நந்தவனத்திலோர் ஆண்டி!!

நந்தவனத்தில் விரிந்த தமிழ்மணம். அழகான கதைகள். கவிதைகள். அருமையான இடுகைகள்.ஆர்பாட்டமான விவாதங்கள். இலக்கியச் செறிவும் ஆன்மிக விளக்கங்களும். நாட்டு
நடப்பை நச்சென்று விமர்சிக்கும் நக்கல்கள். இடையே குழாயடிச் சண்டையும் மொழியும் கூட உண்டு. முன்வரிசையில் நிகழ்ச்சிகளை இரசித்துக் கொண்டு இருக்கும்போது மேடையிலிருந்து ஒருங்கிணைப்பாளர் யாரையோ கூப்பிடுவது போலிருக்கிறது. ஒருவேளை நம்மைத்தானோ ? அட, ஆமாம்.

குளுமையான மதியொளியில் மகிழ்விக்க வந்த இந்த வார நட்சத்திரம். இதுவரை எழுதியது குறைவே. தண்ணீரில் தள்ளிவிட்டால் தத்தளித்தாலும் நீச்சல் வருமென்று ஏற்றுக் கொண்டேன். பயிற்சி எனக்கு, பாவம் உங்களுக்கு. பொறுத்தருள்வீர்.:))

இணைய வலையில் முதலில் சிக்கியது மன்றமையத்தில்(Forumhub).அங்கு பிபி அவர்களின் கம்பராமாயண இழையில் ஹரிகிருஷ்ணன், மதுரபாரதியின் விளக்கங்களால் ஈர்க்கப்பட்டேன். அவர்கள் மூலம் தமிழோவியம் அறிமுகமாகி ஒருங்குறியும் தெரிந்து கொண்டேன். காசியின் " என்கோடு உன்கோடு யூனிகோடு தனிகோடு" மற்றும் "தமிழிலே எழுதலாம்வாருங்கள். வலையிலே பதிக்கலாம் பாருங்கள்" கட்டுரைகளைக் கண்டு தமிழ்மணத்தை நுகர்ந்தேன். நூறிலிருந்து ஆயிரமான வளர்ச்சியை கண்டவாறே வாசகனாய் வலம் வந்தேன். சென்ற வருட நிகழ்வுகளால் ப்ளாக்கர் அடையாளம் வேண்டி ஆரம்பித்த இந்த வலைப்பதிவு இன்று என் எண்ணங்களையும் கவர்ந்த செய்திகளையும் பதியும் வசதியாக மாறியுள்ளது.

கல்லூரியில் புகுமுக வகுப்பில் விட்ட தமிழ் அதேவண்ணம் (தேர்வு கட்டுரைகள் போல) தொடர்கிறது. நானும் பேச்சுத் தமிழுக்கு மாற முயன்றேன், முடியவில்லை. இதுவே என் முத்திரையாக இருந்துவிட்டுப் போகட்டுமென்று விட்டு விட்டேன். ஆனாலும் மற்ற பதிவுகளில் காணப்படும் அன்னியொன்னியம் எனக்கு கிட்டுவதில்லை. மேலும் எனது வயது மற்றும் தமிழ் பண்பாடு காரணமாகவும் மரியாதை கிடைக்கிறது. ஏன் ஆங்கிலப் பதிவுகளில் யாரும் வயதை நோக்குவதில்லை? இங்கே அண்ணா,அக்கா அடைமொழியில்லாமல் யாரையும் விளிப்பதில்லை. இதற்காக நான் பெரியவனா அவர் பெரியவரா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

எனது கடந்தகால வாழ்வில் பலதரப்புப் பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறேன். மனிதவள பணிகளில் இருந்திருந்ததால் எல்லா சமூகத்தினரின் உணர்வுகளும் அறிந்தவன் என பெருமை கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் தமிழ்மணத்தின் மூலமாகத் தான் நான் செல்ல வேண்டிய தூரம்இன்னும் எத்தனை என்று புரிந்து கொண்டேன். இளைஞர்கள் எத்தனை சிறப்பான சிந்தனைகளை முன்வைக்கிறார்கள் என ஆச்சரியப் படுகிறேன். இப்பதிவுகள் தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் சென்றடைய வேண்டும். ' இன்று தமிழ்மணம் வாசித்தீர்களா ?' என்று எல்லா இரயில் நிலையங்களிலும் ( வாசிக்க: உலாமன்றங்களிலும்) தொங்கும் காலம் வர வேண்டும்.

வரும் பதிவுகள்.. கதைகளும் கவிதைகளும் ஆக்கி பழக்கமில்லை. வெற்று பெருங்காய டப்பாவில் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் ? பழம் வாசனைதான்.

57 மறுமொழிகள்:

ramachandranusha(உஷா) கூறுகிறார்

நிறைகுடம் தழும்பாது. வாங்க வாங்க

கோவி.கண்ணன் கூறுகிறார்

புதிய நட்சத்திரம் மணிமலர் மணியன் அவர்களே, வருக வருக

நந்தன் | Nandhan கூறுகிறார்

வாழ்த்துகள், அவசரப்பட்டு போன இடுகையிலே வாழ்த்திட்டேன்.

இந்த வாரத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன், நட்சத்திர வாரத்தில் நன்றாக கலக்குங்க!

contivity கூறுகிறார்

வாழ்த்துக்கள் திரு. மணியன்

சாதனை படைக்க வாழ்த்துக்கள்

மணியன் கூறுகிறார்

நன்றி இராமச்சந்திரன் உஷா. உங்கள் நட்சத்திர வாரத்தின் போதுதான் உந்தப்பட்டு வலைப்பதிவு ஆரம்பித்தேன். எனது நட்சத்திரவார பதிவிற்கும் உங்களுடையதே முதல் வருகை. நன்றி.

மணியன் கூறுகிறார்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவிகண்ணன்.

மணியன் கூறுகிறார்

வாங்க புது மாப்பிள்ளை, ப்ளாக்கர் சொதப்பலால் இரண்டு பின்னூட்டம் கிடைத்ததே.:)

மணியன் கூறுகிறார்

நன்றி வெளிகண்டநாதர்.கலக்குவது இருக்கட்டும், கலங்காமல் இருந்தல் சரி :))

Narain Rajagopalan கூறுகிறார்

WoW! Mothama padikka mudiathu, shuttling places. all the best. Unga oorukku thanya varen ;))))

- யெஸ்.பாலபாரதி கூறுகிறார்

வாழ்த்துக்கள்...
முப்பையில் இருக்கும் தாங்கள் நான் பார்ஸி சுடுகாரு,முதல் அவர்களின் தீ கோவில் பற்ரியும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் மீண்டும்..

பரஞ்சோதி கூறுகிறார்

வாழ்த்துகள்.

தமிழ் மணத்தில் சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள்.

நன்மனம் கூறுகிறார்

நல்ல வாரத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

மணியன் கூறுகிறார்

நாராயனன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.நீங்களும் மும்பைக்கு அடிக்கடி வருகிறீர்கள், நானிருக்கும் இடத்தாலும் உங்கள் வேலையாலும் சந்திக்கத் தான் முடிவதில்லை. :(

மணியன் கூறுகிறார்

வாங்க பாலபாரதி, கைகட்டு அவிழ்தாயிற்றா ? என்னவெல்லாம் எழுதுவது என்று யோசித்திக் கொண்டிருக்கும்போது உங்கள் ஆலோசனை நல்லதுதான்.

மணியன் கூறுகிறார்

வாழ்த்துக்களுக்கு நன்றி பரஞ்சோதி

Muthu கூறுகிறார்

அய்யா,

இந்த வார நட்சத்திரத்தை வாழ்த்தி வரவேற்கிறேன்.

பம்பாய் ரயில் பிரயாணம்,அதற்கு தேவையான திறமைகள் ஆகியவற்றை பற்றி ஒரு பதிவு போடலாமா?

மணியன் கூறுகிறார்

நல்ல மனம் கொண்டவரே, வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் வலைபதிய போவது எப்போது ?மும்பை லோகல்மாதிரி வலைப்பதிவு வாயில் வந்தால் போதும், இதன் சுழற்சியில் தானே கொண்டு செல்லப்படுவீர்கள் :)

Vaa.Manikandan கூறுகிறார்

மணியன்,

வாழ்த்துக்கள்.

மணியன் கூறுகிறார்

வாங்க முத்து(தமிழினி). உங்கள் வாழ்த்துக்கும் ஆலோசனைக்கும் நிரம்ப நன்றி.
//பம்பாய் ரயில் பிரயாணம்,அதற்கு தேவையான திறமைகள் ஆகியவற்றை பற்றி ஒரு பதிவு போடலாமா?//

ஜோசப் சார் ஏற்கெனவே போட்டிருக்கிறாரே ! நானிருப்பது நவிமும்பையில்; வேலையும் அங்கெயே. அதனால் மும்பை லோகல் பயணம் எப்போதாவதுதான்.அதுவும் கூட்டமில்லாத போதுதான்.

குழலி / Kuzhali கூறுகிறார்

வாழ்த்துகள், மணியன்

நன்றி

Unknown கூறுகிறார்

உங்கள் நட்சத்திர வாரம் ஆரவாரமாக இருக்க வாழ்த்துக்கள் மணியன்!!

மணியன் கூறுகிறார்

வாங்க குழலி. வாழ்த்துக்கு நன்றி.

மணியன் கூறுகிறார்

வாங்க அருட்பெருங்கோ, டியூஷன் எப்படி போய்கொண்டிருக்கிறது ?

ஞானவெட்டியான் கூறுகிறார்

அன்பு மணியன்,
நற்சேத்திர வழ்த்துகள்.மணி மணியான பதிவுகளைப் பதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கும்....

மணியன் கூறுகிறார்

நன்றி ஞானவெட்டியான் அவர்களே.

நாகை சிவா கூறுகிறார்

வாருங்கள் மணியன், வாழ்த்துக்கள்.

//ஆங்கிலப் பதிவுகளில் யாரும் வயதை நோக்குவதில்லை? இங்கே அண்ணா,அக்கா அடைமொழியில்லாமல் யாரையும் விளிப்பதில்லை. இதற்காக நான் பெரியவனா அவர் பெரியவரா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.//

முறை வைத்து கூப்பிடுவது நல்லது தானே. அப்பொழுது தானே ஒரு நெருக்கம் கிடைக்கும். வயது முக்கியம் கிடையாது, இப்பொழுது பாருங்கள், நான் துளசி அவர்களை துளசியக்கா என்று அழைக்கின்றேன். அவர் என்னை விட இரு மடங்கு வயதில் மூத்தவர். இப்படி கூப்பிடுவதனால் ஒரு வித உரிமை கிடைக்கின்றது என்பது என் தனிப்பட்ட கருத்து.

மணியன் கூறுகிறார்

வாங்க நாகை சிவா, நீங்கள் சொல்வது நாம் நேரில் சந்தித்து உரையாடும்போது சரி.
வலைபதிவில் இத்தகைய மரியாதை காரணமாக 'அண்ணா'க்களுக்கு சொல்லவந்ததை மட்டுறுத்த வேண்டியிருக்கிறது. இது பெரிய தவறோ குறையோ இல்லை. ஒரு கவன ஈர்ப்பே.

குமரன் (Kumaran) கூறுகிறார்

வணக்கம் ஐயா. எங்கே ரொம்ப நாளாக் காணலையேன்னு பாத்துக்கிட்டிருந்தேன். வந்துட்டாப்லயா? நீங்க இந்த வார விண்மீனா? ரொம்ப மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துகள் வணக்கங்களுடன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே. :-)

உங்களை ஐயான்னே கூப்புட்டு பழக்கமாயிடிச்சு. அண்ணான்னு கூப்புட முடியுமான்னு தெரியலை.

வெள்ளைக்காரனுக்கு இரத்தசம்பந்தமான உறவினர்களை மட்டும் தான் உறவுமுறை வச்சு கூப்பிடணும். அம்மா அப்பாவுக்கு மணமுறிவு ஏற்பட்டு அம்மாவோ அப்பாவோ இன்னொரு திருமணம் செஞ்சுக்கிட்டாலும் அந்த சின்னம்மாவையோ சித்தப்பாவையோ அம்மா அப்பான்னு கூப்புட மாட்டாங்க. பேரு சொல்லித் தான் கூப்புடுவாங்க. அதே பழக்கம் வலையிலும் வருது. அவ்வளவு தான்.

மணியன் கூறுகிறார்

வாங்க வாங்க குமரன் ஐயா, ஆலவாய் அண்ணலின் அருளோடு 23 பதிவுகளை ஆளும் ஆன்மீக செம்மலின் வருகை எமக்கு நல்வரவாகுக!
உங்கள் இடுகைகளை நாளும் காண்பதுண்டு. வருகையை பதியவில்லை.

உறவுமுறைகளை சிறப்பிப்பதில் நாம் சிறந்தவர்கள் தான். வலைப்பதிவுகளில் கருத்துக்கு மதிப்பு கொடுப்போம்; வயதிற்கு வேண்டாமே என்று கருதினேன்.

பினாத்தல் சுரேஷ் கூறுகிறார்

வாருங்கள் மணியன்..

சண்டை சச்சரவுகளுக்கு அப்பாற்பட்ட (என நான் நினைக்கிற) பதிவர், இந்த சூடான வாரத்தில் குளிர்ச்சியை அளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க பெனாத்தலார், உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நம்புகிறேன் :) கருத்து மோதல்கள் இருக்கலாம்; தனிமனித சண்டைகளினால் பரஸ்பரம் மனவருத்ததைத் தவிர நமது குவியம் சிதறுகிறது.

மலைநாடான் கூறுகிறார்

//உறவுமுறைகளை சிறப்பிப்பதில் நாம் சிறந்தவர்கள் தான். வலைப்பதிவுகளில் கருத்துக்கு மதிப்பு கொடுப்போம்; வயதிற்கு வேண்டாமே என்று கருதினேன். //

மணியன்!
நேற்றுத்தான் நீங்கள் இக்கருத்துக் கொண்டவர் என தமிழ்மணம் தந்த நண்பரால் அறிந்தேன். என் கருத்தும் இதுவே. மேலும் உறுவுகளை விஞ்சியது நட்பு. நட்பு மரியாதைக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர நட்பில் மரியாதை தேவையில்லை, அது சற்று அந்நியமானது, என்பது என் னருத்து. ஒத்த கருத்தாளர்களைச் சந்திப்பதும் சுகமானதே.

உங்கள் நட்சத்திர வாரம் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி!

பூனைக்குட்டி கூறுகிறார்

வாழ்த்துகள் மணியன்

மணியன் கூறுகிறார்

மலைநாடன், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. என் கருத்தினை ஏற்றுக்கொண்டதற்கும் அழகாக வெளிப்படுத்தியதற்கும் நன்றி.

மணியன் கூறுகிறார்

நன்றி மோகன்தாஸ்!

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்:)

Ram.K கூறுகிறார்

இந்த வாரம் ஒரு இனிய வாரமாக அமைந்திட என் வாழ்த்துக்கள்.

வெற்றி கூறுகிறார்

மணியன்,
வாழ்த்துக்கள்.

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ்! நீங்க ஏதோ வெளிநாட்டு பயணம் செல்வதாக வ. வா. சங்கப் பலகையில் பார்த்தேனே ! உங்கள் வேலைபளு இடையிலும் வருகைக்கு நன்றி.

மணியன் கூறுகிறார்

Chameleon-பச்சோந்தி , வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மணியன் கூறுகிறார்

வெற்றியின் கடைக்கண்ணிற்கு தானே எல்லோரும் ஏங்குகிறோம். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

Maraboor J Chandrasekaran கூறுகிறார்

மூதுரை என்றும் சிறந்ததே! பெருங்காயமில்லாத ரசமும் இல்லை, போரும் இல்லை. வாரும் வீரரே, குதித்து நீந்துவதாகச் சொன்னீர்; இல்லை, பதித்து சிறப்பீர்! வருக!

மணியன் கூறுகிறார்

வாங்க மரபூர் ஜெய.சந்திரசேகர் அவர்களே,கவிதைமயமான உங்கள் வாழ்த்துக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.

Suka கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்.

//
ஏன் ஆங்கிலப் பதிவுகளில் யாரும் வயதை நோக்குவதில்லை? இங்கே அண்ணா,அக்கா அடைமொழியில்லாமல் யாரையும் விளிப்பதில்லை. இதற்காக நான் பெரியவனா அவர் பெரியவரா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
//

உண்மை. நான் பெரும்பாலும் பெயரைச் சொல்லி விளிப்பதே வழக்கம். எவ்வளவு பேர் தவறாக எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை. உண்மையில் வயதைப் பற்றி யோசிப்பதோ பேசுவதோ தேவையற்றது; சிலவேளைகளில் நமது எழுத்துக்கு அது தனி interpreration க்கு இடம் கொடுத்துவிடும் என எண்ணுகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள். பதிலெழுதாத பார்வையளர்களும் நிச்சயம் உண்டு.

சுகா

Thekkikattan|தெகா கூறுகிறார்

நட்சத்திர வாரம் கொடுப்பதற்கு நன்றி!

//வலைபதிவில் இத்தகைய மரியாதை காரணமாக 'அண்ணா'க்களுக்கு சொல்லவந்ததை மட்டுறுத்த வேண்டியிருக்கிறது. இது பெரிய தவறோ குறையோ இல்லை. ஒரு கவன ஈர்ப்பே.//

ஆழ்ந்த சிந்தனையின் பொருட்டு வந்த உண்மையான வார்த்தைகள் அவை. அக் கருத்துடன் ஒத்துப் போக முடிகிறது. நன்றி!

தெகா.

VSK கூறுகிறார்

அதிகம் அறிந்திராதவன் அன்புடன் வாழ்த்துகிறேன்!

Sivabalan கூறுகிறார்

சார்,

வாழ்த்துக்கள்!!

மணியன் கூறுகிறார்

வாங்க சுகா, என் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

மணியன் கூறுகிறார்

நன்றி தெக்கிகாட்ட(ா)ன், ஒத்த கருத்தாளரை சந்திப்பதில் மகிழ்ச்சி.

மணியன் கூறுகிறார்

புதியதாக வலைபதிய வந்திருக்கும் வெங்கித் , வருகைக்கு நன்றி. சீக்கிரம் உங்கள் எண்ணங்களை பதிய ஆரம்பியுங்கள்!

மணியன் கூறுகிறார்

நன்றி எஸ்கே, அறிந்துகொள்ளத்தானே இணையத்தில் விழுவது.:)

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்!

ஸ்ருசல் கூறுகிறார்

மணியன் அவர்களுக்கு,

நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

மணியன் கூறுகிறார்

நன்றி ஸ்ருசல்!

தருமி கூறுகிறார்

நட்சத்திர வாரத்திற்குரிய வாழ்த்துக்களைப் பிடியுங்கள் முதலில்.

ஒத்த சிந்தனைகளாக நான் இப்பதிவில் பார்த்தவைகள்:
1. ஏன் ஆங்கிலப் பதிவுகளில் யாரும் வயதை நோக்குவதில்லை?
2. இளைஞர்கள் எத்தனை சிறப்பான சிந்தனைகளை முன்வைக்கிறார்கள் என ஆச்சரியப் படுகிறேன்.
3.வலைப்பதிவுகளில் கருத்துக்கு மதிப்பு கொடுப்போம்; வயதிற்கு வேண்டாமே.

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தருமி. என் கருத்துக்களுடன் ஒத்துப் போவது குறித்து மகிழ்கிறேன்.