சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?

விவரமறிந்த வயதிலும் விடலைப்பருவத்திலும் வாழ்ந்த ஊர்கள் சொந்தம் கொண்டாடினாலும் கோவையின் மையப்பகுதியில் தேரோடும் இராசவீதி/கருப்ப கௌண்டர் வீதியில் கழிந்த இளமைநாட்கள், வீட்டிலிருந்து பொறியியல்கல்லூரி சென்ற நாட்கள் என இனிமை சேர்த்ததும் ஆலைகள் வைப்போம்; கல்விச்சாலைகள் வைப்போம் என்ற பாரதியின் கூற்றிற்கேற்றவாறு பஞ்சாலைகளும் பொறியியற்கல்வி நிறுவனங்களும் நிறைந்ததுமான எங்கூரு கோயம்பத்தூரு தானுங்கோ :)

நான் படித்த முதல் பள்ளி கரடிகோவில் நகராட்சி பள்ளியாகும். அப்போதெல்லாம் பள்ளி ஒருவேளைதான். மதியம் சாப்பாட்டிற்கு வந்தால் விகடனில் துப்பறியும் சாம்பு, கல்கியில் வாண்டுமாமாவின் அந்த கால ஹாரிபாட்டர் என சித்திர தொடர்களை, முதலில் எழுத்துக்கூட்டி, பிறகு சரளமாக படிப்பேன். என்னை படிக்க ஊக்குவித்தது அந்த தொடர்கள் தான். அந்த சித்திரக் குள்ளன் இன்னும் என் மனதில் இருக்கிறான். வீட்டில் பசுமாடு இருந்ததால் பருத்திகொட்டையை ஊறவைத்து அதில் புண்ணாக்கை கலந்து அதற்கு கொடுப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு (கூட மாட்டுக்காரர் இருப்பார்). மாட்டுப்பொங்கல் அன்று அதற்கு வண்ணம் பூசி, சிங்காரித்து மாட்டுக்காரருடன் கோவில் சென்று திரும்புவதும் நான் விரும்பிய செயல்.என் வாரிசுகள் மாடுகளைத் தெருவில் காண்பதோடு சரி. மாட்டுச் சாணியை உருண்டையாக்கி காயவைத்து ஆறுமாதத்திற்கொருமுறை தீயிட்டு வெண்ணீறு செய்வோம். வெளியிலிருந்தெல்லாம் வாங்கியதில்லைஅதே போல வேண்டும்போது நெல்லை வீட்டிலேயே வைத்து புழுக்குவோம். இவையெல்லாம் கிராமத்து மண்ணிலிருந்து வந்துள்ள நிறைய பதிவர்களுக்கு சாதரணமாக இருக்கும். ஆனால் நகரவாசியான எனக்கு இவையெல்லாம் இனிய நிகழ்வுகள். அதிலும் நான்தான் இத்தகைய தலைமுறைக்கு கடைசி சாட்சி என எண்ணும்போது இந்நிகழ்ச்சிகள் எனக்கு மனதிற்கு நெருக்கமானவையாகின்றன.

எங்கள் நகர தெய்வம் கோனியம்மன் எங்கள் குலதெய்வமுமாகும். மாசிமாதம் தீகுண்டம் இட்டுவிட்டால் யாரும் ஊரை விட்டு போகமாட்டோம். இதுவரை நானும் அவ்வாறே. பெரும்பாலான வருடங்கள் ஊரிலேயே இல்லை என்பது வேறு விதயம் :)) தேர்திருவிழா பார்க்க தேர்முட்டி(தேர்நிலை) அருகிலிருந்த எங்கள் வீட்டிற்கு உற்றமும் சுற்றமும் கூடுவர். அதனால் எங்கள் வீட்டு விழா போல கொண்டாடுவோம். அனைவருக்கும் பானகம், நீர்மோர் கொடுப்பது என்னைபோல இளசுகளின் வேலை. தேர்முட்டி கோவை டவுன்டௌனின் முக்கிய இடமாதலால் பெரும்பாலான அரசியல் கூட்டங்கள் அங்கு நடக்கும். விரும்பினாலும் இல்லையென்றாலும் அனைத்து உரைகளையும் கேட்க வேண்டிய கட்டாயம். இப்போது நெரிசல் அதிகமாயிருப்பதால் புறநகர் பகுதியொன்றிற்கு வந்து விட்டோம். நொய்யலாற்றின் கரையில் அமைந்த பட்டீஸ்வரம் எனும் பேரூருக்கு ஆருத்ரா அன்று ஒரு பிக்னிக் போல காலையில் சென்று மாலையில்தான் திரும்புவோம். மதியம் சாப்பாடு அங்கேயே ஏதாவது ஒரு மடத்தில் போடுவார்கள். மருதமலையையும் அனுவாவி சுப்ரமணியரையும் சக வலைபதிவர்கள் பதிந்துள்ளனர்.கொங்குநாட்டு கோவில்கள் என்று இன்னொரு இடுகைக்கு வண்டி விதயம் கிடைக்கிறது.

எங்கள் பூர்வீகம் எனச் சொல்லக்கூடியது காங்கேயம் ஆகும். அதனருகில் 8 கி.மீயில் அமைந்திருக்கும் சிவமலையில் வீற்றிருக்கும் முருகனும் குலதெய்வம் தான். அருணகிரியின் பாடல்களில் வரும் சிவமலை, சிவகிரி என்பன இத்தலத்தைக் குறிக்கும் எனவே நினைக்கிறேன். ஆனால் அவர் பாடலுக்கு உரை எழுதுபவர்கள் சிவமலை பழனியை குறிப்பது என குறிப்பிடுகிறார்கள். ஆய்வு மாணவர்கள் விளக்க வேண்டும். இந்தக் கோவிலில் ஒரு வினோத வழக்கம். அங்கு முருகன் எதிரில் உள்ள கம்பத்தில் எந்த பொருள் கட்டப் பட்டதோ அதன் விலை அந்த வருடம் கூடும் என்ற ஐதீகம். அதாவது இந்த வருடம் பயிறு கட்டப்பட்டிருந்தால் அதன் விலை ஏறும் என்று எல்லா விவசாயிகளும் பயிறு விதைப்பார்கள். எல்லோரும் விளைவித்தால் விலை குறையுமல்லவா என்று வியந்ததிற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. காங்கேய விவசாயிகள்தான் சொல்ல வேண்டும்.அங்கிருந்த எங்கள் வீட்டை நான் கல்லூரி படிக்கும் போதுதான் விற்றோம்.

பொறியியல்கல்வி நுழைவிற்கு அப்போதெல்லாம் நுழைவுத்தேர்வு கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் பொறியியல் படிப்புக்கு ஆள் தெடிக் கொண்டிருந்த நேரம். நேர்முகம் மட்டும்தான். எனக்கு திருச்சி RECஇல் இடம் கிடைத்திருந்தது. ஆனால் வீட்டிற்கு பெரியவரான எங்கள் தந்தையின் மாமா, கோவையிலேயே ஒன்றுக்கு மூன்றாக பொறியியல் கல்லூரிகள் இருக்கும்போது திருச்சிக் கல்லூரிக்கு ஏன் போவது என்று சொல்ல என் தந்தையாரும் தனக்குத் தெரிந்தவர் மூலம் திரு ஜி. ஆர் தமோதரனை அணுகி பூ.சா.கோ பொறியியல் கல்லுரியில் சேர்ந்தேன். என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை :( இதை என்ன ஆதிக்கம் என்று சொல்வது, குடும்பத் தலைவர் ஆதிக்கம் என்று சொல்லலாமா :)) இன்று என் பையனுக்கு பூரண சுயாட்சி கொடுத்தால் என்னப்பா, என் கல்வியில் உனக்கு நாட்டமே இல்லையே எனக் குறை காண்கிறான். கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு தனி பதிவுதான் போட வேண்டும். செய்ய வேண்டிய செயற்பட்டியலுக்கு இன்னுமொரு எண்ணிக்கை.


credit for vintage Coimbatore photo
"Mosque in the Coimbatore" by Daniell, 1834
Source: http://snuffy.lib.umn.edu/image/srch/bin/Dispatcher?mode=600&id=ama01217
(downloaded Oct. 2005)
"The Oriental annual, or, Scenes in India / comprising ... engravings from original drawings by William Daniell R.A. and a descriptive account by the Rev. Hobart Caunter, B.D. Drawn by William Daniel, R. A.; Engraved by J. C. Armytage; Mosque in the Coimbatore; London Published Oct. 1, 1834 by Bull & Co. 26 Holles Street Cavendish Square; Printed by J. Yates. Engraved by J. Hedaway from original drawings by William Daniell R.A. 1846 (exact)."

30 மறுமொழிகள்:

துளசி கோபால் கூறுகிறார்

சொந்த ஊரை நான் இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன்.

ramachandranusha(உஷா) கூறுகிறார்

ம்ம்ம் இன்னொருத்தர் :-)

தருமி கூறுகிறார்

ஏனுங்க..இந்த காங்கேயம் மாடுகள் இன்னைவரைக்கும் பழைய பேரோடு இருக்குதுங்களா?

அனுசுயா கூறுகிறார்

அன்பு மணிமலர், கோவையை பற்றிய அருமையான பதிவு. எவ்வளவு படித்தாலும் பார்த்தாலும் சொந்த ஊரைபற்றி யாராவது எழுதினால் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

துபாய் ராஜா கூறுகிறார்

""சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?"".

உண்மைதான் மனியன் சார்!!!.இனிய
அனுபவங்கள் தொடரட்டும்.

அன்புடன்,
(துபாய்)Raja.

மணியன் கூறுகிறார்

வாங்க துளசி, யாதும் ஊரே, யாவரும் கேளிர்தானே உங்களுக்கு :)

மணியன் கூறுகிறார்

வாங்க உஷா, நீங்களுமா ?

மணியன் கூறுகிறார்

பொள்ளாச்சி சந்தேலேதானுங்கோ கேட்கோணும் :)

மணியன் கூறுகிறார்

அனுசூயா, உங்கள் முதல்வரவு நல்வரவாகுக! நீங்கள் எண்ணுகிறீர்களா ?

மணியன் கூறுகிறார்

வாங்க துபாய்ராஜா, ப்ளாக்கர் தளம் ஆரம்பித்து விட்டீர்களா? இனி உங்கள் பதிவுகளையும் எதிர்நோக்கலாமா ?

மஞ்சூர் ராசா கூறுகிறார்

நம்மூருன்னாலே அது சொர்க்கம் தானே. கோவை சொந்த ஊர் இல்லேன்னாலும், எனக்கு என்னமோ கோவையெ பத்தி யார் எழுதினாலும் போய் படிக்க தோணுது. ரொம்ப நாளு அங்கெ இருந்ததனாலெ அப்படி ஒரு பற்று.

நல்லா எழுதியிருக்கீங்க. இளமை கால நினைவுகளும், அவை இப்பொழுது இல்லை என்ற ஏக்கமும் மிக மெல்லிய சோக உணர்வுடன் வெளிப்பட்டிருக்கிறது.

மணியன் கூறுகிறார்

நன்றி மஞ்சூர் ராஜா. இருப்பதை விட்டு இல்லாததை நாடுவதுதானே மனம்.

துபாய் ராஜா கூறுகிறார்

வாங்க துபாய்ராஜா, ப்ளாக்கர் தளம் ஆரம்பித்து விட்டீர்களா? இனி உங்கள் பதிவுகளையும் எதிர்நோக்கலாமா ?

"ஆமாம் சார்.விரைவில் பதிவுகள் மூலம் எனது இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளப்போகிறேன்."

மணியன் கூறுகிறார்

மிகவும் மகிழ்ச்சி துபாய் ராஜா.

இரா. செல்வராசு (R.Selvaraj) கூறுகிறார்

அன்பு மணியன், உங்களின் இந்த வாரப் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருந்தன. குறிப்பாக, இந்தச் சொந்த ஊர்ப் பதிவு.

காங்கயம் சிவன்மலை எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன். கோவையையும் அண்மைய காலங்களில் தான் அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். 'சிவகிரி' என்ற இன்னொரு ஊரும் முத்தூர் அருகே இருக்கிறது. ஆனால், அங்கே 'கிரி' எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி செல்வராஜ். உங்கள் எழுத்துக்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை. உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கமளிக்கிறது.

Anonymous கூறுகிறார்

உங்கள் ஆதங்கத்தை ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டீர்கள்; ஈழத்தில் என்கிராமத்தில் பல இல்லைகள் ஆனால் போதிய அளவு மகிழ்ச்சியிருந்தது.
"நம்மவூரு போல வராதுங்க!
யோகன் -பாரிஸ்

Sivabalan கூறுகிறார்

சார்,

பதிவைப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நம்ம ஊரும் கோயமுத்தூர்தான்.

தாணு கூறுகிறார்

மணியன்
இன்றுதான் உங்கள் பதிவு வாசிக்க முடிந்தது. நட்சத்திர வாரம் முடியும் முன்பு எப்படியோ படித்துவிட்டேன். சிவன்மலை பற்றி கெள்விப் பட்டிருக்கிறேன், நால் ரோடிலிருந்து திரும்பணும் இல்லையா? ஒருதரம் போகணும்

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி யோகன்.
//என்கிராமத்தில் பல இல்லைகள் ஆனால் போதிய அளவு மகிழ்ச்சியிருந்தது.// நீங்கள் சொல்வது நூற்றில் ஒரு வார்த்தை.

ஆனால் துளசி சொல்வது போல சொந்தமும் பந்தமும் சிதறிக் கிடக்கும்போது எதுங்க நம்ம சொந்த ஊர் ? இந்தக் கேள்வியை நாம் கேட்காவிட்டாலும் நம் சந்ததி கேட்கும் எனத் தோன்றுகிறது.

மணியன் கூறுகிறார்

நினைத்தேன் சிவபாலன் உங்கள் மின்னஞ்சலைப் பார்த்ததும்:)
நன்றி

மணியன் கூறுகிறார்

வாங்க தாணு, ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் வழியில் காங்கேயத்திற்கு 8 கி.மி தூரத்தில் பிரிவு வரும். இப்போது வளைவு எல்லாம் போட்டிருக்கிறார்கள். மேல்வரை போக மலைச்சாலையும் உண்டு.

Sivabalan கூறுகிறார்

சார்

அந்த பழைய புகைப் படம் சூப்பர்.

அது எந்த ஆண்டு எடுக்கப் பட்டது?

வெற்றி கூறுகிறார்

//சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?//

உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும், சொந்த ஊர் போல வராதுதான். நல்ல பதிவு. தொடருங்கள்.

அன்புடன்
வெற்றி

மணியன் கூறுகிறார்

என்னங்க சிவபாலன், இடுகையின் கீழேயே கிரெடிட் கொடுத்திருக்கின்றேனே, பார்க்கலீங்களா ?

மணியன் கூறுகிறார்

நன்றி வெற்றி. சொந்த ஊர் உடன் நட்சத்திர பதிவு முடிந்தது. இந்த வாரம் அறிமுகமான நாம் இனி எப்போதும் போல் தொடரலாம்.

Sivabalan கூறுகிறார்

Oh Sorry Sir!!!

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி இந்திராநகர் கிருஷ்ணன். விரைவில் இகலைப்பை மூலம் தமிழில் எழுதுவீர்கள், பதிவுகள் பதிவீர்கள் என நம்புகிறேன்.தமிழ்மணத்திற்கான புதுமுகமாக உங்களை வரவேற்கிறேன்.

Osai Chella கூறுகிறார்

அட நீங்களும் நம்மூருங்களா!
http://chella.info/webgypsy/archives/254

மணியன் கூறுகிறார்

அட, நீங்களுமா ?
நன்றி செல்லா.