குடியும் 'குடி'த்தனமும்

நேற்று அதிகாலை இங்கு நடந்த கார் விபத்து தொடரும் இரவுவிருந்து குடித்தனத்தின் உச்சகட்டமாக நிகழ்ந்துள்ளது. மும்பையின் இரவு விருந்துகள், திரைப்பட ஆரம்ப விழாவாகட்டும் அல்லது வியாபார வெற்றிவிழாவாகட்டும், மேல்தட்டு வர்க்கத்தின் குறியீடாக, அகங்கார வெளியீடாக நள்ளிரவையும் தாண்டி மதுவின் மயக்கத்தில் மாதுவின் அண்மையில் குடித்து கும்மாளம் போடுவது தினசரிகளின் மூன்றாம் பக்கத்தில் இடம் பெறுவதுவரை தனித்துவமானவை. சமீபத்தில் மது பண்டர்கர் இதனை இந்த விருந்துகளுக்கும் பத்திரிகையாளர் /பிரபலங்கள் /அதிகாரிகள் இவர்களிடையேயும் உள்ள பிணைப்புக்களை விவரித்து அங்கதமாக Page 3 என்ற படத்தையும் வெளியிட்டிருந்தார். வாழ்வின் முக்கியத்துவத்தை கற்பிக்காத கல்விசூழலில், உழைத்துப் பெறாத பணம் அபரிதமான இளைஞர்களின் போக்கு நாளுக்கு நாள் கவலை அளிக்கும் முகமாக உள்ளது.

சமீபத்தில் இத்தகைய விருந்துணவிற்குப் பிறகு நடந்துள்ள விபத்துக்கள்:
செப்டம்பர் 28, 2002:
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பாந்திரா பேகரி வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் ஏற்றிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது

ஆகஸ்ட் 14, 2005:
மகேந்திர கடாவ் என்ற தொழிலதிபரின் (கடாவ் சேலைகள் பெண்மணிகளுக்குத் தெரிந்திருக்கும்) மகன் மணிஷ் காவலர் ஜிதேந்திரா ரோகடே மேல் இடித்துக் காயப்படுத்திய வழக்கில் பின்னர் விடுவிக்கப் பட்டார்.

பெப்ரவரி 4, 2006:
ஸ்டான்சார்ட்(StanChart) தெற்கு ஆசியாவின் முக்கிய தலைமை அதிகாரியான நீல் சாட்டர்ஜீ ஒரு காவலாளி மேல் ஏற்றியதாகத் தொடரப் பட்டுள்ள வழக்கு.

ஜூலை 27, 2006:
அசாமா சுதிர் மடா என்ற 33 வயது NRI மனோதத்துவ வைத்தியர் மாஹிம் அருகே இருவர் மீது கார் ஏற்றியது.
நவம்பர் 12,2006:
மும்பையின் புறநகரான பாந்த்ராவில் கடற்கரையோர கார்டர் ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் மேல் 18இலிருந்து 21 வயது வரையான ஆறு இளைஞர்கள், ஒருவர் பெண், டொயொடொ கொரொல்லா காரை ஏற்றி ஆறுபேர் மரணம், ஒன்பது பேர் காயம்.
காரிலிருந்த அறுவருமே குடித்திருந்ததாக சோதனைகள் தெரிவிக்கின்றன.இத்தனை பேர் இறந்திருந்தும் அந்த இளைஞர்கள் வருத்தமடையாது இதை ஒரு சாதாரண விபத்தாகக் கருதியது இங்குள்ளோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மனிதநேயமே இல்லாமல் இந்த தலைமுறை வளர்வதை சமூகவியலாளர்கள் நம்மைப் பீடித்துள்ள வியாதியின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள்.

குடித்து ஓட்டுபவர்களுக்கெதிரான சட்டங்களும் வலுவில்லாததாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குற்றம் புரிந்தவர் பிணைப்பணத்தைக் கட்டிவிட்டு வெளியில் வரமுடிவதும் தண்டனையும் கடுமையாக இல்லாதிருத்தலும் அவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றனர். வளர்ந்த பொருளாதார நாடுகளில் குடித்து வண்டியோட்டுவது ஓட்டுநர் உரிம இரத்து வரை செல்வதால் ஒரு குழுவில் ஒருவராவது வண்டியோட்ட குடிக்காமல் இருப்பதும் சுட்டப் படுகிறது. மும்பைக் காரர்களின் சில எதிர்வினைகள் இங்கே:

குடி குடியைக் கெடுக்கும். வாகன ஓட்டியின் 'குடி'த்தனம் குடும்பங்களை கெடுக்கிறது.நம் உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பா ? சட்டம் பயில்வோரும் சட்டம் இயற்றுவோரும் சிந்திக்க வேண்டும்.

11 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

இது போன்று பணத்திமிரினால் போதை ஏற்றிக் கொண்டு வருமையின் விளிம்பில் சாலையோரங்களில் படுத்திருக்கும் மனிதர்களை கொன்று குவிக்கும் இந்த மிருகங்களை வேட்டையாடினால் தான் வழிபிறக்கும்..

வல்லரசு கனவில் இருக்கும் இந்தியா வாழ்க!!

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன். உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.இவர்களை நல்வழிப் படுத்தாத பெற்றோர்களை என்ன செய்வது...

துளசி கோபால் கூறுகிறார்

மனுஷ உயிர்களுக்கு அதுவும் ஏழை உயிருக்கு இந்தியாவில் இதுதான் விலை(-:

இறந்தது யாரோ ஒரு 'பெரிய' மனுஷங்க சொந்தக்காரரா இருந்தாப் பார்க்கணுமே.....
ஹூம்... அவுங்க எதுக்கு இப்படி தெருவுலே தூங்கப்போறாங்க?

ஏழையாப் பொறக்கறதே ஒரு மகா பாவமுன்னு ஆகிப்போச்சு.

கால்கரி சிவா கூறுகிறார்

மணியன் சார், என்று சட்டம் ஏழை பணக்காரன் என்று வித்தியாசமில்லாமல் கடமை ஆற்றுகிறதோ அன்று தான் விடியும்.

வல்லரசு அமெரிக்கா/கனடாவில் குடிபோதையில் கார் ஓட்டி மக்களைக் கொன்றால் அது கொலைக்குற்றத்திற்கு சமம். அப்படி செய்தவர்களுக்கு தண்டனை மிக அதிகம் மற்றும் தண்டனை நிச்சயம்

சிவபாலன், இதில் வல்லரசு இந்தியா எங்கு ஏன் வந்தது?

மணியன் கூறுகிறார்

வாங்க துளசி கோபால். இதனை ஏழை பணக்காரன் வர்க்க போராட்டமாகப் பார்க்க விரும்பவில்லை. இளைய சமுதாயத்தில் வளர்ந்துவரும் insensitivity கவலை அளிக்கிறது. பிற உயிர்கள் மீது அக்கறையின்மையும் ஒழுங்குமுறை இல்லாத வாழ்க்கையும் தான் நம் கல்விக்கூடங்கள் கற்றுத் தரும் பாடமா ? இரவு மூன்று மணிக்கும் வீட்டிற்கு வராத டீன் வயது சிறுவரைக் கண்டித்து வளர்க்காத பெற்றோரின் மெத்தனமா ?

மணியன் கூறுகிறார்

வாங்க கால்கரி சிவா, நீங்கள் சொல்வதுபோல் இதற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். சட்டங்கள் ஆற்றுவது நம் கையில் வந்து அறுபது வருடம் ஆகப் போகிறதே ?
காரோட்டிய பையனின் கூற்றைக் கேளுங்கள்: " So many people drink and drive. It is unfortunate we ended up in an accident." தன் தவற்றை உணரக்கூட இயலாத நிலையில் சட்டம் ஒழுங்கு பற்றிய உணர்வு உள்ளது. காவல்துறைக்கு இதை விட என்ன அவமானம் வேண்டும் ?

Anonymous கூறுகிறார்

//சட்டம் பயில்வோரும் சட்டம் இயற்றுவோரும் சிந்திக்க வேண்டும்.//

அரசியல்வாதி:

இதனை பற்றி எல்லாம் சிந்தித்தால் என் நாற்காலியினை பற்றி யார் சிந்திப்பது..
பொதுஜனம்:

இதனை பற்றி எல்லாம் சிந்தித்தால் எனக்கு என்ன கிடைக்கும்.என் வீட்டிலா நடந்தது.. பக்கத்து வீடுதானே பற்றி எரியட்டும்.. நான் சுகமாய் குளிர் காய்கிறேன்...

சுடர்மிகு இந்தியா?

மணியன் கூறுகிறார்

வாங்க மணிபிரகாஷ், நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சமுகாயத்தின் மனசாட்சியை தூண்டவாவது நமது கருத்துக்களை பதிவோம்.

Boston Bala கூறுகிறார்

:(

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

மணியன்,
இந்த விஷயத்தில் பெற்றோர் எதுவுமே செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. இப்படிப் பட்ட புகார்களில் சிக்கிக் கொள்பவர்களின் profile ஐப் பார்த்தால், இவர்கள் எல்லாம் பெற்றோர் சொல்வதை ஏற்று நடக்கும் சின்னக் குழந்தைகள் அல்லர். சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்.

அத்துடன், பணக்கார, ஏன் upper middile class வட இந்திய குடும்பங்களில் குடும்பத்தோடு உட்கார்ந்து மது அருந்துவதே தவறாக எண்ணப்படுவதில்லையே! அப்படி இருக்கையில் இதெல்லாம் கண்டிக்கும் அளவுக்குப் பெரிய குற்றமாக இவர்களின் பெற்றோரும் நினைக்கவே மாட்டார்கள்.

விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது ஊடகங்களும், முக்கியமாக திருத்தப்பட வேண்டியது சட்டமும் தான்.

இன்று மும்பை.. நாளை சென்னைக்கும் இது நேரலாம்! யார் கண்டார், ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதே வெளி வராமல் போகவும் வாய்ப்பிருக்கிறது!

மணியன் கூறுகிறார்

பொன்ஸ்,
//இப்படிப் பட்ட புகார்களில் சிக்கிக் கொள்பவர்களின் profile ஐப் பார்த்தால், இவர்கள் எல்லாம் பெற்றோர் சொல்வதை ஏற்று நடக்கும் சின்னக் குழந்தைகள் அல்லர். சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்.//

இதுதான் பிரச்சினையே. எங்கள் அல்லது முந்தைய தலைமுறையில் அறுபது வயதிலும் எண்பது வயது பெற்றோரின் சொல்லை மீறி நடக்க முடியுமா ? தந்தை சொல்லிற்காக நாட்டைத் துறந்து கானகம் ஏகிய இராமனின் கலாசாரத்தை பின்பற்றுபவர்கள் இல்லையா நாம் ? சமக் கால கல்வி முறையில் இந்த moral values ஐ இழந்திருக்கிறோம். கன்றின் இழப்பிற்காக மகன்மீது தேரோட்டிய சோழ மன்னன் எங்கே, குற்றம் கசடற தெளிவுபடுத்தப் பட்டபின்னும் தம் மைந்தரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற விழையும் பெற்றோர் எங்கே ?
மூன்று மணிக்கு வீடு திரும்பும் மக்களை கேள்வி கேட்காதது அவர்களின் கவனக்குறைவையும் அலட்சியத்தையும் காட்டவில்லையா ?
இன்றைய செய்தியையும் படியுங்கள்: நிச்சயமாக சமுகாயமும் காவல்துறையினரும் தங்கள் கடமையைச் செய்யவில்லை.Permissive society எந்த அளவு செல்லலாம் என்று எங்களைப் போன்ற பழைமைவாதிகளுக்கு பயமாக இருக்கிறது.