ரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா ?

நாளை வட இந்தியர்கள் இரட்சாபந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆவணிமாத முழுநிலவில் சகோதரிகள் தங்களைக் காப்பாற்றும் சகோதரர்களின் 'இரட்சைக்காக' காப்புக் கயிறு கட்டுவதே இப்பண்டிகையின் சிறப்பாகும். சகோதர்களும் சளைக்காமல் பதில் பரிசுகள் தருவதும் வழக்கமே. வணிகமயமான உலகில் இது போல ஒரு வாய்ப்பை நழுவ விடுவார்களா ? வண்ணமயமான காப்புக்கயிறுகள் பலவித உருவங்களுடன் ரூ.20 இலிருந்து ரூ.450 வரை விற்பனையாகின்றன. இவற்றின் பின் இருக்கும் அபாயத்தை பயனர்கள் முழுவதும் அறிவார்களா என
இந்த DNA செய்தி - Beware of these rakhis - Daily News & Analysis கேட்கிறது.

பரம்பரை இராக்கி சாதாரண கயிற்றில் மணி கோர்த்தது. ஆனால் தற்போதைய ராக்கியில் அழகான பொம்மை உருவங்கள், கார்ட்டூன் வடிவங்கள்,் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 'பிராண்ட்' பெற்ற பொம்மைகளே ஈயம் கலந்து நச்சுத்தன்மை பெற்றிருப்பதாக அறிக்கை வரும்போது வருமிடம் தெரியாத இவற்றின் தரம் பற்றி ஏதும் தெரியாது. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில் வரும் இவற்றில் உள்ள ஈயம கலந்த வண்ணம்் அவர்கள் உட்கொள்வதானால் அவர்களது மூளை வளர்ச்சியை அது பாதிக்கும் என அது எச்சரிக்கிறது.

நமது தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? கோலாவின் நச்சுத்தனமையை வெளிக்கொணர்ந்த ஆய்வுநிலையங்கள் எங்கே போயின ?

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மறுபாதி நீதி எங்கே ?

நம் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டாலே நாம் கண்டிக்கும் போது இருவரையும் சேர்ந்து கடிந்துகொள்வதோ தண்டனை வழங்குவதோ செய்வோம். மும்பையின் 1992 திசம்பர்/ 2003 ஜனவரி இனக் கலவரங்கள் குஜராத்தின் 2002 இனக்கலவரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பாபர் மசூதியை 'வெற்றி' கொண்ட மதர்ப்பில் இந்துத்வா மற்றும் மராட்டிய தலைவர்களுடன் உயர்பதவியிலிருந்த காவல் அதிகாரிகளும் இணைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகள் பின்னால் வந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மறந்து போயின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருந்த தீவிரவாதிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. நீதியரசர் கோடே அவர்கள் மிகப் பொறுமையாக அனைத்து ஆவணங்களையும் சாட்சிகளையும் ஆராய்ந்து மிகச் சரியான தண்டனை வழங்கியிருக்கிறார். குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தது. தாமதமான நீதி விசாரணையால் சில குற்றமற்றவர்களும் 13 வருட சிறைதண்டனை அனுபவித்திருந்தாலும் சட்டத்தின் மேன்மை நிலைபெற்றது.

அதேபோல் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுகும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது சரியான அரசியல் செய்கையாகும். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ணா அவர்கள் மிகத் திறமையாக பரிசீலித்து இனக்கலவரங்களின் பின்னணியில் இருந்த பெருந்தலைகளை அடையாளம் காட்டியுள்ளார். அந்த ஆணைய அறிக்கை வழி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தக் கலவரங்களில் கொடூர கொலைகள் செய்த காவல்துறையினர் பதவிஉயர்வு பெற்று வளைய வருவது நீதி பரிபாலனத்திற்கு பெரும் இழுக்காகும். அராஜகக் கும்பல்களுக்கு தலைமையேற்றவர்கள் அரசியல் தலைவர்களாக வலம் வருவதும் வெட்கக் கேடு. காரணமாக இருந்தவர்களையும் காரியமாற்றியவர்களையும் சரியாக தண்டிக்காமல் போனால் சட்டத்தின்படி அரசோச்சும் நாடு என்பது ஏட்டளவிலேயே இருக்கும்.

நீதியின் மறுபக்கமும் வழங்கப் படுமா ?மும்பையின் களங்கம் நீக்கப் படுமா?

ஓசியில் வாசி !

புத்தக கண்காட்சிக்கு போவது என்று வந்தால் முதல் விவாதமே வாங்கிபடித்த புத்தகங்களை என்ன செய்வது என்பதுதான். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமானால் வீட்டில் நூலகம் ஏற்படுத்திதர இந்திய அரசு இருக்கிறது. சதுர அடிக்கு வாடகை கொடுக்கும் நமக்கு, அதிலும் அடிக்கடி பணியிட மாற்றம் நிகழும் குடும்பத்தினருக்கு, கட்டுப்படியாகுமா ?

இதற்கு ஒரு தீர்வாக வாடகை நூலகங்கள் (Lending Libraries) வரத்தொடங்கின. கதையின் கடைசிபக்கங்கள் காணாமல்போன பிரதிகளை ஒருவாரத்தில் படித்து திருப்பவேண்டிய வசதியின்மை; அதனால் ஒருவாரம் தொடர்ந்து படிக்க நேரம் ஒதுக்கமுடியும் காலங்களில் நாம் தேடும் புத்தகங்கள் கிடைக்காமல் ஏதாவது கிடைத்த புத்தகத்தைப் படிக்க வேண்டிய எரிச்சலும் நேரும்.

இங்கு மும்பை வந்தபிறகு எனக்கு படிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது :( ஆனால் எனது மக்களுக்கு ஆங்கில நவீனங்கள் படிக்க எழுந்த ஆர்வத்திற்கு தீனிபோட வாடகைநூலகங்களை தேடியபோது இங்கு வேறுவிதமான செயல்பாடு நடைமுறையில் இருப்பதை அறிந்தோம். ( இம்முறை சென்னையிலும் உள்ளதாக பின்னர் பெண் சொன்னாள்) அதன்படி பழையபுத்தகத்தை அரைவிலை கொடுத்து வாங்கிக் கொள்வது, எத்தனைநாள் வேண்டுமானாலும் படிக்கலாம், நாமே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். வேண்டாமென்றால் அந்தக் கடையிலேயே திரும்பக் கொடுத்து ரூ25/- கழித்து மிகுதியைப் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி ஒரு புத்தகம் படிக்க ஆகும் செலவு ரூ25/-. கடைக்காரருக்கும் முன்பணம் வாங்குவது, புத்தகம் திரும்ப வருமா என்ற கவலை ஆகியன இல்லை.

அப்படியும் வாங்கிய ஒருசில கதைப் புத்தகங்களை ஒருமுறைக்கு மேல் படிப்பதில்லையாதலால் அவற்றை பழையநாளிதழ்களை விலைக்கு விற்கும்போது போட்டுவிடவேண்டும் என்ற கட்டாயவிதி ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். நல்லநிலையில் உள்ள புத்தகங்கள் அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொள்வதைப்பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அவற்றின் கடைசி பயனர் யார் என்ற கவலை அடிவயிற்றில் எழுவது தவிர்க்கமுடியாதது. கல்லூரிவாழ்வில் சீனியரின் புத்தகங்கள் நமக்கு வருவதும் அடுத்தவருடம் நாம் அதனை கொடைசெய்வதும் நினைவில் வந்து இதுபோல உலகநடைமுறையிலும் நடந்தால் உண்மையான புத்தகப் பிரியருக்குப் போகுமே என எண்ணுவேன்.

இதுபோன்ற ஒரு எண்ணம் ஜான் பக்மன் (புக்மன் ?..John Buckman) என்ற இணையபயனாளருக்கு ஏற்பட்டதன் விளைவே அவர் இந்த தளத்தை உருவாக்கியது. நமக்கு வேண்டாத புத்தகங்களை, அதனை வேண்டுபவர்களுக்கு கொடுக்க உதவும் ஒரு பாலமாக இந்த தளம் விளங்குகிறது. இதற்கு பிரதியாக நமக்கு வேண்டும் புத்தகங்களைப் பெறலாம். முழுவதும் இலவசம், நாம் புத்தகங்களை அனுப்ப ஆகும் அஞ்சல் செலவு மட்டுமே. தளத்திற்கு புரவலராக அமேசான்.கொம் இருக்கிறது. புதுப் புத்தகங்கள் வாங்கவேண்டுமானால் அங்கு செல்லலாம். ஆகஸ்ட் 2006இல் துவங்கிய இந்ததளம் மிக குறுகிய காலத்தில் அனைவராலும் அறிந்த தளமாக மாறியுள்ளது. ஜான் பக்மனின் நேர்முகம் மற்றும் அவரது வலைப்பதிவு.

தற்போது ஆறு மொழிகளில் மட்டுமே (ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்,இத்தாலி,போர்த்துகீசு) வழங்கப் படுகிறது. ஆங்கில இடைமுகத்தில் தமிழ் புத்தகங்களை வேண்டலாம். நம் பதிவர்கள் இதனை பாவித்தால் ஒருவருக்கொருவர் புத்தக பரிமாற்றம் செய்துகொள்வது எளிதாகும். அல்லது சிறந்த இணையநுட்பங்களை அறிந்த பதிவர்கள் இதுபோன்ற தளமொன்றை அமைக்கலாம்.....

மணிமலரின் இதழ்கள் -1

என்னுடைய எட்டு பதிவில் நானிட்டிருந்த மணிமலரின் முகப்புப் பக்கத்தைக் கண்டு பொன்ஸ்சும் அருட்பெருங்கோவும் அதில் வெளியான கதைகளையும் கேட்டிருந்தனர். ஆனால் என் பழைய இதழ்களை கண்டறிய முடியவில்லை. நாங்கள் கொண்டுவந்ததே இரண்டோ மூன்றோதான். அதிலும் ஒரு சில பக்கங்களே என்னிடம் மீதம் உள்ளன. இருப்பினும் வாசகர் விருப்பத்தை முழுமையாக்கும் வண்ணம் அவற்றின் scan படங்களை இங்கு இட்டுள்ளேன். அவற்றின் பதிப்பு அழுத்தமாக இல்லாத காரணத்தால் அவற்றை மீள் பதிவும் செய்கிறேன்.
இந்த இதழ் தயாரிப்பில் என்னுடன் என் நண்பன் அமர்நாத் என்கிற அமரனுக்கும் சம பங்கு உண்டு. இந்த இதழ் 25-07-1962இல் வெளியிட்டோம். அப்போது எனக்கு 10 வயது. அந்த பத்துவயது சிறுவன் ஒருநாள் தனது ஆக்கங்கள் உலகளாவிய பார்வை பெறும் என எள்ளளவும் எண்ணியிருக்க மாட்டான். இன்று அவன் வெட்கத்தினால் முகம் மூடிக்கொள்வதை நான் காணமுடிகிறது.

இன்று சில விடுகதைகளைத் தாங்கிய பக்கங்களை பதிப்பித்துள்ளேன். அவற்றின் விடைகள் இன்று எனக்கே நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.


Posted by Picasa


விடுகதை
1.எங்கள் வீட்டு கிணற்றில் வெள்ளீத்தட்டு மிதக்குது ? அது என்ன?
2. எங்க தம்பி நல்லதம்பி. நான் ஏறாத மரத்தில் என் தம்பி ஏறுவான். அவன் யார் ?
3.பெட்டியை திறந்ததும் கிஷ்ணன்(sic) பிறந்தான், அவன் யார் ?
4.வண்ணான் வெளுக்காத வெள்ளை
மழை பெய்யாத தண்ணீர்
குயவன் செய்யாத பாண்டம்
இது என்ன ?
5. கண்டு காய் காய்க்கும்,
காணாமல் பூ பூக்கும், இது என்ன ?
6.ஐந்து விரல் அழுந்த
பத்துவிரல் பந்தாட
சூரியனுடன் சூதாட
என்னுடன் வாதாடும், இது என்ன ?
7.எங்கள் வீட்டு தோட்டத்தில்,
மஞ்சள் குருவி ஊஞ்சல் ஆடும்
இது என்ன ?
8. டாக்டர் வந்தார் ஊசி போட்டார்
காசு வாங்கவில்லை, இது என்ன ? .......மணியன்

இதில் மறைந்துள்ள பெயர்கள் யாவை ?
1.அப்பா ரதி என்னை அடித்துவிட்டாள்,
2.அப்பா தாம்பரம் போனார்.
3.அம்பர் மாலை அணிந்தார்
4.கொக்கு திரையில் தோன்றியது.
5.அம்மா மரம் சாய்ந்தது.
6.ராஜு ரம்பையை மணந்தான்.
7.அக்கா சினிமா சென்றாள்.
8. ராஜா ஜிலேபி உண்டான். ..............அமரன்

இதன் பின்னர் ஒரு விளம்பரம் வேறு. பணம் எல்லாம் கிடையாது. மற்ற பத்திரிகைகளை காப்பியடித்து... விளம்பரத்திற்கான உள்ளடக்கம் அவர்களின் துண்டு பிரசுரங்கள்.

என்னையும் மீறி இவற்றை வெளியிட்டிருக்கிறேன். அந்த பத்துவயது சிறுவர்களின் 'கடி'யை மன்னித்துவிடுங்கள்.

எட்டியவை எட்டு !!


பதிவுலகின் அண்மைய பரபரப்பான எண்ம நோய் என்னையும் எட்டிவிட்டது. அன்பர்கள் விக்கியும், சிறிலும் அழைத்திருக்கிறார்கள்.

தன்னைத் தானறிவது ஆழ்ந்த இந்துமத சித்தாந்தம். இந்த வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தாலும் வைத்தேன், இந்த சுய தேடலை நான் விடமுயன்றாலும் தொடர்வினை விளையாட்டுக்கள் விட விடாது போலிருக்கிறது. முதலில் நாலு பிடித்தவைகளை பட்டியலிடச் சொன்னார்கள், பின் ஆறு என்றார்கள், வினோத பண்புகளையும் ஆராயச் சொன்னார்கள்; இப்போது எட்டு சாதனைகளைச் சொல்ல வேண்டுமாம். எழுதியவைகளை மீள்பார்வை பார்த்தால் நானே நானா என பாடத் தோன்றுகிறது.

ஆர் கே இலட்சுமணின் சாதாரண குடிமகனுக்கு சரியான 'மாதிரி'யான என்னை தற்பெருமை அடித்துக் கொள்ளச் சொன்னால் வாழ்வே சாதனைதான். இருப்பினும் மேடையில் ஏறியபின் பின் வாங்கலாமா ?

1. பள்ளிப்படிப்பில் சொல்ல ஒன்றுமில்லாவிடினும் படிப்பிற்கு அப்பாற்பட்ட செயல்களில் ஆர்வம் காட்டி பாராட்டுக்கள் பெற்றிருக்கிறேன். தோட்டக்கலை, மின்னணு வானொலி செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் என புதுப்புது நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். நவராத்திரி பொம்மைக் கொலுவில் மிகுந்த ஆர்வம் எடுத்துக் கொள்வேன். (இப்போது என் மக்களுக்கு இது வியப்பாக இருக்கும்).

2. மாணவ பருவத்திலேயே கையெழுத்துப் பிரதி நடத்தியிருக்கிறேன். அந்த இதழின் பெயரான மணிமலரையே இந்தப் பதிவிற்கும் வைத்திருக்கிறேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒட்டி எனக்குப் பிடித்த வினாயகப் பெருமானை வைத்து பத்து வயதில் கவசம் எழுதியதை என் பாட்டி தன் பூசையறையில் வெகுகாலம் படித்துவந்தார்.

3.கல்லூரி வாழ்வில் படிப்பில் பிடிப்பேற்பட்டது. பல்கலைப் புகுமுக வகுப்பிலும் பொறியியல் முதல் மூன்று செமெஸ்டர்களிலும் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினேன். பட்டப்படிப்பில் பல்கலையில் ஐந்தாவதாகவும் பட்டமேற்படிப்பில் இரண்டாவதாகவும் வந்தேன்.

4.பல்வேறு பாடங்களில் எனக்கிருந்த ஆர்வத்தினால் மற்றவர்களுக்கு விளக்குவதிலும் ஒரு ஆசை இருந்தது. கல்லூரி படிப்புவிடுமுறைகளின் போது இனிமையாக நேரத்தைக் க(ழி)ளித்துவிட்டு கடைசி நிமிட ஆபத்பாந்தவனாக என்னை அணுகிய நண்பர்கள் உண்டு. சிலசமயம் profy வராண்டா என்று இதற்காகவே ஓடிய நண்பர்களும் உண்டு :)

5. தேர்வுகளில் தோல்வியை சந்தித்திராத அந்த காலகட்டத்தில் துளிக்கூட முன்னேற்பாடின்றி முயன்றதால் (?) IIT JEE யில் வரமுடியாததை சவாலாக எடுத்துக் கொண்டு முதலாண்டு பொறியியல் படித்துக் கொண்டே அடுத்தவருடம் IIT சென்னையில் இடம்பெற்று பின் வருடத்தை வீணடிப்பானேன் என்று விட்டதும் ஒரு கித்தாப்புதான். அதேபோல பட்டப்படிப்பின் முடிவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் இடம் கிடைத்தும் விளம்பரத்தில் வருவதுபோல இந்தியாவில் படிப்பேன் என கிழித்தெறிந்ததும் ஒரு அகங்காரம்தான்; கிடைக்காததால் செல்லவில்லை என்று மற்றவர்கள் சொல்லக் கூடாது என்பதற்காக :)

6. இதே சவாலிடும் மனப்பான்மையே UPSC எழுதவைத்து எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது. இந்திய தொலைதொடர்புப் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியதும் ஒரு பெருமையே. நாங்கள் அடிப்படை வசதிகள் இன்றி மூலைமுடிக்கில் நிறுவிய நுண்ணலை சேவைகள் இன்றைய பிஎஸ் என் எல் வளர்ச்சிக்கு அடிகோலியது ஒரு கர்வமாக இருக்கிறது.

7. செய்தபணியில் நிறைவைத் தந்தவை: இலட்சத்தீவின் கவரத்தியில் செயற்கைக்கோள் தொலைதொடர்பு நிலையம் நிறுவியது, இந்தியாவிலேயே முதன்முதலில் கேரளாவில் ஒளியிழை தொலைதொடர்பு கேபிள் இட்டு பயனுக்குக் கொண்டு வந்தது, சிரிலங்காவின் தொலைதொடர்பு நிறுவனத்தில் வளரும் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைக்கும் திட்டத்தின் கீழ் ஒளியிழை தொலைதொடர்பு பற்றி பயிற்சி கொடுத்தது, தொழிலாளர் பிரச்சினைகளும் சாதிபிரச்சினைகளும் மலிந்த தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்திலும் அனைத்து ஊழியர்களின் இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் பெற்றது.

8.எல்லாவற்றையும் விட தமிழில் வலைபதிவது. காணாமல் போன குழந்தை கையில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. பணிக்காலத்தில் புரிந்து கொண்டதைவிட அதிகமாக மனவோட்டங்களையும் குமுகாயப் பார்வைகளையும் அறிய வைத்த அனுபவம். நீறுபூத்த நெருப்பின் வெப்பத்தை உணரவைத்த பதிவுகள். எனது சக வயதினரிடமும் அதிகாரிகளிடமும் இல்லாத புரிந்துணர்வு எனக்கு கிடைத்துள்ளது என்ற பெருமை. 'சற்றுமுன்'னின் சாதனைகளிலும் மாற்று! தள பங்களிப்புகளிலும் இணைந்துள்ளதும் ஒரு பெருமையே.

படித்ததையும் கொடுத்த காசிற்கு வேலை செய்ததையுமே சாதனையாக எழுதியிருக்கிறேன். என்ன செய்வது, சட்டியில் இருந்தால்தானே :)

இந்த இடுகை இப்பதிவின் நூறாவது இடுகையாக விளங்குவதும் ஒரு சிறப்பு.

இனி அடுத்து எட்டு பேரை எழுதச் சொல்ல வேண்டும்: யார் யாரை கூப்பிட்டிருப்பார்கள் என்று தெரியாததால் மீள் அழைப்புகளை மன்னியுங்கள்.

1.Voice on Wings
2.மயூரேசன்
3.TBR ஜோசப்
4.தருமி
5.நிலா
6.செல்வராஜ்
7.தாரா
8.பிரபு இராஜதுரை

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

நீதிதேவதையின் கண்கள் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறதா?

While she goes by many names, the most popular are Lady Justice, Scales of Justice, and Blind Justice. The statue dates it origins from ancient Roman times as the lady represented is Themis, the goddess of justice and law. Well known for her clear sightedness, she typically holds a sword in one hand and scales in the other. The scales that she holds represent the impartiality with which justice is served and the sword signifies the power that is held by those making the decision. During the 16th century, artists started showing the lady blindfolded to show that justice is not subject to influence. From this, the statue earned the name Blind Justice.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கண்ட ஒரு ஒற்றுநிகழ்வு மிகவும் கலக்கத்தை உண்டுபண்ணுவதாக உள்ளது. தில்லியின் கார்மோதல் வழக்கு பற்றியதைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தைகைய ஒற்று நிகழ்ச்சிகளின் தார்மீக, சட்டரீதியான சரி தவறுகளை விவாதிக்க வரவில்லை. அடிப்படையில் சட்டம் நீதி ஒழுங்காக நீதிமன்றங்களில் வழங்கப் படுகிறதா என்ற அடிப்படை நம்பிக்கையையே தகர்ப்பதாக அந்நிகழ்ச்சியில் கண்டவை அமைந்தன.

1999ஆம் வருடம் தில்லியில் முன்னாள் கடற்படைத் தலைவர் நந்தா அவர்களின் மகன் தன் விலையுயர்ந்த BMW காரை மோதி சாகடித்த வழக்கில் அரசுத்துறை வழக்கறிஞரும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் சேர்ந்து கொண்டு சாட்சியை விலைக்கு வாங்கி குற்றவியல் நீதியையே கேலிக்குறியதாக்கிவிட்டதாக அந்த தொலைக்காட்சி காண்பித்தது. அந்த ஒற்று நிகழ்ச்சி உண்மையானதா பொய்யாக சோடிக்கப்பட்டதா என கூறமுடியாவிடினும் அந்த தொலைக்காட்சியின் பிரபலத்தை வைத்து அவ்வாறு அவர்கள் செய்யமாட்டார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. வழக்கறிஞர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வழக்குகளை திசைதிருப்புவார்கள் என்ற பேச்சையும் மீறி அவர்கள் ஊழல்வரை செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையை பொய்ப்பித்தார்கள் இவர்கள்.

இதற்கும் மேலாக காட்சியில் பங்கேற்ற மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தன் கருத்தைக் கூறும்போது இது எப்போதும் நடப்பதுதானே, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல் சொன்னது நம் நீதித்துறை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று எண்ண வைக்கிறது. திரைப்படங்களில் காணும் ஊழலும் இருதரப்பு வக்கீல்களின் கூட்டும் கற்பனைக்காக என்றிருந்தது பொய், நிழல் நிஜமாகிறது என்ற உணர்வு மனதில் வலியைத் தந்தது. பணமும் பதவிக்கும் எதிரே சாமான்யனின் வழக்கு செல்லுபடியாகாது என்பது எத்தனை துரதிருஷ்டமானது ? ஜனநாயகத்தினை பொய்யாக்குவது ?

பெருமையும் கௌரவமும் வாய்ந்த இந்த தொழிலின் பால் மக்களுக்கிருந்த நம்பிக்கையை, ஆக்ராவில் நடந்த வழக்கறிஞர்களின் செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சிகளும் குலைத்துவருகிறது. பார் கௌன்சிலும் அவர்களது மற்ற கழகங்களும் தாங்களே தங்கள் நன்னடத்தையை மேம்படுத்தும் வழி காணவேண்டும்.

இன்று உலகெங்கும் புகையிலை மறுப்பு தினம்

உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர். தவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழிலாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.

இதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள். பொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.

1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது. இன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம். மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல். இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!

உலக தொலைதொடர்புநாள் - மே 17

மே 17 - தொலைதொடர்பு பொறியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாகும். இன்றைய தினம் பன்னாட்டு தொலைதொடர்பு சங்கம் ( International Telecom Union - ITU) அமைக்கப் பட உறுப்பினர் நாடுகள் கையொப்பமிட்ட நாளாகும். இதனை தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாடுகிறோம்.

இந்த நாளையொட்டி ITUவின் தலைமை செயலர் ஹமாடுன் டூர் வெளியிட்டுள்ள உரையில் இந்த வருடதினத்தை இளைஞர்களுக்கானதாக பரிந்துரைக்கிறார். வளர்ந்துவரும் தகவல்நுட்ப சமூகத்தில் பெரும்பங்கு வகிப்பதும் அவர்கள்தான், அதிக பயன்பெறுவோரும் அவர்கள்தான். ஆதலினால் உலகின் எல்லா இளைஞர்களுக்கும் சரிசமனாக இந்த வாய்ப்பு கிட்டவைப்பதே தொலைதொடர்பு மற்றும் தகவல்நுட்ப அமைப்புக்களின் தலையாய கடமையாகும். ஒவ்வொருநாட்டின் சிறுவர்களும், முக்கியமாக வசதியற்றவர்களும் விளிம்புநிலையில் இருப்பவர்களும் புதிய தகவல் சமூகத்தில் பங்கு பெறவைப்பது நமது கடமையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைசெயலர் பான் கி மூனின் செய்தி இது
இந்நாளை ஒட்டி தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியவர்களை விருதுவழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இந்த வருடம் மூன்று பேர்கள் விருது பெறுகிறார்கள்்:
1. டொமினிகன் குடியரசின் அதிபரின் மனைவி மார்கரிட்டா செடெனொ டெ பெர்னாண்டஸ்: சட்ட நிபுணரான இவர் டிஜிட்டல் சொலிடாரிடி பண்ட் (DSF) என்ற அமைப்பில் பங்கு கொண்டு தமது நாட்டின் தகவல்நுட்ப வேற்றுமையைக் களைந்தமைக்காக இந்த விருது வழங்கப் படுகிறது. மிக வறிய இடங்களில் 135 குடியமைப்பு நுட்ப மையங்களை ( Community Technology Centers) நிறுவி ஒவ்வொரு மையமும் அதனை சார்ந்த மக்களுக்கு கணினி அறிவை புகட்டி அவர்களது சமூக,நாகரீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் பெண்டிரும் சிறுமிகளும் புது நுட்பங்களை கற்று சமூகத்தில் ஒன்றிடவும் பாலிய சமநிலை எய்தவும் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.


2. மாஸ்கோ நுண்ணலை ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர் மார்க் கிரிவோசீவ்: தொலைக்காட்சி சேவைகளில் நுட்ப மேம்பாட்டிற்காக இவருக்கு விருது வழங்கப் படுகிறது.தொலைக்காட்சி நுட்பமுறைகளின் ஒருங்கிணைப்பிற்கும் புதிய நெறிமுறைகள் உருவாவதற்கும் ITU குழுமங்களில் பங்காற்றி HDTV, digital broadcast standards ஆகியவற்றின் மூலம் கணினி வேற்றுமையை (Digital Divide) நீக்கி வாய்ப்புக்களை உருவாக்க உறுதுணை புரிந்தார்.

3.மொசில்லா கார்ப்பொரேஷன்: உலகின் இணைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்குவித்து பங்காற்றியமைக்காக மொசில்லா நிறுவனத்தின் தலைவரும் CEOவுமான மிட்ச்செல் பேகர் மூலமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப் படுகிறது.மொசில்லா என்பது வழமையான மென்பொருள் நிறுவனம் அல்ல; அது ஒரு உலகளாவிய திறமூல குழுமம்.இதன் மென்பொருட்கள் திறமூலமாகவும் விலையின்றி கிடைப்பதானாலும் தனக்கென வணிகமுத்திரை (trademark) வைத்துக் கொண்டு தன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. முக்கிய மென்பொருட்கள்: மொசில்லா, பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட். கணினி வேற்றுமையை அகற்ற மொசில்லாவின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளைஞர்களை இணைத்திட புதிய நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துச் செல்வோம்.

இங்கு காதலிப்பது குற்றம்

அண்மையில் மும்பை காவல்துறை நன்னடத்தைக் காவலர்களாக வலம் வருகிறார்கள். சென்ற வாரம் பாந்திரா கடற்கரை, தானெ உப்வான் ஏரி மற்றும் புதுமும்பை பகுதிகளில் 'ரெய்ட்' நடத்தி இளஞ்சோடிகளை கைது செய்துள்ளனர். அவர்களின் குற்றம் அருகருகே அமர்ந்து இயற்கையை இரசித்ததுதான். ஆளுக்கு ரூ.1200/- அபராதமும் விதித்தனர். பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துமுகமாக கைகளைப் பிணைத்துக் கொண்டும் கட்டிஅணைத்தும் இருந்திருக்கிறார்கள். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என காதலர்களும் பெற்றோர்களும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருக்கிறார்கள்.

மும்பை ஒரு தூங்காத நகரம். அமைதியாக தூங்கவும் இடம் இல்லாத நகரம். சிறிய அடுக்ககங்களில் தனிமையும் அமைதியும் கிடைக்காத சூழல். இந்நிலையில் மணமான ஜோடிகளே இயற்கையிடங்களை நாடும் தேவை எழுகின்ற நகரம். மேற்கத்திய நாகரீகத்தினை மால்களும் திரைப்படங்களும் பரப்புகின்ற தாக்கத்தினூடே இயற்கையான மும்பையின் பரந்த மனப்பான்மை மக்களிடையே காவலர்கள் தங்கள் எல்லைகளை மீறுகிறார்கள் என்ற எண்ணத்தை எழுப்பி வருகிறது. அடிக்கடி நிகழும் தீவிரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாத காவல்துறையினர் இளஞ்சோடிகளிடம் தங்கள் வீரத்தைக் காண்பிப்பதாக பத்திரிகைகளில் கடிதம் எழுதுகிறார்கள்.

இந்த விவாதத்தின் இருபக்கங்களிலும் உண்மையில்லாமல் இல்லை. காவலர்களுக்கென்று இல்லாவிடினும் செல்பேசி ஆபாசப்படங்கள் வலம்வரும் இந்நாட்களில் பொது இடங்களில் இளஞ்சோடிகள் மெய்மறந்திருப்பது அவர்களது தனிவாழ்விற்கு கேடானதே. கிழக்கும் மேற்கும் இல்லாத இரண்டுங்கெட்டான் கலாசாரத்தில் இது குழப்பத்தையே விளைவிக்கும். அதேசமயம் இரும்புமனம் படைத்த குற்றவாளிகளுடன் பழகிய காவலர்கள் கரும்புவில்லால் அடிபட்டவர்களை முரட்டுத்தனமாக நடத்துவதும் விரும்பத் தக்கதல்ல. சற்றே எல்லை மீறுபவர்களையும் எச்சரித்து கண்ணியமாக கலைத்திருக்கலாம்.

மும்பையை ஷாங்கை ஆக்குவதாக அரசியலார் முழங்குகிறார்கள்;அதற்குமுன் பாரிஸ் ஆகிவிடும் போலிருக்கிறது.

தொடர்புள்ள சுட்டி: மும்பை இணை காவல் ஆணையரின் நேர்முகம்

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

வலைப்பதிவதே பதினைந்து நிமிட புகழுக்குத் தான் என்ற சுஜாதாவின் கூற்றை மெய்ப்பிப்பது போல் அவ்வப்போது பதிவர்களின் தற்பெருமைக்கு வித்திட தொடர்வினை விளையாட்டுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் நான்கு பிறகு ஆறு பிடித்தவைகளைப் பட்டியலிட்டோம். இப்போது நாம் எப்படி மாறுபட்டவர்கள் என்று ஆத்மசோதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். சக பதிவர்களின் சத்திய சோதனைகளை சு(ச)கித்துக் கொண்டிருக்கும்போது என்னையும் இந்த வட்டத்திற்கு இழுத்துவிட்ட(து)வர் அம்மணியின் மனசாட்சி.
வழிவகுத்தவருக்கும் வாய்ப்பளித்தவருக்கும் நன்றி.

Weird என்ற ஆங்கிலப் பதத்திற்கு மாறுபட்டது என்று பொருள் எடுத்துக் கொள்கிறேன். என்னிலிருந்து மற்றவர்களே மாறுபட்டவர்களாக எனக்குத் தெரிவதும் weird தானோ ?

1.அழகை ஆராதிப்பவன்: இயற்கையின் அழகை அதன்போக்கில் இரசிப்பதை மிகவும் விரும்புபவன். மலர்களை செடியிலேயே காண விரும்புபவன். மலைகள் குடையப் படுவதும் நதிகள் தடுக்கப் படுவதும் மனதை நோகச் செய்யும். மும்பை புனெ விரைவுப் பாதையில் சல்லென்று போவது பிடிக்கும் என்றாலும் இயற்கையை வதம் செய்ததுபோல மனம் வலிக்கும். விட்டால்உணவு(சமைத்த உணவு), உடை, வீடு இல்லாமல் வனாந்தரங்களில் மற்ற விலங்குகள் போல திரியவேண்டும் என்றொரு கனவு. Casteaway போல தனிதீவில் விட்டால் எதை எடுத்துக் கொண்டு போவீர்கள் என்று என்னைக் கேட்டால் ஒன்றுமில்லை எனச் சொல்லியிருப்பேன். நமக்கு நிகழ்ந்திருக்கும் மரபணு மாற்றங்களால் 'பழைய' காலத்திற்கு போக முடியுமா என தர்க்கம் பார்க்கவில்லை.

2.ஒழுங்கு மற்றும் aesthetics: பள்ளியிலிருந்து பல்கலைவரை கேள்வித்தாளினை மடிக்காமல், அதில் எதுவும் கிறுக்காமல் எடுத்துவருவேன். பரிசுப் பொட்டலங்களைக் கூட அலுங்காமல் நசுங்காமல் பிரித்தெடுப்பேன். எடுத்ததை எடுத்த விடத்தில் வைப்பது இயல்போடு இயைந்தது. மற்றவர்கள் கலைத்தால் மனத்தகைவு ஏற்படும். செய்ய வேண்டியவையை பட்டியலிட்டு நிறைவேற்றுவது - எனது குறைந்த ஞாபகத்திறனை வைத்துக் கொண்டு குப்பை கொட்டுவது இந்த ஒழுங்குமுறையால் தான்.

3. கலாய்த்தல் ( வருத்தப் படாத பாணி) நிறைந்த தமிழ்மணத்தில் சற்று விலகியிருப்பவன். கலாய்ப்பதும் மிக மென்மையான முறையிலேயே சாத்தியப் படுபவன். மற்றவர்கள் கலாய்க்கப் படுவது பார்க்க பிடிக்கும். இருப்பினும் அந்த quick wit வரப் பெறவில்லை :(

4.அதற்காக சீரியஸ் டைப்பும் கிடையாது. படிப்பதில் நுனிப்புல் மேய்பவன் தான் (அம்மணி பதிவு மட்டுமின்னு இல்லீங்கோ). புத்தகங்களை அட்டையிலிருந்து அட்டை படிப்பவன் கிடையாது. ஆழ்ந்த சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொள்கிற பொறுமை கிடையாது. நகைச்சுவை புத்தகங்களும் திரைப்படங்களுமே பிடித்தமானவை. தமிழ்மண பதிவர்களின் ஆழமான கருத்துக்களையும் ஆய்வுகளையும் கண்டு பிரமிப்பவன்.

5.தனிமையை விரும்புவது கிறுக்குத் தனமா எனத் தெரியவில்லை. நிறைய பதிவர்கள் கூறியிருப்பதால் இது பதிவர்களுக்கான அடையாளமா ? இராமநாதனைப் போல எனக்கும் மிகக் குறைந்த நண்பர்களே. அதிகம் பேசாததினால் அழுத்தக்காரன், தலைக் கனம் பிடித்தவன் என்பவர்கள் உண்டு. ஆயினும் பொழுதுபோக்கோ இன்பச் சுற்றுலாவோ குடும்பத்தினர் இல்லாமல் சென்றதில்லை; இரசிப்பதுமில்லை.

கிடைத்த நேரத்தில் தோன்றிய கிறுக்குத்தனங்களை சொல்லிவிட்டேன். இது மட்டுமே முழுமையானது அல்ல என்பது பக்கத்தில் தங்கமணி இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

இனி அடுத்தவங்களை மாட்டிவிடவேண்டும். இத்தனை நேரம் அனைவருக்கும் அழைப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கூப்பிட்டவர்களையே மறுபடியும் கூப்பிடுவதை விட இதுவரை அழைக்கப் படாதவர்கள் நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகக் கொண்டு தொடரவும்.

அபூர்வ ராகங்கள் ?

இன்று வெளியாகியுள்ள அமிதாப் பச்சனின் புதிய படம் 'நிசப்த்'(சப்தமில்லாமல்) இங்கு சர்ச்சைக்குள்ளாகி சப்தங்களை கிளப்பி விட்டுள்ளது. அறுபது வயது குடும்பத்தலைவருக்கும் (அமிதாப்) பதினெட்டு வயது பெண்ணின் தோழிக்கும் (ஜியா கான்) ஏற்படும் வயதைத் தாண்டிய காதலை விவரிக்கிறது படம். அழகான தேயிலைத் தோட்டத்தில் அன்பான மனைவியுடன் ( ரேவதி) வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது தன் மகளுடன் விடுமுறைக்கு வரும் தோழி ஜியாவிடம் நட்பாக ஆரம்பித்த உறவு காதலாக மலர்கிறது. தமிழ் இரசிகர்கள் பாலச்சந்தரின் ஆபூர்வ இராகங்களிலேயே இத்தகைய வயது மீறிய காதல்களை அங்கீகரித்திருந்தாலும் இங்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் கதையில் மைத்துனர் (நாசர்) அறிவுரையில் கடைசியில் ஜியாவை அவள் தோழனுடன் சேர்த்து அனுப்பி தான் சோகத்தில் ஆழ்வதாக முடிகிறது. இராம் கோபால் வர்மா மற்றுமொரு வழக்கத்திற்கு மாறான படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சர்ச்சையின் உச்சகட்டமாக அறிமுக இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணனின் 'சீனி கும்' படமும்் இந்த கருவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதிலும் அமிதாப் தான் நடிக்கிறார். நிசப்த்தில் போடோகிராபர், இதில் போனிடைல் சிகை (a la ஹரிஹரன்) அலங்காரத்துடன் சமையற்காரன். தனது 34 வயது எஜமானியுடன் (டாபு) காதல். ஒரே கதை கொண்ட இரு திரைப்படங்கள் எப்படி அமிதாப் ஒத்துக் கொண்டார் ? தவிர RGV தன் பேட்டியில்்அமிதாப் அமிதாப் தன் படமொன்றின் கதை வயதான ஆணிற்கும் பருவப் பெண்ணிற்கும் உள்ள உறவை ஒட்டியது என்றதே தனது இந்த கதைக்கருக்கான வித்து என்று கூறியிருப்பது அமிதாப்பின் பணிநேர்மை (professionalism) பற்றி கேள்வி எழுப்புகிறது.


அமிதாப்பைப் பொறுத்தவரை வரலாறு மீண்டும் எழுதப் படுகிறது. இதற்கு முன்னால் 'டூ ஃபான்' மற்றும் 'ஜாதுகர்' என்ற இருபடங்கள் இரண்டிலும் அமிதாப் மந்திரவாதியாக நடித்து அடுத்தடுத்து வந்து தோல்வியடைந்தது. அதேபோல் இந்த இருபடங்களும் தோல்வியைத் தழுவுமா ? அதிலும் ஆர்.பாலகிருஷ்ணன் அறிமுக இயக்குநர் என்பதால் கிடைக்கும் முதல் அடியைத் தாங்க முடியுமா ?

முடிவை வெள்ளித்திரையில் காண்க ?

நன்றி: பி.பி.சி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ்

9% வளர்ச்சி, மின்வெட்டு கூடுகிறது !

இந்தியா ஒளிர்கிறது என்றார்கள், எங்கள் வீடுகளில் மட்டும் மின்விளக்கு ஒளிர்வதில்லை. தேசிய உற்பத்தி 9% மேல் என்று பெருமைபட்டார்கள். பார்ப்பதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு 'சக்தி' இல்லை. அடிப்படைக் கட்டுமானம் இல்லாமலே இந்த வளர்ச்சி என்றால் முழு வசதிகளும் இருந்தால் எங்கே போயிருப்போமோ ? நான் குறிப்பிடுவது மகாராஷ்ட்டிரத்தில் இப்போது நிலவும் மின்சார பஞ்சத்தை. இந்தியா முழுமையுமே மின்பற்றாக்குறையில் தவித்தாலும் இங்கு நாளும் ஐந்து/ஆறு மணிநேர மின்வெட்டு மக்களைப் படுத்துகிறது. இதுதவிர தொழிலகங்களுக்கு வாரத்தில் இருநாட்கள் 100% மின்வெட்டு. இந்த அழகில் மும்பை மாநகருக்கு மட்டும் முழு விதிவிலக்கு.

'ஒரு காலத்தில்' மின்னுற்பத்தியில் உபரியாக இருந்த மாநிலம் தொடர்ந்த அரசியல் அக்கறையின்மையால் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. என்ரானின் தபோல் மின்னிலையம் வழங்கவிருந்த அளவை வைத்து வேறெதுவும் முயலாமல், இன்று என்ரானின் வீழ்ச்சியோடு மகாராஷ்ட்டிர மின் உற்பத்தியும் படுத்துவிட்டது. மீண்டும் தபோல் மின் நிலையத்தை உயிர்ப்பிக்க முயன்று பழுதுபட்ட இயந்திரங்களை 'ஒன்றிற்கொன்று மாற்றிக்கொண்டு' (cannibalise) சிறிது வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது யானைப் பசிக்கு சோளப் பொரியாக இருக்கிறது. உற்பத்தியைப் பெருக்க முடியாததால் மக்களை செலவழிப்பதை 20% வரை தாங்களாகவே குறைக்க வேண்டியிருக்கிறார்கள். அதற்கும் ஒரு முறையான பிரசாரமோ நடைமுறை விளக்கங்களோ கிடையாது.

'துடிப்பான குஜராத்' (Vibrant Gujarat) தொழில்முனைவோரை தன்பக்கம் இழுக்கும் வேளையில் இந்த மின்பஞ்சம் அதனை துரிதப் படுத்தும். இந்த நிலையில் 2012இல் இவ்வளவு முன்னேற்றம் வரப்போகிறது என்பதெல்லாம் வரும் ஜில்லா பரிசத் தேர்தல்களுக்கு உதவலாம், நடப்பிற்கு உதவாது. அண்மை மாநில ஆந்திரத்திலிருந்து கடன் வாங்கலாம் என்றால் அவர்களிடம் அனல்மின்நிலையங்களுக்கு எரிசக்தி யாக இயற்கை வாயு தட்டுப்பாடாம். அதனால் விலையுள்ள நாஃப்தா கொண்டு தயாரித்து வழங்க இம்மாநிலம் கேட்டுள்ளது, ஒரு யூனிட் ரூ9 ஆனாலும் பரவாயில்லை என்று.
அதனால் துண்டு விழும் தொகையை நாம்தான் வரியாகக் கொடுக்கவேண்டும். நம்மைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இந்த மின்பஞ்சத்திற்கு மாநில மின் துறை அமைச்சர் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவராதலால் காங்கிரஸ் அந்தக் கட்சியைக் குறைகாண்பதிலும், மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே காங்கிரஸ்காரர் ஆதலால் இவர்கள் காங்கிரஸைக் குறை காண்பதிலும் அடித்துக்கொண்டிருக்க எதிர்கட்சிகள் சிவசேனையும் பாஜகவும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

மராத்திகள் மிகவும் பொறுமையானவர்கள்தான்.

பர்சானியா


குஜராத்தில் 2002இல் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இயக்குனர் ராகுல் தோலாக்கியாவின் ஆங்கிலப் படம் 'பர்சானியா' திரையிடுவது அங்கு இந்துத்வா கட்சிகளின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு பார்சி குடும்பம் கலவரங்களின் போது மாட்டிக்கொண்டு தங்கள் குழந்தையை தவறவிடுவதும் அதன் தாக்கங்களையும் ஒரு கதையாக வடித்துள்ளனர். நிர்மலாவின் படவிமரிசனம் இங்கே.

நேற்று இந்தப் படத்தின் அவர்களுக்கான தனி திரையிடலை பார்க்க பல்லரங்கு அதிபர்கள் தவிர்த்துள்ளனர். மதக்கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ள இந்தப் படம் சிறுபான்மையரிடம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மீண்டும் வன்முறை வெடிக்கும் என்று குஜராத் பல்லரங்கு (Multiplex) அதிபர்கள் சங்கத் தலைவர் மனுபாய் படேல் தெரிவித்துள்ளார். பஜரங் தளத்தின் மிரட்டலுக்குப் பயந்தே அரங்கு நிர்வாகிகள் திரையிட மறுக்கிறார்கள்.போலீஸ் பாதுகாப்பு தியேட்டருக்குவெளியே தானே, உள்ளே கலவரம் நிகழ்ந்து தங்கள் உடமைகள் உடைப்பட்டால் யார் பாதுகாப்பு என்று அரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வந்து முகாமிட்டுள்ள இயக்குனர், சிறு தியேட்டர்களிலாவது திரையிட இயலுமா என முயன்று கொண்டிருக்கிறார்.சில மாதங்கள் முன் அமீர்கானின் பானா(Fanaa) படமும் அவரது நர்மதா அணை குடிபெயர் மக்களுக்கு ஆதரவளித்ததிற்காக 'பொதுமக்களால்' தடை செய்யப் பட்டது.

ஓவியர் ஹுசேனின் ஓவியங்களை ஓவியங்களாகக் காண இயலாமற்போனோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ் திரைப்படங்களும் சின்னத்திரை ஒளிபரப்புகளும் கர்நாடகாவில் 'மக்களால்' தடை செய்யப் பட்டுள்ளன. தமிழகத்தில் திரைப்படங்களின் பெயரிலிருந்து கருத்துவரை 'மக்களால்'வலியுறுத்தப் படுகின்றன.

இதெல்லாம் பார்க்கும் போது நமது அரசியல் சட்டத்தில் 'பேச்சு சுதந்திரம்' என்பது பேச்சளவிலேயே இருப்பது புலனாகிறது. மனவளர்ச்சியடையாத ஒரு சமுகாயத்தில் சட்டங்கள் மட்டுமே உயரிய விழுமங்களைக் கொண்டுள்ளன. தவறான பாதையில் செல்லும் தங்கள் சமுகாயத்தை சரியாக வழி நடத்த வாக்குவங்கி அரசியலில் ஒரு தலைவர்களும் இல்லாமற் போனதும் நமது துரதிருட்டம். மெதுவே காட்டு அரசாண்மைக்கு நகர்ந்து செல்கிறோமோ ?

மாநகராட்சி தேர்தல் !

மும்பை பெருநகர நகராட்சி கழகத்தின் (Brihanmumbai Municipal Corporation - BMC) தேர்தல் நாளை (பிப். 1) நடைபெறவுள்ளது. கடந்த நாற்பது நாட்களாக நடந்துவந்த தேர்தல் முழக்கங்களிலிருந்து இன்று சற்று அமைதி கிடைத்துள்ளது.சிவசேனா-பிஜேபி யிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தேசிய காங்கிரஸ் கட்சியும் (Nationalist Congress Party of Sharad Powar) கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளன. மும்பை தவிர தானே, உல்லாஸ்நகர், புனெ, நாக்பூர், பிம்ப்ரி, சின்ச்வாட், நாசிக், சோலாப்பூர், அகோலா மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

சிவசேனா-பிஜேபி கூட்டணி வலுவாக தோற்றமளித்தாலும் தாக்கரே குடும்பப்பகையினால் பிளவுபட்டுள்ள சேனாவின் பலம் ஐயத்திற்குறியதே. வெளிவந்து மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற கட்சியை ஆரம்பித்துள்ள ராஜ் தாக்கரே இளம் வேட்பாளர்களை நிறுத்தி களம் காணவிருக்கிறார். சிவசேனையிலிருந்து வெளிவந்து கலக்கிக் கொண்டிருக்கும் ரானேயின் தாக்கம் மும்பையில் எவ்வளவு என்பதும் புரியாத புதிர்.

BMC நடப்பு ஆட்சியின்பால் உள்ள வெறுப்பை பயன்படுத்திக் கொண்டு எளிதாக வெல்லக்கூடிய நிலையை தங்கள் விட்டுக் கொடுக்காத அரசியலால் மாநில ஆளும் கூட்டணி பிரிந்து காங்கிரஸும் என்சிபியும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் 227 தொகுதிகளில் ஒருவருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 'தூக்கு' நகராட்சியவை அமையும் வாய்ப்புள்ளது. தென்னகத்திலிருந்து அ.இ.அ.தி.மு.க மூன்று இடங்களில் (திருமதிகள் சுமதி, நாஃபிசா சாயித் மற்றும் மகாலட்சுமி நாய்டு ) போட்டியிடுகின்றது.

நகராட்சி குறைகளைத் தவிர இட ஒதுக்கீடு, கைலாஞ்சி சம்பவங்கள், மண்ணின் மைந்தர்/ வெளிமாநிலத்தவர், வெளிநாட்டு சட்ட அனுமதியில்லாத அகதிகள் (பங்களாதேசிகள்) எனப் பல பிரச்சினைகள் கவனம் பெற்றன.

தில்லி சாலைகளை கண்டு ஞானோதயம் பெற்றதுபோல நடிகை ப்ரீடீ ஜிந்தா மும்பை சாலையின் குண்டும் குழியும் மாற அனைவரும் வாக்களிக்க வேண்டியிருக்கிறார். ஹேமமாலினி "மும்பையின் வாழ்வியல் பிடிக்கவில்லையென்றால் உங்கள் மாநிலங்களுக்கே செல்லுங்கள்" என்று வட இந்தியருக்கு 'அறிவுரை' கூறி பலத்த பிரச்சினையை எழுப்பி பின் பின்வாங்கினார்். பால்தாக்கரே முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சி கருத்துகணிப்பை ஆதாரமாகக் கொண்டு இல்லாத ஒரு பிரச்சினையான மும்பையை மகாராஷ்ட்ரத்திலிருந்து பிரிக்கக் கூடாது என்று முழங்கியவர், தனது இந்துத்வா பாணி பிரசாரத்தில் முகமது அஃப்சலின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் நாளெடுத்துக் கொள்வதை குறிப்பிட்டு, அவரது நீள்முடி கண்ணை மறைப்பதாக திங்களன்று திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு கண்ணியமான தலைவரை் தங்கள் அழுக்கு அரசியலில் இழுத்து சேறு பூசுவது வாடிக்கையாகிவிட்டது.

சூடான அரசியல் வாதங்கள் ஓய்ந்து நாளை வாக்களிப்பு, மறுநாள் முடிவுகள். வாக்குச்சாவடி வன்முறையில் சென்னையை விட பலவருடங்கள் பிந்தி உள்ளதால் அமைதியாக நடைபெறும் என நம்புகிறோம். என்ன, நீண்ட வார இறுதி எடுத்துக்கொண்டு அடுத்துள்ள மகிழ்விடங்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் :)

காலிலே கல்வண்ணம் கண்டார் !

கால் கொலுசிலிருந்து மாணிக்க கற்கள் சிதறுவதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். காலிலிருந்தே கற்கள் சிதறினால்...சிடி சுஹானா சாடோன் என்கிற மலேசிய இளம்பெண்ணின் காலடியிலிருந்து தோல் பிளவுபட்டு கற்கள் வெளிப்படுகின்றனவாம். மலேசியாவின் தி நியூஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் இந்த 23 வயது பெண்ணின் காலில் விளைந்த கற்களைப் படம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இரப்பர் இறக்கும் தொழிலாளியான அவரது அன்னை காமிரியா, விளம்பரத்திற்காக இல்லை,பெண்ணின் நோயும் வலியும் தீர யாராவது தீர்வு சொல்வார்களோ என்றே ஊடகங்களை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். இருப்பினும் TV3 நிகழ்ச்சியில் வந்தபிறகு சிடி ஓரிரவில் ஒரு சூப்பர்ஸ்டாராகி உள்ளார்.

தனது பேட்டியில் சிடி சாதாரணமாக நாலைந்து கற்கள் வருவதாக கூறினாலும் கடந்த சிலநாட்களாக இரு கோலிகுண்டு அளவு கற்களே வெளிவந்துள்ளன.கற்கள் வெளிவருமுன் குமட்டலும் பல்வலியும் ஏற்படுவதாக கூறுகிறார். பிரசவ வலிபோல், அந்த சமயம் கற்கள் வெளிவந்தால் போதும் என்பது போல் வலிப்பதாகவும் கூறுகிறார். அவர் தூக்கத்தில் இருக்கும் போதும் கற்கள் வெளிப்படுவதாகவும், பெரிய கற்களாக இருந்தால் நோண்டி எடுக்கவேண்டியிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

மருத்துவர்களின் எக்ஸ்ரே சோதனைகள் எந்த ஒரு அசாதரண நிலையையும் காட்டவில்லை.கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்த வியாதி(?) இருப்பதாகத் தெரிகிறது.

விக்கிபீடியாபடி முத்துக்கள் உருவாவது எப்படி:

"முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி (mollusc) உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட் அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கல்சியம் காபனேற்றையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் (mother-of-pearl) என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது."

ஒருவேளை இவர் உடலுக்குள் இத்தைகைய உயிரினம் ஏதாவதொன்று பாரசைட்டாக ஊடுறுவியுள்ளதோ ?

இவர் தமிழகம் வந்தால் காலடியில் கற்கள் எழுகின்றனவோ இல்லையோ 'பக்தர்கள்' விழுவது நிச்சயம்.

ஐஸ்-அபிஷேக் நிச்சயதார்த்தம்!

வருகிறது, வருகிறது என்று எதிர்பார்த்திருந்த அந்த செய்தி கடைசியில் வந்தே விட்டது. நேற்று, ஞாயிறு இரவு, அமிதாப் பச்சனின் இல்லத்தில், நெருங்கிய உறவினர், நண்பர்கள் முன்னிலையில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயின் விரலில் மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பாலிவுட்டின் 'கிசுகிசு'க்களில் பேசப்பட்ட அவர்கள் காதலை் கனடாவில் நடந்த குரு பட சிறப்பு வெளியீட்டின்போது அபிஷேக் ராயிடம் 'அந்த' கேள்வியை கேட்டு நிச்சயித்துக் கொண்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. கனடாவிலிருந்து ஊர் திரும்பிய சிலமணி நேரத்திலேயே இந்தியாவின் பிராஞ்சிலினா ஜோடியாக அறியப்படும் காதலர்களின் திருமணத்தை நிச்சயம் செய்து அமிதாப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார். ஐஸ்வர்யா ராயின் செயலரும் இதனை ஊர்ஜிதப் படுத்தியுள்ளார். மணநாள் இன்னும் அறிவிக்கப் படவில்லை. ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளைய அபிஷேக் பிப்.5 அன்று 31 வயதைக் கொண்டாடுகிறார்.

ஐஸ்வர்யா ராயின் செவ்வாய் தோஷத்திற்காக மதுரை, வாரணாசி கோயில்களில் அவரும் அமிதாப் குடும்பத்தினரும் விசேட பூசனைகள் மேற்கொண்டார்கள். புஷ்கரில் உள்ள ஒரே பிரம்மாவின் கோவிலுக்கும் அமிதாப் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அந்த சமயத்தில் அஜ்மீர் தர்காவிற்கும் சென்று வேண்டினர். இது போதாது என்று வரும் நாட்களில் குருவாயூருக்கு அவர்கள் குடும்பத்தினருடன் செல்லவிருக்கிறார். அங்கு அமிதாப் கோவிலுக்கு யானை வழங்கி பிரார்தனை செலுத்தவிருப்பதாக கேரள செய்திகள் கூறுகின்றன.மனம் விரும்பிய மணவாளனை கைபிடிக்க இப்பொழுதே மாமனார் மெச்சிய மருமகளாக நடந்து கொள்கிறார்.

சல்மான்கான், விவேக் ஓபிராயுடன் இணைந்து பேசப்பட்டவர் ராய். இதுபோல கரிஷ்மா வுடன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்து மனமுறிவு கொண்டவர் அபிஷேக். இந்த உறவாவது இருவருக்கும் இனிதே அமைய நமது வாழ்த்துக்கள் !!

ஐ! போன் !!

நம்மில் பெரும்பான்மையானவர்கள் கணினி என்றவுடன் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளையே அறிவோம். ஐபிஎம் நிறுவனத்தின் தாராளமயமாக்கல் கொள்கையால் இயங்குதள மென்பொருளில் தனியாதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட்டின் முதல் போட்டியாளராக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. தாங்களே அடிப்படை 'சிப்'பிலிருந்து இயங்குதளம், பயனர் மென்பொருள் வரை உருவாக்கியதால் அவர்களது கணினி விலை அதிகம். இருப்பினும் வடிவமைப்பில் முன்னோடியான பல நுட்பங்களை கொண்டுவந்து தங்கள் போட்டியாளர்களை திணற அடிப்பார்கள். அசைகலை,வரைகலை நிரல்களில் அவர்களின் முதன்மை இன்றைய அச்சு ஊடகத்துறையில் அவர்களிருக்கும் மதிப்பினாலேயே தெரியவரும்.

விலையினால் போட்டியிடமுடியாதிருந்த காலகட்டத்தில் அவர்கள் அப்போது வந்த Flash drive நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டுவந்த எம்பி3 (mp3) செயலி ஐபொட் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்தது. அதனுடன் மக்கள் அதிகம் விரும்பும் இசையை காசுகொடுத்து தரவிறக்கம் செய்துகொள்ள அமைக்கப் பட்ட iTunes தள விற்பனையும் கீழே சென்று கொண்டிருந்த நிறுவன விற்பனையை கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்ல வைத்தது.கணினிக்கு எலிக்குட்டியை(நன்றி,டோண்டு) (mouse) அறிமுகப் படுத்தியவர்கள், ஐபொட்டிற்கு clikwheel எனும் சுழல்பொத்தானை அறிமுகம் செய்தார்கள்.இவை இவர்கள் கணினி நுட்பவியலில் வழக்கமான வழியிலேயே செல்லாமல் புதிதாக சிந்திப்பதை எடுத்துக்காட்டும்.

வருடாவருடம் விற்பனைக்கு கொண்டுவரப்போகும் கருவிகளை அவர்களது மாக்வொர்ல்ட் என்னும் பொருட்காட்சியில் அறிமுகப் படுத்துவார்கள். இன்றைய தினம் அந்தப் பொருட்காட்சியில் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முக்கிய (keynote) உரையில் மக்களை ஏமாற்றவில்லை. ஐபொட்டின் வளர்ச்சியாக ஃபோன், ஐபொட் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய கணினி என மூன்றையும் உள்ளடக்கிய ஐபோன் என்ற கருவியையும் ஆப்பிள்டீவியையும் விவரித்த அவரது உரை கேட்டவரை திக்பிரமையடைய வைத்தது.

செல்பேசி என்றாலே எண்களின் பொத்தான்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்த குழப்பமேயில்லாது முழுவதும் காட்டுதிரை(display screen) யாக இருந்தால்.. சரி, stylus வைத்து தொடுவதா, அந்தக் குச்சியை நான் தொலைத்து விடுவேனே... அதுவும் இல்லாமல் multi-touch என்ற முன்னோடியான தொழிற்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். $499 (4 gig)/$599 (8 gig) க்கு விற்பனையாகவுள்ள இந்த செல்பேசிகள் ஆப்பிளின் OSX இயங்குதளத்தில் வழக்கமான நிரலிகளுடன் அமைவதுடன் WiFi மூலம் இணையத்துடனும் தொடர்பு கொள்ளும்.தவிர
2மெகாபிக்சல் காமெரா, இசை,திரைப்பட செயலிகள் கொண்டிருக்கும். பேசிகொண்டிருக்கும்போதே மின்னஞ்சலோ நிழற்படமோ அனுப்பவியலும். நிச்சயமாக இது ஆப்பிள் நிறுவனத்தின் முதல்வரிகளையும் இறுதிவரிகளையும் அடுத்த சிகரத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது.

பில் கேட்ஸுக்கு டாட்டா ?


தமிழ்நாட்டிற்கு மிகுந்த கோலாகலத்துடன் வந்து முதல்வரை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடு செய்வதாக கூறியிருந்த பில் கேட்ஸின் மைக்ரோசஃப்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக தமிழக அரசு திறமூல இயங்குதளமான லினக்ஸ் வகை வினியோகங்களை தங்கள் மின் அரசாண்மை ( e-governance) முயற்சிகளுக்கு பயன்படுத்தப்போவதாக குருபிரசாத் பதிவில் கூறியுள்ளார். தனது பத்திரிகை பேட்டியில் எல்காட் நிறுவன தலைவர் திரு. உமாசங்கர் மைக்ரோசஃப்ட் நிறுவன அதிகாரிகளை தான் எவ்வாறு எதிர்கொண்டார் என விவரித்துள்ளார். ஆயினும் பள்ளிகளுக்கு Suse Linux என்று சொல்லும்போது அரசு திறமூல மென்பொருட்களை(OSS) ஆதரிக்கிறது; ஆனால் இலவச திறமூல மென்பொருட்களை (FOSS)இல்லை என்னும்போது Novel நிறுவனத்தின் மீது ஐயம் எழுகிறது. இருப்பினும் முதன்முயற்சியில், பயிற்சி இல்லாதநிலையில், ஒரு நிறுவன ஆதரவு வேண்டும் என்பதால் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம். கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.

பில் கேட்ஸ் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு என்ன நேரப்போகிறது என்றும் ஆவலும் கவலையும் ஏற்படுகிறது. திறமூல மென்பொருள் வல்லமை தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வேலைகளை உருவாக்குமா அல்லது உலகின் சர்வாதீன மென்பொருள் வேலை வாய்ப்புக்களை கொடுக்குமா என்ற Hobson's choce இல் முடிவெடுப்பது கடினம்தான். திரு உமாசங்கரின் பேட்டியை நோக்கும்போது இது ஒருவேளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஏதெனும் சங்கேதமோ என்ற சந்தேகம் நம் அரசியல் வரலாற்றால் எழுந்தாலும் இந்த முடிவு நிலைக்கும் என்று எண்ணி தமிழக அரசை பாராட்டுவோம்.

கேரள அரசு பள்ளிகளில் லினக்ஸ் கொணர்ந்ததைப் பற்றி சக பதிவர் கே.சுதாகர்(ஸ்ரீமங்கை)யின் பதிவுகள் இங்கே: சுட்டி 1, சுட்டி2, சுட்டி3

நொய்டா கொலைகள்


கடந்த சில நாட்களாக தில்லியின் சுற்றுப்புர நகரான நொய்டா (NOIDA)வின் புறத்தே நிதாரி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள உடற்சிதிலங்கள் நம்மிடையே திகழும் வக்கிர உள்ளங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கொலையின் கோரங்கள் தெரியத் தெரிய மனம் பதறுகிறது. பச்சிளம் சிறாரை வன்புணர்ந்து கொலை செய்து பங்களாவின் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் வீசி எறிந்ததாக தொழிலதிபரான மொஹிந்தர் சிங்கும் அவர் வேலையாள் சுரிந்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகளின் பின்னணி குறித்து பல கருத்துக்கள் யூக வடிவிலே வலம் வருகின்றன. சில மனித உறுப்புக்களை விற்பதற்காகவென்றும் சில பயங்கரமான மத சடங்கிற்காகவென்றும் வேறு சில உயிரற்ற சடலங்களுடன் கொள்ளும் பாலியல் இச்சை (necrophilia)களுக்காக வென்றும் பலவாறு செய்திகள் வருகின்றன. எதுவாக இருப்பினும் மிகுந்த மன விகாரமடைந்த மனிதனின் செயல்கள் இவை என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

ஆனால் இந்த விகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் நிற்கிறதா என நம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொலையுண்டவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டும், குற்றத்தைப் பதிவு செய்யாமல் அவர்களை ஏளனமாகப் பார்த்த காவலர்களின் மனம் கல்லாயிற்றா ? இது ஏதோ வடக்கில் சிறு கிராமத்தில் நடந்த ஒரு விலக்கு என்று நம்மில் யாரேனும் கூற முடியுமா? நாளும் எல்லா இடங்களிலும் நம் காவலரின் அலட்சியமும் ஆர்வமின்மையும் காண்பதுதானே ?

சரி, காவலர்கள் தான் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்தார்கள் என்றால் உள்ளாட்சி துப்புறவு தொழிலாளர்கள் அத்தனை மனிதகழிவுகள் கோணிப்பைகளில் அந்த வீட்டினருகே சாக்கடையில் போடப்படுவதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தனர் ? ஏதோ தவறு அருகாமையில் நடக்கிறது என்று காவலரை உஷார்படுத்தியிருக்கலாமே ?

இதெல்லாம் விட்டாலும், அந்த வீட்டின் அக்கம்பக்கத்துக்காரர்களும் தங்கள் சுற்றுவட்டாரத்தில் நடப்பதை காணாமல் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்த கிராமத்திலேயே இந்த நிலை என்றால் அடுத்தவர் யாரென்றே அறியாது வாழும் சென்னை போன்ற பெருநகரங்களில் சொல்லவே வேண்டாம்.

இதற்கெல்லாம் சிகரமாக பாதிப்படைந்த பெற்றோரும் மற்றவர்களும் தங்கள் கோபத்தை நேரடியாக மொஹிந்தர் வீட்டின் மீது கல்லெறிந்து நீதி பரிபாலனத்தை தங்கள் கைகளில் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதி மீது தங்களுக்கிருக்கும் நம்பிக்கையின்மையையும் நமது காட்டுமிராண்டித் தனத்தையும் பறை சாற்றியிருக்கிறார்கள்.

குற்றவிசாரணையும் நீதிவழங்கலும் துரிதப் படல் வேண்டும்; தவறிழைத்த அலுவலர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்; மேலாக குடிமக்கள் இயந்திரதனத்தில் சிக்கி நம் பொறுப்புக்களை மறக்கிறோமா எனவும் சிந்திக்க வேண்டும்.