கணிதம் வேண்டுமா ?


கல்விபற்றி சொல்லும்போது எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றனர் மூதோர். படித்தவனுக்கு அடையாளமே அவனது மொழியறிவும் கணித அறிவும்தான். இதில் நுண்கலைகள் சிறந்திருந்த பழந்தமிழ்நாட்டில் பைந்தமிழ் இலக்கியங்களை பயில்வதே முக்கிய கல்வியாக இருந்தது; கணிதம் வாழ்முறைக்கு தேவையான அளவே இருந்தது.

ஆனால் இன்றைய அறிவியல் உலகில்,பள்ளிக் கல்வியில் மொழியறிவு தேவையான அளவும், கணிதமும் அறிவியல்பாடங்களும் முக்கியபங்கும்் பெற்றிருக்கின்றன. மேல்படிப்புகளுக்கு எடுத்துக் கொள்ளும்போது மொழிகள் ஒரு பொருட்டே இல்லை.நமது கல்வியாளர்கள் கிராமத்து மாணவர்களை காரணம் காட்டி பள்ளியில் பயிலும் ஆங்கிலக் கல்வியின் தரத்தை வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் நன்கு படித்து வேலைக்கு வரும் இளைஞர்கள் கூட எழுதும்போது தவறுகள் செய்கிறார்கள். இதில் தாய்மொழியானாலும் சரி, ஆங்கிலமானாலும் சரி. அதுவும் அலுவலக மின்னஞ்சலில் தந்தி முறையில் (இப்போது குறுஞ்செய்தி முறையில்) எழுதுவதால் இருக்கின்ற மொழியறிவும் தங்குவதில்லை.

இப்போது இங்கே (மகாராஷ்ட்ராவில்) எண்ணிற்கும் சோதனை வந்திருக்கிறது. அதே கிராம சிறார்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறமுடிவதில்லை யென்று சொல்லி கணித பாடங்களை விருப்பப் பாடங்களாக ஆக்கலாமா என்று அரசினர் பரிசீலித்து வருகிறார்கள்.அடிப்படை கணக்கு எட்டாவது வரை அனைவருக்கும் கட்டாயமே. அல்ஜீப்ராவும் திருகோணமிதியும் கால்குலசும் எல்லோரும எதற்கு ் கற்க வேண்டும் என்பது அவர்கள் வாதம். இதனால் கணிதம் என்றாலே பயப்படும் பெருவாரியான மாணவர்கள் வேறு விருப்பப் பாடங்களை எடுத்து வாழ்வில் முன்னேறலாம்.

இந்திய கல்வித் திட்டங்கள் மிகவும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. வளைந்து கொடுப்பவை யல்ல. வளர்ந்த நாடுகளில் ஒரு மாணவர் அவர் படிக்கும் கல்விக் கேற்ப விருப்பப் பாடங்களை எடுத்துக் கொள்ளலாம். தங்களுக்கு பிடித்த கல்வியை அடைய தேவையான கடின பாடங்களும் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதால் நன்றாக பயில முடிகிறது. அந்த திசையில் இந்த (மஹா)அரசும் அடி எடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் மக்களிடையே இது மிகுந்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. கணிதத்தின் தரம் குறைந்து விடும், போட்டி நிறைந்த சமகாலத்தில் தங்கள் திறன் குறைந்துவிடும் என அஞ்சுகிறார்கள். இது தேவையற்ற பீதி. தங்களுக்குப் பிடித்த பாடங்களைப் பயில்வதால் அதிக ஊக்கம் கொண்டு அதிக சாதனைகள் நிகழ்த்துவர். கணிதத்தை ஒழிக்கவில்லையே, விருப்பப் பாடமாகத் தானே ஆக்கியிருக்கிறார்கள்.

எனக்கு கணிதம் விருப்பமான பாடமே. என் பள்ளி பருவத்தில் 9,10,11 வகுப்புகளில் Composite maths என்று படித்தேன். வேண்டாதவர்கள் பொது கணிதம் படிப்பார்கள். தவிர நான் உயிரியல் படிக்கவில்லை. ஆனால் இன்று தொழிற்கல்வி பயில திட்டம் வைத்துள்ளோரும் உயிரியல் படிப்பது அவர்கள் ஒருமுகப் படிப்பை சிதறடிப்பதாகவே எண்ணுகிறேன். ஆனாலும் இக்கால மாணாக்கர் இரண்டிலும் முழு மதிப்பெண்கள் பெறுவது சாதனைதான்.

காலஓட்டத்தில் க்ரீன்ஃபங்ஷனும் பெசல்ஃபங்ஷனும் விட்டு இன்று சிதம்பரத்தின் வரிக்கணக்கு கூட விளங்காமல் உதவி நாடவேண்டியுள்ளது.

4 மறுமொழிகள்:

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

கணித திறைமை நம் போன்றோர்க்கு மிகவும் பயன்படும் சொத்து. இன்று நாம் கணணியின் மென்பொருள் துறையின் அசுர வளர்ச்சி பெற்று உள்ளோம் என்றால் அது நம்மிடையே இருக்கும் கணித திறைமிக்கு ஒரு சான்று. அதை விருப்ப பாடமாக படிப்பது அடிப்படையில் எங்கோ கோளாறு போலத்தான் ட்தெரிகிறது. தங்கள் துறைகளை கணித மற்ற துறையாக தேர்ந்தெடுத்த பின்னரும் கணனி மென்பொருள் துறையில் உச்சம் பெற்று இன்று நல்ல முறையில் சிலர் இருப்பதற்கு இதுவே சான்று!

மணியன் கூறுகிறார்

வெளிகண்டநாதரே, நீங்கள் சொல்வது கணிதத்தின் சிறப்பு பற்றி. அது வாழ்வியலிலும் ஒரு ஆராயும் பான்மை(analytical mind) யை வளர்க்கிறது. ஆயினும் இங்கு அனைவருக்கும் கட்டாயமாக உயர்நிலை கணிதம் தேவையா என்பதே. எட்டாவது வகுப்பு வரை அடிப்படை கணிதம் இருக்கும். அதற்கு மேல் எடுக்கப் போகும் வழியைப் பொறுத்து மேலும் கணிதம் தேவையா என முடிவெடுக்கலாமே.

அரசின் முடிவின் பின்னால் இருக்கும் லாஜிக் சர்ச்சைக்குறியது. கிராமச் சிறுவர் மதிப்பெண் வாங்க முடிவதில்லை என்பது. சரியான பள்ளிகளையும் ஆசிரியர்களையும் ஏற்படுத்த முடியாத அரசின் கையாலாகாதத் தனத்தை கிராமச் சிறுவர் மேல் போடுவது அபாண்டம். இது அவர்களின் திறமையை ஒட்டுமொத்தமாக ஏளனம் செய்வது. பள்ளியிறுதி தேர்வின் தேர்வு சதவீதம் அதிகமாக இருக்கவேண்டும் என்ற புள்ளிவிவரத்திற்்ககாஅகாக எடுத்த முடிவு.

Sivabalan கூறுகிறார்

நல்ல பதிவு!!

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்.