Showing posts with label சாதனைகள். Show all posts
Showing posts with label சாதனைகள். Show all posts

விண்வெளி வலைப் பதிவு!

விண்மீன் வலைப்பதிவை தமிழ்மணத்தில் கண்டிருக்கிறோம். விண்ணிலிருந்து வலைப்பதிவதை ...? 20 மிலியன் டாலர் விலை கொடுத்து விண்வெளிக்கு சுற்றுலா சென்றிருந்த இரானிய பயணி எடையில்லா வான்வெளியில் தன் அனுபவங்களை வலைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு தீய்ந்த பாதாம் குக்கி வாசனை அடித்ததையும், தன் தலையை கழுவுவதில் தனக்கேற்பட்ட இன்னல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அனௌஷே அன்சாரி (Anousheh Ansari) -- உச்சரிப்பு அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்-- தன் பத்து நாட்கள் விண்வெளி வாழ்வை ஒரு அமெரிக்க பெண்ணின் பார்வையில் விவரித்துள்ளார். 40 வயதான இரானிய அன்சாரி கடைசி நிமிடத்தில் மருத்துவ தேர்வில் தவறிய ஜப்பானிய செல்வந்தருக்குப் பதிலாக சென்று வந்தது படித்திருப்பீர்கள். தொலைதொடர்பு துறையில் பெரும் பணம் ஈட்டியுள்ள முதுநிலை பொறியாளரான இவரின் வலைப்பதிவு வழக்கமான தொழில்முறை சொற்கள் இன்றி நாளும் எதிர்கொண்ட பயணதலைச்சுற்றல், எடையில்லாமையின் சங்கடங்கள்,காலைக்கடன்கள் என சாதரணமானவர்களின் சொற்களில் எழுதியுள்ளார்.கூடவே சென்ற மற்ற விண்வெளிவீரர்களும் நாட்குறிப்பு எழுதினர் என்றாலும் அவை அன்சாரியினுடையதைப் போல சிநேகமாக இல்லை. மற்றும் வலைப்பதிவில் தானே பின்னூட்டம் போட்டு தூள் கிளப்ப முடியும்.அவரின் அதிக பின்னூடங்களை(353) பெற்ற இடுகை இது.
செப்டம்பர் 18இல் வெளியேறி 29 திரும்பியுள்ளார். நமது சக வலைப் பதிவர் விண்வெளியில் என்று பெருமை கொண்டு அவருக்கு வாழ்த்துப் பூங்கொத்துகளை அனுப்புவோம்.

பி.கு:என் பின்னூட்டம் இன்னும் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.


சிகரம் தொட்டவர்கள் !


பிரிட்டிஷ் இராணுவத்தினர் இருவர் 1976 இல் இமயமலையின் எவெரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டு சாதனை நிகழ்த்தினர். ஆங்கில இராணுவத்தின் அந்த சாதனையின் முப்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் மூன்று மலையேறும் குழுக்கள் எவெரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அடைய முயற்சி செய்கின்றனர். இம்முறை மேலே செல்வதிலேயே மிகவும் கடினமும் ஆபத்தானதுமான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒன்பது முறை சிகரத்தை எட்டியிருக்கும் டேவ் பன்ட்டிங் (Dave Bunting),வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பயணத் திட்டப்படி முதலில் French Spur மற்றும் மேற்கு ரிட்ஜ் (West Ridge )
வழியாக சென்று வடக்குமுகமாக சிகரத்தை எட்டுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் அதிநவீன டிஜிட்டல் காமெராக்களும் வயர்லெஸ் உபகரணங்களையும் கொண்டு செல்கிறார்கள். இதனால் அவர்களது மலையேற்றத்தை தங்கள் வலைப்பதிவு, பொட்காஸ்ட், படங்கள் மூலம் உடனுக்குடன் பதிகிறார்கள். அட, பிலிம்கூட காட்டறாங்க!

மே16 லிருந்து 21 வரை திட்டமிடப்பட்டிருந்த சிகரம் தீண்டல் மோசமான காலாவஸ்தா ( உபயம்: துளசி) காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவர்களின் முன்னேற்றத்தை நீங்களும் உடனுக்குடன் பார்த்து (மட்டுமே)மகிழுங்கள்.

இமயத்தை வெல்வது சோழ மன்னனுக்கு முடிந்தது; 'நாய்களும் பேய்களும் நயவஞ்சகப் பூனைகளும்' (நன்றி: வீரபாண்டியக் கட்டபொம்மன்) நடமாடும் தற்கால தமிழ்நாட்டில் இயலுமா ?

நூற்றில் ஒருவர் - விக்ரம்

அமெரிக்க டைம் இதழ் “ நம் உலகை உருவாக்குபவர்கள்” என்று 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பில் கிளின்டன், பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ், ஜார்ஜ் புஷ் போன்றவர்காளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ளவர்கள் இருவரே. இன்ஃபோசிஸ் நிறுவனரும் தலைவருமான நந்தன் நீலகேனி ஒருவர். மற்றவர் நுண்கடன் வழங்கி வேகமாக வளர்ந்துவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த SKS Microfinance இன் நிறுவனரும் தலைவருமான விக்ரம் அகூலா . தன் பரிந்துரையில் இந்திய ஏழைமக்களின் துயர் நீக்க நுண்கடன் வழங்குவதில் முன்னோடி என்று அவரைக் குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் பிறந்த்து அமெரிக்காவில் வளர்ந்த 37 வயதான விக்ரம் 1998இல் SKS Microfinance நிறுவனத்தை தொடங்கி வறியவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் வண்ணம் 2,21,000பேருக்கு ரூபாய் 240கோடி கடன் வழங்கி பணியாற்றி வருகிறார். கால்நடைகள் வாங்க, விவசாயம், காய்கறி மற்றும் சிறுவியாபாரம், சிறுதொழில்கள் முதலியவற்றிற்கு கடன் கொடுத்து வருகிறார். SKS கல்விநிறுவனம் அவர்கள் குழந்தைகளுக்கு அறிவொளியை பரப்புவதிலும் பங்காற்றுகிறது. ஆந்திரா,கர்நாடகம்,மஹாராஷ்ட்ரா, ஒரிசா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 85 கிளைகளை கொண்டு பணியாற்றுகிறது. ஏழைகள் என்பதால் இவை வாராக் கடன்கள் அல்ல. 98% சரியான நேரத்தில் அவை திருப்பி அடைக்கப் படுகின்றன.எல்லா வர்த்தக பரிமாற்றங்களும் கணினி மூலம் நடைபெறுவதால் நிலுவையிலுள்ள கடன்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடிகிறது. அவரின் சிறந்த பணிகளை பலரும் உணர்ந்து அவருக்கு மீள்கடன் (refinace) செய்ய முன்வருகிறார்கள். அந்தவகையில் வறியவர்களின் வாழ்வை வளப்படுத்துவதோடு, நிதிநிறுவனங்களுக்கு வெற்றிகரமான ஆபத்தில்லாத வருமானவழியையும் காட்டியுள்ளார். இந்த சேவை மூலம் பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களின் தன்உதவிக்குழுக்களின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் காணும்போது, இங்கே ஒரு விக்ரம் உருவானால் இளைஞர்களும் இத்தகைய வளர்ச்சியில் பங்கு கொண்டு முன்னேறலாம். பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்பதால், வீணான சண்டைகளும் குறையும்.

யாரந்த தமிழக விக்ரம் ?

வென்று வந்தீர், நன்று!நன்று !!

18ஆவது காமன்வெல்த் விளையாட்டுக்கள் நேற்று முடிவடைந்தது. இந்தியா 50 மெடல்களை ( 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெங்கலம்) பெற்று நான்காம் இடத்தை எட்டியுள்ளது.
இந்திய துப்பாக்கி வீரர் சமரேஷ் ஜங் ஐந்து தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களை வென்று இப்போட்டியின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். மற்றுமொரு போட்டியில் துப்பாக்கி வேலை செய்யாமல் பதக்கம் இழக்காமல் இருந்திருந்தால் ஒரு சரித்திரமே படைத்திருப்பார். அவருக்கு இப்போட்டியின் முதலாம் டேவிட் டிக்சன் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது.அவரது மனைவியும் பெண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றிருப்பது பாராட்டிற்குறியது.மொத்தத்தில் துப்பாக்கி சுடுதலில் 16 தங்கங்களை இந்தியா வென்றுள்ளது.அகில்குமார் குத்துசண்டையிலும்,பெண்களுக்கான பளு தூக்குதலில் கீதா,குஞ்சுராணி, ச்சானு ஆகியோர் மூன்று தங்கங்களும் டேபிள் டென்னிசில் இரண்டு தங்கங்களும் கிடைத்துள்ளன.

உலக அலவிலான போட்டி இல்லை என்ற விமர்சனம் நிலவினாலும் இப்போட்டியின் வரலாற்றில் இதுவே இந்தியாவின் அதிகமான சாதனை என்பது மகிழ்ச்சிக் குறியது. கிரிக்கெட்டே பிரதானமாக கொண்டு இயங்கும் இந்திய ஊடகங்களில் நேற்றைய இறுதிவிழா கவரேஜில் பாலிவுட் தாரகைகளின் பங்கே அதிக முக்கியத்துவம் கொண்டிருந்தது. நமது பதக்கவீரர்களின் படங்கள் கூட காணவில்லை. இந்த அளவு ஊக்குவிக்கும் இந்திய சூழலில் இவ்வீரர்கள் கொணர்ந்திருக்கும் பதக்கங்கள் இனிமையானவை. அஞ்சு ஜார்ஜின் தோல்வி ஒரு ஏமாற்றமே என்றாலும் வரவிருக்கும் 2010 தில்லி விளையாட்டுகளுக்கு நல்ல முகமனாக இச்சாதனைகள் அமைந்துள்ளன. ஓரிரு நிகழ்வுகள் இந்திய மானத்தை வாங்கினாலும் 2006 விளையாட்டுக்கள் ஒரு மைல்கல்லே.நமது வாழ்த்துக்கள்.