ஜெத்மலானிக்கு ஜே!

திரு இராம் ஜெத்மலானி ஒரு பரபரப்பான உச்சநீதிமன்ற வழக்கறிஞர். பல பிரபல வழக்குகளில் வெகுஜன எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வழக்காடியவர். நேற்று ஐபிஎன் தொலைக்காட்சியில் சாகரிகா கோஸின் அவரது நேர்முகம் மறக்கமுடியாதது. அவர்கள் சுட்டி இங்கே.பேட்டியாளரின் கேள்விகளால் தடுமாறாமல் தனது நிலை பற்றிய அவரது சற்றே காட்டமான ஆனால் ஆணித்தரமான பதில்கள் ஊடகங்களின் நீதித்துறை அத்துமீறல்களை கிழித்தெறிந்தது. ஜெஸ்ஸிகா லால் கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனு சர்மா சார்பாக நீங்கள் வழக்காடுவதை பொதுமக்கள் விரும்புவதில்லை, உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் இவ்வழக்கை எடுத்துக் கொள்வதில் விருப்பமில்லை என்ற சாகரிகாவின் குறுக்கிடல்களுக்கு உனக்கு ஒன்றும் தெரியாது, என் மனசாட்சி பற்றி நீ நினைக்க வேண்டியதில்லை என்று பொரிந்து தள்ளியது தனிநபர் நாகரீகத்தை மீறியதாக இருப்பினும் அவர் சொற்களின் பின்னால் இருந்த உண்மைகள் அவற்றின் சூட்டைத் தணித்தன. சில நினைவில் நின்ற சொற்றொடர்களின் தமிழாக்கங்கள்:
"குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிமன்றத்தில், மக்கள் மன்றங்களிலோ ஊடகங்கள் மூலமாகவோ அல்ல."
"உங்களுக்கு சட்டம் தெரியாது. உன்னுடன் விவாதிக்க மாட்டேன். நீதிமன்றத்தில் தான் விவாதிப்பேன்"
"நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் விமரிசியுங்கள், எனது தொழில்தர்மத்தை எனது மனசாட்சிப்படி செய்வேன்"
"நான் எந்த வழக்குகளை எடுத்துக் கொள்ளவேண்டும், கூடாது என்பதை முடிவெடுக்கும் உரிமை பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ இல்லை, என் உரிமை அது"

மனுசர்மா குற்றவாளியோ இல்லையோ ஜெத்மலானி அந்த வழக்கை எடுத்துக் கொள்வது பற்றி விமரிசிப்பதும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்பே ஒருவரைக் குற்றவாளியாக சித்தரிப்பதும் பத்திரிகை/ஊடக தர்மத்திற்கு சிறிதும் பொருந்தாதது. IBN/CNN பொறுத்தவரை இந்த நேர்முகத்தை உள்ளது உள்ளபடியே சென்சார் செய்யாமல் காட்டியது பெருமைக்குறியது.இருப்பினும் நிகழ்ச்சியை "Devil's advocate" என்று தலைப்பு வழங்கியது மூலம் அவர்கள் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேடிக் கொண்டனர்.

நிச்சயமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அரசுத்துறையையும் நீதித்துறையையும் உணர்ச்சிகரமான சூழலில் அவசர முடிவெடுக்க வைக்கும் ஊடக வன்முறைக்கு ஒரு கடிவாளம் தேவை.

12 மறுமொழிகள்:

PRABHU RAJADURAI கூறுகிறார்

பதிவிற்கு நன்றி!

ஏன் இவருக்காக வாதாடுகிறீர்கள் என்று கேட்டவரைப் பார்த்து 'உனக்கு சட்டம் தெரியாது' என்று கூறுவதை விட வேறு எதனை கூற முடியும்? நாகரீகமடைந்த ஒரு நாட்டில் நீதிபரிபாலன முறை இயங்கும் முறை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவர்தான் இப்படிப்பட்ட கேள்வியினை எழுப்ப முடியும்.

அது சரி, நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலித் சிறுமிகள் பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்களைப் பற்றி இப்படி யாராவது கேள்வி கேட்கிறார்களா?

மணியன் கூறுகிறார்

வாங்க பிரபு ராஜதுரை.உங்கள் முதல் வரவு நல்வரவாகுக!

ஜெஸ்ஸிகா லால் போன்ற மாடல் அழகிகள் வழக்கில்தானே அதிகம் TRP கிடைக்கும் ?

Sivabalan கூறுகிறார்

மணியன் சார்

அவரைப் பற்றி தைரியமாக பதிவிட்டதற்கு நன்றி.

நானும் அந்தப் பேட்டி கொஞ்சம் சூடாகத்தான் இருந்தது. ஒரே கேள்வியை பல முறை வேவ்வேறு விதமாக கேட்க ஜெத்மிலானி நன்றாக பதில் கூறியிருந்தார்.

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன், அவர் தைரியத்தைப் பாராட்ட நமக்கு தைரியம் வேண்டுமா :))

enRenRum-anbudan.BALA கூறுகிறார்

மணியன்,
பதிவுக்கும், தொடுப்புக்கும் நன்றி. நிகழ்ச்சியை பார்க்காமல் விட்டு விட்டேன் !

மணியன் கூறுகிறார்

என்றென்றும் அன்புடன் பாலா, ஹரன்பிரசன்னா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஒருபக்கம் அரசு ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி அவர்கள் வாயை மூட முயல்கிறது; மறுபக்கம் ஊடகங்களும் பொறுப்பான முறையில் செயல்படாமல் தங்கள் சுதந்திரத்தை misuse செய்கின்றன :(

ramachandranusha(உஷா) கூறுகிறார்

.மணியன், மலானி சொல்லும் ஊடகங்கள் வலிந்து திணிக்கும் கருத்துகளை எதிர்த்தல் சரிதான்.
ஆனால் இவர் எடுக்கும் கேஸ்கள் எல்லாம் சாதாரண மனிதர்களுடையது இல்லையே?

மணியன் கூறுகிறார்

உஷா, நீங்கள் சொல்வது சரியே. அவர் இந்தியாவிலேயே அதிக வருமானவரி செலுத்தும் வக்கீல்,அதனால் அவர் எடுத்துக்கொள்ளும் வழக்குகள் சாதாரணமானவர்களுடையது இல்லைதான். இருப்பினும் அவர் தான் எடுத்த நிலையில் எதிர்ப்புகளுக்கு எதிரிலும் உறுதியாக நிற்பதற்கு நான் ஜெ போட்டேன்.

மியாவ் கூறுகிறார்

ராம்ஜெத்மலானி 17 வயதிலேயே பார் கவுன்சில் உறுப்பினர் ஆகி சாதனை படைத்தவர். சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேல் குற்றவியல் துறையில் அனுபவம் உள்ளவர். அவர் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் தொழிலுக்கு குற்றவாளி என்ற பாகுபாடு கிடையாது. ராம்ஜெத்மலானி இப்படிப்பட்ட வழக்குகளை ஏற்கக்கூடாது என்று கூற எவருக்கும் உரிமை கிடையாது. இது அவரின் தனிப்பட்ட விருப்பம்.

மணியன் கூறுகிறார்

வாங்க இந்தியன். நீங்கள் சொல்வது சரியே. இருப்பினும் அவர் பொதுவாழ்விலும் பங்கேற்பதால் தார்மீக பொறுப்பும் அவருக்கு உண்டு.

Unknown கூறுகிறார்

ஊடகங்கள் வலிந்து திணித்த கருத்துக்களால் ஒரு முன்முடிவு நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. சிலர் எடுத்துக் கொள்ளும் வழக்குகள் நமது முன்முடிவுகளுக்கு பாதகமாக இருப்பதால் ஊடகங்களால் நாம் மீண்டும் மீண்டும் திசை திருப்பப் படுகிறோம். அப்ஸல் வழக்கும் இது போன்றதுதான்.

ராம்ஜெத்மலானியின் இந்த வார்த்தைகள் சிந்திக்கத்தக்கது.
//Police can manufacture any confessions. That is why our law is that any confessions recorded and kept by the police are not to be looked at.//
ஆனால் தடா, பொடா போன்றவற்றில் இத்தகைய confessions ஏற்றுக்கொள்ளப்படும்.

ராம்ஜெத்மலானியின் இந்த பதிலும் சிந்திக்கத்தக்கது.
//I am only convinced that the man is entitled to a fair trial. He is entitled to the services of a good lawyer. Courts will decide and no Pressman, no editor or television will crew will decide.//

எனவே //நிச்சயமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அரசுத்துறையையும் நீதித்துறையையும் உணர்ச்சிகரமான சூழலில் அவசர முடிவெடுக்க வைக்கும் ஊடக வன்முறைக்கு ஒரு கடிவாளம் தேவை// என்ற உங்கள் கருத்து மிகச்சரியானதே.

மணியன் கூறுகிறார்

நன்றி சுல்தான்.