இது ஒரு வினாக் காலம் !

இன்றைய மின்னஞ்சலில் வந்த ஒரு மின்புதிரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஐ.ஐ.எம் மாணவர்கள் உருவாக்கியதாக மின்னஞ்சல் சொல்கிறது. என்னறிவிற்கு இது கடினமாகவே உள்ளது. ஆனால் நம் வலைப்பூக்களில் தான் 1=2 என்று காட்டக் கூடிய அறிஞர்கள் இருக்கிறார்களே, தவிரவும் கணினி நிரலை உடைக்கும் திறன் பெற்றோரும் உள்ளனரே என்ற நம்பிக்கையில் இவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.

விளையாடும் விதிகள்:
1. ஒவ்வொரு நிலையாக மேலே செல்ல வேண்டும். ஒவ்வொரு நிலைக்கும் ஒரு வலைப்பக்கம்.
2. அடுத்த நிலைக்கு எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அடுத்தவர் கண்டுபிடித்த விடைகளை உபயோகிக்காமல் இருந்தால் நலம் :)

சில குறிப்புக்கள்:
1.க்ளிக் செய்யக்கூடிய நிரல்பொருட்களை அந்த வலைப்பக்கத்திலோ, எழுத்துக்களிலோ, படங்களிலோ தேடவும்.
2.விடைகளை கூகிள் மூலமாகவும் தேடலாம். மேல் நிலைகளில் இது அவசியப்படும்.
3. சில நிலைகள் பயனர்/கடவுசொற்களை வேண்டுவன. அவை அதற்கு முன்னால் கடந்த நிலைகளிலோ இந்நிலையில் ஏதாவதை மாற்றிப்போட்டோ அல்லது இந்நிலையில் உள்ளன பற்றி கூகிள் செய்தோ கிடைக்கும்.
4.ஒவ்வொரு நிலையிலும் உள்ள படங்களையும் கூர்ந்து கவனிக்கவும்.அதே சமயம் சில படங்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பவும் போடப்பட்டுள்ளன.
5.வலைப்பக்கத்தின் நிரலிலும்(source code) சில குறிப்புக்கள் கிடைக்கலாம். அவை அடுத்த நிலைபக்கங்களுக்கும் குறிப்பு தரலாம்.
6.சில நிலைகளில் அடுத்தநிலைக்குச் செல்ல உரலயே உங்களுக்கு கிடைத்த குறிப்பு வார்த்தை கொண்டு மாற்ற வேண்டியிருக்கும். பெரும்பாலும் அவை கடைசி .asp க்கு முன்னால் உள்ள வார்த்தையாயிருக்கும்.
7.சிலசமயம் பைனரி நிரலை(.exe,.jpg,.mp3) உள்ளிறக்கி/மாற்றி குறிப்பை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
8. விடையாக தோன்றுவதெல்லாம் விடையாக இருக்க வேண்டியதில்லை. உங்கள் மூளையை குழப்பவும் அவை புதைக்கப்பட்டிருக்கும்.
9.முக்கியமான ஒன்று: உரைநடை விடைகள் எல்லாமே சிறிய ஆங்கில எழுத்துக்களானவையே... பெரிய எழுத்துக்கள், கலப்பு எழுத்துக்கள் விலக்கப் பட்டுள்ளன.

மூளைக்கு சவாலான இதை உடைப்பவர்களுக்கு நிச்சயம் ஐ.ஐ.எம் சேர முழு தகுதி உண்டு :))))
கடைசிநிலையை எட்டுபவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கிடைக்கும்.அதற்கு உங்கள் கணினிதிரைக்காட்சியுடன் அஞ்சல் அனுப்பினால்
பரிசுகள் கிடைக்கலாம். நான் அந்த நிலையை எட்டாததால் எனக்கு நிச்சயமில்லை.

ஆனாலும் இது நமது தமிழ்மண கண்மணிகளுக்கு ஒரு ஜூஜூபி என்று நினைக்கிறேன். வெற்றிபெற்றவர்கள் மற்றவர்கள் ஆர்வத்திற்கு அணை கட்டாமல் ஒரு வாரம் கழித்து விடைகளுடன் பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

புதிர் இங்கே


விதிகளும் குறிப்புக்களும் இங்கே

பண்டிகை கால விடுமுறையில் விளையாடுங்கள், விடையை எதிர்பார்த்து விடை பெறுகிறேன்.

அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

மணிமலர் மலர்ந்த நினைவுகள்

மணிமலரென்பது சிறு வயதில் நான் ஆரம்பித்த கையெழுத்துப் பத்திரிக்கையின் பெயராகும்.அந்த மலரும் நினைவுகள்....

அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கலைமகள் குழுமத்தின் கீழ் கண்ணன் என்றொரு சிறுவர் பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதில் எனது வகுப்புத்தோழியின் கவிதை ஒன்று வெளியாகி அவளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு பத்து பதினைந்து புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தார்கள். இதைக் கண்டு நானும் ஒரு 'கவிதை' எழுதி அனுப்பினேன். ஆசிரியர் திரு கி. வா. ஜ அவர்களிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததே தவிர பத்திரிகையில் வரவில்லை. இதனால் மனமுடைந்திருந்த வேளையில் நானும் எனது நண்பனும், குமார் என்று நினைவு, மணிமலர் என்று ஒரு கையெழுத்து பிரதி தயாரித்தோம். அந்த பெயரிலே ஒரு சிறுவர் நிகழ்ச்சி வானோலியில் வந்து கொண்டிருந்தது. என் பெயர் அதில் இருப்பதால் அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்ததாகும். அந்தப் பெயரையே எங்கள் பத்திரிகைக்கு தேர்ந்தெடுத்தோம்.

கண்ணனின் சாயலிலேயே ஒரு கவிதை, ஒரு விடுகதைப் பக்கம், ஒரு கதை மற்றும் அம்பிகா அப்பளம் (காசு வாங்காமலே)விளம்பரம் என தயாரித்தோம். முதற்பக்கத்திற்காக ஒரு பெண்ணும் சிறுவனும் புத்தகம் படிப்பது போல ஒரு படம் வரைந்தோம். அதனை ஒரு நாலைந்து நகல் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் வீட்டிலும் பள்ளியிலும் பயங்கர வரவேற்பு.எல்லோரும் பாராட்டினார்கள்.விலை பத்து காசுகள் என்று கிடைத்த பணத்தை அம்மாவிடம் கொடுத்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெகுநாட்களுக்கு அதை பத்திரமாக வைத்திருந்து எல்லோரிடமும் மணி சம்பாதித்தது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எல்லோரும் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த இதழ் மும்முரமாக தயாரித்தோம். ஆனால் நகல் எடுப்பதற்கு சோம்பேரித்தனப் பட்டோம். நான் நீ என தள்ளிவிடப் பார்த்தோம். இடையில் தேர்வுகளும் விடுமுறையில் வெளியூர் பயணமும் வந்து பிறகு அந்தப் பக்கமே போகவில்லை. இவ்வாறு இரண்டு இதழோடு முடிந்தது எங்கள் பத்திரிகைப் பணி.

அந்த பழைய இதழ்களின் பிரதிகளை நான் பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால் நான் கல்லூரி விடுதிக்கு வந்த சமயம் அவை எங்கோ பரணில் போடப்பட்டு விட்டன; அவற்றை தேடி எடுக்கவேண்டும்.

சமீபத்தில் மணிமலர் என்ற பெண்பதிவாளர் தன்பெயரில் ஆரம்பிக்கவிருந்த பதிவை என்பொருட்டு மாற்றிக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.

கண்ணே ! கண் மையே!!



முன்னாட்களில் பெண்கள் கண்ணிற்கு மை தீட்டி அழகு பார்ப்பர். நமது தமிழ் இலக்கியங்களிலும் 'மைவிழியாள்' என கண் மையை சிறப்பித்துக் கூறுவர்.பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் அழ அழ கண்மை இட்டு கண்ணேறு கழிக்க ஒரு பொட்டும் வைப்பதுண்டு. ஏன் கல்யாணங்களில் மாப்பிள்ளைக்கும் கண்மை இட்டு சங்கடப் படுத்துவர்.

பிறந்த குழந்தைக்கு இடும் கண் மை வீட்டிலேயே தயாரிக்கப் படும். நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கில் விளங்கும் தீபத்தின் மேலெழும் புகையினை ஒரு வட்டத் தட்டில் படியவைத்து விளக்கெண்ணெயில் குழைத்து தயாரிக்கப் படும் மை கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சி தரக் கூடியது. கேரளாவில் எட்டுமானூர் ம்காதேவர் ஆலயத்தில் உள்வாயிலிலுள்ள நிரந்தர தீபத்திலிருந்து எல்லோரும் மை இட்டுக்கொண்டே உள்ளே செல்வார்கள்.தற்போதைய காஜல் பென்சில்களும் மஸ்காரா பொடிகளும் வந்தபிறகு பழைய கண் மையை சீந்துவாரில்லை.

பாட்டிகள் போற்றிய கண் மைக்கு இப்போது புது வாழ்வு வந்துள்ளது. நானோ தொழில்நுட்பம் என்னும் புதிய உத்தியில் தயாரிக்கப்படும் கார்பன் நானோ ட்யூப் (CNT) இந்தக் கண் மையிலிருந்து 40% வரை எடுக்கமுடியும் என்று கான்பூர் ஐ.ஐ.டி யைச் சேர்ந்த சபயாட்சி சர்கார் என்னும் வேதியியல் பேராசிரியர் கண்டு பிடித்துள்ளார். மேலதிக விவரங்களுக்கு

நானோ தொழில்நுட்பம் என்பது மிக மிகச் சிறிய, அணுத்துகள் பரிமாணத்தில் உள்ள தூசிகளை ?(particles) கொண்டு வெவ்வேறு மருந்துகள், ஒளியியல் மற்றும் மின்னணுவியல் கருவிகள் மேம்படுத்தலில் பயன்படுகிறது. இதுவரை CNT தயாரிக்க பென்ஸீனை ஆவியாக்கி அதிலிருந்து பிரித்துக் கொண்டிருந்தனர்.

தாவர எண்ணெயை சூடாக்கி புகைபடிதலை (soot) கொண்டு தயாரித்தால் தயாரிப்புச் செலவு மிகவும் குறையும். இவ்வாறு பிரித்த CNT மருந்துகள் தயாரிப்பிற்கு பெரிதும் வேண்டியிருக்கிறது. இந்த செயல்முறை பிரபலமானால் இந்தியாவில் சிறுதொழிலாக பரிமளித்து பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும்.

இதேபோல தாவர எரிபொருளும் (Biofuel) பரவலாக பயன்படுத்தப் பட்டால் இந்திய விவசாயமும் தொழில்துறையோடு வளர்ச்சி பெறும்.

உலக திரைப்பட விழா இந்தியா


உலக திரைப்பட விழா, இந்தியா (IFFI) கோவாவின் தலைநகர் பனாஜியில் நேற்று முடிவடைந்தது. திரைப்பட வித்தகர்கள் பதியும் இத்தளத்திலே இந்த விழாவைப் பற்றி இதுவரை ஒரு இடுகையும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே கொல்லன் பட்டறை ஈயாக இவ்விழா பற்றிய செய்திகளை ஊடகச் செய்திகள் வாயிலாக அறிந்தவற்றை இடுகிறேன்.

அரசு விழாக்களின் வழமையான சொதப்பல்கள் போல ஆரம்பமே அமிதாப்பை விழாநாயகனாக தீர்மானித்து, அவரது சமாஜ்வாடி கட்சி சார்பினால் தேவ் ஆனந்தை 'பிடித்த' கதையானது. அவரும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் 36வது திரைப்பட விழாவை நவம்பர் 24அன்று தீபமேற்றி துவக்கிவைத்தனர். கன்னட நடிகையும், இவ்வருட தேசிய விருது வாங்கியவருமான தாரா, ஓல்கா(Olga) என்ற பிராசிலிய படம் பார்க்க விழைந்து இடம் கிடைக்காமல் மாற்று ஏற்பாடாக Tulips என்ற போலிஷ் படத்திற்கு அனுப்பியது, ஆரம்பவிழாவில் பங்கேற்ற அமீஷா படேலுக்கு அரங்கதின் உள்ளே
நுழைய மறுப்பு என்று குழப்பங்கள் தொடர்ந்தன. 'அபஹரண்' பட முதற்காட்சிக்கு இயக்குனர் பிரகாஷ் ஜா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் 40 நிமிடம் தாமதமாக வந்ததால் மக்கள் விசிலடிக்க, பத்து நிமிடம் கழித்து யாரோ வீடியோ பதிவு செய்கிறார்கள் என்று படத்தையே நிறுத்திவிட ஒரே கூத்துதான்.விழாவை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட மும்பை திரைப்படத் துறையினரால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.


2005 வருட விழாவின் சிறந்த படமாக ஈரானியபடம் Iron Island தங்கமயில் விருதையும் ரூ10 லட்ச பணத்தையும் வென்றது. ஒரு பாழடைந்த எண்ணெய்க் கப்பலில் வாழும் வீடில்லா மக்களைப் பற்றியது இந்தப் படம். வெள்ளிமயில் விருதையும் ரூ 5 லட்ச பணத்தையும் தென்னாப்பிரிக்காவின் red dust வென்றது. டாம் ஹூப்பர் இயக்கிய இப்படம் நீதிமன்ற வளாகத்தில், அபார்தீட் கொள்கை விலக்கப் பட்ட நிகழ்களத்தில் அமைந்தது. அர்ஜெண்ட்டினா நாட்டு Kept and Dreamless படம் போதை மருந்துக்கு ஆளான தாய்க்கும் அவளது 10 வயது பெண்ணிற்கும் இடையேயான உறவு பற்றியது. அதன் இரட்டை இயக்குனர்களுக்கு 'மிக நம்பிக்கையளிக்கும்' இயக்குனர் விருது அளிக்கப்பட்டது.
'பெண்ணிய உலகை, அது ஒதுக்கப்படும் நிலையில், உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவையுடனும் வெளிக்கொணர்ந்ததிற்காக' Vera Eugina Fogwill மற்றும் Martin Desalvo க்கு வெள்ளி மயில் விருதும் ரூ. 5 லட்ச பணமுடிப்பும் வழங்கப் பட்டது.

விழாவின் ஜூரிகளாக ஃப்ரென்ச் இயக்குனர் அலைன் கோர்னொ (Alain Corneau), ஆஸ்திரிய பெண்இயக்குனர் சபைன் டெர்ஃப்ளின்கர் (Sabine Derflinger), ஈரானிய நடிகர் காரிபியன் (Gharibian), இந்தியாவின் சாயித் மிர்சா (Saeed Mirza) செயல்பட்டனர். ஜூரிகளின் தலைவராக சிலி நாட்டு இயக்குனர் மிகேல் லிட்டின் (Miguel Littin) இருந்தார்.

போட்டியிட்ட பதினாறு படங்களில் நாகேஷ் குக்னூரின் இக்பாலும் மலையாள இயக்குனர் கமலின் பெருமழக்காலமும் தான் இந்தியப் படங்கள்.

மக்களவையின் புதுமுகம்


மும்பையின் வடமேற்கு தொகுதியிலிருந்து அண்மையில் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள பிரியா தத் தனது முதல் வரவிலேயே சலசலப்பு ஏற்படுத்தியுள்ளார். என்ன உடை பற்றித்தான். பெண் எம்.பி என்றால் சேலையும் சல்வாரும்தான் என்றிருந்த சம்பிரதாயத்தை உடைத்து பேண்ட் சட்டையில் வந்துள்ளார். இதற்கு முன்னால் ஒரு சிவசேனையின் உறுப்பினர் இவ்வாறு வந்தபோது கட்சியினால் சேலைக்கு மாற கட்டாயப் படுத்தப் பட்டார்.

ஆனால் இச்சமயம் காங்கிரஸ் அவர் பக்கம். கல்லூரிகளிலேயே உடைகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரும் இக்காலத்தில் காங்கிரஸின் இந்நிலை வரவேற்க தக்கது.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதுடன் உடை கண்டு எள்ளாமையும் வேண்டும். அவர் ஆற்றும் உரை கொண்டு நோக்குவோம்.

மக்களவையின் இளரத்தங்கள் கொண்டுவரும் மாற்றங்கள் அவர்தம் உடையோடு நிற்காமல் புதிய பாரதத்தின் எழுச்சிக்கு துணை நிற்பதாக.

வானத்தில் ஒரு சரித்திரம்

சாந்திநிலையம் என்ற படத்தில் நாகேஷ் மற்றும் குழந்தைகள் வெப்பக்காற்று பலூனில் மேலே செல்லும் பாடல் காட்சி சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நானும் ஒருநாள் வானத்தின் மீதேறி போகவேண்டும் எனக் கனவுகளை ஏற்படுத்திய படமது.

அக்கனவு கனவாகவே நிலைத்துவிட்டாலும், நேற்றைய தினம் வெப்பக்காற்று பலூன் களத்திலே இந்தியாவின் பிரபல துணிவணிக மேதையும் aviatorஉம் ஆன திரு.விஜய்பத் சிங்கானியா 69,852 அடி உயரம் சென்று சாதனை படைத்தது என்னை சிறகடித்து பறக்க வைத்தது.


இதற்கு முன்னால் ஸ்வீடனைச் சேர்ந்த பெர் லின்ஸ்ட்ராண்ட்
என்பவர் 1988இல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் 64,997 அடி வரை பறந்ததே உலக சாதனையாக இருந்தது. குறைந்தது 17 பேராவது இச்சாதனையை முறியடிக்க முயற்சி செய்து தோற்றுள்ளனர். பலகோடி வருமானமுள்ள ரேமாண்ட் நிறுவனத்தின் அதிபரான சிங்கானியா தனது 67 வயதில் இச்சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத் தகுந்தது.கடந்த 40 வருடங்களாக பறந்து வரும் திரு. சிங்கானியா, 1988இல் லண்டனிலிருந்து
அஹமதாபாத்திற்கு 22 தினங்களில் சிறுவிமானத்தில் (micro light) தனியாகப் பறந்து சாதனை படைத்திருக்கிறார். Federation Aeronautique Internationale (FAI) வழங்கும் தங்கமெடலை 1994இல் வாங்கியுள்ளார். மேலதிக விவரங்களுக்கு

அவர் மட்டும் உயரே பறக்கவில்லை; இந்தியாவின் கௌரவமும்தான்.

அவருக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்.

பீஹாரில் ஒரு French புரட்சி ?

கடந்த ஞாயிறு அன்று பீஹாரின் ஜெஹானாபாத்தில் நடந்தேறியுள்ள சிறை உடைப்பு வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்க வியலாது. லாலு மற்றும் பூடாசிங் எதிர்ப்பாளர்களுக்கு வாயில் மெல்ல அவல் கிடைத்தாலும் இந்நிலைக்கு பீஹாரின் அனைத்து அரசியல் மற்றும் சமூகவியலாரும் பொறுப்பேற்க வேண்டும். இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பட்ட அரசுகள் ஆட்சி புரிந்த மகதத்தில் இன்றைய தினம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியே இதற்கு காரணம். பத்து பன்னிரண்டு தீவிரவாதிகள் சிறையை மீட்பதற்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செயலில் இறங்குவதற்கும் எத்துணை வித்தியாசம் ? நக்ஸல்வாதிகள் அடிப்படையில் பரவியுள்ள நோயின் அறிகுறியேயாகும். சுதந்திர இந்தியாவில் இன்னும் நிலச்சுவாந்தார்கள் தனிப் படையுடன் வரும் அட்டகாசம் பீஹாரில் மட்டுமே நிலவுகிறது. லூயி IV மற்றும் மேரி அரசிபோல என்ன உண்மை நிலை என்று கவலைப்படாமல், அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளையும் தேர்தல்களையும் கைப்பற்ற மக்களை ஜாதி, மதம் என்று சீட்டுக்கட்டு நிறங்களாக எண்ணி ரம்மி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்; எனக்கு MY சேர்ந்திருக்கிறது, உனக்கு DY சேர்ந்திருக்கிறதாஎன்று. இன்று நோய் முற்றி பாஸ்டைல் சிறை உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. நக்ஸலைட் இயக்கம் ஆரம்பித்த வங்காளத்தில் இன்று அமைதி நிலவுகிறதென்றால் நிலையான அரசும், சமுகாய அக்கறையும் தான் என்று தோன்றுகிறது. நோய் நாடி நோய் முதல் நாடி வைத்தியம் செய்ய அரசும் தன்னார்வ அமைப்புக்களும் முன் வருமா ?

மாற்று மருத்துவமுறைகள்

சமீப காலமாக மாற்று மருத்துவ முறைகள் (Alternate Medicine) பிரபலமாகி வருகின்றன. நமது பாரம்பரிய இந்தியா வின் ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் பல சித்தர்களாலும் பெரியோர்களாலும் பல்லாண்டு சோதனை செய்யப்பட்டு அனுபவத்தால் திருத்தப் பட்டு சீராக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் அவை ஆங்கில மருத்துவமுறைகள் போல தரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சோதிக்கப்படவில்லை என இந்திய மருத்துவ கழகம் குறை கூறுவதுண்டு. முழுவளாவிய (holistic)மருத்துவமுறை என யோகா, தனிமையை தவிர்த்தல் முதலியவற்றின் இன்றியமையாமையும் உணரப் பட்டுள்ளது. கூட்டுக் குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனைகளும் எத்தனை தூரம் depressionயையும் இருதய தமனி வியாதிகளையும் தவிர்க்க உதவி புரிகின்றன என்று நாளும் கட்டுரைகள் வெளிவருகின்றன.

இந்தவித சூழ்நிலையை வியாபார நோக்கில் பயன்படுத்திக் கொள்ள பலர் கிளம்பியுள்ளனர். ஹிமாலயா மற்றும் டாபர் போன்ற நிறுவனங்கள் தரகட்டுப்பாடுடன் மருந்துகளை தயாரிக்கின்றனர்.ஆங்கில மருத்துவர்களும் இவற்றை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் வாய்மொழி வழியாக (MLM) வெளிநாட்டு இயற்கை மருந்துகளை (சிவப்பு காளான் போன்றவை) அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.இவற்றின் பயன்களும் பின்விளைவுகளும் அறியாத நிலையில் மக்கள் விற்பவரின் அனுபவத்தை நம்பி வாங்குகிறார்கள். அவர்கள் மோசம் போகிறார்களா என்பதை மருத்துவ கழகம் ஆராய்ந்து எச்சரிக்கை செய்யவேண்டும்.

இதைத் தவிர பழங்கால மருத்துவ முறைகளில் முறையாக பயிற்சி பெறாதவர்களும் ஊடகங்களில் ஆடம்பர விளம்பரங்களால் மக்களை ஈர்த்து ஏமாற்றுகிறார்கள்.

மருத்துவ கட்டுரைகள் மூலம் வணிக நிறுவங்களின் விற்பனையை கட்டுப்படுத்த முடிகிறது. மக்கள் பத்திரிகையில் எது வந்தாலும் அதனை அப்படியே நம்பி விடுகிறார்கள். கெல்லாக்ஸ் வந்த புதிதில் அதன் கவர்ச்சியால் எல்லோரும் கார்ன்/கோதுமை flakesக்கு மாறினார்கள். இரும்புச்சத்து மூளைக்கு எவ்வளவு அவசியம் என்று அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். பிறகு நார்சத்தினை வேண்டி ஓட்ஸிற்கு தாவ கெல்லாக்ஸ் விற்பனை சரிய இப்போது muesli க்கு அவர்கள் மாறி யுள்ளார்கள்.

இப்போது புதிதாக எளிமையான, எல்லாவற்றிற்கும் நிவாரணியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதாக, சில வாய்மொழி வைத்தியங்கள் பரவத் தொடங்கியுள்ளன. முதலில் காலையில் எழுந்தவுடன் ஒரிரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை ஒரே வாயில் அருந்திவிட்டு மற்ற பணிகளை செய்யவேண்டியது. இதனால் நீரிழிவு,இரத்த அழுத்தம், குடல் அயர்ச்சி என்று எல்லா வியாதிகளும் பறந்தோடிடும் என்பார்கள். ஆனால் இதன் efficacy பற்றி ஒரு புள்ளிவிவரமும் இல்லை. ரொம்பக் கேட்டால் காசா பணமா, தண்ணீர்தானே பலன் இருக்கிறதோ இல்லையோ, ட்ரை பண்ணி பார்ப்பதில் என்ன தப்பு என்பார்கள். இப்படி ஒரே நேரத்தில் 2 லிட்டெர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லதா என்று தெரியவில்லை. இது வெற்றி பெறுவதைக் கண்ட சில எண்ணெய் வணிகர்கள் அடுத்ததாக காலையில் பல் விளக்கியபின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் (நல்லெண்ணெய், ஓலிவ் எண்ணெய்) கொப்பளிப்பது என்று ஆரம்பித்துள்ளனர். இதில் ஒரு வணிகர் ஆனந்த விகடன்,மங்கையர் மலர் என்று பல பக்க விளம்பரங்களுடன் இதனை மக்களிடம் கொண்டு செல்கிறார்.இவரின் கூற்றினை விளம்பர கௌன்சிலும் மருத்துவ கழகமும் பரிந்துரைக்கின்றனவா எனத் தெரியவில்லை.


எனவே மாற்று வைத்தியமுறைகளில் சில பயனுள்ள சிகிட்சை முறைகள் இருந்தாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கின்றன. மக்களை சரியான திசையில் வழி காட்ட USFDA போல ஒரு தரக் கட்டுப்பாடு அமைப்பு அமைய வேண்டும்.அதுவரை அரசின் பொதுநலத்துறை பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் NBFC க்களிடம், ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தும்வரை, மக்கள் ஏமாந்ததைப் போல இங்கும் நடக்கும். பணம் போனால் சம்பாதிக்கலாம்.ஆள் போனால் என்ன செய்வது ?

நமது வலைப்பதிவர்களில் உள்ள மருத்துவர்களின் கருத்து என்ன ?

புதுதில்லியில் ஒரு புதுக்கோவில்




நவ இந்தியா வின் புதிய அதிசயமாக, இந்திய கட்டிடக் கலையின் சிறந்த சின்னமாக கடந்த வாரத்தில் உலக சமாதானத்திற்கான அக்ஷர்தாம் கோவில் (Akshardham Temple Monument to World Peace ) புதுதில்லியில் திறக்கப்பட்டது. வட இந்தியாவின் ராஜஸ்தானி,குஜராத்தி, ஒரியா,முகலாய மற்றும் ஜெயின் கட்டிடக் கலை நுட்பங்களின் கலவையாக விளங்குகிறது. முழுவதும் பளிங்கினாலும் சிவப்பு பாறை( red sandstone)களாலும் இரும்புக்கம்பிகளை துளியும் உபயோகிக்காமல் இதனை கட்டி முடிக்க 5 வருடங்கள் ஆகியுள்ளன. 234 சித்திர தூண்களும் 9 அலங்கார விதானங்களும், 20 நான்முக சிகார் களும் 20,000 சிலைகளும் கொண்ட இதனை கட்டிட 11,000 சுயஉதவியாளர்கள் (volunteers),சாதுக்கள் மற்றும் கலைஞர்கள் துணை புரிந்துள்ளனர்.
மேல் விவரங்களுக்கு:
http://www.akshardham.com/index.htm

திருவேங்கடம்

பதிவுகளை தொடங்கும் முன் கடவுள் அருள் வேண்டுகிறேன். அதோ தூரத்தில் தெரியும் வெங்கடவனை மனதார தரிசனம் செய்து எண்ணங்களை எழுத்துக்களில் திண்ணமாக செதுக்க துணை நிற்க வேண்டுகிறேன்.

வந்தனம்

வந்தனம் என்று சொல்லியே சபைக்கு நானும் வந்தேனைய்யா !!
தமிழ்மணத்தின் வாசத்தால் ஈர்க்கப் பட்ட இன்னொரு வண்டு.

இது நாள் வரை படித்து மகிழ்ந்திருந்த தமிழ்மணத்தில் பங்கு பெறவும் ஆசை வந்தது. எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்றாலும் எழுத ப்ளாக்கர் கணக்கு மட்டும் போதாதே !

பேசும் தமிழ் எழுத பழக இது நல்ல துவக்கம்.
குறைந்தது பின்னூட்டமிடவாயினும் இக்கணக்கு உபயோகமாயிருக்கும்.