நன்றி சொல்வேன்!


நான் படைப்பதினால் என் பெயர் இறைவன் என்றான் காவியத் தாயின் இளையமகன் கண்ணதாசன். நாமும் அந்த இறை தொழிலை செய்து விட்டு.. அட, சாமியாடிவிட்டு சாமி கீழிறங்க வேண்டிய நேரம் வந்தாச்சு. கற்பூரத்தைக் கொளுத்தி அணைச்சுடவேண்டியதுதான்.

நட்சத்திர வாரம் எனக்களிக்கப் பட்டபோது, 25 இடுகைகளைக் கூட இட்டிருக்காத என்னை எவ்வாறு மதி தெரிந்தெடுத்தார் என வியந்தேன். ஆனால் நட்சத்திர வாரம் என்பதே ஒரு வடமிழுத்தல்(kickstart) என்பதை இந்த வார இறுதியில் புரிந்து கொண்டேன். ஒருமாதம் முன்னறிவிப்பு இருந்தும், சராசரி தமிழனாய் கடைசி நிமிடத்திலேயே பரபரத்து பதிந்து சற்று எதிர்பார்த்த அளவில் செய்ய முடியவில்லை. இதைத் தவிர மர்பி விதிப்படி எப்போது வேலை வரக்கூடாதோ அப்போதுதான் அலுவலகத்திலும் வேலைபளு. நடுவில் ஒருநாள் பின்னூட்ட செட்டிங்கில் வேறு கோளாறாகி வலைப்பதிவரின் எரிச்சலுக்கும் காரணமானேன். நட்சத்திர வாரத்தில் இடுகைகளின் வெளியீட்டு கால இடைவெளி மேலாண்மை, பின்னூட்டங்களின் மேலாண்மை என ஒரு சிறிய நிகழ்ச்சி ஒருங்கமைப்பு (Event Management) பணி போன்றது. நானிட்ட இடுகைகளை விட அவற்றின் பின்னூட்டங்களே நான் சொல்லவந்த விதயத்தை முழுமை செய்தன.

பத்துநாட்களுக்கு ஒரு இடுகை இடுபவன் இந்த ஒரு வாரத்தில் பத்து இடுகைகள் இட்டிருக்கிறேன். இன்னும் பத்து இடுகைகள் எழுத விதயம் கிடைத்துள்ளது. வரும் வாரங்களில் வாரம் இரண்டாவது இடவேண்டும் என எண்ணியுள்ளேன். ஏற்கெனவே தொலைப்பேசி புள்ளிவிவரங்களைக் கொடுத்து போரடித்திருப்பதால் திரும்பவும் ஹிட் கௌண்டர் விவரங்களை சொல்லி வெறுப்பேற்றவில்லை. ஆனாலும் எண்ணிக்கையில் பார்வையிட்டவர்களும் பின்னூட்டமிட்டவர்களும் அதிகமாயினர். தவிர மிக நெருக்கமான பரிவையும் நட்பையும் உணர்ந்தேன். அவை எண்ணிக்கை கணக்கால் அளவிடவியலாது.

இடுகைகள் நானிருந்த சில ஊர்களை நினைவு கூர்ந்தன. அங்கு வாழ்ந்த வலைப்பதிவர் நினைவுகளையும் அவை கிளறி விட்டன என பின்னூட்டங்களால் அறிந்தேன். அந்தந்த ஊர்களின் தன்மையை சொல்ல நினைத்து சொந்த நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன். அதனால் அவை ஒரே தன்மையானவையாக போய்விட்டது.

தமிழ்மணத்தில் சிறந்த சிந்தனைகளையும் ஆக்கங்களையும் காண்கிறேன். ஆனாலும் ghetto மனப்பாங்கு ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்வதை தடுக்கிறது. திறந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டால் நம் சிந்தனைகளை மேலும் செம்மைப் படுத்தலாம்; செயலாக்கலாம். காதலுக்கு மரியாதை, பெற்றவர் சம்மதம் என்றால் கருத்துக்கு மரியாதை அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதில்தான். கடினம்தான், இயலாதது இல்லை. கூடி வாழ்வோம், கோடி நன்மை.

முடிவில் என் பதிவுகளை தொடர்ந்து படித்த, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்கள் , இந்த வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

22 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

சார்,

தொடரட்டும் உங்கள் மேலான பணி..


உங்களிடமிருந்து மேலும் பல பதிவுகளை எதிர்பார்து...

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன், பணி தொடரும்:)

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

சிறப்பான நட்சத்திர வாரமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் எழுத்து பணியே மென்மேலும்!

மலைநாடான் கூறுகிறார்

//திறந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டால் நம் சிந்தனைகளை மேலும் செம்மைப் படுத்தலாம்; செயலாக்கலாம். //

நிறைவில் ஒரு நிறைவான பதிவு.
உங்கள் நட்பு விருப்பத்துக்குரியது

வெற்றி கூறுகிறார்

மணியன் அய்யா,
இந்த வாரம் முழுவதும் நல்ல சுவையான பதிவுகள் உங்களிடமிருந்து கிடைத்தன. நல்ல எளிய தமிழ்நடையில், சொல்ல வந்த கருத்தை எல்லோரும் இரசிக்கும் வண்ணம் தந்தீர்கள். நட்சத்திர வாரம் முடிந்ததும் நிறுத்திவிடாது, இவ் வாரம் தந்தது போல் இன்னும் பல சுவையான பதிவுகளை நீங்கள் தர வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

Chandravathanaa கூறுகிறார்

தொடர்ந்தும் எழுதுங்கள்.

துளசி கோபால் கூறுகிறார்

மணியன்,

அருமையாக இருந்தது உங்கள் 'வாரம்'

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி

வவ்வால் கூறுகிறார்

வணக்கம் மணியன்!

நல்லப் பதிவு!

மணியன் கூறுகிறார்

நன்றி வெளிகண்டநாதர்.

மணியன் கூறுகிறார்

நன்றி மலைநாடான். உங்கள் அறிமுகம் எனக்கும் மகிழ்வைத் தருகிறது.

மணியன் கூறுகிறார்

நன்றி வெற்றி. இந்த வாரம் முழுவதும் நீங்கள் எனக்களித்த ஆதரவுக்கு தனி நன்றி. 'வெற்றி'யின் பார்வைக்குத் தானே அனைவரும் முயல்கிறோம் :))

மணியன் கூறுகிறார்

நன்றி சந்திரவதனா. உங்களைப் போன்ற மூத்த வலைப் பதிவர்களின் ஊக்கமே தொடர்ந்து எழுத உந்தும்.

மணியன் கூறுகிறார்

துளசி டீச்சருக்கு நன்றியெல்லாம் சொல்லி மாளாது. தமிழ்மணத்தின் உயிர்நாடியாக விளங்குகிறீர்கள். புதியவரை வரவேற்பதிலும் அனைவரையும் அரவணைத்து செல்வதிலும் பதிவிடுவதற்கும் பின்னூட்டங்களின் 'வளர்ச்சி'க்கும் உங்கள் வழிகாட்டுதல் மிக முக்கியமாக இருக்கிறது. தமிழ்மண நிர்வாகிகள் நுட்பத்தை பார்த்துக் கொண்டாலும் அதன் சுவையை தளரவிடாமல் பார்த்துக் கொள்வதில் உங்கள் பங்கு அளவிற்கரியது. வாழ்க பல்லாண்டு!

மணியன் கூறுகிறார்

நன்றி வவ்வால். உங்கள் கவிதை எண்ணங்களும் அருமை.

ilavanji கூறுகிறார்

நல்லதொரு வாரம்!

இன்னும் 10 பதிவுகளுக்கான மேட்டர் கைவசம் இருக்கா?! சீக்கிரம் வாங்க! :)

மணியன் கூறுகிறார்

நன்றி இளவஞ்சி. வண்டி உதை கொடுத்து ஸ்டார்ட் ஆகிவிட்டது. இனி பாதையில் சோம்பல் குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.

செல்வநாயகி கூறுகிறார்

///திறந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டால் நம் சிந்தனைகளை மேலும் செம்மைப் படுத்தலாம்; செயலாக்கலாம்///

மிகச்சரி மணியன். நல்ல நினைவலைகளாக இருந்தன உங்கள் வாரம். நிறைய எழுதுங்கள்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செல்வநாயகி.

துபாய் ராஜா கூறுகிறார்

///"நானிட்ட இடுகைகளை விட அவற்றின் பின்னூட்டங்களே நான் சொல்லவந்த விதயத்தை முழுமை செய்தன."///.

உண்மைதான் சார்!!உங்களது ஊக்கமான பின்னோட்டங்களையும் பலரது பதிவுகளில் கண்டேன்.
பதிவுகள் தொடர பாச வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
இனியவன்,
(துபாய்)ராஜா.

மணியன் கூறுகிறார்

நன்றி துபாய் ராஜா.

தாணு கூறுகிறார்

expecting your continuos writing Maniyan. Congrats for the successful week

மணியன் கூறுகிறார்

தாணு, உங்கள் ஊக்கம் நிச்சயம் என்னை மேன்மேலும் எழுத தூண்டும். நன்றி.