நன்றி சொல்வேன்!


நான் படைப்பதினால் என் பெயர் இறைவன் என்றான் காவியத் தாயின் இளையமகன் கண்ணதாசன். நாமும் அந்த இறை தொழிலை செய்து விட்டு.. அட, சாமியாடிவிட்டு சாமி கீழிறங்க வேண்டிய நேரம் வந்தாச்சு. கற்பூரத்தைக் கொளுத்தி அணைச்சுடவேண்டியதுதான்.

நட்சத்திர வாரம் எனக்களிக்கப் பட்டபோது, 25 இடுகைகளைக் கூட இட்டிருக்காத என்னை எவ்வாறு மதி தெரிந்தெடுத்தார் என வியந்தேன். ஆனால் நட்சத்திர வாரம் என்பதே ஒரு வடமிழுத்தல்(kickstart) என்பதை இந்த வார இறுதியில் புரிந்து கொண்டேன். ஒருமாதம் முன்னறிவிப்பு இருந்தும், சராசரி தமிழனாய் கடைசி நிமிடத்திலேயே பரபரத்து பதிந்து சற்று எதிர்பார்த்த அளவில் செய்ய முடியவில்லை. இதைத் தவிர மர்பி விதிப்படி எப்போது வேலை வரக்கூடாதோ அப்போதுதான் அலுவலகத்திலும் வேலைபளு. நடுவில் ஒருநாள் பின்னூட்ட செட்டிங்கில் வேறு கோளாறாகி வலைப்பதிவரின் எரிச்சலுக்கும் காரணமானேன். நட்சத்திர வாரத்தில் இடுகைகளின் வெளியீட்டு கால இடைவெளி மேலாண்மை, பின்னூட்டங்களின் மேலாண்மை என ஒரு சிறிய நிகழ்ச்சி ஒருங்கமைப்பு (Event Management) பணி போன்றது. நானிட்ட இடுகைகளை விட அவற்றின் பின்னூட்டங்களே நான் சொல்லவந்த விதயத்தை முழுமை செய்தன.

பத்துநாட்களுக்கு ஒரு இடுகை இடுபவன் இந்த ஒரு வாரத்தில் பத்து இடுகைகள் இட்டிருக்கிறேன். இன்னும் பத்து இடுகைகள் எழுத விதயம் கிடைத்துள்ளது. வரும் வாரங்களில் வாரம் இரண்டாவது இடவேண்டும் என எண்ணியுள்ளேன். ஏற்கெனவே தொலைப்பேசி புள்ளிவிவரங்களைக் கொடுத்து போரடித்திருப்பதால் திரும்பவும் ஹிட் கௌண்டர் விவரங்களை சொல்லி வெறுப்பேற்றவில்லை. ஆனாலும் எண்ணிக்கையில் பார்வையிட்டவர்களும் பின்னூட்டமிட்டவர்களும் அதிகமாயினர். தவிர மிக நெருக்கமான பரிவையும் நட்பையும் உணர்ந்தேன். அவை எண்ணிக்கை கணக்கால் அளவிடவியலாது.

இடுகைகள் நானிருந்த சில ஊர்களை நினைவு கூர்ந்தன. அங்கு வாழ்ந்த வலைப்பதிவர் நினைவுகளையும் அவை கிளறி விட்டன என பின்னூட்டங்களால் அறிந்தேன். அந்தந்த ஊர்களின் தன்மையை சொல்ல நினைத்து சொந்த நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன். அதனால் அவை ஒரே தன்மையானவையாக போய்விட்டது.

தமிழ்மணத்தில் சிறந்த சிந்தனைகளையும் ஆக்கங்களையும் காண்கிறேன். ஆனாலும் ghetto மனப்பாங்கு ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்வதை தடுக்கிறது. திறந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டால் நம் சிந்தனைகளை மேலும் செம்மைப் படுத்தலாம்; செயலாக்கலாம். காதலுக்கு மரியாதை, பெற்றவர் சம்மதம் என்றால் கருத்துக்கு மரியாதை அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதில்தான். கடினம்தான், இயலாதது இல்லை. கூடி வாழ்வோம், கோடி நன்மை.

முடிவில் என் பதிவுகளை தொடர்ந்து படித்த, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்கள் , இந்த வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?

விவரமறிந்த வயதிலும் விடலைப்பருவத்திலும் வாழ்ந்த ஊர்கள் சொந்தம் கொண்டாடினாலும் கோவையின் மையப்பகுதியில் தேரோடும் இராசவீதி/கருப்ப கௌண்டர் வீதியில் கழிந்த இளமைநாட்கள், வீட்டிலிருந்து பொறியியல்கல்லூரி சென்ற நாட்கள் என இனிமை சேர்த்ததும் ஆலைகள் வைப்போம்; கல்விச்சாலைகள் வைப்போம் என்ற பாரதியின் கூற்றிற்கேற்றவாறு பஞ்சாலைகளும் பொறியியற்கல்வி நிறுவனங்களும் நிறைந்ததுமான எங்கூரு கோயம்பத்தூரு தானுங்கோ :)

நான் படித்த முதல் பள்ளி கரடிகோவில் நகராட்சி பள்ளியாகும். அப்போதெல்லாம் பள்ளி ஒருவேளைதான். மதியம் சாப்பாட்டிற்கு வந்தால் விகடனில் துப்பறியும் சாம்பு, கல்கியில் வாண்டுமாமாவின் அந்த கால ஹாரிபாட்டர் என சித்திர தொடர்களை, முதலில் எழுத்துக்கூட்டி, பிறகு சரளமாக படிப்பேன். என்னை படிக்க ஊக்குவித்தது அந்த தொடர்கள் தான். அந்த சித்திரக் குள்ளன் இன்னும் என் மனதில் இருக்கிறான். வீட்டில் பசுமாடு இருந்ததால் பருத்திகொட்டையை ஊறவைத்து அதில் புண்ணாக்கை கலந்து அதற்கு கொடுப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு (கூட மாட்டுக்காரர் இருப்பார்). மாட்டுப்பொங்கல் அன்று அதற்கு வண்ணம் பூசி, சிங்காரித்து மாட்டுக்காரருடன் கோவில் சென்று திரும்புவதும் நான் விரும்பிய செயல்.என் வாரிசுகள் மாடுகளைத் தெருவில் காண்பதோடு சரி. மாட்டுச் சாணியை உருண்டையாக்கி காயவைத்து ஆறுமாதத்திற்கொருமுறை தீயிட்டு வெண்ணீறு செய்வோம். வெளியிலிருந்தெல்லாம் வாங்கியதில்லைஅதே போல வேண்டும்போது நெல்லை வீட்டிலேயே வைத்து புழுக்குவோம். இவையெல்லாம் கிராமத்து மண்ணிலிருந்து வந்துள்ள நிறைய பதிவர்களுக்கு சாதரணமாக இருக்கும். ஆனால் நகரவாசியான எனக்கு இவையெல்லாம் இனிய நிகழ்வுகள். அதிலும் நான்தான் இத்தகைய தலைமுறைக்கு கடைசி சாட்சி என எண்ணும்போது இந்நிகழ்ச்சிகள் எனக்கு மனதிற்கு நெருக்கமானவையாகின்றன.

எங்கள் நகர தெய்வம் கோனியம்மன் எங்கள் குலதெய்வமுமாகும். மாசிமாதம் தீகுண்டம் இட்டுவிட்டால் யாரும் ஊரை விட்டு போகமாட்டோம். இதுவரை நானும் அவ்வாறே. பெரும்பாலான வருடங்கள் ஊரிலேயே இல்லை என்பது வேறு விதயம் :)) தேர்திருவிழா பார்க்க தேர்முட்டி(தேர்நிலை) அருகிலிருந்த எங்கள் வீட்டிற்கு உற்றமும் சுற்றமும் கூடுவர். அதனால் எங்கள் வீட்டு விழா போல கொண்டாடுவோம். அனைவருக்கும் பானகம், நீர்மோர் கொடுப்பது என்னைபோல இளசுகளின் வேலை. தேர்முட்டி கோவை டவுன்டௌனின் முக்கிய இடமாதலால் பெரும்பாலான அரசியல் கூட்டங்கள் அங்கு நடக்கும். விரும்பினாலும் இல்லையென்றாலும் அனைத்து உரைகளையும் கேட்க வேண்டிய கட்டாயம். இப்போது நெரிசல் அதிகமாயிருப்பதால் புறநகர் பகுதியொன்றிற்கு வந்து விட்டோம். நொய்யலாற்றின் கரையில் அமைந்த பட்டீஸ்வரம் எனும் பேரூருக்கு ஆருத்ரா அன்று ஒரு பிக்னிக் போல காலையில் சென்று மாலையில்தான் திரும்புவோம். மதியம் சாப்பாடு அங்கேயே ஏதாவது ஒரு மடத்தில் போடுவார்கள். மருதமலையையும் அனுவாவி சுப்ரமணியரையும் சக வலைபதிவர்கள் பதிந்துள்ளனர்.கொங்குநாட்டு கோவில்கள் என்று இன்னொரு இடுகைக்கு வண்டி விதயம் கிடைக்கிறது.

எங்கள் பூர்வீகம் எனச் சொல்லக்கூடியது காங்கேயம் ஆகும். அதனருகில் 8 கி.மீயில் அமைந்திருக்கும் சிவமலையில் வீற்றிருக்கும் முருகனும் குலதெய்வம் தான். அருணகிரியின் பாடல்களில் வரும் சிவமலை, சிவகிரி என்பன இத்தலத்தைக் குறிக்கும் எனவே நினைக்கிறேன். ஆனால் அவர் பாடலுக்கு உரை எழுதுபவர்கள் சிவமலை பழனியை குறிப்பது என குறிப்பிடுகிறார்கள். ஆய்வு மாணவர்கள் விளக்க வேண்டும். இந்தக் கோவிலில் ஒரு வினோத வழக்கம். அங்கு முருகன் எதிரில் உள்ள கம்பத்தில் எந்த பொருள் கட்டப் பட்டதோ அதன் விலை அந்த வருடம் கூடும் என்ற ஐதீகம். அதாவது இந்த வருடம் பயிறு கட்டப்பட்டிருந்தால் அதன் விலை ஏறும் என்று எல்லா விவசாயிகளும் பயிறு விதைப்பார்கள். எல்லோரும் விளைவித்தால் விலை குறையுமல்லவா என்று வியந்ததிற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. காங்கேய விவசாயிகள்தான் சொல்ல வேண்டும்.அங்கிருந்த எங்கள் வீட்டை நான் கல்லூரி படிக்கும் போதுதான் விற்றோம்.

பொறியியல்கல்வி நுழைவிற்கு அப்போதெல்லாம் நுழைவுத்தேர்வு கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் பொறியியல் படிப்புக்கு ஆள் தெடிக் கொண்டிருந்த நேரம். நேர்முகம் மட்டும்தான். எனக்கு திருச்சி RECஇல் இடம் கிடைத்திருந்தது. ஆனால் வீட்டிற்கு பெரியவரான எங்கள் தந்தையின் மாமா, கோவையிலேயே ஒன்றுக்கு மூன்றாக பொறியியல் கல்லூரிகள் இருக்கும்போது திருச்சிக் கல்லூரிக்கு ஏன் போவது என்று சொல்ல என் தந்தையாரும் தனக்குத் தெரிந்தவர் மூலம் திரு ஜி. ஆர் தமோதரனை அணுகி பூ.சா.கோ பொறியியல் கல்லுரியில் சேர்ந்தேன். என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை :( இதை என்ன ஆதிக்கம் என்று சொல்வது, குடும்பத் தலைவர் ஆதிக்கம் என்று சொல்லலாமா :)) இன்று என் பையனுக்கு பூரண சுயாட்சி கொடுத்தால் என்னப்பா, என் கல்வியில் உனக்கு நாட்டமே இல்லையே எனக் குறை காண்கிறான். கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு தனி பதிவுதான் போட வேண்டும். செய்ய வேண்டிய செயற்பட்டியலுக்கு இன்னுமொரு எண்ணிக்கை.


credit for vintage Coimbatore photo
"Mosque in the Coimbatore" by Daniell, 1834
Source: http://snuffy.lib.umn.edu/image/srch/bin/Dispatcher?mode=600&id=ama01217
(downloaded Oct. 2005)
"The Oriental annual, or, Scenes in India / comprising ... engravings from original drawings by William Daniell R.A. and a descriptive account by the Rev. Hobart Caunter, B.D. Drawn by William Daniel, R. A.; Engraved by J. C. Armytage; Mosque in the Coimbatore; London Published Oct. 1, 1834 by Bull & Co. 26 Holles Street Cavendish Square; Printed by J. Yates. Engraved by J. Hedaway from original drawings by William Daniell R.A. 1846 (exact)."

கலைகளும் காட்சிகளும்!

கொல்கொதாவின் நுண்கலை ஆர்வம் மிகவும் உயர்தரமானது. திரைப்படத்துறையில் உண்மைநிலைக்கு தனித்துவம் வழங்கிய சத்யஜித் ரேயின் வழியில் நிறைய வணிகநோக்கில்லாத பரீஷார்த்தபடங்கள் எடுக்கப் பட்டன.
அவற்றை வெளியிட அரசே நந்தன் என்னும் திரையரங்கை நடத்தி வந்தனர். (நமது கலைவாணர் அரங்கம் போல).மிகச் சிறந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன்.பாலிவுட்டின் சிறந்த இசையமைப்பாளர்கள் வங்காளிகளே. இரவிந்திரநாத் தாகூர், பங்கிம் சரத் சடர்ஜி போன்ற அறிஞர்கள் இலக்கிய ஆர்வத்திற்கு ஊன்றுகோலாயிருந்தனர். தாகூர் எழுதிய கீதங்கள் ரவிந்திரசொங்கீத் என வழங்கப் பட்டது( வங்காளிகள் 'வ'வை 'ப' வென்றும் 'அ'வை 'ஒ' என்றும் pronounce செய்வர் -- கல்கத்தா-> (க்+ஒ)ல்(க்+ஒ)த்தா). வங்காளத்தின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இப்பாடல்கள் வங்காளிகளின் உயிர்மூச்சு. நீங்கள் யாரேனும் வங்காளியுடன் நெருக்கமாக வேண்டுமென்றால் இரவீந்திர சங்கீத்தை பாராட்டி ஓரிரு வார்த்தை பேசினால் போதும். தினமும் தொலைக்காட்சியில் காலைத் தென்றலில் இது உண்டு. இதற்கு இணையான உணர்வூட்டும் இசை கிழக்கு வங்காளத்தின் நுஸரல் கீத் எனப்படும் காஃஜி (Kazi) நஸ்ரல் இஸ்லாம் அவர்களின் ஆக்கங்களாகும். அவரது பாடல்களில் இந்திய சுதந்திரம் தவிர தத்துவ,மத விதயங்கள் விரவி இருக்கும். இருவரின் இசையும் இரு வங்காளர்களும் இரசிப்பார்கள் என்றாலும் சற்றே மத விருப்புகளின் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தில் இரவீந்திர சங்கீத்தும் கிழக்கு வங்காளத்தில் நஸ்ரல் கீத்தும் விரும்பப் படும். நம்மிடம் நஸ்ரல் சங்கீத்தை பாராட்டி பேசும் கொல்கொத்தாகாரர்,கிழக்குகாரர் வந்தால் இரவீந்திர சங்கீதத்தின் பெருமைபேச மாறுவது தமாஷாக இருக்கும். அதை வைத்தே இருவரையும் நான் tease செய்வேன்.ஒன்று தெரியுமா உங்களுக்கு, இந்தியாவின் தேசிய கீதமான " ஜன கன மன"வும் பங்களாதேஷின் தேசிய கீதமான "அமார் சோனார் பங்களா" வும் தாகூரினுடையதே.இரண்டு நாடுகளின் தேசியகீதங்கள் ஒரே கவிஞரால் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கொல்கொத்தாவின் உணவு பற்றி எழுத இருந்தேன். அதை சென்ற இடுகையின் பின்னூட்டத்திலேயே இட்டுவிட்டேன். உடைகளைப் பொறுத்தவரை பெண்கள் சேலையையே அதிகம் விரும்புவர். பருத்தி சேலைகளை சோம்பல்படாமல் கஞ்சிபோட்டு அழகாக கட்டிக்கொள்வதில் அதிக விருப்பம். டாங்கைல் எனப்படும் சரிகை சேலைகளும் முர்ஷிதாபாத் சேலைகளும் கூட அழகாக இருக்கும். பாங்குரா என்னுமிடத்து களிமண் கலைபொம்மைகள் (முக்கியமாக குதிரைகள்) பிரபலம்.

கலைகளை இரசிக்கும் அவர்களுக்கு நமது தென்னிந்திய கலாசாரத்தையும் தென்னிந்தியர்களையும் மிகவும் பிடிக்கும். கர்நாடக இசையயும் பரதநாட்டியத்தையும் இரசிப்பார்கள். கரியாஹாட் அருகே டோவர்லேன் இசைவிழா மார்கழிமாதம் சிறப்பாக நடைபெறும். வடஇந்தியர்களின் ஆரவாரமிக்க நடத்தையை வெறுப்பர். இந்தி பேசினாலும் பிடிக்காது. எனக்கு இந்தி, பெங்காலி இரண்டுமே தெரியதாகையால் பெங்காலியை கற்றுக் கொண்டு அவர்களுடன் நெருக்கமானேன்.பொதுவுடைமை அரசாளும் நகரில் மின்வினியோகம் தனியார்துரையில் CESC வழங்கி வருகிறது. நானிருந்தசமயம் எட்டுலிருந்து பன்னிரெண்டு மணிநேர மின்வெட்டு இருந்தது. ஜோதிஆலோ, ஜோதி கலோ ( ஜோதிபாசு வந்தார், ஜோதி போயிற்று) என்பார்கள்.ஆனால் படிப்படியாக நிலைமை சரியாகி நாங்கள் கிளம்பும்போது மின்வெட்டே கிடையாது.அதேபோல போக்குவரத்து நெரிசல்களும் மெட்ரொ இரயில் வந்தபிறகு வெகுவாக குறைந்து விட்டது. சட்டஒழுங்கும் சீராகவே இருக்கிறது. இதனால்தான் பாம்ஃபிரன்ட் (left front)சர்கார் மீண்டும் வர முடிந்திருக்கிறது.

கொல்கொத்தா வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குவது துர்கா பூஜையாகும். ஆகஸ்ட்/செப்டெம்பெரில் விஸ்வகர்மா பூஜையில் தொடங்கி நவராத்திரி விழாவின்போது நாலைந்துநாட்கள் துர்கா பூஜை நடைபெறும். ஒவ்வொருவரும் ஒரு பரா எனப்படும் ஏரியாவை செர்ந்தவர்கள். அந்த பராவின் மண்டப நிகழ்ச்சிகளுக்கு சந்தா செலுத்தி எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும். பூஜாவின் போது காட்டப்படும் ஆரத்தியும் அதற்குண்டான மேளதாளமும் காணவேண்டியது.அந்த நாலுநாட்களில் ஒவ்வொரு மண்டபமாக சென்றுவருவதுதான் வேலை. விதவிதமான தீம்களில் அமைக்கப் பட்டிருக்கும். இடதுசாரிகள் கூட வியட்நாமில் அமெரிக்க ஆதிக்கத்தை மகிஷாசுரனாகவும் துர்கையை மக்கள்சக்தியாகவும் சித்தரித்திருப்பர்! அதை அடுத்து பௌர்ணமியில் இலக்குமி பூஜாவும் அடுத்த அமாவாசை (தீபாவளி) காளிபூஜாவும் என ஒன்று மாற்றி ஒன்று பூஜாக்கள்தான். மழைநின்று குளிரும் வராத சுகமான இரவுகளில் விழா கொண்டாடுவது இனிமையாக இருக்கும். நவம்பர்/ டிசம்பரில் இலேசான குளிர் வருவதற்கு காத்திருந்ததுபோல வண்ணமயமான கம்பளியாடைகள் வெளிவரும். அவற்றை அணிந்து சுற்ற வசதியாக பொயிமேளா (புத்தக கண்காட்சி) மைதானத்தில் அமைக்கப் படும். சமீப மேளாவை பத்ரி பதிந்திருந்தார்.நம்மூரைப் போல கைத்தறி கண்காட்சிகளும் கைவினை கண்காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரும்.குளிர்காலத்தின் முடிவை தெரிவிக்கும் ஹோலிப் பண்டிகையின் பின் சேல் சேல் என்று ராஷ்பிஹாரியும் காரியாஹாட்டும் களைகட்டத் தொடங்கும். ஏப்ரில் 14இல் புதுவருடம் வைகாசிமாதத்தில் (பைசாகி) அவர்களுக்குத் தொடங்கும். வெயில் பிளந்துகட்டும் மேமாதம் காலாபைசாகி என்னும் பயங்கர இடியுடன் கூடிய வேனில்மழை ஆரம்பிக்கும். ஜூனில் பருவமழை ஆரம்பித்தால் திரும்ப பூஜா வரை வீட்டிற்குள் அடைசல்தான்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்தால் மீண்டும் ஒரு ரீப்ளே கிடைக்காதா என்று தோன்றுகிறது. அதற்காக உங்களை இதற்கு மேல் அறுக்க முடியாதே!அங்கு கண்ட கால்பந்து போட்டிகள், ஈடன்கார்டனில் கிரிக்கெட் மாட்சுகள் என்று விட்டால் போய்கொண்டுதான் இருக்கும். அவற்றை பதிக்க ஒரு காலம் வரும். அப்போது பார்க்கலாம்.

ஓ கொல்கொதா !

என் முதல் பதவிஉயர்வோடு கொல்கொத்தாவிற்கு மாற்றலாகிப் போகும்போது வாழ்த்து சொன்ன கையோடு துக்கம் விசாரித்தவர்கள் தான் அதிகம். நக்சலைட்டுகளின் தீவிரவாதம், வெகுநேர மின்வெட்டு, பாதாள ரயில் கட்டுமானப் பணியால் போக்குவரத்து நெரிசல்கள் என ஒரு பெரிய எதிர்மறை பட்டியல்.ஒரு ஜூன்மாத படபடக்கும் வெயிலில் சென்னையில் கோரமண்டலில் ஏறி ஹௌரா இரயில்நிலயத்தில் இறங்கும்போது நல்லமழை எங்களை வரவேற்றது.என் மனைவியின் சிற்றப்பா அங்கு இருந்ததால் ஒருவாரம் அங்கே தங்கியிருந்து வீடு வேட்டையை தொடங்கினேன். தென் கொல்கொத்தாவின் பாலிகஞ்ச் எனப்படும் பகுதியருகேதான் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிப்பதாலும் நமது மளிகை சாமான்கள் அங்குதான் கிடைக்கும் என்பதாலும் அந்த பகுதியில் வீடு தேடினோம். இறுதியில் இரவீந்திர சரோவர் எனப்படும் ஏரியின் ஓரத்தில் அமைந்திருந்த சரத் சாட்டர்ஜி அவென்யூவில் ஒரு சிறிய குடியிருப்பு கிடைத்தது. அப்போதைய சம்பளத்திற்கேற்ற வாடகை. இப்போதைய குடியிருப்பின் வாயிலறை அளவிலான அடுக்ககம். அதன் சொந்தக்காரர்கள், வயதான பெங்காலி தம்பதியினர், எங்கள் மேல் அளவு மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். இன்னும் அவர்கள் பாசப்பிணைப்பு தொடர்கிறது.

கொல்கொத்தாவின் 90 இலட்சம் மக்கள் 5 சதுரகி.மீ பரப்பில் வாழ்கிறார்கள். அதனால் ஊரென்று பார்த்தால் சிறியதுதான். அதுவும் நாங்கள் புழங்கிய பாலிகஞ்ச், டாலிகஞ்ச் மற்றும் லேக்கார்டன்ஸ் சென்றுவர கைரிகஷாக்களையே உபயோகித்தோம். மனதிற்கு பாரமாக இருந்தாலும் அவர்களும் வாழ வேண்டுமே. அந்த வண்டியின் இயந்திர லாபம் அவர்களுக்கு பயணிகளின் சுமையை குறைத்து இலகுவாக்கியது. நம்மை தூக்கிக் கொண்டு அவர்களால் சுலபமாக ஓட முடிந்தது. டாலிகஞ்ச்சில் இருக்கும் கரியஹாட்மார்க்கெட் செல்வதென்றால் ட்ராம் வண்டியில் போவோம்.சிறிதுகூட சப்தமோ புகையோ இன்றி மெதுவாகச் செல்லும் இந்த வண்டியின் முதல் பாகம் பின்பக்கத்தைவிட ஒரு ஐந்து பைசா சத்தம் அதிகம். அதற்கே முன்பக்கம் காற்று வாங்கும், பின்பகுதி விழி பிதுங்கும்.அதிலும் வேனில்காலத்தில் மின்விசிறிகளுடன் செல்வது சுகமாகவே இருக்கும்.

அங்கிருந்த கரியஹாட் மார்க்கெட்டும், நாங்கள் இருந்த லேக் மார்க்கெட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆயத்த ஆடைகளுக்கு பெயர் போனது.என் மகளுக்கு சிறுவயதிற்கேட்ப விதவிதமான ஆடைகள் வாங்கியிருக்கிறோம். எங்கள் பொழுதுபோக்கே ஷாப்பிங்தான். வீட்டம்மாவிற்கும் பெங்கால் காட்டன் சேலைகள் குவிந்தன. இதைத் தவிர ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் உற்றார் சுற்றார் என எல்லோருக்கும் வாங்குவது பேரம் பேசும் திறமையையும் இந்தி/பெங்காலி மொழியறிவையும் வளர்த்தது. கொஞ்சம் அதிகவிலை கொடுக்க வேண்டும் என்றால் புதுமார்க்கெட் (New Market), ஷேக்ஸ்பியர்/ஹோசிமின் சாரணியில் இருந்த ஏசி மார்க்கெட் என செல்வோம். பார்க் ஸ்ட்ரீட்டில் இருந்த ஏலக்கடைகளும் பிரபலம். நல்ல பர்மா தேக்கு இருக்கைசாமான்களும் தொல்பொருள்களும் சல்லிசாக கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் சரத்போஸ் ரோட்டில் ஒரு உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்த அனுமார் கோவிலும் ஏதாவது பண்டிகையென்றால் லேக் கார்டன்ஸ்சில் இருந்த இராமர் கோவிலுக்கும் செல்வோம். மற்றபடி ஊரிலிருந்து யாராவது வந்தால்தான் காளிகாட் கோவிலுக்கும் தக்ஷிணேஸ்வர்/பேலூர் மடம் கோவில்களுக்கும் செல்வோம். காளிகோவிலின் பயங்கரம் பற்றி நிர்மலா அழகாக விவரித்துள்ளார். மாலைநேரங்களில் லேக் ஓரமாக நடந்து செல்வது இதமான அனுபவம். சங்கீதக் கச்சேரிகளும் அருகில் நடக்கும். திரைப்படமென்றால் எங்கள் வீட்டையடுத்திருந்த மேனோகா சினிமாவில் அவ்வபோது தமிழ்படங்களும் காலைக்காட்சிகள் நடக்கும். கொல்கொத்தா வீடுகளும் சினிமா தியேட்டர்களும் பழைய தோற்றத்துடன் சுமாராக இருக்கும். பொதுவாக பெங்காலிகளுக்கு ஆடம்பரம் பிடிக்காது; ஆனால் தூய்மையை போற்றுபவர்கள். நாங்கள் ஏழு வருடம் கழித்து 88இல் மாற்றலாகி ஊரை விடும்போதுதான் பார்க் ஸ்ட்ரீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 'மால்'கள் வரத் தொடங்கியிருந்தன.

இது நீண்டு கொண்டே போவதால், இங்கே நிறுத்திக் கொண்டு அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

ஐய்ஸ்வர்யா ராய் நலமே!

நேற்றைய தினம் ஐய்ஸ்வர்யா ராய் கார் விபத்தில் மரணம் (பார்க்க) என்று ஒரே வதந்தி. க்ளோபல் ந்யூஸ் ஏஜென்சி என்ற செய்திநிறுவன பத்திரிகை அறிக்கை போல வந்த மின்னஞ்சல் அனைவரையும் துயரத்திற்குள்ளாக்கியது. அந்த புனைவு செய்தியின் படி விபத்தில் சிக்கிய கார் பலமுறை உருண்டு அந்த இடத்திலேயே நடிகை இறந்ததாக கூறுகிறது.செய்தியை உறுதி செய்யும் முகமாக நியூயார்க்கின் எல்லா செய்திநிறுவனங்களுக்கும் மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளுமாக ஒரே கலவரம் தான். அவர் தற்சமயம் சென்னையில் குரு படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பதாகவும் நலமே என்றும் அவரது மேலாளர் ஹரிசிங் தெரிவித்துள்ளார்.

இதன் ஆதிமூலம் www.fakeawish.com என்னும் தளத்தில் வழங்கப்படும் மென்பொருளாகும். இதன்மூலம் நமக்கு வேண்டாதவர் பெயரை எந்த செய்திஅறிக்கையிலும் இட்டு 'உண்மையான' செய்தி போல காட்ட முடியும். ஆரம்பத்தில் நண்பர்களை கலாய்ப்பதற்க்காக ஏற்பட்டது இன்று வினையாக முடியும்வரை வந்திருக்கிறது.இதை யார் செய்தாலும் மிக மட்டமான மனநிலை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. இணையத்தில் வருபவன எல்லாவற்றையும் நம்பிவிட முடியாது என எச்சரிக்கவே இந்த பதிவு.

ஹலோ, ஹலோ சுகமா ?


எனது பணிக்காலம் முழுவதும் இருந்த ஒரே துறை தொலைதொடர்பு துறையாகும். இந்த வருடங்களில்தான் எத்தனை வளர்ச்சியும் மாற்றமும். இத்தகைய ஒரு துறையில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாக கருதுகிறேன்.பாதிபேர் தொலைபேசி இணைப்பிற்காக காத்திருக்கிறார்கள்; மீதிபேர் டயல்டோனிற்கு காத்திருக்கிறார்கள் என்று கேலி செய்த காலத்திலிருந்து காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை ஒரு ரூபாயில் பேசும் வாய்ப்புவரை வெகுதூரம் வந்திருக்கிறோம். இக்கட்டமைப்பின் வலுவிலேதான் வெளிநாட்டு வேலைகளை நாம் செய்துகொடுத்து பணிவாய்ப்புகளை பெருக்க முடிந்திருக்கிறது.தொலைதொடர்பு என்பது ஒரு பொருளாதாரத்திற்கு மிக இன்றியமையாதது.

இந்தியாவில் அதன் வளர்ச்சி குறித்தான சில படிகற்கள்:
1837 மின்சார தந்திக்காக இங்கிலாந்தின் குக்கும் வீட்ஸ்டோனும் (Cooke and Wheatstone) காப்புரிமை பெற்றது.
1839 சாஹ்னிசி (Shaughnessy) கொல்கொதாவில் முதல் தந்தியை சோதித்தது.
1845 "What Hath God Wrought" என்ற முதல் வார்த்தைகள் அமெரிக்காவில் வாஷிங்டனிலிருந்து பால்டிமோருக்கு தந்தி மூலம் அனுப்பப்பட்டது.
1852 இந்தியாவில் கொல்கொதாவிற்கும் டயமண்ட் ஹார்பர் துறைமுகத்திற்கும் முதல் தந்திகம்பி இழுக்கப்பட்டது.
1866 அட்லாண்டிக் பெருங்கடலின் அடியே தந்தி அனுப்ப கேபிள் போடப்பட்டது.
1870 மும்பை- ஏடன் - இலண்டன் இடையே முதல் கடலடி (sub-marine) கேபிள் இணைப்பு ஏற்படுத்தப் பட்டது.
1876 அலக்சாண்டர் கிரகாம் பெல்லால் தொலைபேசி கண்டுபிடிப்பு.
1882 இந்தியாவில் முதல் தொலைபேசி இணைப்பகம்(exchange) எற்படுத்தப்பட்டது.
1901 மார்கோனி அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து கம்பியில்லா தந்தியை (Wireless Telegraph) அனுப்பினார்.
1927 இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே கம்பியில்லா தந்தியை IRT நிறுவியது.
1951 மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இடையே முதல் டெலக்ஸ் சேவை தொடங்ப் பட்டது.
1953 நாட்டின் முதல் தானியங்கி தொலைபேசி இணைப்பகம் கொல்கொத்தா தொலைபேசி நிறுவனத்தால் அமைக்கப் பட்டது.
1960 கான்பூருக்கும் இலக்னோவிற்கும் இடையே STD சேவை தொடங்கப் பட்டது.
1976 மும்பைக்கும் இலண்டனுக்கும் இடையே வெளிநாட்டு நேரடி சேவை ISD தொடங்கப் பட்டது.
1989 மின்னஞ்சல் சேவை VSNL நிறுவனத்தால் தொடங்கப் பட்டது.
1991 I-Net எனப்படும் பொது பாக்கெட் தரவு இணையம் (PSDN)உருவானது.
1994 பேஜிங் சேவை தனியார்துறையில் அறிமுகமானது.
1994 தனியார்துறையில் செயற்கைகோள்வழி தொலைதொடர்பு VSAT சேவை தொடங்கப் பட்டது
1995 கொல்கொத்தாவில் மோடிடெல்ஸ்ட்ரா நிறுவனம் செல்பேசி சேவையை தொடங்கியது.
1995 VSNL தன் இணைய சேவையை ஆரம்பித்தது.
1998 தனியார் அடிப்படைதொலைபேசி சேவைகளை நடத்த அனுமதித்து இந்தூரில் துவங்கப் பட்டது.

சுதந்திர இந்தியாவில் பிரிவினைக்குப் பின் இருந்த நிலவரம்:
7,330 தந்தியாபீசுகள்,
321 பொது தொலைபேசி இணைப்பகங்கள்
82,985 தொலைபேசிகள்
மொத்த சொத்துக்களின் மதிப்பு: ரூ.31 கோடி

தற்போதைய நிலவரம்:
4,78,88,000 நிலைபேசிகள்
9,19,93,449 செல்தொலைபெசிகள்
61,25,000 இணைய தொடர்புகள்
8,35,000 அகலப்பாட்டை இணையதொடர்புகள்

சுதந்திர இந்தியாவின் முதல் 50 வருடவளர்ச்சியில் நூற்றுக்கு இருவர் என்ற கணக்கில் (டெலிடென்சிடி) தொலைபேசிகள் இருந்தன. ஆனால் கடந்த இருவருடங்களில் ஒவ்வொருவருடமும் 2% முன்னேறியுள்ளது. தற்போது 12.3% ஆக உள்ளது. இதன் பெரும்பங்கு செல்பேசிகளின் அபரிமித வளர்ச்சியாலேயே யாகும். உலகிலேயே மிகவும் குறைந்தவிலையில் தரம்வாய்ந்த செல்பேசி சேவைகளை வழங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த வளர்ச்சி இன்னும் கிராமங்களுக்கு எட்டவில்லை. நமதுதமிழ்நாடு/கேரளாதவிர மற்ற மாநிலங்களில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் தொலைபேசி அடர்த்தியில் மிகுந்த இடைவெளி இருக்கிறது. (நகர்புறம்:26.2%, கிராமங்கள்: 1.74%)

மிக வேகமான வளர்ச்சியாலும் அதிர்வெண்தொகுதி (Spectrum) தட்டுப்பாட்டினாலும் செல்பேசி இணைப்புகளில் தடங்கல்கள் உள்ளன. இராணுவம் 45Mhz வரை அதிர்வெண்களை திரும்பக் கொடுக்க உள்ளது. இதனை எல்லா செல்பேசிநிறுவனக்களுக்கும் பகிர்ந்தளிப்பதுமூலம் இந்த தடங்கல்கள் ஓரளவு நீங்கி தெளிவான பேச்சுக்கு வழி வகுக்கும். Number Portability எனப்படும் நிலையான எண்கள் தரும் சேவையும் கொண்டுவர இந்திய தொலைதொடர்பு கண்காணிப்பு குழுமம்(TRAI) முயல்கிறது. இதன்மூலம் ஒரு சேவைநிறுவனத்திடமிருந்து இன்னொரு சேவை நிறுவனத்திற்கு மாறும்போது செல்பேசி/நிலைபேசி எண் மாறாது.

இதற்குமேல் போரடிக்க விரும்பவில்லை. கேப்டன் போல எத்தனை நம்பர்கள் கொடுத்தாலும், கடைசியில் உபயோகிப்பவர் வேண்டிய பயனை அடைய முடியவில்லை என்றால் என்ன பயன் ? துளசி அவர்களின் இந்திய விஜயத்தின் போது படுத்திவிட்டதே. எட்ட வேண்டிய இலக்குகள் (அவை உயரும் இலக்குகளாயிருந்தாலும்) இன்னும் இருக்கின்றன என அவை உணர்த்துகின்றன.

ஆய்வுநூலிற்காக

வலைப்பதிவர் பெயர்: மணியன்
வலைப்பூ பெயர் :மணிமலர்
சுட்டி(url) : manimalar.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: நவிமும்பை
நாடு:இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தமிழ்மணம் காசியின் கட்டுரை
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :நவம்பர் 10,2005
இது எத்தனையாவது பதிவு: 37
இப்பதிவின் சுட்டி(url):http://manimalar.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:தமிழை எழுதி மகிழ
சந்தித்த அனுபவங்கள்:இனிமையானவை
பெற்ற நண்பர்கள்:உணர்வோடு ஒத்துப் போனவர்கள்
கற்றவை: ஏராளம்
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஆனந்தமானது
இனி செய்ய நினைப்பவை:நிறைய எழுதவேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:வாழ்க்கையெனும் அலைமீது காற்றடிக்கும் திசை செல்லும் சுக்கான் இல்லாத நாவாய்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:எழுதும் பழக்கம் மீண்டதும் அழகான சிந்தனைச் சிதறல்களை படித்து ஆனந்திப்பதும் தமிழ்மணத்தால்.

நான்மாடக்கூடலில் நான்!


மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரைக்கு நாங்கள் வந்தது 1965இல். எங்களுக்கு வீடு கிடைத்தது மதுரையின் புறநகர்பகுதியாக வளர்ந்து கொண்டிருந்த ஆரப்பாளயத்தில் வைகையாற்றின் கரையில் அமைந்த அமைதியான பகுதி. நீர் இல்லாத நதியில் நடுநடுவே இருந்த புற்பரப்புகளில் கிரிக்கெட் விளையாடுவோம். மேட்ச் என்றால் அரசரடி மைதானத்திலும் இரயிவே காலனிக்குள் இருக்கும் மைதானத்திலும் வைத்துக் கொள்வோம்.புதிய வைகைபாலத்தில் (இப்போது பழையதாயிருக்கும் :)) சைக்கிள் ஓட்டியவாறு பரவை, சிலசமயம் சமயநல்லூர் வரை செல்வோம். என்ன இனிமையான நாட்கள்!

படித்தது 'சேஸ்கூல்' என்று செல்லமாக அழைக்கப் படுகின்ற சேதுபதி உயர்நிலைப் பள்ளி. பாஸ்கர சேதுபதியால் நிறுவப்பட்டு பாரதியார் பணிபுரிந்த வரலாறு கொண்டது. நான் படித்த காலத்தில் அது சண்டியர் ஸ்கூல் என்று பெயர் சம்பாதித்திருந்தது. எங்களைத் தெரிந்தவர்கள் அனைவரும் ஏன் என்று துக்கம் விசாரிக்க செய்த பள்ளி. ஆனால் எனக்கு கிடைத்ததிலேயே மிகச் சிறப்பான கல்வி அங்குதான் கிடைத்தது.வளரும் பருவத்திலிருந்த எனக்கு சரியான வழிகாட்டுதலை கொடுத்தவர்கள் அங்கிருந்த ஆசிரிய மக்களே. சுயமாக சிந்தித்து அறிவியலை தேடும் வழி காட்டினர். மற்ற பள்ளிகளில் நோட்ஸ்ஸுக்கு அலையும் போது நான் நூலகங்களை நாடினேன். ஆங்கில மற்றும் தமிழ் மொழியாற்றல் ஏற்பட்டதும் அங்குதான். நாளும் பேருந்தில் மாதாந்திர அரைடிக்கெட் (ஒருவழி 7பைசா) எடுத்து சென்று வந்து கொண்டிருந்தேன். இப்போதும் 720, 3669, 9627 என்று பதிவெண்களால் அறியப்பட்ட TVS பேருந்துகள் நினைவுக்கு வருகின்றன. அந்த ஓட்டுனர்/நடத்துனரும் நன்கு பரிச்சயமாகி தாமதமானாலும் ஓரிருநிமிடம் எங்களுக்காக நிறுத்துவார்கள். திரும்பும்போதும் கூட்டமாக இருந்தாலும் எங்களைப் பார்த்து ஏற்றிக் கொள்வார்கள்.

சினிமா போவதென்றால் குதிரைவண்டியில் போவோம். சென்னையில் கிடையாதாகையால் எங்களுக்கு சினிமாவிற்கு போவதைவிட குதிரைவண்டியில் போவது மிகவும் பிடிக்கும். அந்த டீனேஜில் மற்றவர்கள் பின்புறம் ஏறியபிறகு வண்டியின் சக்கரத்தில் காலைவைத்து முன்னால் ஏறி ஓட்டுனர் அருகே உட்காருவது ஒரு வீரமாக நினைத்த காலம். அங்கிருந்தவரை ஒருவருடத்தில் வெளியான எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறோம்!

சென்னையிலிருந்து சென்றிருந்த எனக்கு சில கலாச்சார அதிர்ச்சிகள் காத்திருந்தன. முன்பே சொன்ன குதிரை வண்டிகளும் குதிரை லாயங்களும் ஒன்று.சென்னையில் எல்லோரையும் ஒருமையில் அழைத்து பழகிய எங்களுக்கு இங்கு கண்ட மரியாதையான பேச்சு. நாங்கள் கோவைக்காரர்களென்றாலும் சிறுவயதில் சென்னையில் வாழ்ந்தது அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. என் தம்பி வந்த புதிதில் யாரிடமோ மணி என்னப்பா ? எனக் கேட்டு வாங்கி கட்டிக் கொண்டான். மதுரைக் கல்லூரியில் படித்தபோது (1968) வேட்டி சட்டையுடன் கையில் சாப்பாட்டு தூக்குடனும் சென்றது இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.


மதுரையில் இருந்தவர்கள் ஆன்மீகத்தில் ஈர்க்கப்படுவது தவிர்க்க இயலாதது. எனக்குத் தெரிந்து மதுரைக்காரர்களில் நாத்திகர்கள் மிக குறைவு. மீனாட்சியின் ஆட்சி எல்லா மக்களையும் ஆட்கொண்டுள்ளது. பாவம், சோமசுந்தரரும் 63 திருவிளையாடல்களை நடத்தியும் கால் மாறி ஆடியும் மீனாளின் கடைக்கண் வீச்சிற்கு அடிமையாகும் பக்தர்களை ஈர்க்கமுடியவில்லை. மீனாட்சிஅம்மன் கோவிலின் கம்பீரமும் அழகும் சொல்லில் அடங்குமோ ? அன்னையின் அழகிலும அருளிலும் பூரணமாக என்னை பறிகொடுத்தவன். மாதம்தோறும் நடக்கும் விழாக்களில் அருகில் இருந்து பங்கேற்கும் வாய்ப்பு, என் தந்தையின் பணி காரணமாய், எனக்கு கிட்டியது. சித்திரைத் திருவிழாவும் கல்யாண கோலமும், வண்டியூர் தெப்பமும் காண மனித்தப் பிறவியும் வேண்டுவனே இம்மாநிலத்தே! நவராத்திரியில் ஒவ்வொருநாளும் ஒரு அலங்காரமென்ன? .

நானிருந்த ஆரப்பாளயம் அருகேயிருந்த ஞானஒளிவுபுரம் மாதாகோவிலுக்கும் நன்பர்களுடன் போயிருக்கிறேன். என் கையெழுத்து அழகாக இருக்குமென்று ஞாயிறு பாடப்படும் பாடல்களையும் எழுதி கொடுத்திருக்கிறேன். மதுரையில் இருந்தபோது அரசியலிலும் ஆர்வம் வந்தது. 1967 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக மாணவர்கள் நாங்களாகவே ஒவ்வொரு வீடாக சென்று திமுக விற்கு வாக்கு சேகரித்தோம். விருதுநகரில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராசரை தோற்கடித்ததை கொண்டாடினோம். பின்னாளில் அவர் சீரழிந்தது வேறுகதை. கம்யூனிச தோழர்கள் கேடிகே தங்கமணி, பி.இராமமூர்த்தி ஆகியோரின் அரசியல் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன். பிறகு காலத்தோடு நானும் மாறினேன்.

நினைத்துப் பார்த்தால் அப்போது டிவி இல்லாதிருந்ததாலேயே எனக்கு இத்தனை பன்முக ஆர்வங்கள் வெளிப்பட்டன. டிவி மட்டும் இருந்திருந்தால் போகோ சானலுடன் இளமை முடிந்திருக்கும். படிப்பு, போட்டி மனஅழுத்தங்களும் இருந்ததில்லை.

ஞாபகம் வருதே..தருமமிகு சென்னையில்..


எனது முதல் மூன்று வகுப்புக்கள் கோவையில் கழிந்தாலும்,விவரம் தெரிந்த இளம்பருவம் சென்னையில் தான் கழிந்தது. தி.நகர் இரங்கநாதன் தெருவில் ஐந்து வருடங்கள் (1960-65) வாழ்ந்திருக்கிறோம் என்பதை இன்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. வாசலில் மகிழ மரங்களுடனிருந்த பங்களாவின் ஒருபுறத்தில் குடியிருந்தோம். பின்பகுதியிலும் மாமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் பாதாம் மரங்களுடன் தோட்டம் போல இருக்கும். அவை இன்றைய வளர்ச்சிக்கு விலையானது வருத்தமாகத் தான் இருக்கிறது.

காலை வேளைகளில் மாம்பலம் இரயில்நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் புகை(நீராவி?)வண்டிகளை காண்பது எங்களுக்கு(நானும் தம்பியும்) பிடித்த விதயம். ஊரிலிருந்து வரும் உறவினர் பசங்களுக்கோ சபர்பன் மின்ரயில்களை காண்பதும் பயணிப்பதும் மகிழ்ச்சியென்றால் எங்களுக்கு இப்படி. அதுவும் இஞ்சின் ஓட்டுனரிடம் கிரீஸ் கேட்டு வாங்குவதில் அத்தனை மகிழ்ச்சி. அதை என்னசெய்தோம் என்று ஞாபகம் இல்லை. அப்போதுதான் வெளியூர் வண்டிகளுக்கான பிளாட்ஃபாரம் போட்டுக் கொண்டிருந்ததால் வெகுசில வி.ஐ.பிக்களே இறங்குவார்கள். இராசாசி, வெங்கட்ராமன் ஆகியோரை கண்டதுண்டு. மற்றபடி சிவவிஷ்ணு ஆலயத்தில் வாரியாரின் கமபராமாயண சொற்பொழிவையும் அகத்தியர் கோவிலில் கி.வா.ஜ அவர்களின் கந்தர் அனுபூதி சொற்பொழிவையும் கேட்டு சிறுவயதிலேயே தமிழ் மீதும் ஆன்மீகத்தின் பாலும் பற்று ஏற்பட்டது.

சென்னை வாசத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு இந்தி எதிர்ப்பு போராட்டம். அந்த வருடம் நான் மகாலட்சுமி தெருவில் இருக்கும் இராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது மொழியாக இந்தி/சமக்கிருதம் பயின்று கொண்டிருந்தோம். ஆனாலும் அதில் தேர்வுபெறவேண்டிய அவசியமில்லாதிருந்தது. இந்திமசோதா நிறைவேறியதால் இனி இந்தியில் கட்டாயமாக தேர்வுபெறவேண்டும் என அறிந்து கொண்டோம். தானாகவே கிளம்பிய எதிர்ப்பு அலையில் திரண்டிருந்த மாணவர் கூட்டத்துடன் பள்ளிச்சிறுவர்கள் நாங்களும் சேர்ந்து கொண்டோம். எங்கள் பள்ளியிலிருந்து சென்று துரைசாமி ரோடு லெவல்கிராஸ்ஸிங் அருகே கேட்டை உடைத்து தீ ஊட்டினோம். இரயில்வே சிக்னல் கம்பங்களைச் சாய்த்தோம். நிறுத்தப்பட்ட இரயில் பெட்டிகளில் அப்போதைய முதல்வரை பழித்து கோஷங்கள் எழுதினோம். பொதுச் சொத்தை நாசம் செய்கிறோமே என்று அறியாத வயது. ஏதோ வீர சாகசம் செய்வதாக நினைப்பு. தபதப வென்று வந்த போலீசைக் கண்டு கல்லூரி மாணவர்கள் ஓடிவிட்டனர். எங்களைப் போன்ற பள்ளிமாணவர்கள் தான் மாட்டிக் கொண்டோம். எங்களை எல்லாம் போலிஸ்வானில் ஏற்றி ஜெமினி சர்க்கிளருகில் இறக்கி விட்டனர். இப்போதெல்லாம் டீவியில் காண்பிப்பது போல, நல்ல காலம், எங்களை அடிக்கவில்லை. ஆனாலும் போலிஸ்வானில் பிடித்து சென்றதே எங்களுக்கெல்லாம் அவமானமாக இருந்தது. போக்குவரத்து நின்றிருந்த அந்தநேரத்தில் நடந்தே வீடு வந்து சேர்ந்தால் வீட்டிலும் அர்ச்சனை.இருந்தாலும் அடுத்த இரண்டு நாட்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த கலவரங்களை நேரில் பார்த்துச் சொல்ல இந்த வானர சேனையைத்தான் நம்பியது எங்கள் சுற்றுப்புறம் (அப்ப ஏதுங்க, டிவியும் மாம்பலம் டைம்ஸ்சும்).

அந்த பருவத்தில்தான் நான் எனது முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்தேன். எங்கிருந்தோ கிடைத்த Ferrite rodல் SWG28 என்று செப்புக்கம்பியைச் சுற்றி OA72 என்ற ஆதிகாலத்து டயோடை பயன்படுத்தி மீடியம்வேவ் கேட்கும்படியான ஒரு வானொலிப்பெட்டியை ஒரு சோப்பெட்டியில் ஆக்கி வீட்டளவில் பெயர் வாங்கினேன். அதுவே என் மின்னணுவியல் ஆர்வ்த்திற்கும் வாழ்விற்கும் வித்திட்டது.

மணிமலரின் முதல் பதிப்பு நிகழ்ந்ததும் அந்த காலகட்டத்தில் தான்.

சென்னை வாழ்க்கை எனது தைரியத்தையும் அறிவியலில் விருப்பத்தையும் வளர்த்தது என்றால் எனது தந்தையாரின் பணிநிமித்த இட மாற்றத்தால் வந்த மதுரை மாநகர் ஆன்மீகத்தையும் தமிழ்பற்றையும் மேலோங்கச் செய்தது.அவை அடுத்த பதிவில்...

சிகரம் தொட்டவர்கள் !


பிரிட்டிஷ் இராணுவத்தினர் இருவர் 1976 இல் இமயமலையின் எவெரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டு சாதனை நிகழ்த்தினர். ஆங்கில இராணுவத்தின் அந்த சாதனையின் முப்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் மூன்று மலையேறும் குழுக்கள் எவெரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அடைய முயற்சி செய்கின்றனர். இம்முறை மேலே செல்வதிலேயே மிகவும் கடினமும் ஆபத்தானதுமான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒன்பது முறை சிகரத்தை எட்டியிருக்கும் டேவ் பன்ட்டிங் (Dave Bunting),வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பயணத் திட்டப்படி முதலில் French Spur மற்றும் மேற்கு ரிட்ஜ் (West Ridge )
வழியாக சென்று வடக்குமுகமாக சிகரத்தை எட்டுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் அதிநவீன டிஜிட்டல் காமெராக்களும் வயர்லெஸ் உபகரணங்களையும் கொண்டு செல்கிறார்கள். இதனால் அவர்களது மலையேற்றத்தை தங்கள் வலைப்பதிவு, பொட்காஸ்ட், படங்கள் மூலம் உடனுக்குடன் பதிகிறார்கள். அட, பிலிம்கூட காட்டறாங்க!

மே16 லிருந்து 21 வரை திட்டமிடப்பட்டிருந்த சிகரம் தீண்டல் மோசமான காலாவஸ்தா ( உபயம்: துளசி) காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவர்களின் முன்னேற்றத்தை நீங்களும் உடனுக்குடன் பார்த்து (மட்டுமே)மகிழுங்கள்.

இமயத்தை வெல்வது சோழ மன்னனுக்கு முடிந்தது; 'நாய்களும் பேய்களும் நயவஞ்சகப் பூனைகளும்' (நன்றி: வீரபாண்டியக் கட்டபொம்மன்) நடமாடும் தற்கால தமிழ்நாட்டில் இயலுமா ?

நந்தவனத்திலோர் ஆண்டி!!

நந்தவனத்தில் விரிந்த தமிழ்மணம். அழகான கதைகள். கவிதைகள். அருமையான இடுகைகள்.ஆர்பாட்டமான விவாதங்கள். இலக்கியச் செறிவும் ஆன்மிக விளக்கங்களும். நாட்டு
நடப்பை நச்சென்று விமர்சிக்கும் நக்கல்கள். இடையே குழாயடிச் சண்டையும் மொழியும் கூட உண்டு. முன்வரிசையில் நிகழ்ச்சிகளை இரசித்துக் கொண்டு இருக்கும்போது மேடையிலிருந்து ஒருங்கிணைப்பாளர் யாரையோ கூப்பிடுவது போலிருக்கிறது. ஒருவேளை நம்மைத்தானோ ? அட, ஆமாம்.

குளுமையான மதியொளியில் மகிழ்விக்க வந்த இந்த வார நட்சத்திரம். இதுவரை எழுதியது குறைவே. தண்ணீரில் தள்ளிவிட்டால் தத்தளித்தாலும் நீச்சல் வருமென்று ஏற்றுக் கொண்டேன். பயிற்சி எனக்கு, பாவம் உங்களுக்கு. பொறுத்தருள்வீர்.:))

இணைய வலையில் முதலில் சிக்கியது மன்றமையத்தில்(Forumhub).அங்கு பிபி அவர்களின் கம்பராமாயண இழையில் ஹரிகிருஷ்ணன், மதுரபாரதியின் விளக்கங்களால் ஈர்க்கப்பட்டேன். அவர்கள் மூலம் தமிழோவியம் அறிமுகமாகி ஒருங்குறியும் தெரிந்து கொண்டேன். காசியின் " என்கோடு உன்கோடு யூனிகோடு தனிகோடு" மற்றும் "தமிழிலே எழுதலாம்வாருங்கள். வலையிலே பதிக்கலாம் பாருங்கள்" கட்டுரைகளைக் கண்டு தமிழ்மணத்தை நுகர்ந்தேன். நூறிலிருந்து ஆயிரமான வளர்ச்சியை கண்டவாறே வாசகனாய் வலம் வந்தேன். சென்ற வருட நிகழ்வுகளால் ப்ளாக்கர் அடையாளம் வேண்டி ஆரம்பித்த இந்த வலைப்பதிவு இன்று என் எண்ணங்களையும் கவர்ந்த செய்திகளையும் பதியும் வசதியாக மாறியுள்ளது.

கல்லூரியில் புகுமுக வகுப்பில் விட்ட தமிழ் அதேவண்ணம் (தேர்வு கட்டுரைகள் போல) தொடர்கிறது. நானும் பேச்சுத் தமிழுக்கு மாற முயன்றேன், முடியவில்லை. இதுவே என் முத்திரையாக இருந்துவிட்டுப் போகட்டுமென்று விட்டு விட்டேன். ஆனாலும் மற்ற பதிவுகளில் காணப்படும் அன்னியொன்னியம் எனக்கு கிட்டுவதில்லை. மேலும் எனது வயது மற்றும் தமிழ் பண்பாடு காரணமாகவும் மரியாதை கிடைக்கிறது. ஏன் ஆங்கிலப் பதிவுகளில் யாரும் வயதை நோக்குவதில்லை? இங்கே அண்ணா,அக்கா அடைமொழியில்லாமல் யாரையும் விளிப்பதில்லை. இதற்காக நான் பெரியவனா அவர் பெரியவரா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

எனது கடந்தகால வாழ்வில் பலதரப்புப் பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறேன். மனிதவள பணிகளில் இருந்திருந்ததால் எல்லா சமூகத்தினரின் உணர்வுகளும் அறிந்தவன் என பெருமை கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் தமிழ்மணத்தின் மூலமாகத் தான் நான் செல்ல வேண்டிய தூரம்இன்னும் எத்தனை என்று புரிந்து கொண்டேன். இளைஞர்கள் எத்தனை சிறப்பான சிந்தனைகளை முன்வைக்கிறார்கள் என ஆச்சரியப் படுகிறேன். இப்பதிவுகள் தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் சென்றடைய வேண்டும். ' இன்று தமிழ்மணம் வாசித்தீர்களா ?' என்று எல்லா இரயில் நிலையங்களிலும் ( வாசிக்க: உலாமன்றங்களிலும்) தொங்கும் காலம் வர வேண்டும்.

வரும் பதிவுகள்.. கதைகளும் கவிதைகளும் ஆக்கி பழக்கமில்லை. வெற்று பெருங்காய டப்பாவில் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் ? பழம் வாசனைதான்.

உலக தொலைதொடர்பு நாள் - மே 17

அனைத்துலக தொலைதொடர்பு சங்கம் (ITU) 1865ஆம் வருடம் மே 17 அன்று நிறுவப்பட்டது. நாடுகளுக்கிடையே ஒருவரொக்கொருவர் தொலைதொடர்பு பகிர்ந்து கொள்ளும் வண்ணம், அனைவரும் ஒரேவித நுட்பகொள்கைகளை கொண்டிட தரக்கட்டுப்பாடுகளை வகுப்பது இதன் முக்கிய பணியாகும். ஆரம்ப காலத்தில் தந்தி/தொலைபேசி சேவைகளுக்கு ஒரு கேந்திரமும் (CCITT) வானொலி தொடர்புக்கு மற்றுமொரு கேந்திரமும்(CCIR) தரங்களை வெளியிட்டு வந்தன. அவை இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அனைத்துலக தொலைதொடர்பு சங்கமாக உருவானது.

ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் உலக தொலைதொடர்பு நாளாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த வருடம் ITU, உலகம் கணினி இணைப்புகளால் கட்டுண்டு இருப்பதை புரிந்து கொண்டு, எவ்வாறு பலவகை வைரஸ்களும் இன்னபிற அத்துமீறல்களும் நாடுகளின் தகவல் கட்டமைப்பை குலைக்க இயலும் என அறிந்து இத்தினத்திற்கான முழக்கமாக " அனைத்து உலக இணையபாதுகாப்பை பலப்படுத்துவோம்" (Promoting Global Cybersecurity ) என அறிவித்துள்ளனர். நமது தகவல் கணினி கட்டமைப்புகளுக்கு அரணமைத்து இணைய வணிகம், வங்கி, -அரசு வசதிகளுக்கு மக்களிடம் நம்பிக்கை ஊட்டுதலும் உலகமெங்கும் இணைய பாதுகாப்பை பலப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். நாடுகளின் எல்லைகளால் கட்டுப்படாத இணையத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்க இணைக்கப்பட்ட ஒவ்வொரு நாடும், குழுமமும், தனிமனிதனும் அவற்றின் பாதுகாப்பு கொள்கைகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த சவால்களை வெளிகொணர்ந்திட, ஆராய்ந்திட, வழிவகை காண முயல்வதே உலக தொலை தொடர்பு நாள் 2006இன் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் அங்கத்தினராக ITU செய்துவரும் பணியினை அங்கீகரித்து நவம்பர், 2005இல் டுனிஸில் கூடிய தகவல்நுட்ப உலக உச்சிமாநாடு (World Summit on the Information Society) மே 17 நாளை உலக தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாட முடிவு செய்தது. இந்த நூற்றாண்டில் தகவல்நுட்பமும் தொலைதொடர்புநுட்பமும் ஒருங்கிணைந்து அறிவு சார்ந்த புதுசமுகாயத்தை ஏற்படுத்தி முன்னேற்ற வழி காட்டுகின்றன. இந்த வழிகாட்டுதலால் எவ்வாறு மனிதகுலம் பயனடைந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இத்தகைய நாட்களை கொண்டாடுவதன் நோக்கமாகும்.

அந்த வகையில் இன்றைய தினம் முதல் ITU உலக தகவல்நுட்ப சமூக நாளுமாகும். இந்நாளில் பெருமைக்குரிய இரு முன்னோடிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். செனெகலின் அதிபர் அப்துல்லா வாடெ அவர்களுக்கும் பங்களாதேஷின் கிராமீன் வங்கியின் தலைவர் முனைவர் முகமது யூனஸ் அவர்களுக்கும் டிஜிட்டல் பிரிவினை குறைக்கும் முயற்ச்சிக்காக விருது வழங்கப் படுகிறது.

அதிபர் வாடே டிஜிட்டல் சொலிடரிடி ஃபண்ட் ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்தவர். இந்நிதி மூலம் கணினி ஏற்றதாழ்வுகளை மட்டுமன்றி ஆண்பெண், சமூக ஏற்றதாழ்வுகளையும் குறைக்க வழி செய்யும்.







மற்றவர் ஏழைகளுக்கு நுண்கடன் கொடுப்பதில் வெற்றிகண்டவர் ( விக்ரம் அகூலா போல). வான்வழி பொது தொலைபேசிகளை அமைத்து புதிய பெண்முதலாளிகளை ஏற்படுத்தியவர். பங்களாதேசத்தின் தொலைதொடர்பு வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்.

இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையும் இந்நாளில் தனது சிறந்த பணியாளர்களுக்கு தேசிய அளவில் சஞ்சார்தூத், மாநில அளவில் சஞ்சார்ஸ்ரீ, துறைசார்பில் சஞ்சார்சாரதி என விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.



கணிதம் வேண்டுமா ?


கல்விபற்றி சொல்லும்போது எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றனர் மூதோர். படித்தவனுக்கு அடையாளமே அவனது மொழியறிவும் கணித அறிவும்தான். இதில் நுண்கலைகள் சிறந்திருந்த பழந்தமிழ்நாட்டில் பைந்தமிழ் இலக்கியங்களை பயில்வதே முக்கிய கல்வியாக இருந்தது; கணிதம் வாழ்முறைக்கு தேவையான அளவே இருந்தது.

ஆனால் இன்றைய அறிவியல் உலகில்,பள்ளிக் கல்வியில் மொழியறிவு தேவையான அளவும், கணிதமும் அறிவியல்பாடங்களும் முக்கியபங்கும்் பெற்றிருக்கின்றன. மேல்படிப்புகளுக்கு எடுத்துக் கொள்ளும்போது மொழிகள் ஒரு பொருட்டே இல்லை.நமது கல்வியாளர்கள் கிராமத்து மாணவர்களை காரணம் காட்டி பள்ளியில் பயிலும் ஆங்கிலக் கல்வியின் தரத்தை வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் நன்கு படித்து வேலைக்கு வரும் இளைஞர்கள் கூட எழுதும்போது தவறுகள் செய்கிறார்கள். இதில் தாய்மொழியானாலும் சரி, ஆங்கிலமானாலும் சரி. அதுவும் அலுவலக மின்னஞ்சலில் தந்தி முறையில் (இப்போது குறுஞ்செய்தி முறையில்) எழுதுவதால் இருக்கின்ற மொழியறிவும் தங்குவதில்லை.

இப்போது இங்கே (மகாராஷ்ட்ராவில்) எண்ணிற்கும் சோதனை வந்திருக்கிறது. அதே கிராம சிறார்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறமுடிவதில்லை யென்று சொல்லி கணித பாடங்களை விருப்பப் பாடங்களாக ஆக்கலாமா என்று அரசினர் பரிசீலித்து வருகிறார்கள்.அடிப்படை கணக்கு எட்டாவது வரை அனைவருக்கும் கட்டாயமே. அல்ஜீப்ராவும் திருகோணமிதியும் கால்குலசும் எல்லோரும எதற்கு ் கற்க வேண்டும் என்பது அவர்கள் வாதம். இதனால் கணிதம் என்றாலே பயப்படும் பெருவாரியான மாணவர்கள் வேறு விருப்பப் பாடங்களை எடுத்து வாழ்வில் முன்னேறலாம்.

இந்திய கல்வித் திட்டங்கள் மிகவும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. வளைந்து கொடுப்பவை யல்ல. வளர்ந்த நாடுகளில் ஒரு மாணவர் அவர் படிக்கும் கல்விக் கேற்ப விருப்பப் பாடங்களை எடுத்துக் கொள்ளலாம். தங்களுக்கு பிடித்த கல்வியை அடைய தேவையான கடின பாடங்களும் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதால் நன்றாக பயில முடிகிறது. அந்த திசையில் இந்த (மஹா)அரசும் அடி எடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் மக்களிடையே இது மிகுந்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. கணிதத்தின் தரம் குறைந்து விடும், போட்டி நிறைந்த சமகாலத்தில் தங்கள் திறன் குறைந்துவிடும் என அஞ்சுகிறார்கள். இது தேவையற்ற பீதி. தங்களுக்குப் பிடித்த பாடங்களைப் பயில்வதால் அதிக ஊக்கம் கொண்டு அதிக சாதனைகள் நிகழ்த்துவர். கணிதத்தை ஒழிக்கவில்லையே, விருப்பப் பாடமாகத் தானே ஆக்கியிருக்கிறார்கள்.

எனக்கு கணிதம் விருப்பமான பாடமே. என் பள்ளி பருவத்தில் 9,10,11 வகுப்புகளில் Composite maths என்று படித்தேன். வேண்டாதவர்கள் பொது கணிதம் படிப்பார்கள். தவிர நான் உயிரியல் படிக்கவில்லை. ஆனால் இன்று தொழிற்கல்வி பயில திட்டம் வைத்துள்ளோரும் உயிரியல் படிப்பது அவர்கள் ஒருமுகப் படிப்பை சிதறடிப்பதாகவே எண்ணுகிறேன். ஆனாலும் இக்கால மாணாக்கர் இரண்டிலும் முழு மதிப்பெண்கள் பெறுவது சாதனைதான்.

காலஓட்டத்தில் க்ரீன்ஃபங்ஷனும் பெசல்ஃபங்ஷனும் விட்டு இன்று சிதம்பரத்தின் வரிக்கணக்கு கூட விளங்காமல் உதவி நாடவேண்டியுள்ளது.

நூற்றில் ஒருவர் - விக்ரம்

அமெரிக்க டைம் இதழ் “ நம் உலகை உருவாக்குபவர்கள்” என்று 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பில் கிளின்டன், பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ், ஜார்ஜ் புஷ் போன்றவர்காளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ளவர்கள் இருவரே. இன்ஃபோசிஸ் நிறுவனரும் தலைவருமான நந்தன் நீலகேனி ஒருவர். மற்றவர் நுண்கடன் வழங்கி வேகமாக வளர்ந்துவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த SKS Microfinance இன் நிறுவனரும் தலைவருமான விக்ரம் அகூலா . தன் பரிந்துரையில் இந்திய ஏழைமக்களின் துயர் நீக்க நுண்கடன் வழங்குவதில் முன்னோடி என்று அவரைக் குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் பிறந்த்து அமெரிக்காவில் வளர்ந்த 37 வயதான விக்ரம் 1998இல் SKS Microfinance நிறுவனத்தை தொடங்கி வறியவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் வண்ணம் 2,21,000பேருக்கு ரூபாய் 240கோடி கடன் வழங்கி பணியாற்றி வருகிறார். கால்நடைகள் வாங்க, விவசாயம், காய்கறி மற்றும் சிறுவியாபாரம், சிறுதொழில்கள் முதலியவற்றிற்கு கடன் கொடுத்து வருகிறார். SKS கல்விநிறுவனம் அவர்கள் குழந்தைகளுக்கு அறிவொளியை பரப்புவதிலும் பங்காற்றுகிறது. ஆந்திரா,கர்நாடகம்,மஹாராஷ்ட்ரா, ஒரிசா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 85 கிளைகளை கொண்டு பணியாற்றுகிறது. ஏழைகள் என்பதால் இவை வாராக் கடன்கள் அல்ல. 98% சரியான நேரத்தில் அவை திருப்பி அடைக்கப் படுகின்றன.எல்லா வர்த்தக பரிமாற்றங்களும் கணினி மூலம் நடைபெறுவதால் நிலுவையிலுள்ள கடன்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடிகிறது. அவரின் சிறந்த பணிகளை பலரும் உணர்ந்து அவருக்கு மீள்கடன் (refinace) செய்ய முன்வருகிறார்கள். அந்தவகையில் வறியவர்களின் வாழ்வை வளப்படுத்துவதோடு, நிதிநிறுவனங்களுக்கு வெற்றிகரமான ஆபத்தில்லாத வருமானவழியையும் காட்டியுள்ளார். இந்த சேவை மூலம் பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களின் தன்உதவிக்குழுக்களின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் காணும்போது, இங்கே ஒரு விக்ரம் உருவானால் இளைஞர்களும் இத்தகைய வளர்ச்சியில் பங்கு கொண்டு முன்னேறலாம். பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்பதால், வீணான சண்டைகளும் குறையும்.

யாரந்த தமிழக விக்ரம் ?