ஓ கொல்கொதா !
என் முதல் பதவிஉயர்வோடு கொல்கொத்தாவிற்கு மாற்றலாகிப் போகும்போது வாழ்த்து சொன்ன கையோடு துக்கம் விசாரித்தவர்கள் தான் அதிகம். நக்சலைட்டுகளின் தீவிரவாதம், வெகுநேர மின்வெட்டு, பாதாள ரயில் கட்டுமானப் பணியால் போக்குவரத்து நெரிசல்கள் என ஒரு பெரிய எதிர்மறை பட்டியல்.ஒரு ஜூன்மாத படபடக்கும் வெயிலில் சென்னையில் கோரமண்டலில் ஏறி ஹௌரா இரயில்நிலயத்தில் இறங்கும்போது நல்லமழை எங்களை வரவேற்றது.என் மனைவியின் சிற்றப்பா அங்கு இருந்ததால் ஒருவாரம் அங்கே தங்கியிருந்து வீடு வேட்டையை தொடங்கினேன். தென் கொல்கொத்தாவின் பாலிகஞ்ச் எனப்படும் பகுதியருகேதான் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிப்பதாலும் நமது மளிகை சாமான்கள் அங்குதான் கிடைக்கும் என்பதாலும் அந்த பகுதியில் வீடு தேடினோம். இறுதியில் இரவீந்திர சரோவர் எனப்படும் ஏரியின் ஓரத்தில் அமைந்திருந்த சரத் சாட்டர்ஜி அவென்யூவில் ஒரு சிறிய குடியிருப்பு கிடைத்தது. அப்போதைய சம்பளத்திற்கேற்ற வாடகை. இப்போதைய குடியிருப்பின் வாயிலறை அளவிலான அடுக்ககம். அதன் சொந்தக்காரர்கள், வயதான பெங்காலி தம்பதியினர், எங்கள் மேல் அளவு மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். இன்னும் அவர்கள் பாசப்பிணைப்பு தொடர்கிறது.
கொல்கொத்தாவின் 90 இலட்சம் மக்கள் 5 சதுரகி.மீ பரப்பில் வாழ்கிறார்கள். அதனால் ஊரென்று பார்த்தால் சிறியதுதான். அதுவும் நாங்கள் புழங்கிய பாலிகஞ்ச், டாலிகஞ்ச் மற்றும் லேக்கார்டன்ஸ் சென்றுவர கைரிகஷாக்களையே உபயோகித்தோம். மனதிற்கு பாரமாக இருந்தாலும் அவர்களும் வாழ வேண்டுமே. அந்த வண்டியின் இயந்திர லாபம் அவர்களுக்கு பயணிகளின் சுமையை குறைத்து இலகுவாக்கியது. நம்மை தூக்கிக் கொண்டு அவர்களால் சுலபமாக ஓட முடிந்தது. டாலிகஞ்ச்சில் இருக்கும் கரியஹாட்மார்க்கெட் செல்வதென்றால் ட்ராம் வண்டியில் போவோம்.சிறிதுகூட சப்தமோ புகையோ இன்றி மெதுவாகச் செல்லும் இந்த வண்டியின் முதல் பாகம் பின்பக்கத்தைவிட ஒரு ஐந்து பைசா சத்தம் அதிகம். அதற்கே முன்பக்கம் காற்று வாங்கும், பின்பகுதி விழி பிதுங்கும்.அதிலும் வேனில்காலத்தில் மின்விசிறிகளுடன் செல்வது சுகமாகவே இருக்கும்.
அங்கிருந்த கரியஹாட் மார்க்கெட்டும், நாங்கள் இருந்த லேக் மார்க்கெட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆயத்த ஆடைகளுக்கு பெயர் போனது.என் மகளுக்கு சிறுவயதிற்கேட்ப விதவிதமான ஆடைகள் வாங்கியிருக்கிறோம். எங்கள் பொழுதுபோக்கே ஷாப்பிங்தான். வீட்டம்மாவிற்கும் பெங்கால் காட்டன் சேலைகள் குவிந்தன. இதைத் தவிர ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் உற்றார் சுற்றார் என எல்லோருக்கும் வாங்குவது பேரம் பேசும் திறமையையும் இந்தி/பெங்காலி மொழியறிவையும் வளர்த்தது. கொஞ்சம் அதிகவிலை கொடுக்க வேண்டும் என்றால் புதுமார்க்கெட் (New Market), ஷேக்ஸ்பியர்/ஹோசிமின் சாரணியில் இருந்த ஏசி மார்க்கெட் என செல்வோம். பார்க் ஸ்ட்ரீட்டில் இருந்த ஏலக்கடைகளும் பிரபலம். நல்ல பர்மா தேக்கு இருக்கைசாமான்களும் தொல்பொருள்களும் சல்லிசாக கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் சரத்போஸ் ரோட்டில் ஒரு உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்த அனுமார் கோவிலும் ஏதாவது பண்டிகையென்றால் லேக் கார்டன்ஸ்சில் இருந்த இராமர் கோவிலுக்கும் செல்வோம். மற்றபடி ஊரிலிருந்து யாராவது வந்தால்தான் காளிகாட் கோவிலுக்கும் தக்ஷிணேஸ்வர்/பேலூர் மடம் கோவில்களுக்கும் செல்வோம். காளிகோவிலின் பயங்கரம் பற்றி நிர்மலா அழகாக விவரித்துள்ளார். மாலைநேரங்களில் லேக் ஓரமாக நடந்து செல்வது இதமான அனுபவம். சங்கீதக் கச்சேரிகளும் அருகில் நடக்கும். திரைப்படமென்றால் எங்கள் வீட்டையடுத்திருந்த மேனோகா சினிமாவில் அவ்வபோது தமிழ்படங்களும் காலைக்காட்சிகள் நடக்கும். கொல்கொத்தா வீடுகளும் சினிமா தியேட்டர்களும் பழைய தோற்றத்துடன் சுமாராக இருக்கும். பொதுவாக பெங்காலிகளுக்கு ஆடம்பரம் பிடிக்காது; ஆனால் தூய்மையை போற்றுபவர்கள். நாங்கள் ஏழு வருடம் கழித்து 88இல் மாற்றலாகி ஊரை விடும்போதுதான் பார்க் ஸ்ட்ரீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 'மால்'கள் வரத் தொடங்கியிருந்தன.
இது நீண்டு கொண்டே போவதால், இங்கே நிறுத்திக் கொண்டு அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.
15 மறுமொழிகள்:
கொல்கத்தா பற்றிய சுவையான தகவல்கள்!
ஆனா அவங்க சாப்பாடுதான் நமக்கு கஸ்டம்னு நினைக்கறேன்! ஸ்வீட்டெல்லாம் ஓகே! நான்வெஜ் ரொம்ப கஷ்டம்! :)
வாங்க இளவஞ்சி,
ஆமாம், அவங்க சாப்பாடு் கடுகெண்ணெயில் செய்வதால் நமக்கு கஸ்டம்தான். நான்வெஜ் என்ன, வெஜ்ஜே கஸ்டம்தான். இரண்டாவது அவர்கள் பிரியப்படும் மீன்கள் ஆற்றுமீன்களாலாதலால் சிறியதாகவும் முள் தொண்டையில் குத்தும் வகையிலும் இருக்கும். கவனித்து சாப்பிடவேண்டும். அதனாலேயே சோறுடனேயே சாப்பிடுகிறார்கள் என நினைப்பேன். ஹில்சா மீன் மிகவும் பிரியமானது. கணிசமான முஸ்லீம் மக்களும் இருப்பதால் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் அவ்வளவு கஸ்டப் படுத்தாது. பஞ்சாபி தாபாக்களும் வட இந்திய சாப்பாடும் கிடைக்கும். நாமதான் எங்கே போனாலும் நம்ம பக்கத்து சாப்பாடு எங்கே கிடைக்கிறது என்றுதானே பார்ப்போம்.நானிருந்த சமயம் நம்மூரு நான்வெஜ் உணவகங்கள் கண்டதில்லை. ஆனால் கோமலவிலாஸும் (இது தனி),இராமகிருஷ்னாவும் உண்டு. சொல்ல மறந்தேனே,கொல்கொதாவில் authentic சீன உணவு கிடைக்கும்.
மணியன் சார், கல்கத்தா அநியாத்திற்க்கு சீப். கல்கத்தா ஏர்போர்ட்டிலிருந்து இரவு 12 மணிக்கு காரில் ஏற்றி வெகுதூரம் போன பிறகும் 90 ரூபாய் தான் சார்ஜ் வரும் (1987/88 ல்) ஆச்சரியம். அந்த காலக் கட்டத்தில் சென்னையில் டாக்ஸிகள் அந்த நேரத்தில் ஏர்போர்ட்டிலிருந்து 300 ரூபாய் கறந்துவிடுவார்கள்
அங்கெ சைனீஸ் உணவு நிஜமாகவே நன்றாக இருக்கும்
வாங்க கால்கரி சிவா. ஆமாம், கொல்கொதாவில் மக்கள் மிகவும் பணத்தின் அருமையை போற்றுபவர்களாதலால் எல்லாம் சீப்தான். போனபுதிதில் உருளை கிலோ 90 பைசா விற்றபோது, பத்துபைசா போகிறது என்று ஒரு ரூபாயாக கொடுத்தபோது,பக்கத்திலிருந்த பெங்காலி என்னை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டு விட்டார் :) நான் இடுகையில் குறிப்பிட்டபடி ட்ராமில் ஒரு ஐந்து பைசாவிற்காக முதல் வகுப்பில் பயணம் செய்ய மாட்டார்கள். அதேபோல் கடைகளில் சீல் வைத்த பொருட்கள் வாங்கும்போதும் அது ஒழுங்காக சீல் வைக்கப் பட்டதா, முடிவுதேதி க்குள் இருக்கிறதா என்றெல்லாம் கடைகாரர் நமக்கு காட்டியபிறகே பில் செய்வார்.
மணியன்,
நல்ல பதிவு.
நன்றி வெற்றி.
சார்,
நல்ல பதிவு
நன்றி.
பார்க் ஸ்ட்ரீட் கட்டாயம் போய்ப் பார்க்கணும்போல இருக்கே.
நல்ல பதிவுங்க மணியன்.
நிர்மலா இருந்தப்பயே ஒரு நடை அங்கே போயிருக்கலாம். ஹூம்... எப்ப வாய்க்குதோ தெரியலை.
வாங்க துளசி, என்ன antiquesஇல் விருப்பமா ? வங்காளத்தில் இருந்த பல ஜமீன்கள் சேர்த்துவைத்த அழகான பொருட்கள் கிடைக்கும். குறிப்பிட மறந்தேன்.. அவர்களின் ஜமீன்குடும்பங்கள் குடும்பத்தலைவரின் குடியாலும் கலைஞர்களே கதி என்று கிடந்ததாலும் சீரழிந்ததுதான் பெரும்பாலான வங்காள காவியங்களிலும் திரைப்படங்களிலும் கதைக்களமாக அமைந்திருக்கும். சமீபத்தில் வந்த தேவதாஸில் கூட ஷாரூக் ( டோண்டு அகராதியில் சுனில் தத்) அத்தகைய ஜமீன் தான்.
மணியன் சார், கல்கத்தாவின் மிஸ்தி தோய் என்ற இனிப்பான தயிர். மண்சட்டியில் தரும் டீ போன்ற சமாச்சாரங்கள் அருமை
Manian,
As i referred in a comment in nirmalaa's blog The movie "Jalsagar(The music room)" by Ray is also a similar movie .Its abt a music loving zamindar , who refuses to see the changes happening in real world and resist reality,and meets a tragic fate.
மீண்டும் வந்ததற்கு நன்றி கால்கரி சிவா.
கொல்கொத்தா பால் இனிப்புகள் எல்லாமே சுவையானவை.வாழ்வை அணுஅணுவாக இரசிப்பவர்கள். என்ன இவர்கள் மிஸ்டி தோயியும் சூடான தேநீரும் அருந்தியவாறு அரசியல் சித்தாந்தங்களை விவாதித்திருக்கும்போது, மும்பைகாரர்கள் பாவ்பாஜி சாப்பிட்டுவிட்டு நாலு காசு சம்பாதித்து விடுகிறார்கள்.
வருகைக்கு நன்றி கார்த்திக் வேலு, நீங்கள் சொல்வது சரியே. ரே மட்டுமல்ல, பிரபல நாவல்களும் இந்த கதைகளனையே கொண்டிருக்கும். ஓரிரண்டு தொலைக்காட்சி தொடர்கள் கூட இதே தீமில்தான் இருந்தன.
அட இப்பதான் இந்த கல்கத்தா பதிவைப்பாக்குறேன்... இப்படி இந்த ஏரியா பேரெல்லாம் படிக்கும்போதே ஒரு இனம்புரியாத சந்தோஷ உணர்ச்சி... :-) , நினைவுகளை கிளறியதற்கு நன்றி மணியன்..
வாங்க செந்தில், நீங்களும் கொல்கொதாவில் இருந்திருக்கிறீர்களா, உங்கள் அனுபவங்களையும் பதியுங்களேன். வருகைக்கு நன்றி.
மறுமொழியிட