ஐ! போன் !!

நம்மில் பெரும்பான்மையானவர்கள் கணினி என்றவுடன் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளையே அறிவோம். ஐபிஎம் நிறுவனத்தின் தாராளமயமாக்கல் கொள்கையால் இயங்குதள மென்பொருளில் தனியாதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட்டின் முதல் போட்டியாளராக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. தாங்களே அடிப்படை 'சிப்'பிலிருந்து இயங்குதளம், பயனர் மென்பொருள் வரை உருவாக்கியதால் அவர்களது கணினி விலை அதிகம். இருப்பினும் வடிவமைப்பில் முன்னோடியான பல நுட்பங்களை கொண்டுவந்து தங்கள் போட்டியாளர்களை திணற அடிப்பார்கள். அசைகலை,வரைகலை நிரல்களில் அவர்களின் முதன்மை இன்றைய அச்சு ஊடகத்துறையில் அவர்களிருக்கும் மதிப்பினாலேயே தெரியவரும்.

விலையினால் போட்டியிடமுடியாதிருந்த காலகட்டத்தில் அவர்கள் அப்போது வந்த Flash drive நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டுவந்த எம்பி3 (mp3) செயலி ஐபொட் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்தது. அதனுடன் மக்கள் அதிகம் விரும்பும் இசையை காசுகொடுத்து தரவிறக்கம் செய்துகொள்ள அமைக்கப் பட்ட iTunes தள விற்பனையும் கீழே சென்று கொண்டிருந்த நிறுவன விற்பனையை கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்ல வைத்தது.கணினிக்கு எலிக்குட்டியை(நன்றி,டோண்டு) (mouse) அறிமுகப் படுத்தியவர்கள், ஐபொட்டிற்கு clikwheel எனும் சுழல்பொத்தானை அறிமுகம் செய்தார்கள்.இவை இவர்கள் கணினி நுட்பவியலில் வழக்கமான வழியிலேயே செல்லாமல் புதிதாக சிந்திப்பதை எடுத்துக்காட்டும்.

வருடாவருடம் விற்பனைக்கு கொண்டுவரப்போகும் கருவிகளை அவர்களது மாக்வொர்ல்ட் என்னும் பொருட்காட்சியில் அறிமுகப் படுத்துவார்கள். இன்றைய தினம் அந்தப் பொருட்காட்சியில் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முக்கிய (keynote) உரையில் மக்களை ஏமாற்றவில்லை. ஐபொட்டின் வளர்ச்சியாக ஃபோன், ஐபொட் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய கணினி என மூன்றையும் உள்ளடக்கிய ஐபோன் என்ற கருவியையும் ஆப்பிள்டீவியையும் விவரித்த அவரது உரை கேட்டவரை திக்பிரமையடைய வைத்தது.

செல்பேசி என்றாலே எண்களின் பொத்தான்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்த குழப்பமேயில்லாது முழுவதும் காட்டுதிரை(display screen) யாக இருந்தால்.. சரி, stylus வைத்து தொடுவதா, அந்தக் குச்சியை நான் தொலைத்து விடுவேனே... அதுவும் இல்லாமல் multi-touch என்ற முன்னோடியான தொழிற்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். $499 (4 gig)/$599 (8 gig) க்கு விற்பனையாகவுள்ள இந்த செல்பேசிகள் ஆப்பிளின் OSX இயங்குதளத்தில் வழக்கமான நிரலிகளுடன் அமைவதுடன் WiFi மூலம் இணையத்துடனும் தொடர்பு கொள்ளும்.தவிர
2மெகாபிக்சல் காமெரா, இசை,திரைப்பட செயலிகள் கொண்டிருக்கும். பேசிகொண்டிருக்கும்போதே மின்னஞ்சலோ நிழற்படமோ அனுப்பவியலும். நிச்சயமாக இது ஆப்பிள் நிறுவனத்தின் முதல்வரிகளையும் இறுதிவரிகளையும் அடுத்த சிகரத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது.

13 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் [GK] கூறுகிறார்

மணியன்,

பயனுள்ள (தொழில்நுட்ப) தகவல்.
பாராட்டுக்கள் !

ரவி கூறுகிறார்

விண்டோஸ் மென்பொருளுக்கான தீம் பில் கேட்ஸுக்கு ஆகாயத்தில் இருந்து கிடைக்கலைங்க...ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து கிடைச்சது தான்...

மணியன் கூறுகிறார்

நன்றி கோவி.கண்ணன், செந்தழல் ரவி.
//விண்டோஸ் மென்பொருளுக்கான தீம் பில் கேட்ஸுக்கு ஆகாயத்தில் இருந்து கிடைக்கலைங்க...ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து கிடைச்சது தான்...//
ஆமாம்,ரவி. டாஸ் இடைமுகத்திலிருந்து ஆப்பிள் இடைமுகத்தை இலக்குவைத்து விண்டோஸ் 3.1இல் தடுமாறி 98 வழியாக XP வந்துசேர இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. விஸ்டாவிலாவது வழுக்கள்(bugs) இல்லாதிருக்குமா எனப் பார்க்கலாம்.

நிலா கூறுகிறார்

பயனுள்ள தகவலை சுவாரஸ்யமாக சுத்தத் தமிழில் தந்ததற்கு நன்றி

NONO கூறுகிறார்

நான் அதிகம் பாவிக்கும் FM வானோலி இதில் இல்லை, 2MPX புகைப்பட கமரா போதுமானதக தெரியவில்லை!!! ஆனால் பாக்க வடிவாகத்தான் இருக்கின்றது .. NOKIA N95தான் இப்போது எனது அடுத்த தெரிவு [என்னுனிடம் இப்போது இருப்பது Sony Eriksson K750i!!] 3G,5MPX கமரா GPS, முக்கியமாக FM வானோலி இதில் இருக்கு!!!
இருந்தாலும் அப்பில்லுக்கு இது ஒரு மைல் கல்தான்!!!
http://www.youtube.com/watch?v=faNdgHjuqw4 NOKIA N98
http://www.youtube.com/watch?v=-5qGn7kIkMA Iphone

ரவி கூறுகிறார்

கடுமையான போட்டியை சந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்த ஐபோனு. காரணம் ஐபாட் வந்தபோது அதுபோன்றதொரு சிறந்த மியூசிக் சாதனம் இல்லாமல் இருந்ததால் மார்க்கெட்டில் அவர்கள் மோனோபோலியாக இருந்தார்கள் (Monopoly).

ஆனால் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மொபைல் மாடல்களில் இந்த போனை வாங்குபவர் தேர்ந்தெடுக்கவேண்டும் எனில் கடுமையான விளம்பரம் மட்டும் போதாது...

மேலும் மொபைல் மார்க்கெட் ஒரு பெக்கூலியர் மார்க்கெட். ஆறுமாதத்துக்கு ஒரு முறை மக்கள் மனநிலை மாறும். வேறு மாடல்களை பார்த்தால் அதை வாங்கவேண்டும் என்று தோன்றும்...

அதனை சந்திக்க ஐபோனுகளை ரிலீஸ் செய்துகொண்டே இருக்கவேண்டும்...

ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் ஜாம்பவான்கள் இதே மாடலில் ஒரு மொபைலை களத்தில் இன்னும் மூன்று மாதத்தில் இறக்கிவிடுவார்கள்..

மேலும் 3ஜி டெக்னாலஜி இல்லாத இந்த போன் ஒரு உடல் ஊனமுற்ற போன் என்று நான் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...

ஒரு ஆப்பரேட்டருக்கு மட்டும் கொடுக்கப்படும் இது போன்ற க்ளோஸ்டு மார்க்கெட் போன்கள் பெரிய வெற்றியை சந்திக்காது..

ஆனால் முதலுக்கு மோசமில்லை இப்போதைக்கு..!!!!

<< இது வேற ஒரு இடத்தில் எழுதியது, அதே விஷயமாக இருப்பதால் இங்கேயும் பேஸ்டிங் >>

மணியன் கூறுகிறார்

நன்றி நிலா.

நோ நோ: இணைய தொடர்பு இருப்பதால் FM streaming கூட iTunes தளத்தில் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.இருப்பினும் புதிய வெளியில் முதல் வரவு பல முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

செந்தழல் ரவி: நீங்க சொன்னா மேல்முறையீடு உண்டா :) இருந்தாலும் ஐபோட் அடிமைகளுக்கு கூடவரும் செல்பேசி வசதி ஈர்க்கும்தானே.

Venkat கூறுகிறார்

மணியன் - சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

விசையெலியைக் கணினிகளில் முதன் முதலில் அறிமுகம் செய்தவர்கள் ஆப்பிள் கிடையாது. ஜெராக்ஸ் நிறுவனம் அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னரே... பார்க்க;

http://en.wikipedia.org/wiki/Mouse_%28computing%29

மணியன் கூறுகிறார்

வாங்க வெங்கட். ஜெராக்ஸ் தான் கண்டுபிடித்தாலும் ஆப்பிள் மெக்கின் டாஷ் தான் முதலில் அதனை பிரபலப் படுத்தியது. அவர்களது வரைகலை பயனர் இடைமுகமே விசையெலியின் பரவலான பாவனைக்கு வித்திட்டது. இருப்பினும் நீங்கள் சுட்டியதற்கு நன்றி. God is in details :)

இலவசக்கொத்தனார் கூறுகிறார்

//இது ஆப்பிள் நிறுவனத்தின் முதல்வரிகளையும் இறுதிவரிகளையும் அடுத்த சிகரத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது.//

Topline, Bottomline என்ற சொற்களை முதல்வரி, இறுதிவரி என மொழி பெயர்த்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படியே மொழிபெயர்ப்பதால் அதன் பொருள் சரிவர வெளிவரவில்லை எனத் தோன்றுகிறது.

இதற்குப் பதிலாக வரவும் லாபமும் எனச் சொல்லி இருந்தால் எளிமையாக இருந்திருக்குமே.

மணியன் கூறுகிறார்

இலவச கொத்தனாரின் வருகைக்கு நன்றி. ஆங்கிலத்தில் எண்ணியதை தமிழில் மொழிமாற்றியிடுவதன் பிழை :(
'வரவுசெலவு கணக்கின்' முதல், இறுதி வரிகள் என மனதில் நினைத்து தட்டச்சியது பிசகிவிட்டது. நீங்கள் சொல்வதுபோல் நேராக சொல்லியிருக்கலாம்.

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

Topline, Bottomline என்ற சொற்களை முதல்வரி, இறுதிவரி என மொழி பெயர்த்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படியே மொழிபெயர்ப்பதால் அதன் பொருள் சரிவர வெளிவரவில்லை எனத் தோன்றுகிறது. //

இதுதான் மொழிபெயர்க்கையில் இருக்கும் வில்லங்கம். பேக் அப் - Pack up ஆனாலும் Back up ஆனாலும் தமிழில் ஒரே எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் பொருளில் எத்தனை வேறுபாடு!

சரி Back up என்பதற்கு தமிழில் என்ன..

மணியன் கூறுகிறார்

வாங்க ஜோசஃப் சார்.கவனப் பிசகுதான்.

Back up (generator) 'மாற்று ஏற்பாடு'

வினையானால் back up (data to disk ) 'பாதுகாக்க'
சரியா ?