உலக தொலைதொடர்பு நாள் - மே 17
அனைத்துலக தொலைதொடர்பு சங்கம் (ITU) 1865ஆம் வருடம் மே 17 அன்று நிறுவப்பட்டது. நாடுகளுக்கிடையே ஒருவரொக்கொருவர் தொலைதொடர்பு பகிர்ந்து கொள்ளும் வண்ணம், அனைவரும் ஒரேவித நுட்பகொள்கைகளை கொண்டிட தரக்கட்டுப்பாடுகளை வகுப்பது இதன் முக்கிய பணியாகும். ஆரம்ப காலத்தில் தந்தி/தொலைபேசி சேவைகளுக்கு ஒரு கேந்திரமும் (CCITT) வானொலி தொடர்புக்கு மற்றுமொரு கேந்திரமும்(CCIR) தரங்களை வெளியிட்டு வந்தன. அவை இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அனைத்துலக தொலைதொடர்பு சங்கமாக உருவானது.
ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் உலக தொலைதொடர்பு நாளாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த வருடம் ITU, உலகம் கணினி இணைப்புகளால் கட்டுண்டு இருப்பதை புரிந்து கொண்டு, எவ்வாறு பலவகை வைரஸ்களும் இன்னபிற அத்துமீறல்களும் நாடுகளின் தகவல் கட்டமைப்பை குலைக்க இயலும் என அறிந்து இத்தினத்திற்கான முழக்கமாக " அனைத்து உலக இணையபாதுகாப்பை பலப்படுத்துவோம்" (Promoting Global Cybersecurity ) என அறிவித்துள்ளனர். நமது தகவல் கணினி கட்டமைப்புகளுக்கு அரணமைத்து இணைய வணிகம், வங்கி, இ-அரசு வசதிகளுக்கு மக்களிடம் நம்பிக்கை ஊட்டுதலும் உலகமெங்கும் இணைய பாதுகாப்பை பலப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். நாடுகளின் எல்லைகளால் கட்டுப்படாத இணையத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்க இணைக்கப்பட்ட ஒவ்வொரு நாடும், குழுமமும், தனிமனிதனும் அவற்றின் பாதுகாப்பு கொள்கைகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த சவால்களை வெளிகொணர்ந்திட, ஆராய்ந்திட, வழிவகை காண முயல்வதே உலக தொலை தொடர்பு நாள் 2006இன் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் அங்கத்தினராக ITU செய்துவரும் பணியினை அங்கீகரித்து நவம்பர், 2005இல் டுனிஸில் கூடிய தகவல்நுட்ப உலக உச்சிமாநாடு (World Summit on the Information Society) மே 17 நாளை உலக தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாட முடிவு செய்தது. இந்த நூற்றாண்டில் தகவல்நுட்பமும் தொலைதொடர்புநுட்பமும் ஒருங்கிணைந்து அறிவு சார்ந்த புதுசமுகாயத்தை ஏற்படுத்தி முன்னேற்ற வழி காட்டுகின்றன. இந்த வழிகாட்டுதலால் எவ்வாறு மனிதகுலம் பயனடைந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இத்தகைய நாட்களை கொண்டாடுவதன் நோக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் முதல் ITU உலக தகவல்நுட்ப சமூக நாளுமாகும். இந்நாளில் பெருமைக்குரிய இரு முன்னோடிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். செனெகலின் அதிபர் அப்துல்லா வாடெ அவர்களுக்கும் பங்களாதேஷின் கிராமீன் வங்கியின் தலைவர் முனைவர் முகமது யூனஸ் அவர்களுக்கும் டிஜிட்டல் பிரிவினை குறைக்கும் முயற்ச்சிக்காக விருது வழங்கப் படுகிறது.
அதிபர் வாடே டிஜிட்டல் சொலிடரிடி ஃபண்ட் ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்தவர். இந்நிதி மூலம் கணினி ஏற்றதாழ்வுகளை மட்டுமன்றி ஆண்பெண், சமூக ஏற்றதாழ்வுகளையும் குறைக்க வழி செய்யும்.
மற்றவர் ஏழைகளுக்கு நுண்கடன் கொடுப்பதில் வெற்றிகண்டவர் ( விக்ரம் அகூலா போல). வான்வழி பொது தொலைபேசிகளை அமைத்து புதிய பெண்முதலாளிகளை ஏற்படுத்தியவர். பங்களாதேசத்தின் தொலைதொடர்பு வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்.
இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையும் இந்நாளில் தனது சிறந்த பணியாளர்களுக்கு தேசிய அளவில் சஞ்சார்தூத், மாநில அளவில் சஞ்சார்ஸ்ரீ, துறைசார்பில் சஞ்சார்சாரதி என விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.
11 மறுமொழிகள்:
உலக தொடர்பு நாளை, அதிகமா இணையத்தை உப்யோகிக்கிற நம்மதான் கொண்டாடுணும்! அதை பதிவா போட்டதுக்கு வாழ்த்துக்கள்!
நல்ல தகவல்கள்.
நன்றி
வெளிகண்டநாதர் மற்றும் சுகா ் நன்றிகள் பல.
முக்கியமாக இன்று இணைய பாதுகாவல் நமக்கு முக்கிய தேவையே!
இப்பிடி வேற இருக்கா...இன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். நல்ல தகவல்தான். சரி...இத எப்படிக் கொண்டாடுறது?
வாங்க இராகவன், வருகைக்கு நன்றி. என் வலைப்பதிவையே இன்றுதான் தெரிந்து கொண்டீர்களா ;)
இந்நாளை தொலைதொடர்பு சேவை நிறுவனங்களே கொண்டாடுகின்றன. நான் அரசுத்துறையில் இருந்தவரை ஒவ்வொரு வருடமும் இந்நாள் முக்கிய நாளாக இருந்தது. அந்த பழக்க தோஷமே.
நீங்களும் தொலைதொடர்புத் துறைகாரர் என்று ஒரு பிணைப்பு உள்ளது.
அடடே, நீங்களா இந்த வாரத்தாரகை!!!!
வாங்க வாங்க. நல்ல வாரமாக அமையட்டும் என்று வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துகள். மீதி வாரத்தையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
//இப்பிடி வேற இருக்கா...இன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். நல்ல தகவல்தான். சரி...இத எப்படிக் கொண்டாடுறது? //
மனியனுக்கு பின்னூட்டம் இட்டு ;)
சரிதானே மனியன்?
இந்த வார நட்சத்திரத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
சாம்
வாங்க, வாங்க துளசி. என் முதல் இடுகை ப்ளாக்கர்/தமிழ்மணநிரலி சொதப்பலால் சேர்ப்பதில் நேரமாகிவிட்டது. முதல்லே வந்து வாழ்த்துச் சொன்ன உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும்.
நந்தன், உங்க வாரத்தை 'சுபமா'க முடித்துவிட்டீர்கள். இந்தவாரமும் வந்து தோள்கொடுங்க !
நன்றி சாம். சுக்ரியா.
மறுமொழியிட