ஞாபகம் வருதே..தருமமிகு சென்னையில்..


எனது முதல் மூன்று வகுப்புக்கள் கோவையில் கழிந்தாலும்,விவரம் தெரிந்த இளம்பருவம் சென்னையில் தான் கழிந்தது. தி.நகர் இரங்கநாதன் தெருவில் ஐந்து வருடங்கள் (1960-65) வாழ்ந்திருக்கிறோம் என்பதை இன்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. வாசலில் மகிழ மரங்களுடனிருந்த பங்களாவின் ஒருபுறத்தில் குடியிருந்தோம். பின்பகுதியிலும் மாமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் பாதாம் மரங்களுடன் தோட்டம் போல இருக்கும். அவை இன்றைய வளர்ச்சிக்கு விலையானது வருத்தமாகத் தான் இருக்கிறது.

காலை வேளைகளில் மாம்பலம் இரயில்நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் புகை(நீராவி?)வண்டிகளை காண்பது எங்களுக்கு(நானும் தம்பியும்) பிடித்த விதயம். ஊரிலிருந்து வரும் உறவினர் பசங்களுக்கோ சபர்பன் மின்ரயில்களை காண்பதும் பயணிப்பதும் மகிழ்ச்சியென்றால் எங்களுக்கு இப்படி. அதுவும் இஞ்சின் ஓட்டுனரிடம் கிரீஸ் கேட்டு வாங்குவதில் அத்தனை மகிழ்ச்சி. அதை என்னசெய்தோம் என்று ஞாபகம் இல்லை. அப்போதுதான் வெளியூர் வண்டிகளுக்கான பிளாட்ஃபாரம் போட்டுக் கொண்டிருந்ததால் வெகுசில வி.ஐ.பிக்களே இறங்குவார்கள். இராசாசி, வெங்கட்ராமன் ஆகியோரை கண்டதுண்டு. மற்றபடி சிவவிஷ்ணு ஆலயத்தில் வாரியாரின் கமபராமாயண சொற்பொழிவையும் அகத்தியர் கோவிலில் கி.வா.ஜ அவர்களின் கந்தர் அனுபூதி சொற்பொழிவையும் கேட்டு சிறுவயதிலேயே தமிழ் மீதும் ஆன்மீகத்தின் பாலும் பற்று ஏற்பட்டது.

சென்னை வாசத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு இந்தி எதிர்ப்பு போராட்டம். அந்த வருடம் நான் மகாலட்சுமி தெருவில் இருக்கும் இராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது மொழியாக இந்தி/சமக்கிருதம் பயின்று கொண்டிருந்தோம். ஆனாலும் அதில் தேர்வுபெறவேண்டிய அவசியமில்லாதிருந்தது. இந்திமசோதா நிறைவேறியதால் இனி இந்தியில் கட்டாயமாக தேர்வுபெறவேண்டும் என அறிந்து கொண்டோம். தானாகவே கிளம்பிய எதிர்ப்பு அலையில் திரண்டிருந்த மாணவர் கூட்டத்துடன் பள்ளிச்சிறுவர்கள் நாங்களும் சேர்ந்து கொண்டோம். எங்கள் பள்ளியிலிருந்து சென்று துரைசாமி ரோடு லெவல்கிராஸ்ஸிங் அருகே கேட்டை உடைத்து தீ ஊட்டினோம். இரயில்வே சிக்னல் கம்பங்களைச் சாய்த்தோம். நிறுத்தப்பட்ட இரயில் பெட்டிகளில் அப்போதைய முதல்வரை பழித்து கோஷங்கள் எழுதினோம். பொதுச் சொத்தை நாசம் செய்கிறோமே என்று அறியாத வயது. ஏதோ வீர சாகசம் செய்வதாக நினைப்பு. தபதப வென்று வந்த போலீசைக் கண்டு கல்லூரி மாணவர்கள் ஓடிவிட்டனர். எங்களைப் போன்ற பள்ளிமாணவர்கள் தான் மாட்டிக் கொண்டோம். எங்களை எல்லாம் போலிஸ்வானில் ஏற்றி ஜெமினி சர்க்கிளருகில் இறக்கி விட்டனர். இப்போதெல்லாம் டீவியில் காண்பிப்பது போல, நல்ல காலம், எங்களை அடிக்கவில்லை. ஆனாலும் போலிஸ்வானில் பிடித்து சென்றதே எங்களுக்கெல்லாம் அவமானமாக இருந்தது. போக்குவரத்து நின்றிருந்த அந்தநேரத்தில் நடந்தே வீடு வந்து சேர்ந்தால் வீட்டிலும் அர்ச்சனை.இருந்தாலும் அடுத்த இரண்டு நாட்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த கலவரங்களை நேரில் பார்த்துச் சொல்ல இந்த வானர சேனையைத்தான் நம்பியது எங்கள் சுற்றுப்புறம் (அப்ப ஏதுங்க, டிவியும் மாம்பலம் டைம்ஸ்சும்).

அந்த பருவத்தில்தான் நான் எனது முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்தேன். எங்கிருந்தோ கிடைத்த Ferrite rodல் SWG28 என்று செப்புக்கம்பியைச் சுற்றி OA72 என்ற ஆதிகாலத்து டயோடை பயன்படுத்தி மீடியம்வேவ் கேட்கும்படியான ஒரு வானொலிப்பெட்டியை ஒரு சோப்பெட்டியில் ஆக்கி வீட்டளவில் பெயர் வாங்கினேன். அதுவே என் மின்னணுவியல் ஆர்வ்த்திற்கும் வாழ்விற்கும் வித்திட்டது.

மணிமலரின் முதல் பதிப்பு நிகழ்ந்ததும் அந்த காலகட்டத்தில் தான்.

சென்னை வாழ்க்கை எனது தைரியத்தையும் அறிவியலில் விருப்பத்தையும் வளர்த்தது என்றால் எனது தந்தையாரின் பணிநிமித்த இட மாற்றத்தால் வந்த மதுரை மாநகர் ஆன்மீகத்தையும் தமிழ்பற்றையும் மேலோங்கச் செய்தது.அவை அடுத்த பதிவில்...

39 மறுமொழிகள்:

Gurusamy Thangavel கூறுகிறார்

சுவராசியமான பதிவு. நன்றி

மணியன் கூறுகிறார்

நன்றி தங்கவேல்.

ரவி கூறுகிறார்

உங்கள் உலகிற்க்கு அழைத்து சென்றுவிட்டீர்...

கலக்குங்க....

Anonymous கூறுகிறார்

"அருமையான அனுபவங்கள்.
ஞாபகங்கள் தொடர வாழ்த்துக்கள்."

அன்புடன்,
துபாய் ராஜா.

மணியன் கூறுகிறார்

நன்றி செந்தழல் ரவி.

மணியன் கூறுகிறார்

நன்றி துபாய்ராஜா.

Suka கூறுகிறார்

//அந்த பருவத்தில்தான் நான் எனது முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்தேன். எங்கிருந்தோ கிடைத்த Ferrite rodல் SWG28 என்று செப்புக்கம்பியைச் சுற்றி OA72 என்ற ஆதிகாலத்து டயோடை பயன்படுத்தி மீடியம்வேவ் கேட்கும்படியான ஒரு வானொலிப்பெட்டியை ஒரு சோப்பெட்டியில் ஆக்கி வீட்டளவில் பெயர் வாங்கினேன். அதுவே என் மின்னணுவியல் ஆர்வ்த்திற்கும் வாழ்விற்கும் வித்திட்டது.//

அஹா .. என் முதல் ட்ரான்ஸிஸ்ட்டரில் OA72 தான் நானும் பயன்படுத்தினேன் :-)) .. மினி மோட்டார் மின்விசிறியும் , சிகரட் பேக் சரிகை மின் விளக்கும் வேலை செய்தபோது நான் அடைந்த சந்தோசத்தை எடிசன் அடைந்திருப்பாரா என சந்தேகமாகத்தான் இருக்கிறது :)

இந்த பதிவின் பாதிப்பு எனது அடுத்த பதிவிலிருக்கும் :)

வாழ்த்துக்கள்
சுகா

வெற்றி கூறுகிறார்

மணியன்,
நல்ல பதிவு.மிகவும் இரசித்துப் படித்தேன்.

//எங்களைப் போன்ற பள்ளிமாணவர்கள் தான் மாட்டிக் கொண்டோம். எங்களை எல்லாம் போலிஸ்வானில் ஏற்றி ஜெமினி சர்க்கிளருகில் இறக்கி விட்டனர். இப்போதெல்லாம் டீவியில் காண்பிப்பது போல, நல்ல காலம், எங்களை அடிக்கவில்லை. ஆனாலும் போலிஸ்வானில் பிடித்து சென்றதே எங்களுக்கெல்லாம் அவமானமாக இருந்தது. //

என்ன மணியன், பிழைக்கத் தெரியாத மனிதராக இருக்கிறீர்கள். சும்மா காவல்துறையின் மூச்சுப்பட்டாலே, "மொழிக்காவலர்" , "மொழிப்பற்றாளர்", "தியாகி" என்றெல்லாம் பட்டங்கள் சூட்டிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள் எத்தனையோ பேர்!
இந்த ஒரு தகுதியே போதுமே நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு.(சும்மா கிண்டலாகச் சொன்னேன்.)

//அந்த பருவத்தில்தான் நான் எனது முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்தேன். எங்கிருந்தோ கிடைத்த Ferrite rodல் SWG28 என்று செப்புக்கம்பியைச் சுற்றி OA72 என்ற ஆதிகாலத்து டயோடை பயன்படுத்தி மீடியம்வேவ் கேட்கும்படியான ஒரு வானொலிப்பெட்டியை ஒரு சோப்பெட்டியில் ஆக்கி வீட்டளவில் பெயர் வாங்கினேன். //

ம்ம்ம்ம், பாராட்டுக்கள்!

Unknown கூறுகிறார்

//அந்த பருவத்தில்தான் நான் எனது முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்தேன்.//

ஓ!! வானொலிப் பைத்தியம்னு சொல்லுங்க!!

அன்புடன்,
அருள்.

Sivabalan கூறுகிறார்

சார்,

நல்ல பதிவு!!

நன்றி!!

மணியன் கூறுகிறார்

வாருங்கள் சுகா, உங்களுக்கும் மின்னணுவியல்தான் பொழுதுபோக்கா ?

மணியன் கூறுகிறார்

வாங்க வெற்றி, அந்த வயதில் சகதோழர்களுடன் ஒரு சாகசமாக இருந்ததே தவிர முழு தாக்கம் புரியாதிருந்தது. போலிஸ் கேஸ் பதியவில்லை என்றபிறகுதான் வீட்டில் நிம்மதி. ஒருவேளை குற்றம் பதிவாயிருந்தால் நீங்கள் சொல்வது நடந்திருக்கலாம் :))

மணியன் கூறுகிறார்

வாங்க அருள், அந்த வயதில் படிப்பைத் தவிர மற்றயெல்லாவற்றிலும் பைத்தியம்தான் :)

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன். உங்கள் மேலாண்மை கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

குமரன் (Kumaran) கூறுகிறார்

ரங்கனாதன் தெருவில் மரங்களுடன் வீடா? அப்படியெல்லாமா இருந்தது? நம்ப முடியலைங்க.

நல்ல பதிவு. ரத்தின சுருக்கமாக ஆனால் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

மணியன் கூறுகிறார்

ஆமாம் குமரன், இப்போது சொன்னால் என் மக்களே நம்பமாட்டேனென்கிறார்கள் :)) இப்போதுகூட முன்னால் இருக்கும் கட்டிடங்களுக்குப் பின்னால் மரங்களை விட்டு வைத்திருப்பார்களோ ?

Sivabalan கூறுகிறார்

சார்,

ஒரு பதிவு போட்டிருக்கேன்.

இந்த வாரம் மேலுமொரு பதிவு போடலாமென்றிகிரேன்

ஆனால் தமிழ் மணத்தில் சேர்ப்பதற்கு UNICODE வேன்டும் என்று கேட்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

மிக்க நன்றி சார், உங்கள் ஆதரவுக்கு

மணியன் கூறுகிறார்

சிவபாலன்,
//ஆனால் தமிழ் மணத்தில் சேர்ப்பதற்கு UNICODE வேன்டும் என்று கேட்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.//
இந்த பின்னூட்டமே யூனிகோடில்தானே இருக்கிறது. யூனிகோடு பற்றி அறிய எனது நட்சத்திர வாரத்தின் முதல் பதிவில் சுட்டிகள் இருக்கின்றனவே.

Sivabalan கூறுகிறார்

Sir,

I am not able to find it. Help me sir.

துளசி கோபால் கூறுகிறார்

ரங்கநாதன் தெருவில் இப்பக் கையை வீசி நடக்க முடியுமா? அப்ப வாசல்லெ மரமா? இருக்கும் இருக்கும்.
எனக்குத் தெரிஞ்சே 1974லே ஸ்டேஷன் படியைவிட்டு செளியே வந்ததும் காய்கறிகள் பசேல் என்று ஃப்ரெஷாக இருக்கும் மாலை வேளைகளில்.

இப்போ? அதான் அந்த்ப் பக்கம் போகவெ முடியலையே(-:

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

உங்க செட்டிங்க்ஸ மாத்துனதுக்கு நன்றி மணியன்.

எங்க பேங்க்ல கூட இப்படித்தான்.. சும்மா இருக்காம மவுச கையில பிடிச்சிக்கிட்டு இப்படியும் அப்படியுமா ஆட்டுவாங்க. அவங்களுக்கே தெரியாம டயலர் ஐக்கான் (இது பிராஞ்சஸ் டேட்டா அனுப்பறதுக்காக நாங்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கற மென்பொருளோட குறுக்கு வழி (short cut))ரீசைக்கிள் பின்னுக்கு போயிரும். அப்புறமா சார் டேட்டா அனுப்ப முடியலைன்னு புலம்புவாங்க..

சரி விஷயத்துக்கு வருவோம்..

இந்த மாதிரி பழைய நினைவுகள அசை போடறதுல ஒரு தனி சுகமே இருக்கு இல்லே. நானும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவந்தான்.. அந்த காலத்து சென்னைய இந்த காலத்தோட கம்பேர் பண்ணா.. தமாஷஅ இருக்கும்..

வெற்றி கூறுகிறார்

சிவபாலன்,
நீங்கள் ஈ-கலப்பை[eKalappai] யை உங்கள் மின்கணனியில் தளமிறக்கினால்[download]உங்களின் சிக்கலைத் தீர்க்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் ஏற்கனவே ஈ-கலப்பையை தளமிறக்கியுள்ளீர்களா?

ramachandranusha(உஷா) கூறுகிறார்

மணியன்,
இந்த கதையை என் மாமா (அத்தையின் கணவர்)ரும் சொல்லியிருக்கிறார். அதே துரைசாமி ஐயார் ( ஐயர் போடலாமா)
சப்வே தாண்டி ஏதோ தெருவில் அவர் வீடு. நான் ஐந்தாவது படிக்கும்பொழுது அவருக்கும் அத்தைக்கும் கல்யாணம் ஆச்சு.
அவர்கள் வீட்டுக்குப் போகணும் என்றாலே, நாங்கள் அழுவோம். காரணம் உஸ்மான் ரோடு வரைதான் பஸ். அங்கிருந்து நடைதான்.
மாமாவுக்கு இப்பொழுது அறுபது வயசு இருக்கும். உங்கக்கூட கல் எறிஞ்ச கோஷ்டியில் அவரும் ஒருவராய் இருக்கலாம் :-)

சீனு கூறுகிறார்

அட! சென்னையைப் பற்றின என் பதிவுகள்.

http://jeeno.blogspot.com/2006/05/blog-post_11.html

http://jeeno.blogspot.com/2006/05/blog-post_114838613827811335.html

மணியன் கூறுகிறார்

சிவபாலன்,
அந்த சுட்டிமற்றும் இது
இவை தமிழ்மணம் தளத்தில் பதிவுகள் tabலும் உள்ளன.தவிர உதவி tabஉம் பார்க்கவும்.

மணியன் கூறுகிறார்

ஆமாங்க துளசி, நாங்கள் இருந்த காலத்தில் மாலைநேரங்களில் பச்சைபசேலென்று காய்கறிகள் தெருவோரம் விற்கப் படும். நாங்கள் பள்ளிக்கு போகும்போதெல்லாம் வழியில் மாங்காய் அடித்து சாப்பிடுவோம்.இப்போது மாம்பலத்தில் மாமரமா என்று இருக்கிறது.

மணியன் கூறுகிறார்

வாங்க டிபிஆர்சார், அது என்னமோ நேற்று முழுவதும் பார்க்கமுடியாமல் போயிற்று. இன்றும் காலையிலிருந்து ஒரு செமினார் போய்விட்டதால் உங்கள் பின்னூட்டமும் பதிய நேரமாகிவிட்டது. மன்னியுங்கள்.

ஆமாங்க, எல்லோரும் அழகான கிராம வாழ்வை பதிந்தால் நமக்கு நகர வாழ்க்கைதான். ஆனாலும் அப்போதைய சென்னை தி.நகர் பகுதி கொஞ்சம் அமைதியான பகுதியாகத் தான் இருந்தது. பசுல்லா ரோடைத்தாண்டி வயல்வெளிகள் அப்போதுதான் மறைந்து கொண்டிருந்தன. (1964).

மணியன் கூறுகிறார்

வாங்க உஷா, அடடே, நம்ம கூட்டாளியா ? அவருக்கு 60 வயது என்றால் சீனியராக இருப்பார்.

மணியன் கூறுகிறார்

வாங்க சீனு, உங்களின் இந்த கால சென்னையின் படபிடிப்பு நன்றாக உள்ளது.

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

சிறு வயது ஞாபகங்களை அசைபோடுவது ஒரு தனி அலாதி! மாம்பலத்தில தோட்டம் துரவுமா வாழ்ந்தவங்க நீங்க கொடுத்து வச்சவங்க!

மணியன் கூறுகிறார்

நன்றி வெளிகண்டநாதர்.

Muthu கூறுகிறார்

நல்லா இருந்துச்சி சார்.மொழி போர் தியாகி மணியன் வாழ்க

மணியன் கூறுகிறார்

நன்றி முத்து (தமிழினி).
அட நீங்க வேற, ஏதோ பத்தோடு பதினொன்றாக போனதுக்கா ? மொழிபோர் தியாகிகளை இன்சல்ட் பண்ணக் கூடாது சார்.

Geetha Sambasivam கூறுகிறார்

1965-ல் அல்லவா மொழிப் போராட்டம் நடந்தது. அப்போது நீங்கள் மதுரை வந்து விட்டதாக எழுதி இருக்கிறீர்கள்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம். 1965 சனவரி 26இல் சென்னையில் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். கல்வியாண்டு முடிவில் மதுரை வந்தோம். 68 - பள்ளியிறுதி 69- மதுரைக் கல்லூரி . சந்தேகம் தீர்ந்ததா?

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

இதுக்கு ரெண்டு நாள் முன்னயே பின்னூட்டம் போட முயன்று தோற்றேன்.. இதோ இப்போ:

ரங்கனாதன் தெருவில் இருந்தீங்களா? நாங்கள் பக்கத்தில் ராமனாதன் தெருவில் இருந்தோம் எண்பதுகளில்.. அப்போதே அந்தப் பகுதி அதிக நடமாட்டம்/நெரிசல் உள்ள பகுதியாகிவிட்டது.. ரங்கனாதன் தெருவில் எனக்குத் தெரிஞ்சு மரம் உள்ள வீடு பார்த்த நினைவு இல்லை..எங்கள் அபார்ட்மென்டில் (அடுக்குமாடி என்று சொல்லமுடியாது, வரிசைக் குடியிருப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்) மரங்களும், விளையாட மைதானமும் கூட இருக்கும்.. நகரின் முக்கிய பகுதியில் இருக்கிறோம் என்று அப்போதெல்லாம் தோன்றியது இல்லை...

அங்கே இருந்தவரை சும்மா இருக்கும் நேரங்களில் ரயிலை வேடிக்கை பார்ப்பது அப்போதைய விருப்பமான பொழுது போக்கு... ரயில் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகி இருந்தது. வீடு மாறி வந்து வெகு நாள் வரை ரயில் சத்தம் இல்லாது, தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டது உண்டு :)

இந்தி எதிர்ப்பு பத்தி எனக்குத் தெரிஞ்ச ஒரே சங்கதி, மாம்பலம் ஸ்டேஷன் பெயர்பலகையில் நடுவில் இருக்கும் மாம்பலத்தை மட்டும் நல்லா கறுப்புப் பெயின்ட் போட்டு அழிச்சிருப்பாங்க!! அவ்வளவுதான் :)

மணியன் கூறுகிறார்

அட, நீங்க நம்ம அடுத்த தெருவா போயிட்டீங்களே ! அங்கும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். நானிருந்த காலத்தில் உஸ்மான் தெருவே பாண்டிபசார் போல நிறைய மரங்களுடன் இருந்தது. அந்தகால சில நிழற்படங்கள் கோவையிலும் சென்னையிலும் மாட்டிக் கொண்டுவிட்டன. அடுத்தமுறை செல்லும்போது முடிந்தால் கொண்டு வரவேண்டும்.

தருமி கூறுகிறார்

சென்னை வாசத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு இந்தி எதிர்ப்பு போராட்டம். ..

"உங்க போராட்டம் (!) சென்னையிலா..அப்போது நீங்கள் மதுரையில் இருந்தீர்கள் என கீதா மாதிரி நானும் தப்பா நினச்சுட்டேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க தருமி, ஒரே வருடத்தில் இரண்டு ஊரில் இருந்ததால் வந்த குழப்பம்.