ஓசியில் வாசி !

புத்தக கண்காட்சிக்கு போவது என்று வந்தால் முதல் விவாதமே வாங்கிபடித்த புத்தகங்களை என்ன செய்வது என்பதுதான். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமானால் வீட்டில் நூலகம் ஏற்படுத்திதர இந்திய அரசு இருக்கிறது. சதுர அடிக்கு வாடகை கொடுக்கும் நமக்கு, அதிலும் அடிக்கடி பணியிட மாற்றம் நிகழும் குடும்பத்தினருக்கு, கட்டுப்படியாகுமா ?

இதற்கு ஒரு தீர்வாக வாடகை நூலகங்கள் (Lending Libraries) வரத்தொடங்கின. கதையின் கடைசிபக்கங்கள் காணாமல்போன பிரதிகளை ஒருவாரத்தில் படித்து திருப்பவேண்டிய வசதியின்மை; அதனால் ஒருவாரம் தொடர்ந்து படிக்க நேரம் ஒதுக்கமுடியும் காலங்களில் நாம் தேடும் புத்தகங்கள் கிடைக்காமல் ஏதாவது கிடைத்த புத்தகத்தைப் படிக்க வேண்டிய எரிச்சலும் நேரும்.

இங்கு மும்பை வந்தபிறகு எனக்கு படிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது :( ஆனால் எனது மக்களுக்கு ஆங்கில நவீனங்கள் படிக்க எழுந்த ஆர்வத்திற்கு தீனிபோட வாடகைநூலகங்களை தேடியபோது இங்கு வேறுவிதமான செயல்பாடு நடைமுறையில் இருப்பதை அறிந்தோம். ( இம்முறை சென்னையிலும் உள்ளதாக பின்னர் பெண் சொன்னாள்) அதன்படி பழையபுத்தகத்தை அரைவிலை கொடுத்து வாங்கிக் கொள்வது, எத்தனைநாள் வேண்டுமானாலும் படிக்கலாம், நாமே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். வேண்டாமென்றால் அந்தக் கடையிலேயே திரும்பக் கொடுத்து ரூ25/- கழித்து மிகுதியைப் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி ஒரு புத்தகம் படிக்க ஆகும் செலவு ரூ25/-. கடைக்காரருக்கும் முன்பணம் வாங்குவது, புத்தகம் திரும்ப வருமா என்ற கவலை ஆகியன இல்லை.

அப்படியும் வாங்கிய ஒருசில கதைப் புத்தகங்களை ஒருமுறைக்கு மேல் படிப்பதில்லையாதலால் அவற்றை பழையநாளிதழ்களை விலைக்கு விற்கும்போது போட்டுவிடவேண்டும் என்ற கட்டாயவிதி ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். நல்லநிலையில் உள்ள புத்தகங்கள் அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொள்வதைப்பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அவற்றின் கடைசி பயனர் யார் என்ற கவலை அடிவயிற்றில் எழுவது தவிர்க்கமுடியாதது. கல்லூரிவாழ்வில் சீனியரின் புத்தகங்கள் நமக்கு வருவதும் அடுத்தவருடம் நாம் அதனை கொடைசெய்வதும் நினைவில் வந்து இதுபோல உலகநடைமுறையிலும் நடந்தால் உண்மையான புத்தகப் பிரியருக்குப் போகுமே என எண்ணுவேன்.

இதுபோன்ற ஒரு எண்ணம் ஜான் பக்மன் (புக்மன் ?..John Buckman) என்ற இணையபயனாளருக்கு ஏற்பட்டதன் விளைவே அவர் இந்த தளத்தை உருவாக்கியது. நமக்கு வேண்டாத புத்தகங்களை, அதனை வேண்டுபவர்களுக்கு கொடுக்க உதவும் ஒரு பாலமாக இந்த தளம் விளங்குகிறது. இதற்கு பிரதியாக நமக்கு வேண்டும் புத்தகங்களைப் பெறலாம். முழுவதும் இலவசம், நாம் புத்தகங்களை அனுப்ப ஆகும் அஞ்சல் செலவு மட்டுமே. தளத்திற்கு புரவலராக அமேசான்.கொம் இருக்கிறது. புதுப் புத்தகங்கள் வாங்கவேண்டுமானால் அங்கு செல்லலாம். ஆகஸ்ட் 2006இல் துவங்கிய இந்ததளம் மிக குறுகிய காலத்தில் அனைவராலும் அறிந்த தளமாக மாறியுள்ளது. ஜான் பக்மனின் நேர்முகம் மற்றும் அவரது வலைப்பதிவு.

தற்போது ஆறு மொழிகளில் மட்டுமே (ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்,இத்தாலி,போர்த்துகீசு) வழங்கப் படுகிறது. ஆங்கில இடைமுகத்தில் தமிழ் புத்தகங்களை வேண்டலாம். நம் பதிவர்கள் இதனை பாவித்தால் ஒருவருக்கொருவர் புத்தக பரிமாற்றம் செய்துகொள்வது எளிதாகும். அல்லது சிறந்த இணையநுட்பங்களை அறிந்த பதிவர்கள் இதுபோன்ற தளமொன்றை அமைக்கலாம்.....

7 மறுமொழிகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar கூறுகிறார்

super concept ! எப்படி எல்லாம் மக்கள் யோசிக்கிறாங்க :)

//அல்லது சிறந்த இணையநுட்பங்களை அறிந்த பதிவர்கள் இதுபோன்ற தளமொன்றை அமைக்கலாம்....//

point noted :) ஆனால், நீங்க சொன்ன தளமே போதும்னு நினைக்கிறேன்

மணியன் கூறுகிறார்

வாங்க ரவிசங்கர், நான் அந்த தளத்தில் சில தமிழ் புத்தகங்களைத் தேடினேன்; கிடைக்கவில்லை. தமிழ் இடைமுகம் இருந்தால் வசதியாக இருக்கும்.

சிவபாலன் கூறுகிறார்

மணியன் சார்,

அதே மாதிரி, இங்கே என்ன செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு சிறிய இரயில் நிலையத்திலும் பயனிகள் தங்கும் அறைகளில் படித்து முடித்த புத்தகங்களை வைத்துவிடுவார்கள். யார்வேண்டுமானாலும் எடுத்து படித்துக்கொள்ளலாம்.

இதில் கிட்டதட்ட எல்லா வகை பித்தகங்களும் கிடைக்கும். புத்தக விலை குறைவு என்பதால் இப்படியா என தெரியவில்லை.

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன்.
//ஒவ்வொரு சிறிய இரயில் நிலையத்திலும் பயனிகள் தங்கும் அறைகளில் படித்து முடித்த புத்தகங்களை வைத்துவிடுவார்கள். யார்வேண்டுமானாலும் எடுத்து படித்துக்கொள்ளலாம்.//
நல்ல சிந்தனைதான். நமது ஊர் வறுமைக்கு இப்படி வைத்தால் அதை விற்று வயிற்றுக்கு வழி தேடுவார்கள். முதலில் வயிற்று பிரச்சினை தீரவேண்டும் :(்

அ. இரவிசங்கர் | A. Ravishankar கூறுகிறார்

சிவபாலன் - நீங்க இருப்பது எந்த ஊர்

சிவபாலன் கூறுகிறார்

ரவிசங்கர்,

தற்பொழுது சிகாகோ, அமெரிக்கா.

---

மணியன் சார்,

வயிற்று பிரச்சனை என்பதை விட சோம்பேறித்தனம்தான் அதிகம். எளிதாக் சம்பாதித்துவிடலாம் என்று எடுத்துச்சென்றுவிடுவார்கள் என நினைக்கிறேன்.

மணியன் கூறுகிறார்

சிவபாலன், நீங்கள் சொன்னபிறகு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. வட இந்திய இரயில் நிலயத்தில் நான் காத்திருக்கும் வேளையில் கவனக்குறைவாக ஒரு ரூ.10 தவறவிட்டேன். அங்கிருந்த ஒரு பிச்சைக்காரர் உடனே அதை எடுத்து என்னிடம் கொடுக்க வந்தார். அதற்குள் ஒரு படித்த 'நாகரிகமான' இளைஞர் அது தன்னுடையதுதான் என்று உரிமை கொண்டாடி எடுத்துக் கொண்டார் :)

வறுமையால் நேர்மை பாதிக்கப்படுவதில்லை தான்.