தத்தித்.. தத்தி

தத்தித் தத்தி நடந்துவரும் இந்த பாப்பாவிற்கு இன்று முதலாண்டு நிறைவு. வலைப்பதிவுகளை படிப்பதிலேயே இன்பம் கண்ட எனக்கு காலத்தின் கோலத்தாலும் காசியின் அழகான கட்டுரைகளாலும் வலைப்பதிக்கும் விபரீத எண்ணம் வந்தது சென்ற நவம்பரில் தான். நட்சத்திர பதிவர்களாக வலம் வந்த ராமச்சந்திரன்உஷாவும் தருமியும் விடுத்த Clarion call உம் ஆசைத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் மூன்று இடுகைகளை இட்டு தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டேன். சேர்ந்த நேரம் தமிழ்மணமே கலகலத்துக் கொண்டிருந்தது. தயக்கத்துடனேயே இந்தப் பதிவை ஆரம்பித்தேன்.இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும் பதிப்பவர் இடையில் ஒரே பதிவில் எழுபத்தைந்து இடுகைகளைக் கண்ட இந்த பதிவு ஒரு ஜுஜுபிதான்.

வெகுநாட்கள் மிதிவண்டி ஓட்டாதிருந்து மீண்டும் ஓட்டவருகையில் வரும் முதல் தயக்கமும் இரண்டு மிதி மிதித்ததும் கிடைக்கும் தன்னம்பிக்கையில் உலகையே வலம் வர நினைப்பதும் என் தமிழ் எழுத்துக்கு நடந்தது. பள்ளியிலே தமிழாசிரியருக்கு செல்ல மாணாக்கனாக இருந்தாலும் முப்பது வருட இடைவெளியில் ஆங்கில நுட்ப சொல்லாடல்களில் மறந்து போனதோ என நினைத்த தமிழ், நான் எழுதியதா என நானே வியக்கும் வண்ணம் ஊற்றெடுக்க உங்கள் ஆதரவும் இறையன்பும் காரணம்.பல புதிய சொற்களை தமிழ்மணம் கற்றுக் கொடுத்தது.

எந்த வகைப்படுத்தலுமின்றி கருத்தைக் கவர்ந்த, மனதை தாக்கிய செய்திகளை பகிர்தலே பெரும்பாலான இடுகைகளாக அமைந்தன. ஏதெனும் இலக்கியம் படைப்போரோ என்று பயப்படத் தேவையின்றி மே மாதத்தில் கொடுக்கப்பட்ட நட்சத்திர வாரத்தில் சற்றே சுயதம்பட்டங்களே இடுகைகளை நிறைத்தன.நான் இட்டவற்றில் மிகவும் அதிகமாக படிக்கப் பட்டது, இந்த இடுகைதான். அரசியல் நிர்ணய சபையின் வழக்காடல்களின் சுட்டி பலருக்கு பயனாக இருந்தது. அதிகம் எழுதாவிடினும், வலைப்பதிவர் என்றமுறையில் பலரது பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கருத்து பரிமாற்றங்களில் பங்கேற்க முடிந்தது. மொத்தத்தில் 'எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்'வகை பதிவாக இருந்தது. அலாஸ்காவிலிருந்து அன்டார்டிகா (இல்லை, க்ரைஸ்ட்சர்ச்) வரை தமிழ் பதிவர்களை நண்பர்களாக அடையாளம் காணும் பெருமை கிடைத்தது. உலகின் எந்த மூலையிலிருந்து செய்தி வந்தாலும் உடனே அந்த ஊர் பதிவர் முதலில் நினைவுக்கு வருகிறார்.தருமி சுட்டிய பந்தமிது எம்மை எழுத்தால் இணைத்தது.

ஒருவருடம் குப்பை கொட்டினாலும் ஒரு வலைப்பதிவர் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதது நான் செல்ல வேண்டிய தூரத்தை நினைவூட்டுகிறது :)))

27 மறுமொழிகள்:

இலவசக்கொத்தனார் கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன். மென்மேலும் வளர எனது பிராத்தனைகள்.

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்..

தொடர்ந்து எழுதுங்க..

அன்புடன்,
ஜோசப்

கானா பிரபா கூறுகிறார்

வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் வாழ்க:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) கூறுகிறார்

ஹைய்யா....
ஹேப்பி பர்த்டே மணிமலர் பதிவே!
தத்தி.. தத்தி-யா?
இல்லை, தமிழ்மணம் முழுக்க
சுத்தி.. சுத்தி வர
வாழ்த்துக்கள்!

//இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும்//
கலக்குறீங்க மணியன் சார்!

மணியன் கூறுகிறார்

இலவசக்கொத்தனார்,ஜோசஃப், கானாபிரபா,KRS : வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்... உங்கள் பதிவுகள் எப்போது வந்தாலும் விடாது படிப்பது என் வழக்கம்..

மும்பை பதிவர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதானே! :))

மணியன் கூறுகிறார்

நன்றி பொன்ஸ். நீங்கள் என் வழக்கமான வாசகர் என அறிய மிகுந்த மகிழ்ச்சி.
// மும்பை பதிவர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதானே! :))//

என் எதிர்வினை சுட்டப்பட்டப் பதிவின் இந்த வரிகளுக்கானது:
//.பதிவு போடுரமோ இல்லையோ ஒரு வலைபதிவாளர் மீட்டிங்காச்சும் போயிருக்கீங்களான்னு கேட்டு இல்லேன்னு சொன்னா அற்பனே அப்படீன்னு புழுவைபோல பார்பாங்க போல இருக்கு.//

ஆம், இந்த வருடம் ஏதாவது செய்யவேண்டியது தான்.:))

ramachandranusha(உஷா) கூறுகிறார்

மணியன், எம் பேரூ அடிப்படுது :-) ஆனா எம் பெயர் ராமசந்திரன் உஷா வாச்சே !

மணியன், வெகு சில பதிவுகள் படித்ததும், மனசுக்கு நிறைவாய் இருக்கும். சொல்லுகிற மேட்டரை
நீங்களே கச்சிதமாய் சொல்லிவிடுகிறீர்கள். அதனால் நல்லா இருக்கு என்று என்ன பின்னுட்டம் போடுவது என்று பேசாமல் போய் விடுவது. எழுதுங்கள், உங்களுக்கு என்று ஒரு பாணி இருக்கு, அதை ரசிக்கவும் ஆட்கள் இருக்கிறோம்.

வருடா வருடம் மும்பை வந்தாலும் அரை நாள் தங்கலில் நேரம் இருப்பதில்லை. போன் நம்பர் கொடுங்க, போன் அடிக்கிறேன். ஏன் நீங்க தமிழகம் வருவதில்லையா. அப்படி வருவதாய் சொல்லிட்டா, கண்மணிகள் போஸ்டர் போட்டு தூள் கிளப்பிவிட மாட்டார்கள்?

மணியன் கூறுகிறார்

வாங்க ராமச்சந்திரன் உஷா, உங்கள் பெயரை தவறாக பதிப்பித்ததிற்கு மிகவும் வருந்துகிறேன். மனம் புதிய கருத்துக்களை ஏற்றாலும் கைகள் பழகிய திசையிலேயே சென்றுவிடுகின்றன.

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

வலைப்பதிவர் சந்திப்பு பற்றி நகைப்பிற்காக குறிப்பிட்டேன். வருத்தமெல்லாம் இல்லை. :))

ramachandranusha(உஷா) கூறுகிறார்

மணியன், இதுக்கெல்லாம் வருத்தம் எல்லாம் சொல்லிக்கிட்டு.. விடுங்க! உங்க பிளாக்கர் பக்கத்துக்குப்
போய் நியூ போஸ்ட் கிளிக் செஞ்சா, வரும் பக்கத்தில் எடிட் இருக்குமே, அங்கப்போய் நீங்க சரி செய்வதை மட்டும் திருத்திவிட்டு, பப்ளிஷ் கிளிக்கினால், தேவையான மாற்றம் மட்டுமேவருமே தெரியுமில்லையா?

துளசி கோபால் கூறுகிறார்

என்னங்க மணியன், ஒரு வருஷம்தான் ஆச்சா?

ரொம்ப நாளா இருக்கீங்கன்னு நினைச்சேனே?

தத்தி நடக்கும் குழந்தை எழுந்து மாரத்தான் ஓட ஆரம்பிச்சாச்சு:-)))

வாழ்த்து(க்)கள்.

தத்தி யை முதலில் 'தத்தி'ன்னு படிச்சுட்டு யாரைத் திட்டறீங்கன்னு வந்து பார்த்தேன்:-)))))

மணியன் கூறுகிறார்

உஷா: சொன்னீர்கள், செய்து விட்டேன் :))
நன்றி.
தெரியும் என்பது நீங்கள் சொன்னபிறகே தெரிந்தது :))

மணியன் கூறுகிறார்

வாழ்த்துக்கு நன்றி டீச்சர்.

//தத்தி யை முதலில் 'தத்தி'ன்னு படிச்சுட்டு யாரைத் திட்டறீங்கன்னு வந்து பார்த்தேன்:-)))))//

நல்ல காலம், திரைவிமர்சனம் பாணியில் (நீங்களும் அடிக்கடி திரைவிமர்சனம் செய்பவர்தானே) 'தத்தி .. தத்தி' - ஒரு தத்தியின் பதிவு என்று பன்ச் வசனம் சொல்லவில்லையே :))) ஆஹா, பெயர் வைப்பதில் கூட கவனம் தேவைதான்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) கூறுகிறார்

வாழ்த்துகள் மணியன்.

ஒரு வருஷந்தான் ஆச்சா? ரொம்ப நாளா இருக்கிறமாதிரி ஒரு உணர்வு. :)

நீங்க எப்ப இடுகை போட்டாலும் படிச்சிருவேனாக்கும். :)

தொடர்ந்து சுவாரசியமான இடுகைகளைக் கொடுங்க.

-மதி

மணியன் கூறுகிறார்

நன்றி மதி. உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஆதரவே எனக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

Sivabalan கூறுகிறார்

மணியன் சார்

வாழ்த்துக்கள்

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்.

குமரன் (Kumaran) கூறுகிறார்

//இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும் //

யாருங்க இது எனக்குத் தெரியாம? :-)

//ஒருவருடம் குப்பை கொட்டினாலும் ஒரு வலைப்பதிவர் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதது நான் செல்ல வேண்டிய தூரத்தை நினைவூட்டுகிறது :)))
//

ஆகா. இப்படி வேற ஒன்னு இருக்கா? நானும் இதுவரை எந்த வலைப்பதிவாளர் கூட்டத்திலும் கலந்துகிட்டதில்லையே?! ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டதே வலைப்பதியத் தொடங்கி. :-((

வாழ்த்துகள் மணியன் ஐயா. தத்தித்தத்தித் தவழும் மணிமலருக்கும் வாழ்த்துகள். :-)

மணியன் கூறுகிறார்

நன்றி குமரன். உங்களின் ஆற்றலை என்றும் வியப்பவன் நான்.உங்கள் தமிழும் ஆன்மீகமும் நான் இரசிப்பவை. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Movie Fan கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்.

ஏதாச்சும் முக்கியமான விஷயத்தை யாராச்சும் எழுத மாட்டங்களானு நினைக்கிற நேரத்திலெல்லாம் உங்களின் பதிவு அது குறித்ததாக இருக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்,
விக்கி

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்.

மதுமிதா கூறுகிறார்

மனமார்ந்த வாழ்த்துகள் மணியன்
தொடரட்டும் உங்கள் பணி

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுமிதா. உங்களின் ஆதரவு உற்சாகமூட்டுகிறது.

Anonymous கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன்.

இப்போதுதான் உங்களின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

என்னை தேடிக் கண்டு பிடித்து வாழ்த்திய மணிமலர்

தமிழ் போல் என்றும் நீங்கா நற்சுவையுடன்,
இன்னும் பல்லாயிரம் வண்டுகள் உங்களின் மகரந்ததில் மயங்க
வாழ்த்துக்கள்

சக மணியன்

மணியன் கூறுகிறார்

அன்பு மணிபிரகாஷ், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தவறாமல் உங்கள் படைப்புக்களை படித்து வருகிறேன்.உங்கள் கவிதைகள் இனிமையாக உள்ளன.

Boston Bala கூறுகிறார்

(கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள் :)

மணியன் கூறுகிறார்

பாபா, வாழ்த்துக்கு காலநேரமும் உண்டோ ? உங்கள் வருகையே எனக்கு உற்சாகம்தான். நன்றிகள்.