னார்வலர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் என நம்புவோம்.
விக்கிப்பீடியாவில் உங்கள் அறிவுக் கொடையை தருதல் சிறந்த தொண்டாகும். நீங்கள் துறை வல்லுனராகவோ தமிழ் அறிஞராகவோ இருக்கத் தேவையில்லை. இது சாதாரணர்களால் தொகுக்கப்படும் கலைக்களஞ்சியம். புகுபதிகை (login) செய்யாமலே நீங்கள் காணும் பிழைகளைத் திருத்தலாம். உங்கள் திருத்தங்கள் தவறாக கட்டுரையை பாழாக்கினாலும் அதனை மீள்விக்க முடியும் என்று நம்பிக்கைக் கொள்ளுங்கள்.பல்வேறு துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அனைவரும் பங்கெடுப்பதாலேயே உண்மையிலேயே பன்முகம் கொண்ட அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கிட இயலும்.
ஆங்கில விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகள் நிறைவு கொண்டாட்டங்களின் அங்கமாக சென்னையில் எதிர்வரும் தை ஒன்றாம் நாள் (சனவரி 15, 2011) அன்று குரோம்பேட்டை எம்.ஐ.டி வளாகத்தில் ஓர் விக்கிப்பீடியா சந்திப்பு நிகழ உள்ளது. இது குறித்த அறிவிப்பினை இங்கு காணலாம். அங்கு விக்கிப்பீடியாவின் பொதுவுடமைப் புலமைச்சொத்து இயக்கத்தில் ஆர்வம் உள்ள அனைவரையும் வருக , வருக என வரவேற்கிறேன்.
பத்தாண்டுகளில் ஆங்கில விக்கிப்பீடியா 35 இலட்சம் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியர்களின் எதிர்பார்ப்பு பத்தாண்டுகளில் தமிழில் 3.5 இலட்சம் கட்டுரைகளாவது இருக்க வேண்டும். அது உங்கள் கையில்தான் உள்ளது. வாரீர், வந்து உங்கள் அறிவுக்கொடையைத் தாரீர் !!