படப்பிடிப்பில் படபடப்பு!!
ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ப்ராட் பிட்டும் அவர் மனைவியும் நடிகையுமான அஞ்சலினா ஜோலியும் இந்தியாவில் தங்கள் படப்பிடிப்பிற்காக வந்திருக்கிறார்கள். கடத்திக் கொல்லப்பட்ட வால்ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் டானியல் பேர்ல் மனைவியாக ஜோலி நடிக்க பிட்ட் தயாரிக்கும் 'A Mighty Heart' படத்திற்காக புனேயில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இராஜஸ்தானிலும் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இவர்களைக் காண திரண்டிருந்த மக்களிடம் இவர்களின் தனி பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த வியாழனன்று மும்பையில் அஞ்சுமான்-ஏ-இஸ்லாம் பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் தகராறு நிகழ்ந்திருக்கிறது. பள்ளி விட்டதும் தங்கள் குழைந்தைகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கும் இந்த மெய்காப்பாளர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றியிருக்கிறது.தங்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும் 'Bloody Indians' என இன அவமதிப்பு செய்ததாகவும் மும்பைகாவல் துறையில் வழக்குப் பதிந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று காவலாளிகளுக்கும் ஜாமீனில் விடுதலை அளித்து அடுத்த ஒருவாரத்திற்கு தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட பணிக்கப் பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் படப் பிடிப்பு நடத்த காவல்துறை அனுமதியும் பெறவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே பிராட் பிட் மும்பை போலிஸ் கமிஷனர் திரு ராயை சந்தித்து நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
பாகிஸ்தானிற்கு அருகாமையில் இருப்பதால் புனேயை தேர்ந்தெடுத்துள்ள இந்தக் குழுவினருக்கு அல் கொய்தாவின் மிரட்டல் இருப்பதால் "Y" ரக பாதுகாப்புக் கொடுக்க பட்டுள்ளது. ஆனால் இந்திய சட்டதிட்டங்களுக்கு இவர்கள் எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. இதேபோல நமது கமல், இரஜினியின் பாதுகாவலர்கள் அவர்கள் நாட்டில் நடந்து கொண்டால் இந்த அளவு சகிப்புத் தன்மை காண்பிப்பார்களா ? இந்த படப்பிடிப்பை அனுமதிப்பதன் மூலம் அல்கொய்தாவின் கவனத்தையும் வீணாக கவர்கிறோம்.
இதனிடையே இன்றைய தினசரியில் திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் இங்கு பாந்த்ராகுர்லா மைதானத்தில் டிச.3,4 இல் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலையில் இருந்து உறசவ மூர்த்திகள் கொண்டுவரப் படுவதாகத் தெரிகிறது. இவை எல்லாம் புதிய நடைமுறைகள். உற்சவ மூர்த்திகளை ஊரை விட்டு ஊர் எடுத்துப் போவதெல்லாம் சரியா எனத் தெரியவில்லை. இது சமயத்தை வணிகமயமாக்கலின் தாக்கமே. முன்பெல்லாம் கோவில் வாசலில் பிச்சைக்காரர்கள் நமது சமய உணர்வுகளை, தர்ம சிந்தனையை exploit செய்வார்கள்; இப்போது மத தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர பல்லாயிரக் கணக்கானவர்கள் திறந்த வெளியில் கூடுவது, அதுவும் பாபர்மசூதி நினைவுநாளுக்குச் சமீபம், எந்த அளவு பாதுகாப்பானது என்றுத் தெரியவில்லை.