9% வளர்ச்சி, மின்வெட்டு கூடுகிறது !

இந்தியா ஒளிர்கிறது என்றார்கள், எங்கள் வீடுகளில் மட்டும் மின்விளக்கு ஒளிர்வதில்லை. தேசிய உற்பத்தி 9% மேல் என்று பெருமைபட்டார்கள். பார்ப்பதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு 'சக்தி' இல்லை. அடிப்படைக் கட்டுமானம் இல்லாமலே இந்த வளர்ச்சி என்றால் முழு வசதிகளும் இருந்தால் எங்கே போயிருப்போமோ ? நான் குறிப்பிடுவது மகாராஷ்ட்டிரத்தில் இப்போது நிலவும் மின்சார பஞ்சத்தை. இந்தியா முழுமையுமே மின்பற்றாக்குறையில் தவித்தாலும் இங்கு நாளும் ஐந்து/ஆறு மணிநேர மின்வெட்டு மக்களைப் படுத்துகிறது. இதுதவிர தொழிலகங்களுக்கு வாரத்தில் இருநாட்கள் 100% மின்வெட்டு. இந்த அழகில் மும்பை மாநகருக்கு மட்டும் முழு விதிவிலக்கு.

'ஒரு காலத்தில்' மின்னுற்பத்தியில் உபரியாக இருந்த மாநிலம் தொடர்ந்த அரசியல் அக்கறையின்மையால் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. என்ரானின் தபோல் மின்னிலையம் வழங்கவிருந்த அளவை வைத்து வேறெதுவும் முயலாமல், இன்று என்ரானின் வீழ்ச்சியோடு மகாராஷ்ட்டிர மின் உற்பத்தியும் படுத்துவிட்டது. மீண்டும் தபோல் மின் நிலையத்தை உயிர்ப்பிக்க முயன்று பழுதுபட்ட இயந்திரங்களை 'ஒன்றிற்கொன்று மாற்றிக்கொண்டு' (cannibalise) சிறிது வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது யானைப் பசிக்கு சோளப் பொரியாக இருக்கிறது. உற்பத்தியைப் பெருக்க முடியாததால் மக்களை செலவழிப்பதை 20% வரை தாங்களாகவே குறைக்க வேண்டியிருக்கிறார்கள். அதற்கும் ஒரு முறையான பிரசாரமோ நடைமுறை விளக்கங்களோ கிடையாது.

'துடிப்பான குஜராத்' (Vibrant Gujarat) தொழில்முனைவோரை தன்பக்கம் இழுக்கும் வேளையில் இந்த மின்பஞ்சம் அதனை துரிதப் படுத்தும். இந்த நிலையில் 2012இல் இவ்வளவு முன்னேற்றம் வரப்போகிறது என்பதெல்லாம் வரும் ஜில்லா பரிசத் தேர்தல்களுக்கு உதவலாம், நடப்பிற்கு உதவாது. அண்மை மாநில ஆந்திரத்திலிருந்து கடன் வாங்கலாம் என்றால் அவர்களிடம் அனல்மின்நிலையங்களுக்கு எரிசக்தி யாக இயற்கை வாயு தட்டுப்பாடாம். அதனால் விலையுள்ள நாஃப்தா கொண்டு தயாரித்து வழங்க இம்மாநிலம் கேட்டுள்ளது, ஒரு யூனிட் ரூ9 ஆனாலும் பரவாயில்லை என்று.
அதனால் துண்டு விழும் தொகையை நாம்தான் வரியாகக் கொடுக்கவேண்டும். நம்மைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இந்த மின்பஞ்சத்திற்கு மாநில மின் துறை அமைச்சர் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவராதலால் காங்கிரஸ் அந்தக் கட்சியைக் குறைகாண்பதிலும், மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே காங்கிரஸ்காரர் ஆதலால் இவர்கள் காங்கிரஸைக் குறை காண்பதிலும் அடித்துக்கொண்டிருக்க எதிர்கட்சிகள் சிவசேனையும் பாஜகவும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

மராத்திகள் மிகவும் பொறுமையானவர்கள்தான்.

2 மறுமொழிகள்:

Boston Bala கூறுகிறார்

ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

மணியன் கூறுகிறார்

நன்றி பாலா. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தொழில்வளர்ச்சிக்கான அடிப்படை கட்டுமானங்களை கூட நாட்டிட தவறிவிட்டோம். சமூகப் பிரச்சினைகளாலும் அரசியல் சண்டைகளினாலும் போதிய ஆர்வமும் திட்டப்பணி மேற்பார்வையும் சிதறிவிட்டன.'வரப்புயர' என வாழ்த்திய ஔவை இன்று 'மின்சாரம் உயர' என வாழ்த்தியிருபார். உழவுக்கும் தொழிலுக்கும் இன்று மின்சக்தி மிக முக்கியமாக அமைகிறது.