மணிமலர் மலர்ந்த நினைவுகள்
மணிமலரென்பது சிறு வயதில் நான் ஆரம்பித்த கையெழுத்துப் பத்திரிக்கையின் பெயராகும்.அந்த மலரும் நினைவுகள்....
அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கலைமகள் குழுமத்தின் கீழ் கண்ணன் என்றொரு சிறுவர் பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதில் எனது வகுப்புத்தோழியின் கவிதை ஒன்று வெளியாகி அவளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு பத்து பதினைந்து புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தார்கள். இதைக் கண்டு நானும் ஒரு 'கவிதை' எழுதி அனுப்பினேன். ஆசிரியர் திரு கி. வா. ஜ அவர்களிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததே தவிர பத்திரிகையில் வரவில்லை. இதனால் மனமுடைந்திருந்த வேளையில் நானும் எனது நண்பனும், குமார் என்று நினைவு, மணிமலர் என்று ஒரு கையெழுத்து பிரதி தயாரித்தோம். அந்த பெயரிலே ஒரு சிறுவர் நிகழ்ச்சி வானோலியில் வந்து கொண்டிருந்தது. என் பெயர் அதில் இருப்பதால் அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்ததாகும். அந்தப் பெயரையே எங்கள் பத்திரிகைக்கு தேர்ந்தெடுத்தோம்.
கண்ணனின் சாயலிலேயே ஒரு கவிதை, ஒரு விடுகதைப் பக்கம், ஒரு கதை மற்றும் அம்பிகா அப்பளம் (காசு வாங்காமலே)விளம்பரம் என தயாரித்தோம். முதற்பக்கத்திற்காக ஒரு பெண்ணும் சிறுவனும் புத்தகம் படிப்பது போல ஒரு படம் வரைந்தோம். அதனை ஒரு நாலைந்து நகல் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் வீட்டிலும் பள்ளியிலும் பயங்கர வரவேற்பு.எல்லோரும் பாராட்டினார்கள்.விலை பத்து காசுகள் என்று கிடைத்த பணத்தை அம்மாவிடம் கொடுத்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெகுநாட்களுக்கு அதை பத்திரமாக வைத்திருந்து எல்லோரிடமும் மணி சம்பாதித்தது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எல்லோரும் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த இதழ் மும்முரமாக தயாரித்தோம். ஆனால் நகல் எடுப்பதற்கு சோம்பேரித்தனப் பட்டோம். நான் நீ என தள்ளிவிடப் பார்த்தோம். இடையில் தேர்வுகளும் விடுமுறையில் வெளியூர் பயணமும் வந்து பிறகு அந்தப் பக்கமே போகவில்லை. இவ்வாறு இரண்டு இதழோடு முடிந்தது எங்கள் பத்திரிகைப் பணி.
அந்த பழைய இதழ்களின் பிரதிகளை நான் பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால் நான் கல்லூரி விடுதிக்கு வந்த சமயம் அவை எங்கோ பரணில் போடப்பட்டு விட்டன; அவற்றை தேடி எடுக்கவேண்டும்.
சமீபத்தில் மணிமலர் என்ற பெண்பதிவாளர் தன்பெயரில் ஆரம்பிக்கவிருந்த பதிவை என்பொருட்டு மாற்றிக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.
2 மறுமொழிகள்:
கையெழுத்துப் பத்திரிக்கை காலத்திலிருந்து கணினியின் மூலமாக தற்போது வலைப்பூக்கள் வரை...ஆஹா
உங்கள் போன்ற பவவிதமான மாற்றங்களைப் பார்த்தவர்கள் இன்னும் நிறைய எழுதி பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்..
வணக்கங்கள்
சுகா
வருகைக்கு நன்றி சுகா.
மறுமொழியிட