கண்ணே ! கண் மையே!!



முன்னாட்களில் பெண்கள் கண்ணிற்கு மை தீட்டி அழகு பார்ப்பர். நமது தமிழ் இலக்கியங்களிலும் 'மைவிழியாள்' என கண் மையை சிறப்பித்துக் கூறுவர்.பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் அழ அழ கண்மை இட்டு கண்ணேறு கழிக்க ஒரு பொட்டும் வைப்பதுண்டு. ஏன் கல்யாணங்களில் மாப்பிள்ளைக்கும் கண்மை இட்டு சங்கடப் படுத்துவர்.

பிறந்த குழந்தைக்கு இடும் கண் மை வீட்டிலேயே தயாரிக்கப் படும். நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கில் விளங்கும் தீபத்தின் மேலெழும் புகையினை ஒரு வட்டத் தட்டில் படியவைத்து விளக்கெண்ணெயில் குழைத்து தயாரிக்கப் படும் மை கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சி தரக் கூடியது. கேரளாவில் எட்டுமானூர் ம்காதேவர் ஆலயத்தில் உள்வாயிலிலுள்ள நிரந்தர தீபத்திலிருந்து எல்லோரும் மை இட்டுக்கொண்டே உள்ளே செல்வார்கள்.தற்போதைய காஜல் பென்சில்களும் மஸ்காரா பொடிகளும் வந்தபிறகு பழைய கண் மையை சீந்துவாரில்லை.

பாட்டிகள் போற்றிய கண் மைக்கு இப்போது புது வாழ்வு வந்துள்ளது. நானோ தொழில்நுட்பம் என்னும் புதிய உத்தியில் தயாரிக்கப்படும் கார்பன் நானோ ட்யூப் (CNT) இந்தக் கண் மையிலிருந்து 40% வரை எடுக்கமுடியும் என்று கான்பூர் ஐ.ஐ.டி யைச் சேர்ந்த சபயாட்சி சர்கார் என்னும் வேதியியல் பேராசிரியர் கண்டு பிடித்துள்ளார். மேலதிக விவரங்களுக்கு

நானோ தொழில்நுட்பம் என்பது மிக மிகச் சிறிய, அணுத்துகள் பரிமாணத்தில் உள்ள தூசிகளை ?(particles) கொண்டு வெவ்வேறு மருந்துகள், ஒளியியல் மற்றும் மின்னணுவியல் கருவிகள் மேம்படுத்தலில் பயன்படுகிறது. இதுவரை CNT தயாரிக்க பென்ஸீனை ஆவியாக்கி அதிலிருந்து பிரித்துக் கொண்டிருந்தனர்.

தாவர எண்ணெயை சூடாக்கி புகைபடிதலை (soot) கொண்டு தயாரித்தால் தயாரிப்புச் செலவு மிகவும் குறையும். இவ்வாறு பிரித்த CNT மருந்துகள் தயாரிப்பிற்கு பெரிதும் வேண்டியிருக்கிறது. இந்த செயல்முறை பிரபலமானால் இந்தியாவில் சிறுதொழிலாக பரிமளித்து பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும்.

இதேபோல தாவர எரிபொருளும் (Biofuel) பரவலாக பயன்படுத்தப் பட்டால் இந்திய விவசாயமும் தொழில்துறையோடு வளர்ச்சி பெறும்.

3 மறுமொழிகள்:

சினேகிதி கூறுகிறார்

Nalla thagaval maniyan.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி,சினேகிதி.

மணியன் கூறுகிறார்

உண்மையின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.