இந்துவில் இந்தியன்!

நிலவில் அமெரிக்க அஸ்ட்ரோநாட் அல்ட்ரின்
நிலவின் நிலத்தில் நடந்து வருவோம் என்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ).நவம்பர் 7 அன்று பெங்களுருவில் நடந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் இஸ்ரோ தன் பயணதிட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி 2014 இல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பவும் 2020 இல் நிலவில் நடக்கவும் திட்டமிட்டிருக்கிறது. வெளிநாட்டு உதவி எதுவும் பெறாமல் இந்திய நுட்பத்திறனைக் கொண்டே இச்சாதனை நிகழ்த்தவுள்ளதாகத் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் அரசியல் வழக்கப்படி அமெரிக்க அஸ்ட்ரோநாட்டிற்கும் உருசிய காஸ்மோநாட்டிற்கும் இணையான வடமொழி பெயரிடலுக்கு சொற்களைத் தேடிவருகிறது.

2007இல் ஆரம்பிக்கவிருக்கும் இந்த சோதனைகள் நாட்டின் அனைத்து ஆராய்ச்சி கேந்திரங்களையும் பல்கலைக்கழகங்களையும் முழுவதுமாக இணைத்துக் கொள்ளும். முதற்கட்டமாக விண்ணோடத்தை(Capsule) வான்வெளியில் PSLV ராக்கெட் மூலம் செலுத்தி ஒருவாரம் உலகைச் சுற்றியபின் வங்காள விரிகுடாவில் பத்திரமாக திரும்ப விழவைக்ககூடிய திறனை சோதிப்பதாகும். இதைத் தொடர்ந்து ஒருவாரம் வரை சுற்றக்கூடிய சோதனைகள் நிகழ்த்தி முடிவில் GSLV ராக்கெட் மூலம் மூன்று டன் எடையுள்ள விண்ணோடத்தில் இரு மனிதர்களை பயணிகளாகக் கொண்டு 400 கி.மீ உயரத்தில் உலகை சுற்றும் சோதனைகள் ஆரம்பமாகும். அடுத்தடுத்து இவ்வகை சோதனைகளின் இறுதி கட்டமாக சந்திர விஜயம் அமையும்.

இதன் முன்னேற்பாடாக விண்ணோட வடிவமைப்பு திட்டங்களை வெளியிட்டு, தயாரித்து,சோதிப்பதுடன் விண்வெளிமாந்தருக்கு (அஸ்ட்ரொநாட்டிற்கு தமிழ் தயார்!) பயிற்சி அளிக்க சூன்ய புவிஈர்ப்பு விசையுடனான அறை கட்டுவதும் நடக்க வேண்டும். இதற்கு குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் ஆதரவு இருப்பதாக இஸ்ரோ இயக்குனர் திரு மாதவன் நாயர் கூறினார். மனிதரை விண்ணிற்கு அனுப்ப பதினாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் கோடிவரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.நிலவுப் பயணம் இதற்கு மேல் பன்மடங்கு ஆகும்.

ஏழைகள் நாட்டில் பட்டினிச்சாவுகள் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செலவு (சிலேடை வேண்டியதே) தேவையா என்ற கேள்வி எழாமல் இல்லை. இதனால் நமது நுட்பத்திறனும் செயற்திறனும் அதிகரிப்பதோடு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடந்தது போல சார்பு தொழிற்கூடங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நமது தன்னம்பிக்கையும் பெருமையும் பெருகும். ஒருநாடு ஒலிம்பிக்கிற்கு விளையாட்டுக் கட்டமைப்புக்கள் அமைப்பதில் செலவழிக்கும் பணம் போல இது நேரடியாக வறுமை ஒழிப்பிற்கு பயன்படாவிடினும் மறைமுகமாக அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் என இந்த திட்டத்தைப் பரிந்துரைப்போர் கூறுகின்றனர். யாருக்கு நன்மையோ அரசியல்வாதிகளுக்கும் இடைத் தரகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

4 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

நல்ல பதிவு..

நல்லது நடக்கட்டும்.. நாடு செழிக்கட்டும்..

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்.

Unknown கூறுகிறார்

திரு, மணியன்.

நல்ல பதிவு, நிறைய யோசிக்க வைக்கிறது...

பதினைந்தாயிரம் கோடி செலவு...

வறுமைக் கோட்டினை திரும்பி பார்த்தேன்...

விண்வெளி மாந்தர்- நல்ல தமிழ்..

மணியன் கூறுகிறார்

நன்றி மணி ப்ரகாஷ், நம்நாட்டின் வழி தனி வழிதான். ஒருபக்கம் ஸ்டீவ் பால்மர் நமது சந்தையை பிடிக்க வலம் வர, தலித்துகள் குறைந்தபட்ச உயிர் பாதுகாப்புமின்றி பந்த் நடத்த , ஏழை விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம் என பட்டிமன்றங்கள் நடக்க, விண்ணிற்கும் போவோம்.