உலக திரைப்பட விழா இந்தியா


உலக திரைப்பட விழா, இந்தியா (IFFI) கோவாவின் தலைநகர் பனாஜியில் நேற்று முடிவடைந்தது. திரைப்பட வித்தகர்கள் பதியும் இத்தளத்திலே இந்த விழாவைப் பற்றி இதுவரை ஒரு இடுகையும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே கொல்லன் பட்டறை ஈயாக இவ்விழா பற்றிய செய்திகளை ஊடகச் செய்திகள் வாயிலாக அறிந்தவற்றை இடுகிறேன்.

அரசு விழாக்களின் வழமையான சொதப்பல்கள் போல ஆரம்பமே அமிதாப்பை விழாநாயகனாக தீர்மானித்து, அவரது சமாஜ்வாடி கட்சி சார்பினால் தேவ் ஆனந்தை 'பிடித்த' கதையானது. அவரும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் 36வது திரைப்பட விழாவை நவம்பர் 24அன்று தீபமேற்றி துவக்கிவைத்தனர். கன்னட நடிகையும், இவ்வருட தேசிய விருது வாங்கியவருமான தாரா, ஓல்கா(Olga) என்ற பிராசிலிய படம் பார்க்க விழைந்து இடம் கிடைக்காமல் மாற்று ஏற்பாடாக Tulips என்ற போலிஷ் படத்திற்கு அனுப்பியது, ஆரம்பவிழாவில் பங்கேற்ற அமீஷா படேலுக்கு அரங்கதின் உள்ளே
நுழைய மறுப்பு என்று குழப்பங்கள் தொடர்ந்தன. 'அபஹரண்' பட முதற்காட்சிக்கு இயக்குனர் பிரகாஷ் ஜா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் 40 நிமிடம் தாமதமாக வந்ததால் மக்கள் விசிலடிக்க, பத்து நிமிடம் கழித்து யாரோ வீடியோ பதிவு செய்கிறார்கள் என்று படத்தையே நிறுத்திவிட ஒரே கூத்துதான்.விழாவை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட மும்பை திரைப்படத் துறையினரால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.


2005 வருட விழாவின் சிறந்த படமாக ஈரானியபடம் Iron Island தங்கமயில் விருதையும் ரூ10 லட்ச பணத்தையும் வென்றது. ஒரு பாழடைந்த எண்ணெய்க் கப்பலில் வாழும் வீடில்லா மக்களைப் பற்றியது இந்தப் படம். வெள்ளிமயில் விருதையும் ரூ 5 லட்ச பணத்தையும் தென்னாப்பிரிக்காவின் red dust வென்றது. டாம் ஹூப்பர் இயக்கிய இப்படம் நீதிமன்ற வளாகத்தில், அபார்தீட் கொள்கை விலக்கப் பட்ட நிகழ்களத்தில் அமைந்தது. அர்ஜெண்ட்டினா நாட்டு Kept and Dreamless படம் போதை மருந்துக்கு ஆளான தாய்க்கும் அவளது 10 வயது பெண்ணிற்கும் இடையேயான உறவு பற்றியது. அதன் இரட்டை இயக்குனர்களுக்கு 'மிக நம்பிக்கையளிக்கும்' இயக்குனர் விருது அளிக்கப்பட்டது.
'பெண்ணிய உலகை, அது ஒதுக்கப்படும் நிலையில், உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவையுடனும் வெளிக்கொணர்ந்ததிற்காக' Vera Eugina Fogwill மற்றும் Martin Desalvo க்கு வெள்ளி மயில் விருதும் ரூ. 5 லட்ச பணமுடிப்பும் வழங்கப் பட்டது.

விழாவின் ஜூரிகளாக ஃப்ரென்ச் இயக்குனர் அலைன் கோர்னொ (Alain Corneau), ஆஸ்திரிய பெண்இயக்குனர் சபைன் டெர்ஃப்ளின்கர் (Sabine Derflinger), ஈரானிய நடிகர் காரிபியன் (Gharibian), இந்தியாவின் சாயித் மிர்சா (Saeed Mirza) செயல்பட்டனர். ஜூரிகளின் தலைவராக சிலி நாட்டு இயக்குனர் மிகேல் லிட்டின் (Miguel Littin) இருந்தார்.

போட்டியிட்ட பதினாறு படங்களில் நாகேஷ் குக்னூரின் இக்பாலும் மலையாள இயக்குனர் கமலின் பெருமழக்காலமும் தான் இந்தியப் படங்கள்.

2 மறுமொழிகள்:

Narain Rajagopalan கூறுகிறார்

மணியன், கோவாவில் நடக்கும் இந்திய திரைப்பட விழா "பாபு"களினால் ஏற்பாடு செய்யப்படும் விழா. அதில் ஹிந்தி சினிமாவின் முகங்கள் தெரியுமேயொழிய மற்றவர்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். தொடர்ச்சியாக உலகத் திரைப்படங்களைப் பற்றி எழுதி வருபவன் என்கிற முறையில் இதனை புறக்கணிக்கத்தான் தோன்றியது. மற்றபடி இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள். சென்னையில் உலகத் திரைப்பட விழா நடக்கும், தினந்தோறும் பதிகிறேன்.

மணியன் கூறுகிறார்

ஓ, மிக நல்லது. வருகைக்கு நன்றி.